விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (13.01.2026) அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் குத்துவிளக்குயேற்றி துவக்கிவைத்தார்.அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், கோலப்போட்டி, சைக்கிள் போட்டி, பலூன் ஊதுதல், எலுமிச்சை கரண்டி நடை ஓட்டம், நினைவு திறன் போட்டி, லக்கி வின்னர், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கண்கட்டி பானை உடைத்தல், நடனம், கவிதை வாசித்தல், நகைச்சுவை துணுக்குகள் சொல்லுதல், பாட்டுக்கு பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், பரதம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முன்னதாக, கலை நிகழ்ச்சிகளுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களை வரவேற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அலுவலர்கள் அனைவரும் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.மேலும், சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பொங்கல் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.அரசு அலுவலர்கள் சமத்துவ பொங்கல் விழாவில், தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இவ்விழாவில், அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி,திட்டஇயக்குநர்மாவட்டஊரகவளர்ச்சிமுகமை திரு.வீ.கேசவதாசன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (13.01.2026) தமிழ்நாடு பூமிதான வாரிய நிலத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் வசிக்கும் 23-நிலமற்ற ஏழை, எளிய விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு தலா ரூ.1 இலட்சத்து 72 மதிப்பில் மொத்தம் ரூ.39 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனை விநியோகப் பத்திரங்களை வழங்கினர்.நிலச் சீர்திருத்தத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாடு பூமிதான நில வாரியமானது, நிலக்கொடை இயக்கத்தின் கீழ் பெறப்பட்ட நிலங்களை முறைப்படுத்துவது, அவற்றின் உரிமையை வாரியத்தின் பெயருக்கு மாற்றுவது, மற்றும் அந்த நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நில மறுபங்கீடு மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், இந்த வாரியமானது நிலங்களை நிலமற்றவர்களுக்கு ஒதுக்குவதற்கும், சமூக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கும், பட்டா மாற்றம் போன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொறுப்பாகும்.அதனடிப்படையில், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் வசிக்கும் 23-நிலமற்ற ஏழை, எளிய விவசாயிகளுக்கு வீடு கட்டுவதற்கு தலா ரூ.1 இலட்சத்து 72 மதிப்பில் மொத்தம் ரூ.39 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனை விநியோகப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2026 -ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விருதின் பெயர் திருநங்கையருக்கான முன் மாதிரி விருதுதகுதிகள்:1. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.2. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும்.3. திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.4. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in) இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை:1. பொருளடக்கம் மற்றும் பக்க எண்.2. உயிர் தரவு (Bio Data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -23. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பரிந்துரைக்கடிதம்4. மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரைக் கடிதம்5. சுயசரிதை6. தனியரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்) -Soft & Hard Copy7. தனியர் பெற்ற விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம்/விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்).8. சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்).9. சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு.10. சேவையாற்றியதற்கான வரிவான அறிக்கை11. சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம்.12. சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று.13. இணைப்பு படிவம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) முழுமையாக பூர்த்தி செய்து soft Copy & Hard Copy அனுப்பப்பட வேண்டும்.14. கையேடு (Booklet) தமிழில் அச்சு(Print) செய்யப்பட்டு தலா 2 நகல்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும். திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்: 18.02.2026 ஆகும். இறுதி நாளிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்க ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், 20.02.2026-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் 04562-252701 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தொவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் (13.01.2026) நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,IAS.,அவர்கள்நேரில்சென்றுபார்வையிட்டுஆய்வுசெய்தார்.வெம்பக்கோட்டை வட்டம் தாயில்பட்டி ஊராட்சியில், பொங்கல் திருநாள்-2026 னை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், பொங்கல் வாழ்த்து மடல் அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.தாயில்பட்டி ஊராட்சியில், உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உரிய பயிற்சி வழங்கப்பட்டு, பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளை கண்டறியவும், குடும்ப அட்டைதாரர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், உங்க கனவ சொல்லுங்க படிவங்களை வழங்கி தகவல்களை பெறும் பணிகளை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மேலக்கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களின் எழுத்தறிவுத் திறன், கற்றல் திறன் குறித்தும், பாடத்திட்ட முறைகள் குறித்தும் கேட்டறிந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மேலக்கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகள் (மாஸ் கிளினிங்) மேற்கொள்ளப்பட்ட இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அவர்கள் நட்டு வைத்தார்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கொங்கன்குளம் ஊராட்சியில் சமூகத்தின் மீதான தொழில் நிறுவனங்களின் பங்களிப்புத்தொகை 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நேர்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் சாதி, சமய பேதமற்ற சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 14.01.2026 புதன்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது.மேற்படி சமத்துவப் பொங்கல் பெருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து தரப்பு பொதுமக்களும் சாதி, சமய பேதமின்றி தவறாது கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் பெருவிழாவினை சிறப்பித்து தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கடம்பன்குளம் ஊராட்சியில் (14.01.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் சாதி, இன, மத என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் மயிலாட்டம், கரகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இயற்கைக்கும், சமூக வேறுபாடுகளை மறந்து ”பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற உயரிய தமிழர் சிந்தனை நடைமுறையை வெளிப்படுத்தும் நாளான பொங்கல் திருநாளை, சமத்துவப் பொங்கலாக விருதுநகர் மாவட்டத்தில் 450-கிராம ஊராட்சிகளிலும் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதைத் தொடர்ந்து, இன்று இந்தப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான இந்த பொங்கல் திருநாள் மனிதர்களுக்கான பொங்கல் மட்டுமின்றி, அனைத்து கால்நடைகளுக்கும் ஒரு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மேலும், அனைவரும் ஒரு பொதுவான இடத்தில் சந்தித்து காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.நம் தமிழ் இனத்தைச் சார்ந்த அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என நம் முன்னோர்கள் கூறிய அடிப்படையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.இந்த ஆண்டு பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.3 ஆயிரம் வீதம் வழங்கப்பட்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை,கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார் நம்முடைய , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இந்த ஆண்டு பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 6 இலட்சத்து 4 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரூ.181 கோடி வழங்கப்பட்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கண்கட்டி பானை உடைத்தல், பலூன் உடைத்தல், நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், பரதம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடர்ந்து, சிறுவர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசுகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடத்தப்பட்ட கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி ஊராட்சி, சமத்துவபுரத்தில் (14.01.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையில் சாதி, இன, மத என எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பங்கேற்கும் மயிலாட்டம், கரகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நம்முடைய சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், மிகச்சிறப்பான வகையிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த பொங்கல் விழாவிற்கு வருகை புரிந்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் சமத்துவப் பொங்கலாக கொண்டாட ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய தினம் மிகச் சிறப்பான முறையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.இந்த பொங்கல் சமத்துவப் பொங்கல் என்றழைக்கப்பட ஒரே காரணம் இந்தியாவின் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அந்தந்த நிலப்பகுதியையோ, அவர்கள் சார்ந்துள்ள சமுதாய மரபினை சார்ந்தோ அவர்களின் பாரம்பரிய மரபு படி ஒவ்வொரு பண்டிகையினையும் கொண்டாடுவது இயற்கை. தமிழ்நாட்டிலும் அது போன்றே. ஆனால், சாதி,மத,இன,பொருளாதார ரீதியில் எந்த வித பாகுபாடும் இல்லாமல், எந்த வித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நாம் அனைவரும் தமிழர் நாம் அனைவரும் பேசக் கூடிய மொழி தொன்மையான தமிழ் மொழி. இது தமிழர் திருநாள்.உழவர் திருநாள். எனவே, இது தான் சமத்துவப் பொங்கல் நடைபெறக் கூடிய நாளாக இருக்கும். இது தான் உண்மையான சமத்துவ நாளாக இருக்கும் என்கிற வகையில் அமையப் பெற்றுள்ளது.இந்த பொங்கல் விழாவினை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுவர்.பைசாகி என்று வட இந்தியாவில் கொண்டாடுவர். ஆனால், நம்முடைய தமிழ்நாட்டிலே இத்திருநாளை சூரியன் போக்கினை வைத்து, உழவர்களுக்கான அறுவடைத்திருநாளாக கொண்டாடுகிறோம். பொருளாதாரத்திலே 11.6 சதவீதம் என்ற வளர்ச்சி இலக்கினை அடைந்துள்ளோம் . இவ்வளர்ச்சியானது சமுதாயத்திலே உள்ள அடித்தட்டு மக்களின் வளர்ச்சியினையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது சமூக நலத்திட்டங்களால் மட்டுமே சாத்தியம் என்பதால் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் எல்லா விதத் திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.இந்த ஆண்டின் துவக்கத்தில் 1 கோடியே 13 இலட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நீட்டிக்கப்பட்டு 1 கோடியே 33 இலட்சம் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார். பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் முதல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வரை எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லா விதமானத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்த தைத்திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாக அமையும் வகையில் என் இனிய மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் 450-கிராம ஊராட்சிகளிலும் சமத்துவப் பொங்கல் கொண்டாட ஆணையிட்டதைத் தொடர்ந்து, சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுமார் 6 இலட்சத்து 4 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.181 கோடி வழங்கப்பட்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை,கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, சமத்துவபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை ஈ.வெ.ரா.பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்(12.01.2026) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-IV தேர்வில் தேர்ச்சி பெற்று, விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் தேர்வு செய்யப்பட்ட 5-தேர்வாளர்களுக்கு பணிநியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,. அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (12.01.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்த திருமதி கமலி என்பவரின் மகள் செல்வி யாசிகா என்பவருக்கு தீருதவித் தொகை ரூ.12 இலட்சத்திற்கான காசோலையினையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்த 2 நபர்களின் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைப்பு ஆணையினையும், தகுதியான மூன்று நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைப்பு ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் 2016-ன் கீழ், மீட்கப்பட்ட 5 வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், PMJJBY-திட்டத்தின் கீழ், தாமோதரன் என்பவருக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், கட்டிட இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த திரு.பூமிராஜன் என்பவரின் மகன் திரு.அஜித்குமார் என்பவருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4-நபர்களுக்கு ரூ.19,200/- மதிப்பில் காதொலிக்கருவிகளையும், 5-நபர்களுக்கு ரூ.12,500/-மதிப்பில் கைக்கடிகாரங்ளையும் மொத்தம் ரூ.31,700/-மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சுவாயுக்களால் மூச்சுதிணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாத்து, சுற்றுச்சூழலை காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.