கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடித்துள்ள மலையாளப் படம் பெத்லகேம் குடும்ப யூனிட். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ள டோரத்தி படத்திலிருந்து ‘கல்யாண விருந்து’ பாடல் வெளியாகியுள்ளது. பாடலைக் கேட்ட ரசிகர்கள், 80களின் இளையராஜா இசையை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளில் அதிகம் ஒலிக்கும் பாடலாக இது மாறும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 28-ம் தேதி ஹாய், ஒன்ஸ்மோர், அமரம், ஆக்குவாய் காப்பாய் உள்ளிட்ட தமிழ் படங்கள் வெளியாகின்றன. இதில் நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் மற்றும் அர்ஜுன் தாஸ், அதிதி நடித்துள்ள ஒன்ஸ்மோர் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதேநேரம், யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழ் படங்களின் வசூல் பாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த விஜய் வர்மா, ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். தற்போது கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இப்படம் டார்க் ஹியூமர், திரில்லர் மற்றும் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில் அருண் மாதேஸ்வரன், ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது வாழ்க்கையில் அதிகம் அறியப்படாத 21 நாட்களை மையமாக வைத்து புதிய இந்திப் படம் உருவாகிறது. இதில் காந்தியாக மனோஜ் பாஜ்பாய் நடிக்கிறார். சுகிர் மிஸ்ரா இயக்கும் இப்படம், சுதந்திரம் கிடைக்கும் காலகட்டத்தில் காந்தி எடுத்த எதிர்பாராத முடிவையும், அதன்பின் அவர் தன்னை எவ்வாறு மறுசீரமைத்துக் கொண்டார் என்பதையும் பதிவு செய்ய உள்ளது.
நடிகர் மோகன்லால் தற்போது தருண் மூர்த்தி இயக்கும் அதிமனோகரம் படத்தில் நடித்து வருகிறார். சபரிமலைப் பின்னணியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவர் நடிக்கவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பிரியதர்ஷன் இயக்கும் 100-வது படம், சத்யன் அந்திக்காடு, அனூப் சத்யன், ஜூட் ஆண்டனி ஜோசப், திலீஷ் போத்தன், விஷ்ணு மோகன் ஆகியோரின் படங்களில் மோகன்லால் நடிக்க உள்ளார்.
மறைந்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நடித்த கடைசி படமாக உருவாகியுள்ளது கன்னடத்து பைங்கிளி. இப்படத்தை இயக்கும் சாய்ரமணி கூறுகையில், “பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.ராஜேந்தர் இசையமைக்கிறார். பாக்யராஜும், டி.ராஜேந்தரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. மேலும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா, இப்படத்தில் அவரது மனைவியாகவே நடித்துள்ளார். 1990களில் ஓசூரில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.1931ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த சௌகார் ஜானகி, 1950களில் திரையுலகில் அறிமுகமானார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தனது 15வது வயதில் வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள அவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.கே. பாலச்சந்தர் இயக்கிய ‘பாமா விஜயம்’ திரைப்படத்தில் அவர் ஏற்ற பார்வதி கதாபாத்திரம், அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமைந்தது. பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்தார்.400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சௌகார் ஜானகியின் கலைப்பணியைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.சௌகார் ஜானகி பெற்ற முக்கிய விருதுகள்.1969 – கலைமாமணி விருது1970 – ‘இரு கோடுகள்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருது1985 – மகாநதி சாவித்ரி விருது1990 – எம்.ஜி.ஆர். விருது2004 – நடிகர் திலகம் சிவாஜி வாழ்நாள் சாதனையாளர் விருது2013 – SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது2020 – புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கலைமாமணி விருது2022 – பத்மஸ்ரீ விருதுசௌகார் ஜானகி (1931–2026) — தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் கலைஞர்.
‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ராம் இன் லீலா’. ராமச்சந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்தில் வர்திகா ஜெயின் கதாநாயகியாக நடித்துள்ளார்.படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, ‘ராம் இன் லீலா’ ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மலையாளத்தில் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோகர் நடித்துள்ள படம் ‘ஐ ஆம் கேம்’. சூதாட்டப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 20-ம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. ஆனால், படத்துக்கான புரமோஷன் பணிகள் இதுவரை பெரிய அளவில் நடைபெறவில்லை. மேலும், அதே தேதியில் வேறு சில படங்களும் வெளியாக உள்ளதால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.