“நான் முதல்வன்”; திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (11.05.2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை தெரிந்து கொள்வதற்காக, குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டக்கூடிய பொறுப்பாசிரியர்கள் அனைவரும் உலக அளவில் இருக்கக்கூடிய சிறந்த உயர் கல்வி வாய்ப்புகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிகள் சேர்ந்து உயர்கல்விகள் பெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்திலும் கல்லூரி கனவு என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது.
இந்திய அளவில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை சுமார் 32 விழுக்காடு ஆக இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் ஏறத்தாழ 52 சதவீதமாக உள்ளது. நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு சுமார் 96 விழுக்காடு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்விக்கு சென்றுள்ளனர். மாநிலம் முழுவதும் அதிகமான உயர்கல்வியை உறுதி செய்திட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிகளை தமிழக அரசு மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.இன்று உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர் கல்வியை பெறுவதற்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு பொருளாதாரம் ஒரு தடையல்ல. சரியான வாய்ப்புகளை நாம் தேடாமல் அல்லது சரியான வாய்ப்புகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், ஒரு கல்லூரியில் சேர்ந்த பிறகு கூட இருக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தாமல் இருப்பதும் தான் பிரச்சனையாக இருக்கிறது.
யாரெல்லாம் தேடுகிறார்களோ, யாரெல்லாம் தன்னுடைய வாய்ப்புகளை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் மிகச்சிறந்த நிலையை அடைகிறார்கள். சாதாரண கிராமத்தில் தமிழ் வழிக்கல்வியில் பின்தங்கிய சூழ்நிலையில் படித்து சராசரி மதிப்பெண் எடுத்தவர்கள் கூட அடுத்தடுத்த வாய்ப்புகளை எப்படி எல்லாம் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. அவர்கள் அடைந்த உயரங்கள் மட்டும் தான் தெரிகிறது. இந்த உயரங்களுக்கு பின்னால் தூங்காத இரவுகளும், கடினமான உழைப்பின் வேர்வைகளும் ஒரு போதும் தெரிவதில்லை.20 சதவிகித வேலைகளில் 80 சதவீத பலனை பெறுவது உலகம் முழுவதும் எல்லா துறைகளிலும் இருக்கக்கூடிய தத்துவம். இதை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.உயர்கல்வி வாய்ப்புகளை ஆசிரியர்களும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இன்றைய கல்விச் சூழலை எப்படி எதிர்கொள்வது, இந்த கல்விச்சூழல் நமக்கு தரக்கூடிய வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு மாணவர்களை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
இங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எனது அனுபவத்திலிருந்து சொல்லக் கூடியது வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், மிக மிக எளிய வாய்ப்பு கல்வியும் கடின உழைப்பும் தான். இந்த இரண்டு வழிகளை தவிர எளிய குறுக்கு வழிகள் வேற எதுவும் இல்லை.எனவே சிறந்த வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அடைய வேண்டிய உயரம் இமயமலை போன்றது. அந்த உயரங்களை அடையக்கூடிய மாணவர்களாக விருதுநகர் மாவட்ட மாணவர்கள் இருக்க வேண்டும். அதனை அவர்களுக்கு மிகுந்த சிரத்தையோடும், கடமையோடும் வழிகாட்டக்கூடியவர்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உலகளாவிய வாய்ப்புகள், படிப்புகள், கல்லூரிகள், வேலை வாய்ப்புகள் குறித்து கல்வியாளர் திரு.நெடுஞ்செழியன் அவர்கள் விரிவாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.மேலும், சவுதி அரேபியா மஜ்மா பல்கலைக்கழக பேராசிரியர்(வெளிநாடு வாழ் இந்தியர்) திரு.முகமது யாசிக் அவர்கள் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக மாணவர்களிடையே உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி வளர்மதி, பல்வேறு அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply