நான்காவது மாபெரும் விருதுநகர் புத்தகத் திருவிழா-2025- யினை அமைச்சர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் - மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, "அறிவும் வளமும்"- என்ற பொருண்மையின் கீழ், நடைபெறவுள்ள விருதுநகர் நான்காவது புத்தக திருவிழா- 2025-யினை (14.11.2025 முதல் 24.11.2025 வரை) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மற்றும் துணை இயக்குனர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.பின்னர், சுற்றுச்சூழல் காக்க பொறுப்பு ஏற்கிறேன் என்று உறுதியளிக்கிறேன் என்ற காலநிலை மாற்றத் தணிப்பிற்கான கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.
ஒரு புத்தகம் ஒரு வடிவாக இருப்பது போல, குழப்பம் இல்லாமல் சரியாக எந்தெந்த இடங்களில் எது இருக்க வேண்டும் என்று சொல்லி மிக சிறப்பாக ஒழுங்குப்படுத்தி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். நம்முடைய பகுதி மக்கள் பெரியவர்கள், தாய்மார்கள், பள்ளியிலே படிக்கிறவர்கள், கல்லூரியிலே படிக்கிறவர்கள் இந்த புத்தகங்களை வாங்கி படித்து அறிவாற்றலை பெறவேண்டும் என்று எண்ணத்தோடு தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்த அனுமதி வழங்கியுள்ளார். பொதுவாக புத்தகங்களை படிக்கிற நேரத்தில் மனிதனுக்கு இயற்கையாக அறிவு சிந்தனை வளரும். தனக்குள் எழும் கேள்விக்கு உரிய பதிலும் அந்த புத்தகத்திலேயே ஒருவருக்கு கிடைக்கும். ஆக புத்தகம் படிப்பதன் வாயிலாக அறிவுத்திறன் மட்டுமல்ல, உலகம் எப்படி இருந்தது, நமக்கு முன்னாலே இருந்த உலகம் எப்படி இருந்தது, அரசர் காலத்திலே எப்படி இருந்தார்கள், அதற்கு முன்னாலே நம்முடைய முன்னோர்கள் எப்படி இருந்தார்கள்? ஆங்கிலேயர் காலத்திலே நம்முடைய நாடு எப்படி இருந்தது. தற்பொழுது எவ்வாறு உள்ளது, எதிர்காலத்தில் நம்முடைய நாடு எவ்வாறு இருக்க வேண்டும் போன்றவற்றையெல்லாம் எடுத்துரைக்கின்ற ஒரு கண்காட்சியாக இந்த புத்தகக் கண்காட்சி அமைய உள்ளது.
எனவே அத்தகைய புத்தக கண்காட்சிகளை நாம் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சிறப்பு இருப்பதைப் போல நம்முடைய விருதுநகர் மண்ணுக்கு இருக்க கூடிய சிறப்பு இந்த மண்தான். கரிசல் பூமியை கொண்டிருக்கக்கூடிய ஒரு மாவட்டம். இந்த மண் தான் கரிசல் பூமியிலிருந்து வந்திருக்கக்கூடிய இலக்கியத்தை எடுத்துச் சொல்லி இருக்கக் கூடிய மாவட்டம். இந்த மாவட்டத்திலிருந்து உருவாகி இருக்கக்கூடிய இலக்கியவாதிகள் இன்றைக்கு சாகித்ய அகாடமி விருது பெற்று திகழ்பவர்களாக விளங்கும் மாவட்டம் நம்முடைய விருதுநகர் மாவட்டம்.கரிசல் இலக்கியம் என்று ஒரு இலக்கிய மரபை தோற்றுவிக்க கூடிய மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதிலே நமக்கு மிகப்பெரிய பெருமை இருக்கிறது. எனவே, வழி வழியாக வந்திருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் பெண்கள் படிக்க முடியுமா என்று கேள்வி நிலவிய ஒரு காலத்தில் இதே விருதுநகர் மாவட்டத்தினுடைய திருவில்லிபுத்தூர் தான் ஆண்டாள் என்கின்ற ஒரு அற்புதமான ஒரு தமிழ் கவிஞர் உருவாகி அந்த அம்மையார் பாடிய பாடல்கள் திருப்பாவை என்று சொன்னால் பெண் கல்விக்கு வித்திட்டு இருக்கக்கூடிய மாவட்டமாக இன்றைக்கு அல்ல ஏறத்தாழ 1300 வருடங்களுக்கு முன்பாக நம்முடைய விருதுநகர் மாவட்டம் இருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒரே நோக்கம் படிப்பு மட்டும் தான். காரணம், படித்தால் மட்டுமே ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க முடியும். அறிவார்ந்த சமுதாயம் அமைந்தால் மட்டுமே சமுதாயம் தன்னிச்சையாக வளரும் என்ற நோக்கத்துடன் இத்தகைய புத்தகத்திருவிழாவினை மாநிலம் முழுவதும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.இப்புத்தகத்திருவிழாவில், புத்தக அரங்குகள் மட்டுமல்லாமல், வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி அரங்கமும், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்க அறிவரங்கமும், வனத்துறையின் பெருமைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மைகள் குறித்து விளக்க பசுமை அரங்கமும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் இணைந்து மூன்று வகையான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.எனவே, “அறிவும் , வளமும்” என்ற தலைப்பில் நடத்தப்படவுள்ள இந்த புத்தகத் திருவிழாவினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வளமடையுமாறு கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, திட்ட இயக்குநர், (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., சீர்மரபினர் வாரியத் துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி, விருநகர் நகர் மன்றத்தலைவர் ஆர்.மாதவன் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply