25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முதல் பக்க கட்டுரை

Dec 31, 2022

HAPPY NEW YEAR பேட்டரி ரீசார்ஜ்

 என்ன  பேட்டரி ரீசார்ஜ் ? புரியவில்லையா ? எல்லாம் நம் சந்தோஷத்திற்குத் தான். நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் நம்முடைய சக்தி நஷ்டமடைகின்றது. அது மட்டுமா ! உலகத்திலேயே இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று கேட்டு, பார்த்து அதிசயப்பட்டு, நமக்கு இப்படி எல்லாம் நடக்கிறதா  ? என்று வருத்தப்பட்டு ஓய்ந்து, பலவீனமடைகிறோம். சரி,இந்த மாதிரி சமயத்தில் நமக்கு தேவை மாற்றம் என்ற பேட்டரி சார்ஜ்.பேட்டரியை புதிதாகப் போடலாம். இல்லாவிட்டால் ரீசார்ஜ் செய்யலாம். நாம் ஓய்ந்து விட்டோம் என்று மூளையில் படுக்க முடியுமா ? நம்மை நாமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்தால், நம் மனம் சந்தோஷப்படும். நன்றாக சிரிக்கும் கும்பலுடன் சேர்ந்து வாய்விட்டு சிரித்து நம் மனதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.வித்தியாசமாக ஒரு சின்ன மரக்கன்றை வாங்கி நாமே சின்ன குழி தோண்டி ,அக்கன்றினை வைத்து திருப்பி மணலை மூடி,வட்டமாகப் பள்ளம் தோண்டி வரப்பு கட்டலாம். பின்பு அதற்கு வேலியாக கம்புகளை ஊன்றி கட்டி, ஆடு, மாடு மேய்க்காமல் பாதுகாப்பு செய்து ,அதன் பின் அம்மரத்திற்கு தண்ணீர் விட்டு காயாமல் பார்த்தால், நம் கண்ணெதிரே மரம் கிடுகிடுவென்று வளர்ந்தால் ,அதுவே நம்முடைய மனம் சந்தோஷத்தால் புதுப்பிக்கப்படும்.இல்லையென்றால் ஒரு குழந்தைக்கு நம்மால் இயன்ற அளவு சிலேட்டோ, புஸ்தகமோ, படிப்பறிவோ, சொல்லிக் கொடுத்து அந்தக் குழந்தை அழகாக படிக்கும் பொழுது உண்டாகும். ஆனந்தம் இருக்கிறதே, அது மிகப் பெரிய மனநிறைவுடன் ,மனம் ரீசார்ஜ் ஆகி, புதுப்பொலிவுடன் மிதக்கும். புது மாதிரி சமைத்து ஒட்டு மொத்த குடும்பமே சந்தோஷத்தால் Fresh ஆக ரீசார்ஜ் ஆகிவிடுவார்கள்.பெயின்டிங், பரதம் போன்ற டான்ஸ் ஆடும் பயிற்சி,பாட்டு பாடுதல், பிடித்த வேலையாக கூடை பின்னுதல், பொம்மை செய்தல், புடவைகளில் ஜமிக்கி தைத்தல், எம்பிராய்டரி வேலை, கேரம்போர்டு, சீட்டு ஆடுதல், (காசு வைக்க  வேண்டாம்) குறிப்பார்த்து சுடுவது, (அட்டையை சுடுங்கள்) குருவி, பறவை வேண்டவே வேண்டாம், நெடுந்தூரம் நடப்பது மலை ஏறுவது, நீச்சல் அடிப்பது என்று எத்தனையோ மாற்று வேலைகளை செய்தால் மனம் லேசாகி புத்துணர்ச்சியுடன். ரீசார்ஜ் ஆகி அன்றாட வேலைகளை சந்தோஷமாகச் செய்யலாம்.இந்த மாதிரி எத்தனை எத்தனையோ மாற்றங்களை செய்து நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டே சந்தோஷமாக இருக்கலாம். 1957 ல் என்று நம்முடைய பழைய கஷ்டமான கதைகளை தூசு தட்டி எடுத்து வருத்தப்படுவதை விட்டு விட்டு 2023 நமக்கு நல்ல ஆண்டாக நல்ல மாற்றங்கள் மிகுந்த ஆண்டாக அமைய வேண்டும் என்று மனதை ரீசார்ஜ், பேட்டரி சார்ஜ் செய்து ரெடியாகிக் கொள்ளுங்கள். வருஷம் புதுசு, மனதும் புதுசு, தான், இப்ப ? அப்படித்தானே ?

Dec 01, 2022

வாழ்க்கைத் துணைவி

“ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் ”என்று சும்மாவா சொன்னார்கள். தம்பதியினரின் சந்தோஷமும், ஒரு நல்ல குடும்பம் உருவாவாதற்கும் ஏன் ? நல்லதொரு தேசத்தை உருவாக்கும் பக்குவமும் இந்த வாழ்க்கைத் துணைவிக்கு உண்டு.தன் வாழ்க்கைத் துணைவி வீட்டிற்கு வரும் பொழுது, தன்னை வரவேற்பதற்குக் காத்திருப்பாள் என்ற நினைப்பு வந்தால், நிச்சயமாக அங்கும் இங்கும் செல்ல மாட்டார்கள். நேரத்துக்கு வீட்டிற்கு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் போன் பண்ணியாவது லேட்டாக வரும் தகவலை சொல்லி விடுவார்கள். எதற்காக ? தன்னை வரவேற்கக் காத்திருக்கும் உண்மையான கண்களின் வசீகரத்தை மறக்கவோ, மறுக்கவோ முடியாது.நீங்க சொல்றதெல்லாம் பழைய காலம் இப்பெல்லாம் 'சும்மா பார்த்த முகத்தையே பார்க்க. போர்" என்றால் உங்கள் வாழ்க்கை போரை தொடங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்பது தெளிவாகிறது.என் வீட்டுக்காரர் வரும்பொழுது நான் இருக்கணும் என்று ஒரு சட்டமும் இல்லை. அவர்கிட்ட ஒரு சாவி, என் கிட்ட ஒரு சாவி, எந்த நேரமானாலும் எங்கே போகணுமோ, அங்கே போய்விட்டு வரலாம். அவர் நேரத்திற்கு அவர் வருவார், என் நேரத்திற்கு நான் வருவேன்.அம்மாக்கள் மனசில்லாமல்" என்னடி? மாப்பிள்ளை இந்நேரம் ஆபிஸிலிருந்து வந்துருவாரே நீ இங்க இருக்கே ? யார் காபி போடுவார்கள் “? ”அவரா போட்டு குடிச்சிடுவாரும்மா" “அப்ப டிபன் ? பக்கத்திலே ஹோட்டல்லே சாப்பிட்டுக்குவார் ' நீ டென்ஷன் ஆகாதே அம்மா”, என்கிறார்கள் பளிச்சென்று. அந்நேரத்தில் செல்போன் அடிக்க “'ஹாய்டா டின்னர் பக்கத்திலே முடிச்சிட்டு எனக்கு ஒரு நூடுல்ஸ் பேக் பண்ணி வச்சுடு”. முகுந்த் (12 வயது மகன்) வந்தா அவனையும் அங்க சாப்பிடச் சொல்லிடு".  போன் கட் பண்ணியாச்சு. அம்மாவுக்கு" யாரைடி 'டா' சொன்னே மாப்பிள்ளையா ? ஏண்டி பிள்ளைக்கு தினம் தினம் ஹோட்டல் சாப்பாடு ஆகுமா ? "அம்மா அவன் சின்னபிள்ளையாம்மா ! அவனே எல்லாத்தை பாத்துப்பாம்மா ஸ 'முன்னே மாதிரி ஹோட்டல் இல்லே' இப்பொல்லாம் வீட்டை விட சுத்தமா வச்சுக்கிறாங்க" “இதையெல்லாம் சாப்பிட்டுத்தான் உன் பேரன் கோல்ட்மெடல் வாங்கியிருக்கான். விளையாட்டிலும் படிப்பிலும்” என்கிறாள்.வாழ்க்கைத் துணைவி  தாய் என்ற அம்மாவுக்கு, அந்த காலத்தில் இந்திய ஜனாதிபதியாக இருந்த திரு.வி.வி.கிரி, பிற்காலத்தில் ஹோட்டலில் தான் எல்லோரும் சாப்பிடும் பழக்கம் வரப்போகிறது என்று கூறியதற்கு ,எல்லோரும் சகட்டு மேனிக்கு தெரிந்து பேசுகிறாரா என்ன ? என்று ஏளனம் செய்தனர். அது உண்மையாயிடுச்சே ! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டார்.வாழ்க்கை நம் இஷ்டத்திற்கும், எதிர் காலக் குழந்தைகள் கோல்ட்மெடல் வாங்கி, ஜெர்மன்,ஜப்பான், அமெரிக்கா படிப்பதற்கு மாத்திரம் தானா ? உள் மனதில் அன்பு, பாசம், பண்பு, அந்யோந்யம் ஆகியவற்றிற்கெல்லாம் குட்பைதான்.மணக்க, மணக்க தன் கைகளால் செய்த இட்லி சாம்பார் சட்னியை கையால் பரிமாறும் பொழுது "இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க" சாப்பிடும்மா என்று மனம் நிறைய கூறும் பொழுது ,நாம் சாப்பிடும் உணவுக் கவளங்கள் ஒவ்வொன்றும், நம்மீது பாசப்பிணைப்பினை ஏற்படுத்தத் தான் செய்யும்.நாமே வீட்டிற்கு செல்லும் பொழுது 'வாம்மா என்று வரவேற்க ஒராளில்லாமல், சும்மா ஒப்புக்கு ஹாய் சொன்னால் எப்படி இருக்கும் .வீட்டில் நுழையும் போது “வாங்கோ, காபி சாப்பிடுங்கோ” என்று பளிச் முகத்துடன் வரவேற்கும் வாழ்க்கைத் துணைவியைக் கண்டால் அந்த வீட்டின் மீது ஒரு மரியாதை ஏற்படும்.தன் இஷ்டத்திற்கு இருப்பதற்கு காரணம் மிகுந்த வருமானம் தான். திடீரென்று கணவனுக்கோ, குழந்தைக்கோ தீராத வியாதி வந்து விட்டால், வீடே தலை கீழ்தான். தானே சிக்கனம் பார்த்து பட்ஜெட் போட்டு. சமைத்து கவனித்தால் தான், இந்த இல்லற வாழ்க்கையை சுலபமாகத் தள்ளிக் கொண்டு போக முடியும்.நல்ல வாழ்க்கைத் துணைவிக்கு பக்குவமும், அனுசரனையும் இயல்பாகவே இருக்கும். வாழ்க்கைச் சக்கரத்தை ஒரே சீராக ஒட்டிச் செல்வதால், தன் குடும்பத்தார் சேகரித்த சொத்தெல்லாவற்றையும் சிந்தாமல், சிதறாமல் பார்த்துக் கொண்டால், அக்கணவனும், நிம்மதியாக சம்பாதித்துக் கொட்டுவார்கள், அமைதியாக ஓரிடத்தில் (வாழ்க்கை) தென்றல் காற்று என்ற (அன்பில்) குளிர்வித்து ஓட்டும் துடுப்புக்களாக எல்லா பக்கமும் இருந்து காப்பாற்றுவார்கள், இந்த ஒப்பற்ற வாழ்க்கைத் துணைவிகள்.

Oct 22, 2022

இனிக்கும் வாழ்க்கை

 தீபாவளி ஸ்வீட்ஸ் மாத்திரம் இனித்தால் போதுமா? வாழ்க்கை இனிக்க வேண்டாமா? வேகமான உலகில் பொறுமை, சகிப்புத் தன்மை இல்லவே இல்லை. சின்ன விஷயத்திற்கு எல்லாம் பொசுக்கென்று கோபம் வந்து விடுகிறது. தோழியிடம், உடன் பிறந்தவர்களிடம் பகைத்துக் கொண்டு வாழ்வது, என்று சர்வ சாதாரணமாகி விட்டது. இதாவது சரி. சொத்துத் தகராறு. பொறாமையினால் வருவது சகஜம் தானப்பா? என்று விட்டு விடுகிறோம். அதைவிட பயங்கரமான ஒன்று விவாகரத்து. கணவன், மனைவியிடம் உள்ள தகராறு.கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் எனக்குப் பிடிக்கவில்லை. உடனே டைவர்ஸ் கேட்பது. சொத்து பிரிப்பதில் எனக்கு உப்புக்குப் பெறாத சொத்தை கொடுத்து விட்டார். எனக்கு கொடுத்ததை விட 4 கிராம் கூட உள்ள நகையை, தங்கச்சிக்கு கொடுத்து விட்டாங்க. தாய், தந்தையரை என்னால் வைத்துப் பார்க்க முடியாது. இப்படி எத்தனையோ, விஷயங்களைப் பிடிக்காமல்,எடுத்தெரிந்து பேசுவது.வாழ்க்கை என்றாலே வேப்பம் பூ மாதிரி கசக்கிறது. அதே வேப்பம் பூவை நன்றாக ஆற வைத்து, மோரில் உப்பு கலந்து,  நனைத்து பின் வெயிலில் காய வைத்து ,பொல பொல என்று வந்தவுடன் டப்பாவில் அடைத்து வைத்து, வேண்டியபொழுது கொஞ்சம் எடுத்து, மிதமான தீயில் வேப்பம் பூவை வதக்கி, புளித் தண்ணீரில் சிறிது வெல்லம் போட்டு கொதிக்க வைத்து, வறுத்த வேப்பம்பூவைப் போட்டால் கசக்கும் வேப்பம்பூ தேனாக ருசியாக இருக்கும்.  அதைப் போலத்தான் வாழ்க்கை கசக்கும், கசக்கும் வாழ்க்கையை மோர், உப்பு போன்று பொறுமை, சகிப்புத் தன்மையில் ஊறி வெளிவர வேண்டும். கஷ்டங்கள் உங்களை வறுத்து எடுத்தாலும் ,வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கும். இதுக்குப் போயி ஏன் வருத்தப்பட வேண்டும். என்று விட்டு விடும், மனப்பக்குவம் வேண்டும். பின்பு அன்பு, பாசம் என்ற இனிப்பை கசக்கும் வாழ்க்கையில் கலந்தால், வாழ்க்கை தேன்துளி போன்று இனிக்கத்தான் செய்யும்.நீங்க என்ன வேப்பம் பூவில் தேன்துளி சொல்கிறீர்களா ? வாழ்க்கையில் தேன்துளியா ? எப்படி ? ரெண்டிலுமே தேன் துளி கண்டிப்பாக இருக்கிறது. இதைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பக்குவப் படுத்தும் விதத்தில், வேப்பம் பூ தேனாக இனிக்கிறதல்லவா ? அதே மாதிரி தான், நம் வாழ்க்கையை எடுக்க வேண்டியவற்றை, அதன்தன் இடத்தில் வைத்துப் பக்குவப்படுத்திப் பார்த்தால் இனிப்பான, இனிமையான வாழ்க்கை, இருக்கத்தான் செய்யும். தீபாவளி ஸ்வீட் ஆவது ஒரு லெவலில் திகட்டும். இனிப்பான வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்.  

Sep 30, 2022

தேடலை ஆரம்பிக்கலாமா ? 

எந்த ஒரு விஷயத்திற்கும் அடிப்படை தெரிந்து கொண்டால் வேகமாக அதைப்பற்றி ஆராய்ந்து உணர்ந்து ,மேலும், மேலும் வளர்த்துக் கொள்ளலாம். பள்ளிக்குச் செல்கிறோம். பள்ளியில் குழந்தைகளுக்கு அ, ஆ, வோ, A, B, C, D யோ சொல்லிக் கொடுக்கிறோம். பின்பு படிப்படியாக வார்த்தைகள், வாக்கியங்கள், History, Geography, Maths, Science, Computer என்று தெரிந்து கொள்கின்றனர். இந்த அடிப்படையை கற்றுத் தெரிந்து கொண்டு, பின்பு அதை ஆராய்ந்து, தேடல் என்ற ஆர்வம் உள்ளவர்களால் மாத்திரம் தான் ,ஒரு சாதனை செய்ய முடிகின்றது.தேடல் என்றால் ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வதில், அடிப்படை உணர்வு இருப்பதுதான். பலர் இந்தத் தேடலுடன் யாரிடம் இதைப் பற்றிக் கேட்பது ? இதைத் தெரிந்து கொள்ள வேண்டுமே? என்று தினம், தினம் யோசித்து ,யாராவது கிடைப்பார்களா என்று ,அதைத் தெரிந்தவர்களிடம் சென்று அறிந்து கொள்கிறார்கள், பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான தேடல் உண்டு .அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அவர்களுடைய விருப்பம் தான். தேடல் என்பதை நாமாக உண்டாக்க முடியாது. தானாக வருவது தான். நவீன உலகின் தேடலின் ராஜாவாக விளங்குவது கம்ப்யூட்டர் தான். பல விஷயங்களை உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளது.ஒரு அடிப்படையை தெரிந்து கொண்டால் நம்முடைய ஆராய்ச்சியை மிக வேகமாக முடித்துக் கொள்ளலாம். நாமாக படிப்பதை விட அனுபவமிக்க ,ஒருவர் கற்றுக் கொடுத்தால் மிகவேகமாக பிடித்துக் கொள்கிறோம். அப்படித் தெரிந்து கொள்ளும்போது கற்றுக் கொடுத்தவரிடம் நம்மை அறியாமலேயே ஒரு மரியாதை ஏற்படுகிறது.ஒரு பெரியவரைப் பற்றி பலவாறு புகழ்ந்து பேசுகிறோம் ."என்னடா இது ரெம்ப அறுக்கிறார்கள்" என்று தான் தோன்றும். ஆனால் உண்மையிலேயே ,அந்தப் பெரியவர் எந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதை நாமும் கடைபிடித்தால் முன்னுக்கு வரலாம் என்றுநினைப்பவர்களுக்கு மாத்திரம் தான், அப்பெரியவரிடம் மதிப்புடன் கூடிய, சுயமுன்னேற்றமும் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. இவருடைய தேடல் அப் பெரியவரிடம் உள்ளது.ஒருவருடைய தேடலின் பலன்தான் உணவு, உடை, இருப்பிடம், என்று பலவிதங்களில்  அனுபவித்து வருகிறோம். தேடல்களில் மோசமான தேடல்களும் உண்டு. திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவனும் அந்தத் தேடலில் இறங்கி விடுகிறான். நல்லதிற்கும் தேடல்தான் .கெட்ட விஷயத்திற்கும் தேடல்தான். நல்ல காரியங்களின் தேடல் நல்ல பயனை அளிக்கின்றது. தேடல்கள் கம்ப்யூட்டரோ, சமையலோ, வீட்டைப் பெருக்கி துடைப்பதிலோ எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். கை வலிக்க நெல்குற்றுவதும், மாவாட்டுவதும், மசாலா அரைப்பதும்,  ,தூசி தட்டுவதும் ஒருவரை நிச்சயமாக சிந்திக்க வைத்திருக்கும் . பாவம் பெண்கள். இதைச் சுலபமாகவும் கஷ்டமில்லாமலும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும்  ஏதாவது செய்யவேண்டுமே! கவனம் செலுத்தி தேடலை  ஆரம்பிக்கிறார்கள். விளைவு ! இன்றைய கண்டுபிடிப்புகளான கிரைண்டர், வாஷிங் மெஷின் அப்பளம் தட்டும் மிஷின் வரை அடுக்கிக் கொண்டே போகலாம்.இதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தவர்களை ஏளனம் செய்தவர்கள், வீட்டில் எல்லாம் இக் கண்டுபிடிப்புக்கள் வரிசையாக அலங்கரிக்கின்றன. தேடலில் எதுவாக இருந்தாலும் உங்கள் குழந்தைகள் அவற்றில் ,தீவிரமாக இருக்கும்பொழுது அதை உற்சாகப்படுத்துங்கள். உதவுங்கள், பின்பு பாருங்கள் உங்கள் குழந்தைகளின் அபாரத் திறமையை இந்தத் தேடல்கள் வெளிக் கொண்டு வரும்,ஒரு தேடலை ஆரம்பிக்கும் பொழுது அதைப்பற்றி ஏற்கனவே அறிந்து வைத்துள்ள அனுபவமிக்க பெரியவர்களிடம் விஷயங்களைத் தெரிந்து கொண்டால் உங்கள் தேடல்களில் இரட்டிப்பு பலனைப் பெறலாம். தேடலை ஆரம்பிக்கலாமா ?    திருமதி  குணாபாஸ்கர்ராஜா 

Aug 30, 2022

மனமே' தொட்டால் சிணுங்கிதானே

 மனதில் உறுதி வேண்டும் என்ற பாடலைக் கேட்டவுடன் நாமெல்லாம் என்ன நினைக்கிறோம் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இப்படி ஆடக்கூடாது என்று மனிதகுலத்திற்கே சவாலாக இருப்பது இந்த 'மனசு' எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நாமாக அது சரியா, இது செய்யலாம் , என்று முடிவெடுக்கும் சமயத்தில் மனசு லேசாக அப்படிச் செய்யலாமே, இல்லை இப்படிச் செய்யலாமே ,என்று குரங்கு தாண்டவம் ஆடி ஒரு வழியாக அவ்வேலை முடிந்துவிடுகிறது.அதனுடைய பின் விளைவுகள் சுமூகமாக  முடிந்தால் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். அப்பொழுதும் மனசு இப்படிச் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமே ,என்ற மனநிலை முடிவெடுத்த முடிவுகள் தோல்வி அடைந்தால், ஐயோ தப்பு செய்து விட்டோமே.! அவங்க சொன்னாங்க நான் கேட்காமல் போய்விட்டேன். என்று மனம் அல்லோகலப்படுகிறது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதே, இன்னும் என்ன ? அடுத்ததைப் பற்றி நினைக்கலாமே ? என்ற மனம் வருவதேயில்லை.அப்பப்போ நினைத்த (அதாவது மனதைத் தொட்டு) தொட்டால் சுருங்கி செடிபோல  சுருங்கி, வருந்தி பின் மறந்து மறுபடியும் வேறு ஒன்றை நினைக்க ஆரம்பிக்கிறோம். திரும்பவும் சிணுங்குவதற்கு. பெரிய தொழிலதிபர் தன்னுடைய தொழிற்கூடத்திற்கு வந்தால் படுகறாராக கண்டிப்புடன் ஒரு சிறு தவறுகள் கூட வராமல் பார்த்துக் கொள்வார். அங்குள்ள அனைவரும் அவரைக் கண்டாலே தொடை நடுங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட மனுஷன் வீட்டுக்கு வந்துட்டாருன்னா ,அவர் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி ஜாலியாகப் பேசுவது, மனைவிக்குப் பயந்து சொன்ன பேச்சைக் கேட்பது, என்று சந்தோஷமாக வீட்டை கலகல வென்று வைத்துக் கொள்வார்.இதைப் பார்த்து வியந்து ஒருவர் எப்படி உன்னால் முடிகிறது என்று கேட்டார். அவரும் நான் என் மனசை தனியாக வைத்துவிடுவேன். அது எப்படி மனசை நினைக்கும் போது வச்சுக்கிறதுக்கும் வேண்டாம்னா தனியா வைக்கவும் முடியும். அது என்ன காசா, பணமா ? என்று சொன்னார். அது ஒரு மனப்பயிற்சி. அந்தந்த இடத்திற்கேற்ப நம் மனசைத் தனியாக வச்சுக்க தெரிஞ்சவங்களாலே தான் உலகத்தில் சந்தோஷமாக வாழமுடியும் என்கிறார்.சமைக்க தேவையான காய்கறிகள், பலசரக்குகள் அனைத்துமே இருக்கிறது. ஆனால் மனசை தூக்கி வச்சுட்டேன் அதனால் சமைக்கவில்லை என்றால், பசியுடன் வரும் கணவன் தூர்வாசர் ஆகிவிடுவாரல்லவா ? எந்த நேரத்தில் மனசை தூக்க வேண்டுமோ அந்த நேரத்தில் தூக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் அப்படிச் செய்தால் சந்தோஷத்திற்கு குட்பை தான்.  யாரிடமாவது சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது யதார்த்தமாக ஒரு விஷயத்தைச் சொல்லும்பொழுது ,அது தன்னைத்தான் குறிக்கிறது என்று நினைத்த உடன், கேட்பவரின் முகம் சட்டென்று வாடிவிடுகிறது. ஒரு கூட்டத்தில் ஜாலியாக ஒரு கோஷ்டியினர் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும் மற்ற கூட்டங்கள் ,நம்மைப் பார்த்து தான் சிரிக்கிறார்கள் என்று படபடத்துக் கொள்கின்றனர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளை நாம் ‘அட என்ன சந்தோஷமாக சிரிக்கிறாங்க' 'நாமும் அவர்களுடன் சேர்ந்து கொள்வோம்' என்று நினைக்கலாம். யாரும் பேசும்பொழுது நம்மைத்தான் குறிக்கின்றனர் என்ற நினைப்பே இல்லாமல், சுமூகமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் வேண்டும். மனப்பயிற்சியினால் தான் ஆனந்தமாக எதையும் அனுபவிக்கலாம். மனசை கண்ட்ரோல் பண்ண, மனப்பறிற்சி என்ற பிரேக் வேண்டும்.எடுத்ததெற்கெல்லாம் மனசைத் தொட்டுக் கொண்டிருந்தால் ,மனசு சிணுங்கிக் கொண்டே இருக்கும். ' மனமே தொட்டால் சிணுங்கி தானே ' !

Jul 30, 2022

பெண்களின் சிக்கனத்தில் காப்பாற்றப்படும் நமது அரசாங்கம்

சேமிப்பு நாட்டைக் காக்கும் சிக்கனம் வீட்டைக் காக்கும் என்பது சரிதான். ஆனால் சேமிப்பு நாட்டைக் காக்கும் என்கிறீர்களே அது எப்படி? . பலருக்கு இன்றைய அரசாங்க நிதி நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளதா ? என்றால் பெரிய கேள்விக் குறிதான். நமது அரசாங்கத்தின் நிதிநிலை செலவுக் கணக்கில் துண்டு விழுந்திருக்கிறது என்றால் வருவாய் பற்றாக் குறை அல்லது வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டிருக்கிறது.நம் அரசின் எல்லா செலவினங்களையும் விட பெரிய செலவு வட்டி கட்டுவது தான் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. அதே நிலை மறுபடியும் ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் அரசுக்கு வட்டி பாரமும் கூடுகிறது. இப்படி கடன் வாங்குவதால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இந்திய மக்களாகிய நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.அரசு கடன் வாங்கினால் நமக்கு என்ன ? என்று இருக்க முடியுமா ? கட்டுக் கடங்காமல் வாங்கிய கடன்களினால் அரசு இன்ஷிரன்ஸ் கம்பெனிகள், வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கும் பொழுது, தொழில் நடத்துபவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் கிடைக்க வேண்டிய நிதி குறைகிறது. இதனால் தொழிலும், விவசாயமும் பாதிக்கப்படும்.பல ஆண்டுகளாக வட்டி விகிதத்தை குறைக்கவும் முடியாமல், வட்டி விகிதம் ஏறுவதைத் தடுக்க முடியாமல் தத்தளிக்கிறது. சரி, அரசாங்கம் எங்கே கடன் வாங்குகிறது என்று தோன்றுகின்றதல்லவா ? வங்கிகளில் உள்ள டெபாசிட் பணம் (மக்கள் பணம்) அரசு பெறும் கடனாக மாறுகிறது. எவ்வளவு தான் விலைவாசி ஏறினாலும், மக்கள் குருவி போல சேமித்து வங்கிகளிலும், கையிலும் பணம் வைத்திருப்பதுதான்.இன்று நம் அரசாங்கத்தின் நிதி நிலைமை மக்களின், முக்கியமாக பெண்களின் சிக்கனத்தில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சேமிப்பால் அரசாங்கம் காப்பாற்றப்படுகிறது. என்ன தான் கிரெடிட் கார்ட் கலாச்சாரம் இருந்தாலும், நம் மக்கள் இதை உபயோகிப்பதற்கு ரெம்பவே யோசிக்கிறார்கள். ஆனால் 30 கோடி மக்கள் தொகை உள்ள அமெரிக்கா நாட்டில், 120 கோடி கிரெடிட் கார்டுகள் நடமாடி மக்கள் அனைவரையும் கடனாளியாக்கி விட்டது. குடும்ப சேமிப்பே இல்லாத இந் நாட்டில் கடன் மட்டும் தான் என்ற நிலை உருவாகி அமெரிக்க அரசாங்கம் அடாவடி செலவு செய்வதற்கு  கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது.இதற்கு முழுமையான காரணம் கலாச்சார சீரழிவே ஆகும். பெண்கள் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். திருமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்யாமலும் வாழலாம். சர்வ சாதாரணமாக விவாகரத்து செய்வது, போன்ற சீரழிவுகளினால் சேமிப்பு என்பதைப் பற்றிய சிந்தனை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக, அமெரிக்க தேசம் டாலர் மதிப்பினால் தப்பித்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பொருளாதார வளர்ச்சி அடைந்த அமெரிக்க தேசம், மற்ற தேசங்களுக்கு கடன் வழங்கி ராஜாவாக இருந்த தேசம், சேமிப்பு இல்லாததால் கடன்பட்டு புதைந்து கொண்டிருக்கிறது.உலக நாடுகள் அமெரிக்க டாலரின் மதிப்பிற்கு கடன் கொடுக்கத் தயங்குவதில்லை. ஆனால் நம் தேசத்தின் ரூபாய் மதிப்பிற்கு கடன் கொடுக்க உலக நாடுகள் முன் வருவதில்லை. நம் நாட்டு மக்கள் சேமிக்கவில்லை என்றால், அரசாங்க செலவிற்காக ,பல லட்சக் கணக்கான ரூபாய்களை, அச்சடிக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் நாடு திவாலாகி விடும்.ஆனால் நம் நாட்டில் ஆங்காங்கு சில கலாச்சார சீரழிவுகள் இருந்தாலும், குடும்பங்களில் கலாச்சாரம் 90 % சிறப்பாகவே இருக்கிறது. நம் நாட்டில் பந்தாவைக் காண்பிப்பதற்கு, ஒரு சிலர் இருந்து செலவுகளைச் செய்தாலும். மற்றவர்கள் எல்லாம் வருமானம். கூடக் கூட, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதால், இன்று நமது அரசாங்கம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இப்பொழுது நமக்கு லேசாக மனதில் படுகிறதல்லவா ? எப்படி அரசாங்கம் இலவசங்களை வாரி இரைத்துக் கொண்டிருக்கிறது என்று எல்லாம் நம் பணமே. ஆனால் பெயர் பெறுவதோ அப்போதைய அரசியல் வாதிகள் தான்.1980 ஆம் ஆண்டு முதல் அரசின் வரவுக்கு மிஞ்சிய செலவுகளுக்கு தங்களுடைய சேமிப்பின் மூலமாக நம் தேசக் குடும்பங்களே, கடன் கொடுத்து காப்பாற்றி வருகிறது. கலாச்சார அடிப்படைகளில் உள்ள குடும்பங்கள் தான் நம் அரசையும், நம் தேசத்தையும் காப்பாற்றுகின்றனர். நம் தேசத்தின் குடும்ப அமைப்பை தகர்க்கவும். பெண்களின் தரத்தையும் கட்டுப்பாடையும் குலைக்க ஏராளமான முயற்சிகள் நடந்தும், நம் குடும்ப பெண்கள் எதற்கும் பலியாகாமல் இருப்பதால் தான், இன்று நாட்டின் பொருளாதாரம் பிழைத்திருக்கிறது. செழித்தும் வருகிறது. அப்போ சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும் சரிதானே. இதைப் படித்த பின் கட்டாயமாக சேமிப்பு இன்றும் கூடும் என நம்புகிறேன்.   

Jun 30, 2022

உள் வாங்குங்கள்

 ஒரு இடத்திற்குப் போகிறோம். பேசாமல் போய் விட்டு, வருவதை விட அங்கே என்ன நடக்கிறது. மனிதர்களின் செயல்கள் என்னென்ன ? என்று நுட்பமாகக் கவனிப்பவர்கள், வெகு சிலரே. சில பேரெல்லாம் தன் பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தார்கள் என்பதை கூட கவனிக்காமல் வருபவர்களும் உண்டு.ஒவ்வொரு செயல்களையும், விஷயங்களையும் யார் நன்கு ஆராய்ந்து உள் வாங்கிக் கொள்கிறார்களோ ,அவர்கள் மட்டுமே சாதாரணமானவர்களை விட ஒரு படி மேலேயே இருக்கிறார்கள்.ஒரு வீட்டிற்குச் செல்கிறோம். அந்த வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தெரிந்து கொள்ளாமலேயே ஆராய்பவர்கள் உண்டு. கரெக்டாக கணித்து விடுவார்கள். ஒவ்வொருவருடைய குண நலன்களை சிறப்பாகவே சொல்லி விடுவார்கள். அதாவது ஒவ்வொருவரின் செயல்களை உள் வாங்கிக் கொண்டு சரி இவர்கள் இப்படித்தான் என்பதை வெகு துல்லியமாகக் கூறுபவர்கள் ஒரு சிலரே.அப்படிப்பட்டவர்கள் ஒரு துளசி இலையை எடுத்துக் கொண்டு ,அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை படித்தோ, ஆராய்ந்தோ அதன் மருத்துவ குணங்களை சொல்லும் திறமை இயற்கையிலேயே இருக்கும்.சரி, ஒரு இயந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது இயங்காமல் பெரிய, பெரிய வல்லுனர்கள் எல்லாம் வந்து பார்த்தும் அது இயங்காமல், தவித்துக் கொண்டிருந்தனர். அங்கு பல வருடங்களாக வேலை செய்யும் கூலித் தொழிலாளி" ஐயா நான் வேணும்னா பார்க்கட்டுமா ?" என்றதும் மற்றவர்கள் எல்லாம்அலட்சியமாகப் பார்த்தனர். ஆனாலும் முதலாளி நம்பிக்கையுடன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் எதையோ கழட்டி திருப்பிப் பார்க்கும் பொழுது உள்ளே உள்ள மிஷினின் ஒரு நட்டு கழண்டு இருப்பதை அறிந்து, அதை நன்றாக டைட் பண்ணி மாட்டி விட்டு, இயந்திரத்தை ஓட்டினார். அது அற்புதமாக ஓடி விட்டது. அந்தத் தொழிலாளியின் உள் வாங்கும் குணத்தினால் ,அந்தச் சிறிய தப்பினால் தான் இந்தத் தகராறு வரும் ,என்பதை யூகித்து அறிந்துள்ளார். ஆயிரக் கணக்கில் செலவழித்த முதலாளியின் பார்வையில் சாதாரண கூலி ஆளின் உள் வாங்கும் திறனை அறிந்து வியப்படைந்தார்.இதே மாதிரி ஒரு சோப் கம்பெனியில் ஆட்டோமேடிக்காக சோப்கள் பையில் நிரப்பப்பட்டு, டப்பியில் அடைக்கப்பட்டு, செல்லும் மிஷின்கள் இருந்தும் ,சில சோப் டப்பிகளில் சோப்பே இல்லை ,என்று பல கஸ்டமர்கள் குறை கூறிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெட்டியாகச் சோதிப்பது என்பது இயலாத காரியம். ஆகவே திறமையான வல்லுனர்களைக் கொண்டு என்ன செய்வது என்று  ஆலோசனைகளைக் கூறி வந்தனர்,வேற்று முறையில் செய்தால் ,பல லட்சக் கணக்கில் செலவாகும் என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தனர்.அந்தக் கம்பெனியின் வாட்ச்மேன் “ஏன்யா இந்த தொந்தரவு சோப் டப்பாக்கள் ஒவ்வொன்றாக வரும் இடத்தில், சக்தி வாய்ந்த பேன் ஒன்றை வைத்து விட்டால் ,சோப் இல்லாத பெட்டி பறந்து கீழே விழுந்து விடுமில்லையா” ? என்றார். எல்லா வல்லுனர்களும் நமக்கு ஏன் இது தோன்றவில்லை ?என்று பேந்த, பேந்த விழித்தனர். உள் வாங்கும் திறமையினால் சாதாரண வாட்ச்மேனின், யோசனை முதலாளியின் லட்சக் கணக்கான ரூபாயை சேமித்ததுடன், கஸ்டமர் கம்ப்ளையிண்டிலிருந்தும் தப்பி நிம்மதியாகத் தூங்கினார்.நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது ? இதை இப்படிச் செய்தால் இப்படி ஆகும், என்கின்ற உள் வாங்கும் திறமை இருப்பவர்களே, பற்பல கண்டுபிடிப்புகளை அள்ளித் தந்து, மக்களின் பணிச்சுமையை குறைத்து நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றனர். உள் வாங்கும் திறமையினால் பல செயல்கள் சுலபமாக முடிக்க முடியும் என்பது இப்பொழுது தெரிகிறதல்லவா?  

May 31, 2022

நிலை மாறும் உலகில்

இயற்கைகளும்,செயற்கைகளும் நிறைந்தஇந்த பூமியில்ஒவ்வொரு நாளும்,ஏன்? ஒவ்வொருநொடிகளிலும் கூடபல விதமாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.மாற்றத்திற்குஏற்றார் போலபல விஷயங்களில்நம்ப முடியாத முன்னேற்றங்களும், நினைத்துக் கூடபார்க்க முடியாதஅசம்பாவிதங்களும்நடைபெற்று வருகின்றன.நிலை மாறும்உலகில் நாம்காலத்திற்கு ஏற்றாற்போலநம்மை நாம்மாற்றிக் கொள்ளவேண்டும். எப்படி? நாகரீகம் வளர்ந்துவிட்டது. ஆகவேஅதன்படி நடக்கவேண்டும். எது நாகரீகம். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவதும், டிரிங்ஸ் பார்ட்டி என்று போவதும், தலையை   விரித்து பறக்க விடுவதும், ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து ,குட்டைப்பாவாடை அணிவதும் மட்டும் நாகரீ கம்அல்ல. அது ஒரு  பக்கம் இருக்கட்டும். ஆண்களும், வேலை செய்யக் கூடாது என்ற பழக்கத்தை எல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டும். இருவரும் வேலைக்கு போகும் பட்சத்தில் ஒற்றுமையாக எல்லா வேலையையும் ,பகிர்ந்து செய்து கொண்டு, வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டிச் செல்லலாம். அதைத் தவிர்த்து ஆண்களும் சரி, பெண்களும் சரி   நிலை மாறி இருக்கின்ற உலகின் மாற்றத்தில், எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அதை நம் கலாச்சாரமும், பண்பாடும் மாறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்  . நாகரீகம் என்ற பெயரில் ஆணவமும், அகம்பாவமும்,  நம் வாழ்வை ஒரு நாளும் சுகமாக வைத்திருக்க முடியாது.ஆங்கிலம்கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.அது உலகிற்குபொதுவான மொழி.அம் மொழியைஇங்கே அர்த்தமில்லாமல்தெரியாதவர்கள் பக்கத்தில்பேசி 'கிக்கிக்கீ' என்று சிரிப்பது ,படிப்பறிவும், பண்பும் இல்லாத அநாகரீகம். அதே ஆங்கிலமொழியை ,படிப்பதற்கும்.வெளிநாடுகளில் வேலைக்கும்,வியாபாரத்திற்கும் நாம் ஸ்மார்ட்டாகப் பேசினால் அது பண்பு.ஆங்கில மொழி பேசுவது ஒருபக்கம் வேண்டும்,வேண்டாம் என்றுசொல்வது மாறும்,உலகிற்கு ஏற்றபடி நடப்பதற்காகத்தான். எதைத் தெரிந்துகொண்டாலும் நம்முடைய,பண்பை மறந்துவிடக் கூடாது. பழைய பாரம்பரியத்தைவிட்டு விடக்கூடாது என்பதற்காக  , ஆட்டுக் கல்லில் மாவைக் கையால் தான் ஆட்ட வேண்டும்,. . அம்மியில்தான்அரைக்க வேண்டும்,என்றுகூறுவது, நேரத்தைவீணாக்குவதற்கு நாம் காரணமாகக் கூடாது. அதற்குத் தகுந்தாற்போல மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், செல்போன், கம்ப்யூட்டர் என்றுஅடுக்கிக் கொண்டே போகலாம் ,நேரத்தை மிச்சப்படுத்த.. உலக மாற்றங்களில் ஓரளவிற்கு நம்மை மாற்றிக் கொள்ளலாம். நம் பண்பு, கலாச்சாரத்தை மாற்றாமல் இருந்தால் நாம் நம்மை இவ்வுலக மாற்றத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். நாகரீகமாக இருந்துகொண்டு நாகரீகம் என்ற வலையில் சிக்காமல் ,தாமரை இலையில் உள்ள தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமல், இந்த நிலை மாறும் உலகினை அனுசரித்து நிம்மதியான வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளை,மாத்திரம் பார்த்துக்கொண்டு, ஆண்கள் கண்களில் படாமல்,இருந்த காலம்மாறிப் போய்,பெண்கள் எல்லாத்துறைகளிலும் பிரகாசிக்கின்றனர்.இவைகள் வரவேற்கத்தக்கமாற்றங்கள். ஆனால் அதேபெண்கள் நாகரீகம்என்ற பெயரில் ஆணவமாகத் திரிந்தால் அது ஆபத்து.நாகரீகம் செல்லும் வேகத்தைப் பார்த்தால் பெரியவர்களெல்லாம் நாம் இருக்கும் பொழுதே எத்தனை அநியாயங்களைப் பார்க்கவும், கேட்கவும் போகிறோமோ என்று பயந்து கொண்டிருக்கின்றனர். அதே நாகரீகத்தை பயனுள்ள வகையில் நாம்  ஏற்றுக் கொண்டால் கொலை, கொள்ளை, தீவிரவாதம், அநியாயம், ஏமாற்றுதல் போன்றவை அண்டாமல் நம்மை விட்டு சென்று விடும். பகவத் கீதையும், திருக்குறளும் உருவாகியுள்ள இந்திய நாட்டில் பண்பாட்டை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் அசம்பாவிதங்களா அப்படீன்னா? என்ன? என்று இனிவரும் இளைய சமுதாயத்தினர் கேட்க வேண்டும்.  

Mar 05, 2022

கை நிறைய காசை விட கை நிறைய தவணை

 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு'  வரவு அறிந்து செலவு செய்தல், குடும்ப வரவை பட்ஜெட் போட்டு பிரித்து செலவு செய்தல், போன்றவை தற்பொழுது உருவாகியிருக்கும், ஹைடெக் இளம் தலைமுறையினருக்கு, காதுல பூ சுற்றுவது போல் அலட்சியப்படுத்துகின்றனர்.காரணம் சம்பளம் முழுவதையும் பாக்கெட்  மணியாக  உபயோகிக்கின்றனர். இளம் தலைமுறையினருக்கு கண்டிப்பாக சம்பாதித்து விடமுடியும், என்கின்ற தைரியமான நம்பிக்கைதான். தான் எடுத்த தொழிலையும், இன்டர்நெட்டின் நண்பனாகவும் இருப்பதால், எதையும் சாதித்துவிடலாம், என்ற அசாத்திய நம்பிக்கையுடன், தாராளமாக பயமில்லாமல், செலவு செய்கின்றனர்.தரமான பொருட்களை வாங்குவதில் கடையில் சென்று ஷாப்பிங் செய்வதிலும், அட்டகாசமான ஆர்வத்தைக்காட்டுகின்றனர் .நுகர்பொருட்களின் விலையைப் பார்ப்பதில்லை. மாதத்தவணை எவ்வளவு? என்பதையே பார்க்கின்றனர். விலையயைப் பார்ப்பதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை. கைக்கு கிடைச்சது வாய்க்கு கிடைக்கலையே, என்று ஏக்கப்பெருமூச்சு விடாமல், சட்டென்று வாங்கிவிடுகின்றனர்.போதாக்குறைக்கு ஆன்லைன் ஷாப்பிங், நிறையவே கெடுத்திருக்கிறது, தற்கால இளைஞர், இளைஞிகளை! பயங்கரமாக நினைத்ததை எல்லாம் உட்கார்ந்திருக்கும், இடத்திலிருந்தே பொருட்களை அள்ளி வாங்குகின்றனர். கிரெடிட் கார்ட், போன்பே, பேயூ என்ற அடுக்கிக் கொண்டே போகின்றனர். விற்பனையாளர்கள் கார்டில் ரூபாய் இல்லையா ? பே ஆன் டெலிவரி, வந்து கூட பொருட்களை கொடுத்துவிட்டு, தொகையை வாங்கி கொள்கின்றனர்,  இவற்றில் மாதத் தவணையும் உண்டு.' பிள்ளைங்க கெட்டுபோய் விடுவார்கள்' என்று 60 பதுகளைத் தாண்டிய நாம் நினைக்கிறாேம். ஆனால் அந்த பசங்களோ, ‘என்ஜாய் லைப்’ என்று போயிட்டே இருக்காங்க, முடிவு தெரியவில்லையே!.இந்தமாதிரி பயங்கரமான சூதாட்டத்தை,  கொஞ்சம் கூட கவலலைப்படாமல், ஹாயாகச் செய்கின்றனர். இந்த சூதாட்டத்தில் ஜெயிப்பவர்கள் ஒரு குழுவினர். தோற்றுவிடுபவர்கள் ஒரு குழுவினர்.தலையெழுத்து இருக்கிறதே, அது மாத்திரம் எக்காலத்திலும் ,மாறாது போலிருக்கிறது. 1953களில் பிறந்தவர்கள் இதை எப்படி விட்டுக்கொடுப்பதா? தெரியாமல் முழிக்கின்றனர். 1920, 30களில் பிறந்தவர்கள் வம்சா வழியாகச் சேர்த்து வைத்த, பூர்வீகச் சொத்து தன் காலத்திற்குப் பின் பேரன், பேத்திகள் தன்பெயரைச் சொல்வதற்கு வைத்திருப்பார்களா, விற்று விடுவார்களா? என்று பதைபதைக்கின்றனர். இதை மறைக்க ‘காலம் கெட்டுப் போச்சி’ என்கின்றனர். தான் கண்ட கனவுகளையெல்லாம் அடக்கி வைத்து, குருவிபோல கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்தவைகளுக்கெல்லாம் ,அதோ கதியா, அதே கதியா? என்று ஆதங்கப்படுகின்றனர்.இதிலிருந்து என்ன தெரிகிறது? பெருமூச்சு விடுபவர்கள் மனசெல்லாம் படபடப்புடன், வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர் .ஹைடெக் இளைஞர்கள் மனதில், எதுவுமே இல்லாமல், ஜில்லென்று ஷாப்பிங் செய்து கொண்டிருக்கின்றனர். முதிய சமுதாயத்தினரின் படபடப்பைப் பார்த்து பரிதாப்படுகின்றர். ஏன் அநாவசியமாக டென்ஷன் ஆகிறீர்கள்? என்று கேலியாக சிரிக்கின்றனர். இதற்கு என்ன முடிவு சொல்வது? யாருக்குமே தெரியாது. நம்மைப் படைத்த கடவுளுக்குத்தான் வெளிச்சம். விரலுக்கு தக்க வீக்கமா, வீக்கத்திற்கு தக்க விரலா? விரலில்வீக்கமா? ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் ,  போதும்  சரியாகப்  போய்விடுமாம்.கூலாகச் சொல்கின்றனர் இளைய சமுதாயத்தினர். கைநிறைய காசைவிட ,கைநிறைய தவணையுடன் வாழப்போகும் ,இளம் தலைமுறையினர் எங்கே செல்கின்றனர் புரியவில்லை 

Dec 02, 2021

தேனீக்கள் போல பறப்போமா

நம் உறவுகள் மேம்பட வேண்டும் என்றால் ,நம் வாழ்வு சந்தோஷமாக இருக்க வேண்டும் ,என்பது தான் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் பதில். அது வல்ல தீர்வு என்பது நிதர்சனம்.நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், எல்லோருமே மற்றவரை சார்ந்திருந்தால் தான் சந்தோஷம் என்று நினைக்கின்றனர். நம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நம்மைச் சார்ந்தே இருக்கும் பொழுது, நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன், அருமையான உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.மிகவும் நல்ல பண்பாடுடைய மனிதர்கள் கூட சில நேரங்களில், ரொம்ப மோசமாக, பைத்தியக்காரத்தனமாக, நடந்து கொள்வார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களை அப்படி நடத்தியிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளா விட்டால், அவர்களை நாம் இழக்க வேண்டியது தான்.தனிமனிதர்களுக்கு உறவுகள் என்று சொல்வதற்கு எத்தனையோ பேர் உள்ளனர். கணவர், குழந்தை, தாய், தந்தை, அத்தை, மாமா, நண்பர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் பகைவர், சொந்த பந்தம் என அனைவருமே நமக்கு உறவு என்ற வட்டத்தில் உள்ளனர்.கணவரிடம் பேசுகிறீர்கள், சொந்தங்களுடன், வியாபார நிமித்தப் பேச்சு, நண்பரிடம். பெரியவர்களிடம், குழந்தைகளுடன் என்று ஒவ்வொரு நிமிடத்திற்கும், அனைவரிடமும் பேசுகிறோம். பதிலளிக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாகக் கையாள வேண்டும்.நம்முடைய தேவைகளை நிறைவு செய்வதற்காக பல விதமான உறவுகள் உள்ளன. நம்முடைய தேவைமட்டுமின்றி, உறவினர்களின் தேவையையும் நாம் மதிக்க வேண்டும். , இப்படிப்பட்ட உறவை நாம் போற்றிப் பாதுகாப்பது நமக்கும், நல்லது, உறவினர்களுக்கும் நல்லது . தேனீக்களை எடுத்துக் கொண்டால் அவை பல இடங்களில் சுற்றித் திரிந்து நூற்றுக் கணக்காக மலர்களில் ,உள்ள தேனை மாத்திரம் ,அந்த பூவிற்கே இடைஞ்சல் இல்லாமல். எடுக்கும் சக்தி வாய்ந்தது. அதை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே !தேனீக்கள் ரோஜாப் பூவோ, வேப்பம் பூவோ, அல்லது குட்டிப் பூக்களோ, அது நல்ல தோட்டத்திலோ ,அசிங்கமான சூழ்நிலையிலோ இருந்தாலும், தேனீக்குத் தேவை ,தேன் மாத்திரம் தான். தேனை மாத்திரம் உறிஞ்சி வைத்து விட்டு தன் கூட்டிற்குள் போய் சேர்ந்து கொள்ளும். வேறு எதைப் பற்றியும் கண்டு கொள்ளாது. யாராக இருந்தாலும் அவர்களிடம் உள்ள நல்ல குணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தவிர்த்து விட வேண்டும். எப்படி தேனீ ரோஜாப்பூவிலும் சரி, வேப்பம்பூ ஆனாலும் சரி. அதிலுள்ள மகத்துவமான தேனை மாத்திரம் எடுத்துக் கொள்வதால், அதற்கு தேன் என்ற பொக்கிஷம் கிடைக்கிறது. அதைப் போல நாமும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம், எல்லோரும் கையாளும் உறவினர்களுடைய நல்ல குணம், பண்புகளை மாத்திரம், அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்,நாம் எடுத்துக் கொண்டால், உறவுகள் மேம்படும் அல்லவா! மற்றவர்களை குறை சொல்வது மனித இயல்பு, இதைத் தவிர்த்து பிறரை குறைத்து எடை போடுவது, அவர்களுடைய தரமற்ற குணங்களை விமர்சிப்பது. போன்ற வேண்டாத வேலைகளைச் செய்யாமல், அவர்களிடம் உள்ள நல்ல செயலை மாத்திரம் எடுத்துக் கொண்டால், வாழ்வும். உறவுகளும் மேம்படும். “ குறை சொல்லியே தவிப்போமா ! அல்லது தேனீக்கள் போல பறப்போமா !  

1 2 3 4

AD's



More News