25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


முதல் பக்க கட்டுரை

Jun 30, 2023

கதவுகள் இல்லா உலகம்

கதவுகள் இல்லா உலகம் உலகத்திற்கு ஏது கதவு ? என்கிறீர்களா ! எந்த ஒரு காரியத்திற்கும் தடுப்பு என்ற கதவு இல்லாவிட்டால் என்ன ஆகும். " திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் கண்டபடி கெட்டு விடும் இல்லையா ?குடிசை வீடாக இருந்தாலும் ,ஓட்டை ஒடிசலான நகரக் கதவினால் ,கயறு வைத்துக் கட்டியாவது ,கதவு என்ற தடுப்பை ஏற்படுத்துகின்றனர். இல்லாவிட்டால் கஞ்சித் தண்ணீரில் ஊற வைத்த, இத்துணூண்டு சாதத்தை நாய் நக்கி விட்டு சென்று விடுமே,அதற்கு ஒரு தகரக் கதவு.சின்ன நூலகமாக இருந்தாலும் அதற்கு என்று சில விதிமுறைகள். கதவு போல இருந்தால் தான் அந்த நூலகத்தில் இருக்கும் புஸ்தகங்களை பாதுகாக்க முடியும். வருடத்திற்கு கட்டணம் இவ்வளவு புஸ்தகத்தை எடுத்துச் சென்றால் புஸ்தகம் கிளியாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ மாற்ற வேண்டும். விதிமுறைகள் (என்ற தடுப்பு) இருந்தால் தான் நூல்களை அனைவரும் படிக்க முடியும். பாதுகாக்க முடியும். அதைத் தவிர்த்து யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், வரலாம் என்றால் என்ன ஆகும். நம் நாட்டில் பலருக்கு தடுப்பு என்ற கதவுகள் பிடிப்பதே இல்லை. தேசத்தைப் பாதுகாக்க அரசாங்கம் விதித்துள்ள சட்டங்களை கடைபிடிப்பதற்கு யாராலும் முடிவதில்லை. ஏன் அரசியல் வாதிகளே கடைபிடிப்பதில்லை. சாலை விதிகளையோ, வாகன விதிகளையோ, சுகாதார விதிகளையோ மதிப்பதே இல்லை. குளம், குட்டை, ஆறு போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்பதை உணர்வதே இல்லை.எங்கு வேண்டுமானாலும் போஸ்டர் ஒட்டுவது, நடு ரோட்டில் காரித்துப்புவது. குப்பைகளை எறிவது, எரிப்பது, வாஹனங்களை வரும் வழியில் நின்று சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதும் எதைக் கூறுகின்றன. கதவுகள் இல்லாத வீட்டைப் போல, சட்டங்களை கடைபிடிக்காத மனிதர்கள், நம் நாட்டை கதவுகள் இல்லாத நாடாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்,. என்பதை சொல்லாமல் செய்கின்றனர். அரசியல் செய்வதற்கு நாடு, மாத்திரம் போதாது, கோட்டை, கொத்தளங்கள் வலிமையாக இருந்தால் மட்டும் ப்ரயோசனம் இல்லை. ஆயுதங்கள் குவிந்து கிடந்தாலும், ராணுவம் அதிகமாக இருந்தும் புண்ணியம் இல்லை. ஆட்சி செய்யும் அரசியலில் ஒழுங்கு,நேர்மை தவறாமல் இருந்தாக வேண்டும். அந்த அரசியலில் ஒழுங்கு இல்லாவிட்டால் அந்த நாடு கதவுகள் இல்லாத நாடாக மாறி,, ஜனங்களின் நம்பிக்கை இல்லாத அரசியல் தேசமாக, சதா குழப்பத்தில் இருக்கும் நாடாக மாறி வரும் என்பதில் ஐயமுண்டா ? ஆக எதற்கும் தடுப்பு என்ன கதவுகள் வேண்டும். "கதவுகள் இல்லா உலகம் ” வேண்டவே வேண்டாம்.

May 31, 2023

பாசம் எங்கே சென்றது ?

ஒரு குடும்பம் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதற்கும், அன்பைப் பொழிவதற்கும், பாசம் என்பதற்கு ஒரு கூடாரமாகவும் இருகின்றது. அம்மா, அப்பா, 2 குழந்தைகள் சந்தோஷமான குடும்பம், பெற்றோர்கள் மீது குழந்தைகளும், குழந்தைகள் மீது பெற்றோரும், 2 குழந்தைகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும், அடுத்த நிமிடமே பாசம் பொழிவதும் ஒரே அன்பு மழைதான்.ஆனால் இவை எத்தனை ஆண்டுகள் நீடிக்கின்றன. ஒரு குடும்பம், 2 குடும்பம், 3 குடும்பமாக மாறும் பொழுதுதான் பிரச்சனை உருவாகிறது. அவளுக்கு மட்டும் ரெம்ப விலை டிரஸ், எனக்கு கொஞ்ச விலை டிரஸ், ஏம்மா ? எனக்கு 2 லட்டு அவனுக்கு மட்டும் 3 லட்டா ? என்ற சண்டைகள் எல்லாம் சுமூகமாக தீர்ந்து நம்ம அண்ணன் தானே ? நம்ம தங்கச்சி தானே ? என்ற பாசம், கோபத்தை 'ஸ்வாஹா' செய்து விடுகிறது.குடும்பம் பெரிதாகி அவரவர்களுடைய வீடு, தன் மனைவி, தன் கணவன், குழந்தைகள் என்று பிரியும் பொழுது இந்த சொத்து எனக்கு என்று நினைத்தேனே ? என்ற ஏமாற்றம் ,பகையுணர்ச்சியுடன் கூடிய பொறாமை வளர்ந்து ,ஜென்ம பகையாளராக மாறி, கோர்ட் கேஸ் என்று அலைகின்றனர்.சரி பாதியாக ,எடுத்துக் கொள்ளச் சட்டம் இருப்பினும் எத்தனைபேர் ஏமாந்து விடுகின்றனர். தனக்கு சேர வேண்டியதை அண்ணனோ, தம்பியோ, தமக்கையோ, கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மண் அள்ளிப்போடுகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு எழுதி வைக்கின்றனர். நான் என்ன ஏமாளியா ? சும்மா விடமாட்டேன் என்று ஏமாற்றப்பட்ட குழந்தைகள் பெற்றோர்களிடம் முறையிட்டு வருத்தப்படும் பொழுது, வயோதிகத்தால் என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று ஆதங்கப்படத்தான் செய்கிறார்களே ஓழிய, வேறொன்னும் செய்வதற்கு இயலாமல் போய் விடுகிறது. கோபம் பெற்றோரிடம் திரும்புகிறது. அப்புறம் கோர்ட், கேஸ்தான்.எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த தன் சம்பாத்தியத்தை கடைசி காலத்தில் ,நம் கண்ணெதிரே உயிருக்குயிராய் நேசித்த குழந்தைகள், சண்டைபோட்டுக் கொள்வதை காணச் சகிக்குமா ? ஏன்தான் சம்பாதித்தோமோ ? பேசாமல் இருந்திருக்கலாம்.இப்படி தாய், தந்தையர் சொத்துக்காக சண்டை போடுவதைப் பார்த்து ,பிள்ளைகளுக்கு நிச்சயமாக சம்பாதிக்கும் ஆசை போய் விடும். அப்படியே சம்பாதித்தாலும் சேர்த்து வைக்கும் பழக்கத்தை விட்டு விடுவார்கள். தங்களுக்கு மட்டும் வைத்துக் கொண்டு மீதிப் பணத்தை செலவழித்து விடுவார்கள். சிக்கனமா ? நோ சான்ஸ்!ஐந்துதலை நாகப் பாம்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பாம்பிற்கு உடம்பு ஒன்றுதான் இருக்கும். தலைகள் மாத்திரம் 5 இருக்கும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஐந்து குழந்தைகளும் ஒன்றுதான் .அதை உணராமல் சண்டை போட்டுக் கொள்கின்றனர் .சண்டை போடாமல் சுமூகமாகப் பேசி உங்கள் பிரச்சனைகளை கோபப்படாமல் நிறுத்தி, நிதானமாக எடுத்துரைத்து ,அவரவர்களுடைய பங்கினை சாமார்த்தியமாகப் பெறுவதே நல்ல முடிவு.சகோதரர்களிடமோ, சகோதரிகளிடமோ, சண்டை போட்டு வாங்கும் சொத்துக்கள் நாம் இருக்கும் வரைதான் நம்முடையது .அது கூட பெண்ணோ, பையனோ, தன் பிள்ளைகள் பெயரில் எழுதி வாங்கி விடுவார்கள். எப்படியும் நம் வாரிசுகளுக்குத்தான் செல்லும், நமக்கு வர வேண்டியவை வராமல் ,ஏமாற்றப்பட்டு விட்டால் நம் வாரிசுகள் யாருக்கேனும், எந்த வழியிலாவது வந்து சேரத்தான் செய்யும். அதில் சந்தேகமே இல்லை. வாரிசுகளுக்குத்தானே மூன்றாவது தலைமுறைகளுக்கு வந்து எந்த விதத்திலாவது வந்து சேர்ந்து விடும்.அதைத் தவிர்த்து காலமெல்லாம் கோர்ட்டிற்கு அலைவதில் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அப்படி முடியவில்லை என்றால் பேசாமல் விட்டு விடுவது நல்லது. மேலே இருக்காரே உலக கோர்ட் ஜட்ஜ் அவர் பார்த்துப்பார். சேர வேண்டியவர்களுக்கு எந்த வழியிலாவது வரும். பாசம் உங்களிடம் இருப்பதா ? இல்லையா ? என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. 

Apr 30, 2023

கனவு மெய்ப்பட வேண்டும்

 மதிப்பிற்குரிய அப்துல்கலாம் ஐயா அவர்கள்” கனவு காணுங்கள்என்று சொல்கிறார். அதைத் தவறாக எடுத்துக் கொண்டவர்கள், எத்தனை பேர்.? நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தூங்குகிறார்கள்.” ஆனா கனவே வர மாட்டேன் என்கிறதே” பலர் வருத்தப்படுகிறார்கள்.கலாம் ஐயா, அவர்கள் சொன்ன கனவு என்ன என்று தெரியுமாவாழ்க்கையில் ஓர் லட்சியம், குறிக்கோள் வேண்டும் அதைப்பற்றிக் கனவு காண வேண்டும். எந்தக் கனவு நம்மைத் தூங்க விடாமல் செய்யுமோ, அந்த லட்சியக் கனவைக் காணும்படி கூறியிருக்கிறார். இக் கனவை நிஜமாக்கிப் பார்க்க, எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதில் தவறே இல்லை. அது சராசரி மனிதனுக்கு வரும் சுயநலம் சார்ந்த ஆசை. அப்படிப்பட்ட ஆசை யதார்த்தமானது. சாப்பாட்டிற்கு, குடியிருக்க வீடு, வெளியில் சென்று வருவதற்கு வாஹனம் என்று ஆசைப்பட்டு சம்பாதிப்பதில் தவறு  இல்லை.யானைக்குத் தன் பலம் தெரியாததால் யானைப் பாகன் சொல்வதையும், சர்க்கஸ் மாஸ்டர் சொல்வதையும் கேட்டு அதன்படி அடக்கமாக வேலை செய்கிறது. தன்பலம் தெரிந்தால் சும்மா விடுமா! இது எதை ஞாபகப்படுத்துகிறது லட்சியம் இல்லாத மனிதர்களின் நடைப் பயணங்கள் மாதிரி.வித்தியாசமான சிந்தனை. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது,, அது கடவுள் குற்றமாகிவிடுமோ கடவுளுக்குச் செய்த துரோகமாக மாறி விடுமோ! என்று எல்லாவற்றையும் மதத்துடன் இணைப்பது பெருந்தவறு,” நம்ம ஜாதியிலே இந்த மாதிரி யாருமே தொழில் செய்ததில்லையே”, என்று மதம் தாண்டி சிந்திப்பதில்லை.சரி எல்லாவற்றையும் மறந்து ஒரு லட்சியத்தை குறிக்கோளை, நம்பிக்கையுடன் செயல்படுத்த நினைக்கிறோம். நம்பிக்கை என்ற சின்ன செடி வளர்கிறது. அச்செடியை ஆடுகள் மேய்ந்து விடுவதைப் போல யாராவது அந்த நம்பிக்கைக்கு ஒரு பிரேக் போட்டால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அது வளர்ந்து பெரியதாகி, எந்த ஆடு மேய்ந்ததோ, அதுவே அந்த மரத்தின் நிழலில் ஒதுங்கும்.எந்த ஒரு செயலுக்கும் குடும்பத்தின் ஒத்துழைப்பு கண்டிப்பாக வேண்டும். அவரவர்கள் அவரவர்களுடைய விருப்பப்படி செய்வதற்கு ,ஆவண உதவிகள் செய்யாவிட்டாலும், உபத்ரவம் செய்யக்கூடாது. “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்களே” ! என்று அங்கலாய்ப்பதை விட்டொழித்து ,அன்பினால் அனைவரையும் கட்டிப் போட்டு விடலாம். அரவனைத்துக் கொள்ளலாம். நம்பிக்கை, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, மூன்றாவதாக மற்றவர்களின் விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளவே கூடாது.'வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா'நம்முடைய எதிரிகள் தான் நம்மை அழிக்க வேண்டும் என்றில்லை. உங்களை உங்களவர்களே அழிக்கத் திட்டம் போடுவார்கள். அதற்கும் அஸ்திரம் தயாராக வைத்திருக்க வேண்டும். பணம் சம்பாதித்தாகிவிட்டது. தனக்கென்று ஒரு வீடு, வாஹனம், சாப்பாட்டிற்கு குறைவே இல்லை. தன்னுடைய லட்சியம் என்ற குறிக்கோளை அடைந்து விடுகிறான். வாழ்க்கை இனிக்கிறது. அப்பொழுது அவனுக்கு பேராசை ஏற்படுகிறது. இன்னொரு வீடு, நிலங்கள், தங்கக் கட்டிகள் என்று சேர்ந்து வைக்க ஆரம்பிக்கின்றனர். இந்தப் பேராசையினால் நிம்மதி கெடுகிறது.அதிகமாக வரும் செல்வத்தை பொதுநலம் சார்ந்த நிறுவனங்களுக்காக செலவழிக்கலாம்.நம்பிக்கை, லட்சியம், குடும்பத்தினர் ஒத்துழைப்பு, நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது விதண்டாவிதமான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது. பேராசையை விட்டொழிப்பது. நம் முன்னேற்றத்தில் தடைக்கற்கள் போடும் எதிரிகளை அன்பினால் வசப்படுத்துவதுபோன்றவற்றை செய்வதால் என்ன ஆகும். நம்முடைய கனவு மெய்ப்படும்.'முடிந்ததை முடிப்பவர்கள் முடிவெடுப்பவர்கள். முடியாததை முடிப்பவர்கள் முடி சூடுவார்கள்'ஒரு பறவையை எடுத்துக் கொண்டால் தனக்கென்று ஒரு கூட்டைத் தான் கட்டிக் கொள்ளும் பறவை ஒரு நாளும்“இரண்டு மூன்று கூட்டைக் கட்டிக் கொள்வோம்” என்று நினைத்ததே இல்லை. இது இயற்கை நமக்குச் சொல்லும் பாடம்.குரங்கினை கவனித்துப் பாருங்கள். ஒரு க்ஷண நேரம் கூட சும்மா இருப்பதில்லை. அப்படியே உட்கார்ந்தாலும் தலையில் பேன் எடுத்துக் கொண்டிருக்கும். ஏன் என்றால் அதற்குள்ள சக்தியை இப்படி அலைந்து தான் வீணாக்க முடியும். குரங்கிலிருந்து வந்த மனிதர்களுக்கு அதே சக்தியைத் தான் கொடுத்திருக்கிறார். கடவுள். அதை ஒழுங்குபடுத்தும் திறமை உள்ளவர்களால் மட்டுமே தங்களுடைய லட்சியக் கனவுகளை மெய்ப்படுத்த முடியும். 

Mar 30, 2023

அரசாங்கம் என்ன செய்யும்

எங்க பார்த்தாலும் கட்டுப்பாடு சகிக்கலே I Want to be free. அம்மா, அப்பா. பாட்டி. தாத்தா. சமயம். சமுதாயம். அரசாங்கம். பாடங்கள் எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. இதற்குத்தடா, அதற்குத் தடா என்று தடைகள். நம் வாழ்க்கை தறிகெட்டுப் போகாமல் இருக்க, முன்னோர்கள் செய்த வழிதான் இவை.குற்றால அருவியிலே மழை நேரம் சாதாரணமாக தண்ணீர் விழும் பொழுது ஆனந்தக் குளியல் போடுகிறோம். அதே அருவியில் வெள்ளப்பெருக்கெடுத்தால் நம்மால் குளிக்க முடியுமா ? முடியாது கட்டுப்பாடில்லாமல் விழும் தண்ணீரில் குளிக்கத் தடைபோடுகின்றனர். நாமும் நமக்குள் இந்த அருவியிலே 'தலை வச்சோம், செத்தோம்' என்று நமக்கு நாமே கட்டப்பாடு செய்து கொள்கிறோம். அதெப்படி ? என்னை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று தலையைக் கொடுத்தால் என்ன ஆகும். டிஸ்கவரி சேனலில் காட்டப்படும் கடலுக்கு அடியில் தான் இருப்போம். இல்லாவிட்டால் மீனுக்கு இரையாகிவிடுவோம்.ஹெல்மெட் போடுங்கள். அடிக்கடி இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிலும் மண்டையில் அடிபட்டு சாகும் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மெதுவாகச் செல்லுங்கள். வேகத்தை குறையுங்கள், ம்ஹீம் யார் கேட்கிறார்கள். சூர்யா, விஜய், அஜித் , ஸ்டண்ட் சீன்களில் பாதுகாப்பாக கயறு கட்டி வேகமாக ஒட்டுவது போல பாவலாவை நிஜம் என்று நம்பி, நம் வீட்டு பிள்ளைகள் ஸ்டைலாக ஒட்டி,விழுந்து மண்டை உடைந்து இறக்கிறார்கள். இதற்காக அரசாங்கம் திடீரென்று சட்டத்தைக் கொண்டு வந்தது. கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று. ஏன் ? நமக்குத் தெரியாதா ? அரசாங்கம் சொல்லும் வரை நமக்கு மூளை எங்கு சென்றது என்று தெரியவில்லை. உடனே ஹெல்மெட்டை வாங்கிக் குவித்தனர். ஹெல்மெட் வியாரிகளுக்கு சூப்பர் லாட்டரி.திடீரென்று ஹெல்மெட் போட்டாலும் ஆபத்து வருகிறது. ஹெல்மெட் போடுவதால் கொஞ்சம் காது கேட்பதில்லை. தலைவலி வருகிறது. தரமற்ற ஹெல்மெட்டினால் ஆபத்து கூடுகிறதே ஒழிய குறைவதற்கு வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பினர் வாதமிட, அரசு சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. எப்படி ? ஹெல்மெட் போட்டுக் கொண்டு மிதவேகத்தில் ஒட்டினால் இந்த லோகத்தில் தொடர்ந்து வாழலாம். இல்லா விட்டால் பரலோகத்தில் உடனே செட்டில் ஆகி விடலாம். என்று தான். என்ன செய்யும் அரசாங்கம்.கட்டுப்பாடற்ற வாழ்க்கை ஒருக்காலும் சுபமாக இருப்பதில்லை. சாலை விதிகளைக் கூட கடைபிடிப்பதில்லை. கட்டுப்பாடற்ற மனிதர்கள் சாலை நடுவே நின்று நண்பனிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும், (படிக்கும் மாணவர்கள் கூட) காரோ, பஸ்ஸோ, ஹாரன் அடித்தால் திரும்புவதாகத் தெரியவில்லை. அப்படியே திரும்பினாலும் ஒரு முறைப்பு அங்கே இடம் இருக்கில்லா ? ஒதுங்கிப்போ ! என்ற பாவனையுடன், இவர்களே இப்படி என்றால் கிராமப்புற மக்களுக்கு என்ன தெரியும். டிராபிக் ரூல்ஸை, சிக்னலை யாரும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. இந்திய மக்களின் விலை மதிப்பற்ற, உயிரை துச்சமாக அலட்சியப்படுத்துவதால், எத்தனை உயிர்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன.மக்கள் நடைபாதையில் கடை போடுபவர்கள் தங்கள் வியாபாரத்திற்கு உரிய சாமான்களை சாலை ஓரத்தில் போட்டு வியாபாரம் செய்வது ,மண்ணிக்க முடியாத குற்றம். ஏன் அந்த சாலையில் விபத்து நேர்ந்தால் சாலையோரக் கடைக்காரர்கள் வியாபாரிகள் கூட விபத்திற்கு காரணமாணவர்களேயாவர். அவர்களுக்குக் கூட பாவத்தில் பங்கு உண்டு.பல தவறுகளை நாம் தெரியாமல் செய்கிறோம். ஆனால் தெரிந்து செய்யும் தவறுகளால் நாம் மன்னிக்க முடியாத குற்றவாளியாக மாறி, இப்பிறப்பிலும்,மறு பிறப்பிலும், நாம் அனுபவித்தே ஆக வேண்டும். ஆகவே நம் முன்னோர்கள் சமயம், சமுதாயம், அரசாங்கம், பாடங்கள், வேதங்கள் சொல்லியவற்றில் உள்ள கருத்துக்கள். கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நாமும், நம் நாடும். செழித்து வளர்வோம் என்பதில் சந்தேகமே இல்லை. 

Feb 28, 2023

முடிவு எடுப்பதில் தாமதம் வேண்டாமே !

பலருடைய உள்ளத்தில் இந்த ஒரு கேள்வி எழாமல் இருப்பதில்லை. தான் செய்யுயம் ஒவ்வொரு யெலும் சரியா ? தவறா ? என்று யோசிப்பதிலேயே காலத்தையும், மனசையும் கெடுத்துக் கொள்கின்றனர். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெரியவர்கள் கூட உனக்கு எது சரின்னு படுதோ அதைச் சட்டுபுட்டுன்னு செய்வியா ? என்பார்கள்.ஏனென்றால் முடிவெடுப்பதில் யோசித்துக் கொண்டு யாரிடமாவது முடிவெடுக்கலாம். என்றால் அவசர முடிவுகளுக்கு என்ன செய்வார்கள். கேட்டுசரியா ? தவறா ? என்ற யோசனை சாதாரண உடை விஷயத்திலிருந்து அடுக்கிக் கொண்டே போகலாம். திருமணத்திற்கோ நிச்சயதார்த்தம், சங்கவிழா, ஏன் துஷ்டி வீட்டிற்குப் போவதற்குக் கூட பல பெண்கள் என்ன புடவை, என்ன நகை போடுவது என்று அலை பாய்ந்து நொந்து போகின்றனர். அவர்கள் மனம் எது சரி ? என்ற தெளிவான சிந்தனையை சிந்திப்பதில்லை. சரி சமையலை எடுத்துக் கொள்வோம், விருந்தாளி வருகிறார்கள். வகையா சமைக்கணும், என்ன சமைப்பது என்று யோசித்தே சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தலைவலியில் படுத்து விடுகின்றனர்.வியாபாரத் துறையிலும் சரி முடிவெடுப்பதற்கு படாதபாடு படுவார்கள். பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்குள் உள்ளம் பதறி மனம் படபடத்து செய்வதறியாது திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள் பலர்.இந்த மனிதர்களிடையே ஒரு சிலர் முடிவெடுப்பதில் தாமதிக்காமல் டக்கென்று முடித்த விடுவார்கள். இப்ப என்ன ? நடக்கிறது .நடக்கட்டும் எந்த வியாபாரம் தான் டென்ஷன் இல்லாதது வரும்போது,பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக பிரகாசிக்கிறார்கள்.என்ன ஆகி விடுமோ ? என்ற பயம் இருக்கும் வரை நம் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. ஆதனால் முடிவெடுப்பதில் முட்டாள் தனமான முடிவும் கஷ்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்.நாள், நட்சத்திரம் பார்த்து பல விஷயங்களைத் தள்ளிப் போடுபவர்கள் அவசரமாக வைத்தியம் செய்வதைத் தள்ளிப் போட்டு உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வருபவர்கள் உண்டு.வீட்டை விட்டு புறப்படும் பொழுது மந்தாரமாக இருக்கே ,குடை எடுத்துட்டுப் போகவா ? வேண்டாமா ? என்று ரெம்ப நேரம் குழம்புவார்கள். முடிவெடுப்பதில் உள்ள குறை" ஒன்று குடை எடுத்துட்டுப் போங்க ,இல்லாட்டி நனைஞ்சுட்டு வந்தா உங்க மண்டையிலே என்ன செடியா முளைச்சிடும். துணி தானே நனையும் காயப் போட்டுக்கலாம்" ! இது துரிதமாக முடிவெடுக்கும் மனைவியின் அபிப்ராயம். என்ன நடந்தாலும் பரவாயில்லை, நடப்பது நடக்கட்டும் எனக்கு இது சரியென்றுபடுது நான் செய்கிறேன். தவறவிட்டா அப்புறம் திருத்திக்கிறேன் இது முடிவெடுப்பதில் தைரியம் உள்ளவர்களின் மனப்பான்மை நீங்க எப்படி ? முடிவெடுப்பதில்  தாமதம்  வேண்டாமே !

Oct 22, 2021

அவமானங்கள் இன்றி வெகுமானங்கள் இல்லை

பல விதங்களில் மனிதர்களாகிய நாம் அவமானப்பட்டு விடுகிறோம். அந்த அவமானங்களை தனக்குத் தானே சாதகமாக எடுத்துக் கொள்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். பலதரப்பட்ட திறமை உள்ளவர்கள் கூட தோல்வியைத் தழுவிவிட்டால் அதை பெருத்த அவமானமாக எடுத்துக் கொண்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளாமல் துவண்டு விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பால்டிமோர் என்ற குட்டி தேசத்தில் பிறந்த மைக்கேல் செல்யே போட்டியில் தோற்றுவிட்டார். பின் அவர் அப்போட்டியில் வெற்றி பெற்ற யுவான் பரோக்கர் என்பவரைப் பார்த்து உங்கள் வெற்றியின் காரணம் என்ன? நானும் கற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் யுவான் அவரை ஒரு அலட்சியப் பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார். ஆனாலும் மைக்கேல் அவரை தங்கப்பதக்கத்துடன் உள்ளபடி போட்டோ எடுத்து தன் படுக்கை அறையில் மாட்டிக் கொண்டு, தினமும் காலையில் எழுந்து அவருடைய படத்தைப் பார்த்துவிட்டு, கடுமையாக உடற்பயிற்சி செய்வார். 3 மணி நேரப் பயிற்சியை 6 மணி நேரமாக உழைத்து கடுமையாகப் பயிற்சி செய்தார். அடுத்த 4 ஆண்டுகளுக்குப் பின் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளத் தயாரானார்.செல்வதற்கு முன் தன் தாயாரைப் பார்த்து நடைபெறும் ஒலிம்பிக்கில் 8 போட்டிகளில் யுவானை 1 போட்டியிலாவது வெல்லாமல் நான் தாயகம் திரும்ப மாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார். 8 போட்டிகளில் 7 போட்டியில் உலகசாதனை புரிந்து 8வது போட்டியில் யுவானை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஒரு போட்டியிலாவது ஜெயிப்பேன் என்று கூறிய, மைக்கேல் 8 போட்டிகளிலும் வென்று தொடர்ந்து விளையாடிய விளையாட்டில் மொத்தம் 25 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை புரிந்தார்.கணித மேதை சீனிவாச ராமானுஜர் வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டம், ஒரு நாள் அவர் பள்ளி செல்லும் பொழுது, சாப்பாடு ஒன்றும் இல்லை. பள்ளிக்கு சென்றுவிட்டு வா, ஒரு ஆழாக்கு அரிசியாவது வாங்கி, உனக்கு சோறு சமைத்து வைக்கிறேன் என்று, அவருடைய தாயார் கூறியுள்ளார்.பட்டினியுடன் சென்ற அவர் தான் கண்டுபிடித்த கணக்கை கோவில் வாசலில், பள்ளியில் கிடைத்த துண்டு சாக்பீசால் எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய தாயாரும் சாப்பிட வரவில்லை என்று அவரைத் தேடிச் சென்று, கோவில் வாசலில் எழுதியிருப்பது புரியாமல் பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். அவரும் அதைப் பார்த்து விடை சரியே, ஆனால் எப்படி ? என்று வியந்து, ஒரு பேப்பரில் எழுதச் சொன்னார். எழுதிக் கொடுத்தும் ஒன்றுமே புரியவில்லை.இராமானுஜரின் மாமன் முறையில் உள்ள ஒருவர் அமெரிக்காவில் உள்ளவர். அதைப் பார்த்து அதை அப்படியே கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கணக்கு மேதை ஹார்டிக்கு அனுப்பி வைத்தார். அவர் வியந்து போய், அவரை உடனே லண்டன் வருமாறு அழைப்பு விடுத்து, வருவதற்கு, சாப்பாட்டிற்கு, இருப்பதற்கு, எல்லா வசதியும் செய்து தருவதாகக் கூறினார்.இராமானுஜர் முதலில் என் தாய், தந்தைக்கு சாப்பாட்டிற்கு பணம் அனுப்புங்கள், அதன்பின் 1 மாதம் கழித்து நான் வருகிறேன். ஏன்று கூறினார்.நாம் தோற்றுவிட்டோமே என்று அவமானப்பட்டு மைக்கேல் மூலையில் உட்கார வில்லை. அவருடைய கடுமையான முயற்சி வெகுமானம் தந்தது, சாப்பாட்டிற்கே வழியில்லை என்று, ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கவில்லை ராமானுஜர். கணிதத்தின் மீதுள்ள ஆர்வத்தை தன் பட்டினியைப் பொருட்படுத்தாமல், தன் பணியினை தொடர்ந்ததால் இன்றளவும் இவ்வுலகிற்கு கிடைத்த மிகப் பெரிய கணித பொக்கிஷம்.இன்று நாம் எடுக்கும் ஏடிஎம்மிலிருந்து இவருடைய கணிதம் தான் நமக்கு உதவுகிறது. ராமானுஜரின் அயராத கணக்கு ஆர்வம், சாப்பாட்டிற்கு இல்லாமல் பட்டினியில் இருக்கும் பொழுது கூட அபார பணியாற்றியதால் அவருடைய பெயர், புகழ் எல்லாமே வெகுமானங்கள்  தான். தொடர்ந்து யாருடைய உதவியும் இன்றி தன் 40-வது வயதில் இருந்து 70-வது வயது வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாய்க்கால் வெட்டி இருக்கிறார். தொடர்ந்து 30 வருடங்கள் விடாமல் செய்திருக்கிறார் என்றால், நம்ப முடிகிறதா ? இல்லையே ! ஆனாலும் பீஹார் மாநிலத்தில் சின்ன கிராமத்தில் உள்ள லவுங்கி புய்யா என்ற ஏழை விவசாயி என்பவர் இதைச் செய்திருக்கிறார்.அவர் இருக்கும் கிராமத்தில் தண்ணீர் இன்றி தவித்த மக்களைப் பார்த்து, அருகில் உள்ள மலையில், மழைபொழியும் நேரம் வரும் தண்ணீரை தங்கள் ஊர் கிராமத்து தெப்பத்தில், சேர்த்தாலே போதும் என்று கூறி, வாய்க்கால் வெட்டும் பாதையையும், கணித்து சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை.'இது வேலைக்கு ஆகாது' என்று தினமும் தன் ஆடு, மாடுகளை மேய்க்க விட்டுவிட்டு மண்வெட்டி, கூடை சகிதமாக, தினமும் தண்ணீர் வரும் வழியை, வெட்ட ஆரம்பித்தார். அவர் செய்யும் வேலையைப் பார்த்து, கிராமத்தில் உள்ள அனைவரும், அவரை கேலி செய்தனரே தவிர உதவவில்லை. சொந்த மகன்களும், மனைவியும், வெளியூர் சென்று விட்டனர். அப்பொழுதும் மனம் தளராமல் தினமும், இல்வேலையை ஆத்மார்த்தமாக செய்து வந்தார். 70-வது வயதில் இப் பணியினைச் சிறப்பாகச் செய்தார். அவ் ஊர் குளமும் நிறைந்தது. அக்கிராமத்தில் தண்ணீர் பஞ்சமும் தீர்ந்தது.அவரை கிறுக்கன் என்று கூறியவர்கள், எல்லாம் வியந்து பாராட்டினார்கள். இவருடைய அளப்பறிய பணியினை ஊக்குவிக்கும் வகையில் மஹிந்த்ரா கம்பெனி முதலாளி ஆனந்த் மஹீந்தரா அவருக்கு இலவசமாக டிராக்டர் வழங்கி கௌரவித்துள்ளார்.அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை இவர் நிராகரித்ததாகக் கூறுகின்றனர். தன் வீட்டிற்காக உழைக்க, சோம்பேறிபடும் மக்கள் நடுவே, ஊருக்காக அவர் பல அவமானங்களுடன் பணியை விடாது செய்து வெகுமானங்கள் பெற்றுள்ளார்.ஆக வாழ்க்கையில் ஒவ்வொரு புகழ் பெற்ற மனிதர்களும் அவமானங்கள் இன்றி வெகுமானங்கள்  பெற்றதில்லை.

1 2 3 4

AD's



More News