ஆப்பிளை முதல் இடத்தில் இருந்து 2வது இடத்திற்குத் தள்ளி மகுடத்தைச் சூடியுள்ளது என்விடியா
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் என்விடியா நிறுவனத்தின் பங்கு விலை வரலாறு காணாத உயர்வை எட்டியதன் காரணமாக, உலகின் மதிப்புமிக்க நிறுவனமான ஆப்பிளை முதல் இடத்தில் இருந்து 2வது இடத்திற்குத் தள்ளி மகுடத்தைச் சூடியுள்ளது.வர்த்தகத்தில் என்விடியாவின் சந்தை மூலதன மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 3.53 டிரில்லியன் டாலரை தொட்டது, இதேவேளையில் ஐபோன் தயாரிக்கும் ஆப்பிளின் சந்தை மதிப்பீடு 3.52 டிரில்லியன் டாலராக இருந்தது.கடந்த சில வாரங்களாகவே ஆப்பிள் மற்றும் என்விடியா மத்தியிலான இடைவெளி மிகவும் குறைவாக இருந்த நிலையில் இன்று கட்டம் கட்டி தூக்கியது போல ஆப்பிளை விஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 2வது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 3வது இடத்திற்குத் தள்ளி முந்தியதற்குப் பிறகு, தற்போது ஆப்பிளை முந்தி இரண்டாவது முறையாக என்விடியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.என்விடியாவின் பங்கு விலை அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 18% உயர்ந்துள்ளது. இதற்கு OpenAI இன் GPT-4 போன்ற ஏஐ மாடல்களை பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் சிப்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதன் காரணமாக இதன் வர்த்தகம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. மேலும், உலகின் முக்கிய சிப் உற்பத்தியாளரான TSMC இன் வர்த்தக கணிப்புகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்த காரணத்தால் என்விடியா பங்குகள் உயரத் துவங்கியுள்ளது. இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணம் என்விடியாவின் முக்கியமான சிப் உற்பத்தி கூட்டாளி தைவான் நாட்டின் TSMC தான்.
இதனால் TSMC உற்பத்தி அதிகரித்தால் என்விடியா அதிகப்படியான ஆர்டர் வைத்திருப்பது உறுதியான காரணத்தால் முதலீட்டாளர்கள் என்விடியா பங்குகள் மீது அதிகம் முதலீடு செய்ய துவங்கினர். இதேவேளையில் இந்நிறுவனத்தின் அடுத்த காலாண்டில் வெளியாகும் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை நவம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். என்விடியா, ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றின் உயர்வு அமெரிக்கப் பங்குச் சந்தை தொடர்ந்து வலிமை அடைந்து வருகிறது, இதில் முக்கியமாக S&P 500 இன்டெக்ஸ் டெக் பங்குகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் வேகமாக இக்குறியீட்டின் எடையின் அதிகரித்து வருகிறது.
0
Leave a Reply