காரியாபட்டியில் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி பேருந்து நிலைய வணிக வளாகம் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அலங்கார வளைவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் பேரூராட்சியில், பேரூராட்சிகள் துறை சார்பில், ரூ.2.11 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி பேருந்து நிலைய வணிக வளாகம் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அலங்கார வளைவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்(13.10.2024) திறந்து வைத்தனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடங்களையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அலங்கார வளைவுகளையும், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடைகள், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் என மொத்தம் ரூ.2.11 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய கட்டமைப்புகளை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, நகராட்சி நிர்வாகத்துறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா ரூ.24 ஆயிரம் கோடி என ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் ரூ.20 கோடி முதல் 25 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் காலகட்டத்தில்தான். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 60 சதவிகிதம் மக்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதிக நிதிகளை வழங்கி திட்ட பணிகளை மேற்கொள்வதால் தான், இந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள 25 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடிகிறது.நகராட்சிகளை பொறுத்தவரையில் சாலைகள், பாதாள சாக்கடைகள், புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நகர்ப்புற வளர்ச்சிகளில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அனைவருக்கும் உரிய குடிநீர் தர வேண்டும். சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நல்ல மின்சார வசதிகளை தர வேண்டும். மழைநீர் சேமிப்பு வசதிகளை தர வேண்டும். இந்த பணிகளை செய்வதற்காகத்தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதிகளவு நிதிகளை தந்து கொண்டிருக்கின்றார் .
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்பதற்கு முன்னால் வரை, தமிழ்நாட்டில் சுமார் 4.26 கோடி மக்களுக்குத்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தரப்பட்டது. தற்போது கடந்த மூன்று ஆண்டு காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ஏறத்தாழ ரூ.30 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு, கூடுதலாக 3 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 1 கோடியே 25 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுத்தாகி விட்டது. மீதமுள்ள சுமார் 1.75 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குடிநீர் திட்டங்கள் மட்டுமல்ல, கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டங்கள் சென்னையில் உருவாகி வருகிறது.மேலும், 20,000 மக்களுக்கு மேலாக உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றுவதற்கும், 25 ஆயிரம் மக்களுக்கும் மேலாக இருக்கின்ற பகுதிகளை நகராட்சியாக மாற்றுவதற்கும், 1.5 இலட்சம் மக்கள் தொகை இருந்தால், அதை மாநகராட்சியாக மாற்றுவதற்கும், அதிக மக்கள் வாழும் ஊராட்சிகளை பிரித்து, புதிய ஊராட்சிகளை உருவாக்குவதற்கும், புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி, உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வாய்ப்பு அளிக்கவும் அரசு அதிகாரிகளின் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, குடிநீராக இருந்தாலும், சாலைகள், பாதாளச்சாக்கடை, மழைநீர் சேமிப்பு, உள்ளிட்ட வசதிகளாக இருந்தாலும், வணிக வளாகங்களாக இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, பொது மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகராட்சி அமைப்புகள், பேரூராட்சி அமைப்புகள், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, சாலை, பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சி போன்ற அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், வைகை நதியிலிருந்து குடிநீர் திட்டம் உள்ளிட்டவைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுமார் ரூ.75 கோடி அளவிற்கு வைகையிலிருந்து காரியாபட்டி பேரூராட்சிகளுக்கு தண்ணீர் தருவதற்கு ஒரு புதிய திட்டம் இந்த ஆண்டு அரசு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வைகையிலிருந்து நிலையூர், கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சென்னம்பட்டி அணைக்கட்டில் இருந்து கால்வாயில் அரை நூற்றாண்டு காலத்திற்கு பின்பு தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது என்றால், இந்த பூமி தண்ணீர் தேசமாக உருவாகி இருக்கிறது. அனைத்து இடங்களிலும் பூமி செழுக்கிறது. விவசாயம் செழுக்கிறது. இந்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சேரும்.
காரியாபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.168.00 இலட்சம் மதிப்பீட்டில் காரியாபட்டி பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாக கடைகளானது தரைத்தளம் மற்றும் முதல்தளம் என இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் 26 எண்ணம் கடைகள் பேருந்து நிலைய உட்புறமும், 10 எண்ணம் கடைகள் வெளிப்புறமும் அமைக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி நகரை சுற்றி அருகில் உள்ள 135 கிராமங்களும் தினசரி பயன்படுத்தும் பேருந்து நிலையமாக உள்ளதால் பேரூராட்சியின் வருவாயை நிறைவேற்றும் வண்ணம் கடைகள் கட்டப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் 4 தொடக்கப்பள்ளிகளும், 2 நடுநிலைபள்ளிகளும் 3 உயர்நிலைபள்ளிகளும், 2 அரசு மேல்நிலை பள்ளிகளும் உள்ளதால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். மேலும் இப்பேரூராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி வந்து செல்லும் வணிக நகரமாக உள்ளதால், இந்த வசதிகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
0
Leave a Reply