தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்ட விளக்கப் பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (20.01.2026) வேளாண்மைத் துறையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்திட்டத்தின் கீழ், சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்களின் முக்கியத்துவத்தினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளச் செய்யும் நோக்கத்தில் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சார வாகனங்களில் சிறுதானியத்தின் முக்கியத்துவம், சத்துமிகு தானியங்களின் மானிய திட்ட விளக்கங்கள், சிறுதானிய உணவு பயன்பாடு, அதன் நன்மைகள் குறித்த விபரங்கள், விளம்பரப் பலகைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பிரச்சார வாகனங்கள் அனைத்து வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதன்படி இன்று 11 வட்டாரங்களுக்கு 8 வண்டிகள் மூலம் 20.01.2026 முதல் 24.01.2026 வரை சிறுதானிய சாகுபடிக்கான முக்கியத்துவத்தினையும், அதன் பயன்களையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 3 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிரச்சார வாகனம் செல்லவுள்ளது. இதில் சோளம், கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி, வரகு, சாமை, தினை போன்ற பயிர்களின் சாகுபடி மற்றும் சிறுதானியத்தின் முக்கியத்துவம் போன்றவற்றை ஒலி பெருக்கி மூலம் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளது.
சிறுதானிய உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தவை. இவை நீரழிவு நோய் கட்டுப்பாடு, எலும்பு வலிமை, செரிமானம் மேம்பாடு, இருதய ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை தருகின்றன. நஞ்சில்லா சிறுதானியங்கள் உணவு உட்கொள்வதன் மூலம் மனிதர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. சிறுதானிய சாகுபடி பரப்பினை அதிகரித்து, உற்பத்தியினை அதிகரிப்பதன் மூலம் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவு உட்கொள்வது அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்றியமையாததாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,) அ.அம்சவேணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டம்) அ.நாச்சியார் அம்மாள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply