25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முதல் பக்க கட்டுரை

Nov 11, 2023

தீபாவளியின் தீபஒளி போல, நம் திருநாடு திகழ ஒன்று படுவோம், நன்று செய்வோம்.

இனிக்கும் வாழ்க்கை தீபாவளி ஸ்வீட்ஸ் மாத்திரம் இனித்தால் போதுமா? வாழ்க்கை இனிக்க வேண்டாமா? வேகமான உலகில் பொறுமை, சகிப்புத் தன்மை இல்லவே இல்லை. சின்ன விஷயத்திற்கு எல்லாம் பொசுக்கென்று கோபம் வந்து விடுகிறது. தோழியிடம், உடன் பிறந்தவர்களிடம், பெற்றோர்களிடம், சொந்தங்களிடம் பகைத்துக் கொண்டு வாழ்வது என்று சர்வ சாதாரணமாகி விட்டது. இதையாவது சரி சொத்துத் தகறாறு, பொறாமையினால் வருவது சகஜம் தானப்பா? என்று விட்டு விடுகிறோம். அதைவிட பயங்கரமான ஒன்று விவாகரத்து, கணவன், மனைவியிடம் உள்ள தகறாறு.கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் எனக்குப் பிடிக்கவில்லை, உடனே டைவர்ஸ் கேட்பது, சொத்து பிரிப்பதில் எனக்கு உப்புக்குப் பெறாத சொத்தை கொடுத்து விட்டார். எனக்கு கொடுத்ததை விட 4 கிராம் கூட உள்ள நகையை தங்கச்சிக்கு கொடுத்து விட்டாங்க. தாய், தந்தையரை என்னால் வைத்துப் பார்க்க முடியாது. இப்படி எத்தனையோ விஷயங்களைப் பிடிக்காமல் எடுத்தெரிந்து பேசுவது.வாழ்க்கை என்றாலே வேப்பம் பூ மாதிரி கசக்கிறது. அதே வேப்பம் பூவை நன்றாக ஆற வைத்துமோரில் உப்பு கலந்து உள்ளே நனைத்துபின் வெயிலில் காய் வைத்து பொல பொல என்று வந்தவுடன் டப்பாவில் அடைத்து வைத்து வேண்டியபொழுது கொஞ்சம் எடுத்து மிதமான தீயில் வேப்பம் பூவை வதக்கி புளித் தண்ணீரில் சிறிது வெல்லம் போட்டு கொதிக்க வைத்து வறுத்த வேப்பம்பூவைப் போட்டால் கசக்கும் வேப்பம் பூ தேனாக ருசியாக இருக்கம்.அதைப் போலத்தான் வாழ்க்கை கசக்கும், கசக்கும் வாழ்க்கையை மோர், உப்பு போன்று பொறுமை சகிப்புத் தன்மையில் ஊறி வெளிவர வேண்டும். கஷ்டங்கள் உங்களை வறுத்து எடுத்தாலும் வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கம். இதுக்குப் போயி ஏன் வருத்தப்பட வேண்டும் என்று விட்டு விடும் மனப்பக்குவம் வேண்டும். பின்பு அன்பு, பாசம் என்ற இனிப்பை கசக்கும் வாழ்க்கையில் கலந்தால் வாழ்க்கை தேன்துளி போன்ற இனிக்கத்தான் செய்யும்.நீங்க என்ன வேப்பம் பூவில் தேன்துளி சொல்கிறீர்களா? வாழ்க்கையில் தேன்துளியா? எப்படி? ரெண்டிலுமே தேன் துளி கண்டிப்பாக இருக்கிறது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பக்குவப் படுத்தும் விதத்தில் வேப்பம் பூ தேனாக இனிக்கிறதல்லவா? அதே மாதிரி தான் நம் வாழ்க்கையை எடுக்க வேண்டியவற்றை அதன்தன் இடத்தில் வைத்துப் பக்குவப்படுத்திப் பார்த்தால் இனிப்பான, இனிமையான வாழ்க்கை இருக்கத்தான் செய்யும். தீபாவளி ஸ்வீட் ஆவது ஒரு லெவலில் திகட்டும். இனிப்பான வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்.'தீபாவளிச் செலவு இருக்கே?' என்று ஒரு பக்கம் கவலைப்பட மறுபக்கம் டெங்குக் காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு பலியாகி விடக்கூடாது என்ற பய உணர்வு மக்களிடையே பரவலாக உள்ளது. இதைத் தவிர்க்க மக்களாகிய நாம் அரசாங்கம் செய்யவில்லையே என்று ஆதங்கப்படுவதை விட நாமே செயலில் இறங்குவதுதான் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.அரசாங்கம் தன் வேலையைத் தாமதப் படுத்தினாலும்'வருமுன் காப்போம்' என்பதைக் கருத்தில் கொண்டு மக்களாகிய நாம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள கவுன்சிலரை அழைத்துக் கொண்டு நீர் தேங்கி இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தும் வேலையைச் சுயமாகச் செய்யலாம். மரம் நடலாம், என்ன தேவை என்பதை நகராட்சிக்கு தெரிவிக்கலாம். அவர்கள் வேலையைக் கிடப்பில் போடாமல் அந்த வார்டில் உள்ளவர்கள் சுழற்சி முறையில் நகராட்சிக்குச் சென்று ஞாபகப் படுத்தலாம்.ஒன்றுபட்டு நன்றாகப் பணியினை செய்யும் பொழுது'நான் சொல்வது தான் சரி' என்ற போக்கிற்கு இடமளிக்காமல் எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு, அவற்றில் எவை சுமூகமாக வேலை நடைபெறுகிறதோ அவற்றைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பாகச் செயல்படுத்துங்கள். பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். இப்பணியினைச் செய்யும் பொழுது, இன்முகத்துடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.யாரும், யாருக்கும். எதிரி அல்ல. அனைவரும் மனிதர்களே! இவற்றில் ஏற்றத் தாழ்வுகள் பலவிதத்தில் இருக்கலாம். ஆனாலும் அனைவரும் சமம்தான். ஆக ஒன்று படுவோம். நன்று செய்வோம்.

Sep 30, 2023

தர்மங்களின் உயர்ந்த தர்மம் விருட்ஷ தர்மம்

எண்ணிலடங்கா தர்மங்கள் நாம் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். நம்மால் முடிந்த உதவிகளை, தேவைப்படுவோர்க்கு தக்க சமயத்தில் செய்வது தர்மம் கடவுளின் எண்ணிலடங்காத படைப்புகளில் இயற்கையுடன் கூடிய உயிரினங்களை படைத்திருக்கிறான். வெறும் மனிதர்கள் உள்ள பூமியை மாத்திரம் படைத்திருக்கலாமே ? ஏன் புலி,சிங்கம், யானை, ஆமை, மீன், முதலை, திமிங்கலம், பல்லி, பூச்சி, மரம், செடி கொடி, என்று படைத்திருக்கிறார். சிலிக்கான் சிப்ஸ் இல்லாமல் கம்ப்யூட்டரை செயல்படுத்த முடியுமா ? முடியாதே, ஏதோ காரண காரியத்திற்காகத்தான் விலங்குகளுடன் மனிதனையும் படைத்திருக்கிறான்.ஆறு அறிவுகள் நிறைந்த மனிதன் விலங்கின.ங்களையும், மரம், செடி, கொடிகளையும், பாதுகாக்கும் அறிவுள்ளவன் என்று தான். அவனே அதை அழிக்கத் தொடங்கிவிட்டால் யாருக்கு நஷ்டம் ?மனிதனுக்குத்தானே !கடவுளின் படைப்புத்தொழில்யாராலும்அறியமுடியாதஅளவுவிஸ்வரூபமுடையது.படைத்தவற்றை தகுந்த முறையில் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை ஆனால், இங்கு என்ன நடக்கிறது புலி, யானை, காண்டா மிருகம் போன்றவற்றை தோலுக்காவும், கொம்புகளுக்காகவும் கொன்று குவித்து, தன்னையும், தன் வீட்டையும் அலங்கரித்துக் கொள்கிறான். மரங்களை வெட்டி சாய்த்து தன் வீட்டை நிமிர்த்திக் கட்டி பெருமை கொள்கிறான்.நம்மைக் காத்துக் கொள்ள கோவிலுக்குச் சென்று பெயருக்கு அர்ச்சனை செய்து, பாலாபிஷேகம், அன்னதானம், அங்கபிரதட்சணம், யாகம் என்று செய்கிறோமோ, கடவுளே, என் குடும்பத்தைக் காப்பாற்று என்று கூறுகிறோம். கடவுள் என்ன  செய்வார்? முழித்துக் கொண்டு இருக்கிறார். எதற்கு காப்பாற்றுவதற்கா ! இல்லை என்ன செய்வது ? என்று தான்.மனிதர்கள் சுகமாக வாழ எல்லா வசதிகளையும், ஒருதூசி அளவு கூட குறைவில்லாமல் செய்திருக்கின்றேனே ? இன்னும் என்ன காப்பாற்றுவது என்றுதான்.தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கின்றோம், இந்த கோவிலுக்கு இத்தனை லட்சம், கோடி என்று கொடுக்கும் தனவான்களே ,நீங்கள் செய்யும் இந்த தர்மம் உங்களுடைய வாரிசுகளால் செய்ய முடியுமா ? சிந்தியுங்கள்.அன்னத்தை கொடுக்கும், விளை நிலங்கள் எல்லாம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறதே,? பூமித்தாயைக் காப்பாற்ற வேண்டாமா? *உதாரணத்திற்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பட்டினி கிடந்து, சாகும் தருவாயில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு விருந்து கொடுத்தால் அவர்களால் சாப்பிட முடியுமா ? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ! முதலில் அவர்களை எழுப்ப என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ ,அதைச் செய்து விட்டு பின்பு தான் விருந்துணவு கொடுக்க முடியும்.இதுவரை செய்த தவறை (மரம் வெட்டுவது) இனிமேல் செய்யாமல் மரம் நடுதல் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து காடு, மலை என்று எல்லா இடங்களிலும் மரம் வளர்க்கப் பாடுபட வேண்டும், கென்ய நாட்டுப் பெண் 3 கோடி மரங்களை நட்டு அமைதி நோபல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார்.மழையை தரும் மரங்களை தெய்வமாக மதித்து திருமணநாள், பிறந்தநாள், இறந்த நாள் என்று எல்லா நாட்களுக்கும் மரம் நடுவதற்கென்று ஒரு தொகையை ஒதுக்கி வறண்ட பூமித்தாயை பசுமை நிறைந்த பூமியாக்க வேண்டும்.ஏன் கடவுளுக்கு நேர்த்தி கடனாக ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் 10 மரங்கள் நடுவது கட்டாயமாக்கப்பட்டால் காடு செழிக்கும். மழை பெருகும் நாடு முன்னேறும்இந்த தர்மம் நிகழ் காலத்தை மட்டுமல்லாது, எதிர்காலத்தையும், காக்கும் உன்னத தர்மமாகும், தர்மங்களின் உயர்ந்த தர்மம் மரங்களை பாதுகாப்பது, மரம் நடுவது, இயற்கை வளங்களை தன் வீட்டு சொத்து போல காப்பது. தர்மங்களில் உயர்ந்த தர்மம் விருட்ஷ தர்மம்.

Sep 01, 2023

நல்ல விஷயத்திற்கு மனசாரப் பாராட்டுங்கள்

பாராட்டுங்கள் எந்த வயதினை உடையவராக இருப்பினும் திறமையாகச் செய்தால் ஆச்சரியமாக இருக்கும். இந்தச் சின்னக் குழந்தையா இப்படிப் பேசுகிறது என்று ' வெரிகுட் பாய்' 'கெட்டிக்காரப் பொண்ணு' என்று மனம் திறந்து பாராட்டுகிறோம். அதே மாதிரி போட்டியில் வெற்றி பெற்றாலோ, படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினாலோ, எத்தனை பேர் பாராட்டுகின்றனர்.ஒரு பெரிய சபையில் மிக நன்றாக பேச்சுத் திறமை மிக்க ஒருவர் பேசினாலோ அனைவரும் ரசிக்கிறோம். 'பிரமாதம்' என்கிறோம். ஆனால் அதைப் போய் திறம்பட பேசியவரிடம் எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்றால் 100 ல் ஒருவர் தான். சரி வீதி வீதியாகச் சென்று நல்ல விஷயங்களை மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் எடுத்துச் சொல்பவர்களை ஆயிரத்தில் ஒருவர்தான் பாராட்டுகின்றனர்.சரி, நடந்து விட்டதையும், இப்பொழுது நடப்பதையும், இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றியும் பேசுபவர்களை லட்சத்தில் ஒருவர்தான் புகழ்கின்றனர். மற்றவர்கள் திறனைக் கண்டு புகழ்வதுடன், பரிசினையும் கொடுப்பவர்கள் கோடியில் ஒருவர்தான். பலருக்கு பொறாமைப்படத்தான் தெரிகிறது. ஆமா, என்னமோ செஞ்சுட்டான், பேசுறான்,பரவாயில்லை இவன் பேசி என்னத்தை 'ஜனங்க கேக்கப் போறாங்க' ஏதோ நடக்குது என்று வந்தோமா, கேட்டோமா என்று அலட்சியமாக போய்க்கிட்டே இருப்பவர்கள் அதிகம் பேர்.ஏன் பாராட்ட மனம் வரவில்லை, அது ஒரு பெரிய வேலையா ? 45 வயதிற்குப் பிறகு ஒரு துறையில் பிரகாசிப்பவர்களைப் பார்த்து 'உன்னுடைய திறமை இத்தனை நாளா, எங்கய்யா பதுக்கி வச்சுட்டே 'பிரமாதம்' ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மேலும், மேலும் 'வளரணும்' ஐயா, 'வளரணும்' என்று மனம் திறந்து பாராட்டும் பொழுது கேட்பவர்கள் தங்களுடைய திறமைகளை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொண்டு ஜொலிப்பார்கள்.சாதாரண சமையலை எடுத்துக் கொள்ளுங்கள் உப்பு, காரம், கூடுதலாகி விட்டால் தடால், புடால், என்று குதிக்கின்றனர். அப்படி சுத்தாமல் உப்பு, காரம், கொஞ்சம் குறைச்சா இன்னும் சூப்பரா இருக்கும். புளிப்பு கொஞ்சம் கூட்டினா ரெம்ப நல்லா இருக்கும் என்று கூறுங்கள். அப்புறம் என்ன ? சமையல் நளபாகம் தான். சமையல் சூப்பர் தான், எல்லோரும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். ஏன் கடவுளையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றிமனம் உருகிப் பாடி அவர்களுக்கு மரியாதை செய்து அவர்களுடைய பெயரை ஆயிரம் விதமாக பாராயணம் செய்து கடவுளின் சிறப்பை எடுத்துக் கூறி பாராட்டினால் கடவுளின் மனம் குளிர்ந்து அருள்பாலிப்பாள் என்ற நம்பிக்கை உண்டா ? இல்லையா ? இருக்கே !எத்தனையோ பெயர்களின் வடிவில் பாராட்டிக் கொண்டே தான் இருக்கிறோம். அந்தந்த கடவுளுக்குப் பிடித்த வில்வமோ, துளசியோ, அருகம்புல்லோ, புஷ்பமோ தூவி இறைவனின் திருநாமங்களைக் கூறி அர்ச்சிக்கிறோம். இப்படிப் படித்தால் 'யஹ்படேத் சிவ சன்னி தௌ சிவனெ' என்று சிவன் பாராட்டைக் கேட்டு மனம் குளிர்ந்து அருள் தருவார் என்று புஸ்தகத்திலேயே இருக்கிறதல்லவா ? ஆக பாராட்டுங்கள்.நல்ல விஷயங்களைப் பாராட்டுவதற்கு தயங்கவே கூடாது. இப்படிப் பாராட்டுவதால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. பாராட்டைப் பெறுபவர்களுக்கும் ஆனந்தம் பொங்குகின்றது. பணத்திற்காக பதவிக்காக பாராட்டுபவர்கள் தனி இனம், இதை அலட்சியம் செய்வதில் தவறே இல்லை.குழந்தைகளை பாராட்டுக்கள் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் சிறந்தவராவார்கள் .மனைவியை பாராட்டுக்கள் அவர் இன்னும் அன்பாக நடந்து கொள்வார். கணவனை பாராட்டுக்கள் குடும்பத்திற்காக இன்னும் அக்கறையுடன் உழைப்பார். உறவினர்களை பாராட்டுக்கள் சுற்றம் பெருகும் உதவிகள் உயரும் .நண்பர்களை பாராட்டுக்கள்  உண்மையான நட்பு பெருகும். உங்களுக்காக எதையும் செய்ய முன்வருவார்கள்.  மாணவர்களைப்பாராட்டுங்கள்அவர்கள்இன்னும் திறமையானவர்களாக ஜொலிப்பார்கள். பாராட்டு என்பது சாதாரணமானவரையும் சாதனையாளராக்கும். பாராட்டுவதற்கு நல்லமனம் மட்டுமே வேண்டும், தாராளமாகப் பாராட்டுங்கள். இந்த பழக்கத்தை நம் வருங்காலக் குழந்தைகளிடமும், ஏற்படுத்த வேண்டும். இப்படிப் பாராட்டுவதால் பொறாமை என்ற கெட்ட குணம் அறவே அழிந்து விடும். எல்லோரும் பாராட்டக் கத்துக்கிடனும், எதற்கு? நல்ல விஷயத்திற்குதான் ஆக மனசாரப் பாராட்டுங்கள்.  

