குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில்(14.11.2024) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார மருத்துவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற “திரை தவிர்” என்ற ஒரு நாள் பயிலரங்கம் நிகழ்ச்சியில், மேனாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் திரு.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப.,(ஓய்வு) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
யாரும் கைபேசியை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை அதற்கு அடிமையாக வேண்டாம் என்று தான் சொல்கிறோம். ஒரு செயலுக்கு நாம் அடிமை ஆகி விட்டோம் என்றால் அதிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்.ஒரு புதிய நல்ல கலாச்சாரத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். கைபேசியை பார்த்துக் கொண்டிருக்காமல் வெளியில் வந்து நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதிலும், திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் நாம் ஈடுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் வந்திருக்கிறோம்.
தாய் தந்தையரிடம் மாற்றம் இருந்தால் குழந்தைகளிடமும் மாற்றம் வரும். ஒரு நாடு எப்படிப்பட்ட நாடு என்பதும், அந்த மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதும் அந்த நாட்டினுடைய மக்களின் பொழுதுபோக்கை பொறுத்து இருக்கிறது. வேலை பார்க்கும் 8 மணிநேரம், தூங்கும் 8 மணிநேரம் தவிர மீதமுள்ள 8 மணி நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம்நலம் சார்ந்த வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது. உடல்நலத்தோடு இருக்கிற மக்கள் மனமகிழ்வோடு இருக்கிறார்கள் என்றும், அந்தவகையில் தற்போது 156 நாடுகளில் எடுக்கப்;பட்ட ஆய்வில் நாம் 130 வது இடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய திறன்கள், கலைகள் இருக்கின்றன. அதற்கான நேரம் வேண்டும். அவர்கள் எப்பொழுதும் கைபேசி திரைகளில் உட்கார்ந்திருந்தால், இது போன்றவற்றை அவர்கள் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விடும்
குழந்தைகள் தங்கள் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக தாய்மொழியாம் தமிழ்மொழியை கற்க வேண்டும், அதுதான் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும், சிந்திக்கும் திறன் பெற்றவர்களுத்தான் உலக அரங்கில் வேலை கிடைக்கும் என்றும், அறிவியல், கணிதம் இல்லாமல் உலகம் இல்லை. குழந்தைகள் இவற்றை கற்றுக்கொள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும். செல்போன் பார்ப்பதை குறைத்தாலே தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் என்றும் கடந்த செப்டம்பர் வரை சைபர் மோசடியில் சுமார் ரூ.1500 கோடி வரை மக்கள் பணம் பறிபோகியுள்ளது. திரை பார்ப்பது தொடர்நோய் அது மனநலத்தை பாதிக்கும். தொடர் பிரச்சனை ஏற்பட்டு கல்வி பறிபோகும் எதையும் கற்றுக்கொள்ள முடியாது.
உலகத்திலேயே இருக்கின்ற மிகச் சிறந்த நூல்களை நாம் வாழ்நாளில் படிக்கலாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களது நேரத்தை நல்ல விஷயங்களுக்கு செலவிடுவீர்கள் என்றால், அதனை பார்த்து நமது குழந்தைகளும் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல உடல் நலம், மனநலம் உருவாகும், நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும். உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு நம் நாடு. எனவே நாம்; நல்ல ஆரோக்கியம் மிக்கவராகவும், ஒரு நல்ல வேலை தெரிந்த மக்களாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு தொழில்நுட்பம் ஒரு திறனை கற்றுக் கொள்ள வைக்க வேண்டும் .எனவே, நாம் திரை நேரத்தை குறைத்து, நல்ல பல விசயங்களில் நம் நேரங்களை செலவழித்து, அதனை நமது குழந்தைகளுக்கும் கடத்தி, நல்லதொரு புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்
பள்ளிகளில் பெரும்பாலும் தற்போது கைபேசி மூலமாக பாடங்கள் நடத்துவது, வீட்டுப்பாடம் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு வருகின்றன. படிப்பு சார்ந்த சூழலில் பயன்படுத்தும் போது அதை எப்படி பயன்படுத்துவது, குழந்தைகள் எவற்றையெல்லாம் கைப்பேசியில் பார்க்க வேண்டும், தேவையற்றதை நாம் எப்படி தடுக்க முடியும், அதற்கு தொழில்நுட்ப தீர்வு இருக்கிறதா, அந்த தொழில்நுட்பம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.அந்த எளிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கூட கைபேசியை பாதுகாப்பாக பயன்படுத்த வைக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் அலைபேசியை பயன்படுத்தாமல் இருப்பது தீர்வு அல்ல. அதை அளவோடு பயன்படுத்துவது, அதன் மூலமாக நமது குழந்தைகளுக்கு தேவையான கல்வி உடல், மன வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் பயன்படுத்த அவர்களை வழிநடத்துவது முக்கியம். இதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை நாம் வடிவமைத்து இருக்கின்றோம்.
உணவு பழக்க வழக்கம் என்பது இன்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அடுத்த 2030ல் இந்தியா தான் உலகில் நீரிழிவு நோயின் தலைமையகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். உணவு பழக்க வழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் தான் நம் வாழ்க்கையை நாம் நீண்ட நாள் வாழ்ந்தாலும் கூட ஆரோக்கியமான வாழ்க்கையை நாம் வாழ முடியும். வாழ்வின் பெரும்பாலான பகுதியை நோயோடு வாழ்வதால், அதுவே நமக்கு சுமையாக இருக்கும். மற்றவர்களுக்கும் சுமையானது.
எனவே, இக்கருத்தரங்கினை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கலந்து கொண்டுள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதை மற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துச் சென்று, நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தை மன நல மருத்துவர் மரு.ப்ரீத்தி அவர்கள் குழந்தைகள் வளர்ச்சியில் டிஜிட்டல் பயன்பாட்டில் தாக்கம் குறித்தும், நிர்வாக இயக்குனர்(கிரியாவன் சைபர், மதுரை) திரு.அசோக்குமார் மோகன் அவர்கள் டிஜிட்டல் பயன்பாட்டில் பெற்றோர்களின் கண்காணிப்பு என்ற தலைப்பிலும், சிறப்பு துணை ஆய்வாளர்(மனித கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு) திரு.ஆர்.பார்த்திபன் அவர்கள் மற்றும் மாவட்ட புலனாய்வு துறை திருமதி நா.மீனா அவர்கள் ஆகியோர் சமூக ஊடகத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்ற தலைப்பிலும், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி அவர்கள் குழந்தைகளுக்கான தொழில்நுட்ப பயன்பாட்டை ஆரோக்கியமாக வழிநடத்துதல் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
மேலும் வாழை பவுண்டேஷன் சார்பில் செய்முறை சுருக்கம், குழந்தைகளின் மின்சாதன பயன்பாட்டை முறைப்படுத்துதல், குழந்தைகளின் உணர்வுகள் மற்றும் நடத்தை பற்றிய புரிதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, அவர்கள், துணை இயக்குநர்(காசாநோய்) மரு.கே.பி.ராஜன் அவர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply