100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், செந்திகுமார நாடார் கல்லூரியில் (28.03.2024) மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களால் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.ஜனநாயக நாட்டில் நாம் எந்த ஒரு மாற்றத்தையும் ஜனநாயக வழியில் தான் ஏற்படுத்த முடியும். ஜனநாயக வழி என்பது 18 வயது நிரம்பிய அனைவருக்குமான வாக்குரிமை மூலம் உங்களுக்கு தேவையான தலைவர்களை தேர்வு செய்து தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த ஜனநாயகம் தருகிறது.நமது நாட்டில் சராசரியாக 70 முதல் 75 விழுக்காடு தான் கடந்த சில தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்று இருக்கிறது. நான்கில் ஒரு நபர் வாக்கு அளிப்பதில்லை. நமக்கான ஒரே வாய்ப்பு ஜனநாயக பொறுப்பு என்பது வாக்கை செலுத்துவதுதான்.எந்த ஒரு காரணங்களாலும் நான் ஓட்டு போட மாட்டேன் என்று கூறுவது சரியானதாக இருக்க முடியாது. ஜனநாயகத்தின் உடைய மிக முக்கியமான வாய்ப்பு நமக்கு வாக்குரிமை தான். குறிப்பாக இளம் தலைமுறை வாக்காளர்கள், முதல் முறை வாக்காளர்கள் முழுமையாக தங்களது வாக்கு உரிமையை நிறைவேற்ற வேண்டும். ஜனநாயகத்தில் நாம் பங்களிப்பதற்கான உரிமையும், பொறுப்பும் அளிப்பது தேர்தல்.
வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவார்கள். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை இணையதளம்; மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம். ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.வேட்பாளர்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கக்கூடிய அடிப்படையான அரசியலமைப்பு ஏற்படக்கூடிய அரசாங்கம்,நம்மை சுற்றி இருக்கக்கூடிய நமது அரசியலமைப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்படக்கூடிய அரசாங்கங்கள் எந்த விதமான கொள்கையை முன்னெடுக்கின்றது, அந்த கொள்கைகள் எப்படி திட்டங்களாக மாறுகிறது, அந்த திட்டங்கள் எப்படி களத்தில் செயல்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற ஜனநாயகத்தினுடைய தொடர்ச்சியான செயல்பாடுகள் நம் அன்றாட வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயணிக்கின்றன.
இன்றைய சூழ்நிலையில், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தகவல்கள் வருகின்றன. அந்த தகவல்களில் எது சரி என்பதை நாம் சற்று தேர்ந்த பார்வையோடு பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் தெளிவான பார்வையுடன் சற்று முயற்சி செய்தால் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.மாணவர்கள் முதலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் யாருக்கு எதற்காக வாக்களிக்கிறோம் என்று நன்கு அறிந்து வாக்களிக்க வேண்டும். பணம், பொருள் எதுவும் பெறாமல் யார் தகுதியானவர்கள் என்று அறிந்து வாக்களிக்க வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை தங்களது பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் உள்ளவர்களிடம் எடுத்துக்கூறி, தகுதியான நேர்மையான நபர்களுக்கு வாக்களிக்க செய்து ஒரு வலுவான ஜனநாயகம் உருவாவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply