மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்... இவர் டிப்ளமோ படித்திருக்கிறார்.. இவரது குடும்பமே பாரம்பரியமான விவசாயத்தையே நம்பியிருப்பவர்கள்.. விவசாய குடும்பம் என்பதால், மோகன்ராஜூக்கு சின்ன வயசில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது..இதனால், டிகிரி படித்தாலும், பெரிய வேலைவாய்ப்புகள் வந்தபோதிலும் அங்கெல்லாம் போகாமல், நேராக விவசாயத்துக்கே வந்துவிட்டார்.மோகன்ராஜூவுக்கு திருமணம் நிச்சயமானது.. செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்தவர்தான் மணப்பெண் கலையரசி..
வண்ண வண்ண மலர்கள் ஜோடிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் செல்வது வழக்கம்.. ஆனால், மோகன்ராஜூ வித்தியாசமாக கல்யாணம் செய்து கொண்டார். அதாவது, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், புதுமணப்பெண்ணுடன் மாட்டு வண்டியிலேயே சென்று கல்யாணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, திருமணம் முடிந்த கையோடு, கல்யாண பெண்ணை, அவரது வீட்டில் இருந்து, மணமகன் வீட்டிற்கு மாட்டுவண்டியிலேயே ஊர்வலமாக அழைத்து வந்தார் மோகன்ராஜ்.. மாட்டு வண்டியில் மணமக்கள், ஏறி உட்கார்ந்துகொள்ள, அந்த வண்டியை சுற்றிலும், செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம், பாட்டம் என அமர்க்களமானது.
மாப்பிள்ளை வீடு வந்து சேரும்வரை, வழிநெடுகிலும் பொதுமக்கள் இந்த மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர்.. மணமக்கள் மாட்டுவண்டியிலிருந்து கீழே இறங்கியதும், மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்... அப்போது மணமகன் மோகன்ராஜ் திடீரென டான்ஸ் ஆடி, தங்களுக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் உற்சாகமூட்டி சர்ப்ரைஸ் செய்தார்.. இதைப்பார்த்து மொத்த கூட்டமும் கைதட்டி ஆரவாரம் செய்தது.இதற்கு பிறகு, செய்தியாளர்களிடம் மாப்பிள்ளையே பேசினார்.. "மக்கள் விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருகின்றன.. காளை மாடுகள்: காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இப்படி நான் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தேன். இது ஒரு சின்ன விழிப்புணர்வாக இருக்கும் என்றும் நம்புகிறேன்" என்றார்.
0
Leave a Reply