Aug 01, 2023

நம் வீடு இந்திய நாடு என்றே சொல்லடா!

தேசப்பற்று யாருக்குமே இல்லை, தேசப்பற்று இருந்தால் இப்படிச் செய்வானா ? இந்தியனுக்கு அந்த சிந்தனையே இருக்காதே ? என்று அங்கலாய்ப்பதை பல இடங்களில் சர்வ சாதாரணமாகக் கேட்கிறோம், பார்க்கிறோம். எங்காவது சண்டையா ? வீட்டிற்குள் ஒளிந்து கொள்கிறோம். கலவரமா ? வீட்டை விட்டே வெளியே வராமல் 'சே என்ன தேசம்' என்று நமக்கு நாமே மண்டையிலடித்துக் கொள்கிறோம். ஏன் ? . அந்தக் கலவரம் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ற எண்ணம் லட்சத்தில் ஒருவருக்குத்தான் உண்டு. எல்லோருக்குமே வருவதில்லை.சரி, அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம் நம்பிக்கையுடன், ஆனால் ஆட்சியோ சகிக்க முடியவில்லை .அநியாயமான அராஜக ஆட்சி. என்ன செய்வது? அடுத்த ஆட்சி வரை காத்திருப்போம் என்று பொறுமையுடன் ,சபித்துக் கொண்டே காத்திருக்கிறோம். ஏன் ? சரியில்லை என்றால் எல்லாரும் சேர்ந்து பொங்கி எழக்கூடாதா ? எல்லோரும் ஒன்று பட்டால், ஒரு அராஜக ஆட்சியை, ஒரே நாளில் கலைத்து விடலாம் அல்லவா ? ஏன் ? இந்த அவல நிலை..தேசம் உருப்படுமா ? என்ன அநியாயம்? என்று சொல்லாமல் தட்டிக் கேட்க ,நாம் வீரு கொண்டு எழலாம் அல்லவா?ஒன்றுமே இல்லை. கிரிக்கெட் வேர்ல்ட் கப் மேட்ச் இந்தியாவுக்கும்,. இலங்கைக்கும் இடையே நடைபெற்றது. இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோடிக்கணக்கான மக்கள் பூஜைகள், யாகங்கள், பிரார்த்தனைகள் என்று மெனக்கெட்டு செய்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கு பலவித அபிப்ராயங்களைச் சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் இல்லாமல் வேறுபாடின்றி எல்லோரும் ஒரே மனதுடன், இந்தியா ஜெயிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.. ஏன்? இந்தியா ஜெயித்தால் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. ஒன்றுமே இல்லையே ! பின் ஏன் இந்த பூஜை புனஸ்காரங்கள். சிந்திக்க வைத்தது. எல்லோரையும் மும்பையில் நடந்த மேட்சில், இந்திய மக்கள் ஆயிரக்கணக்கில் வீட்டில் டி.வி.முன்னே ,கோடிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு ஓவருக்கும் திகிலுடன் காத்திருந்து ,பெருமூக்சு விட்டுக் கொண்டு, கிரிக்கெட் வீரர் அவுட் ஆனவுடன் பட, பட வென்று பதறினார்கள்.. ஐயோ, ஜெயிக்க மாட்டோமா ? என்று பெரிய பெரிய தலைவரிலிருந்து குட்டி பாப்பா வரைக்கும் வருத்தம். வருத்தம்னா லேசுப்பட்ட வருத்தம் கிடையாது. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. இந்திய வீரர்கள் ஆடும்பொழுது அவர்கள் அடிக்கும் 4-க்கும் சிக்ஸருக்கும் ஒரே ஆட்டம் பாட்டம் தான். ஏதோ தங்களுக்கு கிடைத்து விட்ட மாதிரி ஒன்று போல பாடி, ஒன்று போல கையசைத்து ,நம் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்தார்களே எதற்காக ? ஏன் ?என் நாடு இந்திய நாடு, என் நாட்டு மக்கள் ஜெயிக்க வேண்டும் என்ற தேசப்பற்று மாத்திரம் அல்ல. வெறியையும் காண முடிந்தது. நம் மக்களுக்கு தேசப்பற்றே இல்லை என்று சொன்னால் சத்தியமாக நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். மேட்சில் பார்த்தோமே என்ன ஒரு சந்தோஷம் நம் தேசம் ஜெயித்து விட்டது என்ற உற்சாகம். சந்தோஷம். அந்த அரசாங்கமே ஏன் இந்திய தேசமே சந்தோஷத்தில் முழ்கியது. அதைப் பார்த்த 90 வயது தாத்தாவிலிருந்து 9 மாதக் குழந்தை வரை கை தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. சில தாத்தா, பாட்டிகள் டான்ஸே ஆடினார்கள்.