கருடா சௌக்யமா ?
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு 'சொன்னது கருடா சௌக்யமா? அதற்கு கருடனும் எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியம்தான் என்றதாம். நாம் எப்படி அர்த்தம் கொள்ள வேண்டும். பாம்பும் கருடனும் எப்பேற்பட்ட எதிரிகள் அவர்கள் இருவரும்! அருகருகிலேயே இருப்பினும் பாம்புக்கு ஆபத்து இல்லாமல் பரமசிவனுடைய கழுத்தில் இருந்து கொண்டு கருடனை குசலம் விசாரிக்கின்றது. அப்பாம்பு அந்த இடத்தைவிட்டு ஓர் அடி நகன்றாலும் கருடன் கொத்தி தன்னுடைய ஒரு வேளை உணவிற்காக திருப்தியாக சாப்பிட்டுவிடும்.
பாதுகாப்பு என்ற எல்லைக்கோட்டை விட்டு சிறிது நகன்றாலும் நம்முடைய கதி பாம்பின் கதி தான். ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது தன் தாயை விட்டு மற்றவரிடம் செல்ல யோசிக்கும். காரணம் தாயின் இருப்பிடம்தான் பாதுகாப்பானது என்பதை குழந்தை உணர்ந்து கொள்கின்றது.5, 6 வயது வரையிலும் கூட விளையாடிக் கொண்டிருந்தாலும் 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை அம்மா என்று ஓடி வந்து சிறிது நேரம் தாயின் மடியில் உட்கார்ந்துவிட்டு மீண்டும் ஓடி விடும். (Secure Feeling) பாதுகாப்பான உணர்வுதான் இதற்குக் காரணம் என்று கண்டறிந்து உள்ளனர்.
குழந்தைக்கு இவ்வளவு அழகாகத் தெரியும் பொழுது பெரியவர்களாகிய நாம் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம். புகை பிடித்தல், மது போதைக்கு அடிமையாகுதல், டி.வி. சீரியல்களுக்கு அடிமையாகுதல், தவணை முறையில் சாமான்களை வாங்குதல், அதிரடித் தள்ளுபடிக்கு அடிமையாகுதல், நம் தகுதிக்கு மீறிய நகை, வீடு வாங்குதல் ஆகியவை நமக்கு பாதுகாப்பற்ற விஷ அரக்கர்கள். ஒரு முறை தானே என்று ஆரம்பித்து புகை, மது போன்ற பொருட்களின் மீது அடிமையாகி நாம் மட்டும் இல்லாமல் குடும்பமே நடுத்தெருவிற்கு வருவது. டிவி. சீரியல்களுக்கு அடிமையாகி பசி நேரத்தில் பசியோடு வரும் குழந்தைகளையும், கணவனையும் கண்டுகொள்ளாமல் தன்னை மறந்த நிலையில் பரிமாறுதல், உங்களுடைய தாய்மை உணர்விற்கும் அன்பிற்கும் சேதம் விளைவிக்கும். தவணை முறையில் சாமான்களையும், நகைகளையும், வீட்டையும் மற்றவர்களுக்காக பெருமை காட்டிக் கொண்டு நாம் மாத்திரம் மனதில் படக்படக்கொன்று. பேங்க்காரன் வருவானோ? வட்டிக்காரன் வந்துவிடுவானோ என்ற பயத்தில் ஏன் காலத்தை ஓட்டவேண்டும். எந்த ஒரு பொருளும் நம்முடைய சௌகரியத்துக்குதானே தவிர மற்றவருக்காக அல்ல என்பதை ஒரு போதும் நாம் மறக்கக் கூடாது. நமக்கு நாமே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறோம்.
பணக்காரர்களுடைய சிநேகமும், பகையும் ஆகவே ஆகாது. சிநேகம் இருந்தால் அவர்களுடைய வசதியைப் பார்த்து, ஒன்று பொறாமை அல்லது அவர்களை மாதிரி ஏதாவது ஒன்றை வாங்கலாமே என்று நம்முடைய பட்ஜெட் நம்மை அறியாமலேயே காலியாகும். சிநேகமாவது பராவாயில்லை பகை இருக்கிறதே அது மகா தவறு. பகைமை கொண்டால் பணக்காரன் எப்பொழுது நேரம் கிடைக்கும் என்று ஏதாவது ஒரு வழியில் வஞ்சம் தீர்த்துக் கொள்வான். இவன் பணக்காரன் மீது பகை வைத்திருக்கிறான் இவனோடு நாம் இருந்தால் பணப்படைத்தவன் நம்மையும் ஒதுக்கி விடுவான் என்று மற்றவர்களும் நம்மை ஒதுக்கி விடுவார்கள். பணக்காரர்களை குற்றம் சொல்லவில்லை. நம்முடைய மனதில் பலஹீனத்தை தூண்டும் இவை தேவையில்லை.ஹலோ, ஹலோ இதுவே போதும் நாமும், நம் குடும்பமும் பாதுகாப்பான ஒரு எல்லைக் கோட்டிற்குள் தமக்கு என்று வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பைப் போன்று குசாலம் விசாரித்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம். பகட்டிற்காக நம் பாதுகாப்பிற்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை நல்லவனாக இரு. இல்லாவிட்டால் நல்லவனோடு இரு என்று ஏன் கூறினார்கள் புரிகின்றதா?
0
Leave a Reply