போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வீ.ப.ஜெயசீலன் , I A S,அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் நுகர்வோரைச் சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் எடுத்து வரப்படுகின்றன. குறிப்பாக தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் போதைப்பொருட்கள் கலந்துள்ள மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வருகின்ற நிலையில், மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது போன்ற போதைப்பொருள் அல்லது போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடிய மிட்டாய் வகைகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இம்மாவட்டத்தில் எந்தவொரு வணிகராவது இதுபோன்ற மிட்டாய் வகைகளையோ அல்லது போதைப்பொருள் கலந்துள்ள உணவுப்பொருட்களையோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், அந்த கடையின் வணிகம் நிறுத்தப்பட்டு, அபராதம் விதித்து வழக்குகள் தொடரப்படும். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டால், வழக்குகள் முடியும்வரை கடைகள் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என எச்சரிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினர் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
01.01.2024 முதல் 31.01.2025 வரை 430 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டும், ரூ.1,13,91,000/- (ரூபாய் ஒரு கோடியே பதின்மூன்று இலட்சத்து தொண்ணூற்று ஓராயிரம்) அபராதம் விதிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள், இம்மாதிரியான வித்தியாசமான வகையில் சந்தேகத்திற்குரிய மிட்டாய் அல்லது சாக்லேட் வகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறிய நேரிட்டால் 94440-42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது 04562-225255 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply