உலகில் பெண் ஐன்ஸ்டீன் என்றே புகழ் பெற்ற டொரொத்தி மவுட் வரிஞ்சி
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம். ஐரோப்பிய நாடான இங்கிலாந்து தலை நகர் லண்டனில் உள்ளது. இங்கு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் டொரொத்தி மவுட் வரிஞ்சி. பல்துறை அறிஞராக விளங்கினார். ஆய்வறிஞர்கள் உலகில் பெண் ஐன்ஸ்டீன் என்றே புகழ் பெற்றார்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் செப்டம்பர் 3 1894ல் பிறந்தார். இங்கிலாந்தில் வளர்ந்து 192 கண்டுபிடிப்புகளை நிகழ்ச்சி வட அமெரிக்காவில் இறந்தார். இங்கிலாந்தில் உள்ள லண்டன் சர்பிட்டன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். ஆசிரியர்களுக்கு ரொம்ப செல்லம் வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் உரிய பாடத்தை மிக அற்புதமாக கற்பித்து மாணவ மாணவியரிடம் செல்வாக்கு பெற்றார். பிரபலமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பிரிட்டன் கல்லூரியில் கணிதவியல் படித்தார். அந்த காலத்தில் பாடங்களில் எட்ட முடியாத மதிப்பெண் பெறுபவரை ராங்க்லர் என்று அழைப்பர். கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே அந்த பட்டத்தை வாங்கினார் டொரொத்தி.
கணித கோட்பாட்டியலில் மூன்று புதிய வடிவமைப்பு சமன்பாடுகளை கண்டுபிடித்து 1921ல் முனைவர் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக சேர்ந்தார். ஜான் வில்லியம் நிக்கல்சன் என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பின் கற்பிப்பதிலும் ஆய்வுகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார். கணிதவியலுடன் உயிரணுவியலை இணைத்து உடல் செல்கள் கணித வரையறைக்கு உட்படுவதை நிரூபித்தார். இதற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உயிரியல் துறையில் முனைவர் பட்டத்தை 1929ல் வழங்கியது. அங்கு இந்த துறையில் முனைவர் பட்டம் வாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். தீவிரமான ஆய்வுக்கு பின் 1930ல் “ தி ரிட்ரியட் ப்ரம் பேரண்ட்குட் ”என்ற புத்தகத்தை எழுதினார். அது ஆய்வுப்பணிகளுக்கிடையே குழந்தையை வளர்க்கும்போது பெண்களுக்கு மனச் சிக்கல்கலுக்கு விடை தேடியது. இன்றும் கூட சிறந்த உளவியல் பாடப்புத்தகமாக உள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலையில் உள்ள ஆறு கல்லூரிகளில் கணிதவியலிலும் மூன்று கல்லூரிகளில் இயற் அறிவியலிலும் ஒரு கல்லூரியில் உயிரணுக் கணிதவியலிலும் பேராசிரியையாக ஒரே நேரத்தில் பணியாற்றினார். எந்த விஞ்ஞானியும் இது போன்ற சாதனை செய்ததாக வரலாறு இல்லை. ஐந்தே ஆண்டுகளில் 36 நூல்களை எழுதி முடித்தார். அவற்றில் கணித கோட்பாட்டியல் சார்ந்து 20 நூல்களும் அறிவியல் விளக்கவியல் சார்ந்து 16 நூல்களும் அடக்கம். உயிர்வேதித் துறையில் கணிதத்தின் அடிப்படை அமைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் நிறுவனம் 1935ல் அவரை அழைத்தது. அந்த ஆய்வில் புரதசத்து உடல் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்ததோடு புரதங்களின் வேதி அமைப்பை கணிதவியல் முறையில் நிறுவி கிளைக்கால் கோட்பாட்டை முன்மொழிந்தார். உடலுக்கு தேவையான புரதத்தின் அளவு அதன் வடிவம் போன்றவற்றை விவரிப்பது தான் இந்த கோட்பாடு. இரண்டு வெவ்வேறு துறைகளை இணைந்த அந்த கோட்பாடு அறிவியல் ஆய்வுலகை உலுக்கியது. பிரபல விஞ்ஞானிகள் அதை மோசமாக வசைபாடினர். இன்றும் கூட அந்த கோட்பாடு சில ஆல்கலைடு புரதங்களுக்கு பொருந்துகிறது.
அவரது வாழ்க்கை பிரமிப்பானது. அவரது மகள் பமீலா ஆறு வினோத பாத்திரங்களை ஒரே காலத்தில் வாழ்ந்தவர் என் தாய் என கூறியுள்ளார். குடும்ப பிரச்னைகளால் மனம் உடைந்து 1938ல் நிரந்தரமாக அமெரிக்கா சென்றார். அங்கு பால்டிமோர் நகரில் மேரிலாந்து ஜாநாப்கின்ச் பல்கலைக்கழக உயிரியல் சிறப்பு வகுப்பு பேராசிரியையாக சிலகாலம் பணியாற்றினார். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தொடர்பாக 192 ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார் டொரொத்தி. அனைத்தும் அறிஞர்களால் ஏற்கப்பட்டன. இவரை பெண் ஐன்ஸ்டீன் என்றே அறிஞர்கள் அழைத்தனர். புரதத்தின் வேதி அமைப்பை கண்டுபிடித்து உடல் நல வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளார். இவர் 72 அறிவியல் நூல்களை எழுதி 1976ல் காலமானார்.
0
Leave a Reply