அந்த ஒன்பது மாதக் குழந்தை எல்லோரும் ஏதோ சந்தோஷமாக இருக்கிறார்கள். என்று அதுவும் கைகொட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. அட இப்படி இருக்கும் மக்கள் கிரிக்கெட்டில் மட்டும் நம் தேசம் ஜெயித்தால் போதுமா ? எல்லா விஷயங்களிலும் இதே மாதிரி ஒன்று பட்டு நற்செயல்களை உற்சாகப்படுத்தி, தீய செயல்களை அடியோடு அழிக்க வேண்டும் என்பதே. நம் தேசத்திற்காக கிரிக்கெட் மேட்சிற்கு அநியாயமாய் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம், நம் தேசத்திற்காக பாடுபடும் பொழுது தேவையே இல்லை. மனம் மட்டும் இருந்தால் போதும், வைராக்கியமாக 'ஒன் மேன் பவர்' என்று இருந்த மஹாத்மா காந்தியடிகள் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்திருக்கிறார்.பிரார்த்தளை, பூஜை செய்து கை கொட்டி கத்தி, ஆரவாரம் செய்த நமக்கு ஒரு பைசா கூட கிடைப்பதில்லை. ஏன் விளையாடும் கிரிக்கெட் ஆட்டக்காரருக்கு நம்மை யாரென்று கூட தெரியாது. ஆனாலும் அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு பேட்டிங்கிற்கும், 'கடவுளே' என்று பிரார்த்திருக்கிறோம். ஆட்டக்காரர்களுக்கு இந்திய அரசாங்கமும் மேல்தட்டு பெரிய ஜாம்பவான்களும் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவது போல கோடி, கோடியாக வாரிக்கொடுக்கின்றனர். ஏன் ? இந்தியா வேர்ல்டு கப் வாங்கக் காரணமான ஆட்டக்காரர்கள் ,இந்தியாவை ஜெயிக்க வைத்தது அவ்வளவு ஆனந்தம். அனைவருக்குமே ஒவ்வொரு இந்திய மக்களும் தன் வீட்டுக் குழந்தைகள் ஆடிஜெயித்து, பரிசை அள்ளி விட்டதாக ஓர் உணர்வு. இதெல்லாம் தேசப்பற்று இல்லாமல் வராது. நம் தேசப் பற்றை தட்டி எழுப்புவது கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தானா ? மற்ற விஷயங்களிலும் இருக்க வேண்டாமா ?இதே மாதிரி நம் தேச மக்கள் அனைவரும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் நம் நாடு, 'ரோஜா' படத்தில் பாட்டு நம் வீடு இந்திய தேசம் என்றே சொல்லடா என்ற வரிகள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறதல்லா ? அந்த மாதிரி நம் நாட்டிற்காக அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ ? நாமும் நம் தேசத்தை பாதுகாக்க நம்பர் ஒன் ஆக வர நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். அரசாங்கம் வெட்கப்பட்டுக் கொண்டு நமக்காக செய்ய முன் வர வேண்டும். அட என்ன நீங்க ! அரசியல் வாதிக்கு வெட்கமாவது ! ரோசமாவது ! கட்சிக்குள் நுழைந்தாலே இவ்விரண்டையும் விட்டுவிட்டு தானே வருவான் என்கிறீர்களா ! ஆனால் அடுத்த தலைமுறையினர் நிச்சயமாக ரோசங் கெட்ட தலைவனா தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.ஏனெனில் வரும் தலைமுறையினர் எல்லாம் விவரமாக தட்டி கேட்பார்கள். வெத்துப்பேச்சை நம்பவே மாட்டார்கள். அது வரை புண்ணாகியுள்ள நம் தேசம் புறையேறிவிடாமல் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும், என்பது நம் எல்லோருடைய கடமை. ஆக இன்றும் என்றும் “ நம் வீடு இந்திய நாடு" என்பதை மறக்காமல் இருக்க வேண்டும். அதுபோதும் நம் தேசத்தைக் காப்பாற்றி விடலாம். நம் வீடு இந்திய நாடு என்றே சொல்லடா!

Jul 01, 2023

கதவுகள் இல்லா உலகம்

கதவுகள் இல்லா உலகம் உலகத்திற்கு ஏது கதவு ? என்கிறீர்களா ! எந்த ஒரு காரியத்திற்கும் தடுப்பு என்ற கதவு இல்லாவிட்டால் என்ன ஆகும். " திறந்த வீட்டில் நாய் நுழைவது போல் கண்டபடி கெட்டு விடும் இல்லையா ?குடிசை வீடாக இருந்தாலும் ,ஓட்டை ஒடிசலான நகரக் கதவினால் ,கயறு வைத்துக் கட்டியாவது ,கதவு என்ற தடுப்பை ஏற்படுத்துகின்றனர். இல்லாவிட்டால் கஞ்சித் தண்ணீரில் ஊற வைத்த, இத்துணூண்டு சாதத்தை நாய் நக்கி விட்டு சென்று விடுமே,அதற்கு ஒரு தகரக் கதவு.சின்ன நூலகமாக இருந்தாலும் அதற்கு என்று சில விதிமுறைகள். கதவு போல இருந்தால் தான் அந்த நூலகத்தில் இருக்கும் புஸ்தகங்களை பாதுகாக்க முடியும். வருடத்திற்கு கட்டணம் இவ்வளவு புஸ்தகத்தை எடுத்துச் சென்றால் புஸ்தகம் கிளியாமல் பத்திரமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ மாற்ற வேண்டும். விதிமுறைகள் (என்ற தடுப்பு) இருந்தால் தான் நூல்களை அனைவரும் படிக்க முடியும். பாதுகாக்க முடியும். அதைத் தவிர்த்து யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், வரலாம் என்றால் என்ன ஆகும். நம் நாட்டில் பலருக்கு தடுப்பு என்ற கதவுகள் பிடிப்பதே இல்லை. தேசத்தைப் பாதுகாக்க அரசாங்கம் விதித்துள்ள சட்டங்களை கடைபிடிப்பதற்கு யாராலும் முடிவதில்லை. ஏன் அரசியல் வாதிகளே கடைபிடிப்பதில்லை. சாலை விதிகளையோ, வாகன விதிகளையோ, சுகாதார விதிகளையோ மதிப்பதே இல்லை. குளம், குட்டை, ஆறு போன்ற நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்பதை உணர்வதே இல்லை.எங்கு வேண்டுமானாலும் போஸ்டர் ஒட்டுவது, நடு ரோட்டில் காரித்துப்புவது. குப்பைகளை எறிவது, எரிப்பது, வாஹனங்களை வரும் வழியில் நின்று சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதும் எதைக் கூறுகின்றன. கதவுகள் இல்லாத வீட்டைப் போல, சட்டங்களை கடைபிடிக்காத மனிதர்கள், நம் நாட்டை கதவுகள் இல்லாத நாடாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்,. என்பதை சொல்லாமல் செய்கின்றனர். அரசியல் செய்வதற்கு நாடு, மாத்திரம் போதாது, கோட்டை, கொத்தளங்கள் வலிமையாக இருந்தால் மட்டும் ப்ரயோசனம் இல்லை. ஆயுதங்கள் குவிந்து கிடந்தாலும், ராணுவம் அதிகமாக இருந்தும் புண்ணியம் இல்லை. ஆட்சி செய்யும் அரசியலில் ஒழுங்கு,நேர்மை தவறாமல் இருந்தாக வேண்டும். அந்த அரசியலில் ஒழுங்கு இல்லாவிட்டால் அந்த நாடு கதவுகள் இல்லாத நாடாக மாறி,, ஜனங்களின் நம்பிக்கை இல்லாத அரசியல் தேசமாக, சதா குழப்பத்தில் இருக்கும் நாடாக மாறி வரும் என்பதில் ஐயமுண்டா ? ஆக எதற்கும் தடுப்பு என்ன கதவுகள் வேண்டும். "கதவுகள் இல்லா உலகம் ” வேண்டவே வேண்டாம்.

Jun 01, 2023

பாசம் எங்கே சென்றது ?

ஒரு குடும்பம் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதற்கும், அன்பைப் பொழிவதற்கும், பாசம் என்பதற்கு ஒரு கூடாரமாகவும் இருகின்றது. அம்மா, அப்பா, 2 குழந்தைகள் சந்தோஷமான குடும்பம், பெற்றோர்கள் மீது குழந்தைகளும், குழந்தைகள் மீது பெற்றோரும், 2 குழந்தைகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதும், அடுத்த நிமிடமே பாசம் பொழிவதும் ஒரே அன்பு மழைதான்.ஆனால் இவை எத்தனை ஆண்டுகள் நீடிக்கின்றன. ஒரு குடும்பம், 2 குடும்பம், 3 குடும்பமாக மாறும் பொழுதுதான் பிரச்சனை உருவாகிறது. அவளுக்கு மட்டும் ரெம்ப விலை டிரஸ், எனக்கு கொஞ்ச விலை டிரஸ், ஏம்மா ? எனக்கு 2 லட்டு அவனுக்கு மட்டும் 3 லட்டா ? என்ற சண்டைகள் எல்லாம் சுமூகமாக தீர்ந்து நம்ம அண்ணன் தானே ? நம்ம தங்கச்சி தானே ? என்ற பாசம், கோபத்தை 'ஸ்வாஹா' செய்து விடுகிறது.குடும்பம் பெரிதாகி அவரவர்களுடைய வீடு, தன் மனைவி, தன் கணவன், குழந்தைகள் என்று பிரியும் பொழுது இந்த சொத்து எனக்கு என்று நினைத்தேனே ? என்ற ஏமாற்றம் ,பகையுணர்ச்சியுடன் கூடிய பொறாமை வளர்ந்து ,ஜென்ம பகையாளராக மாறி, கோர்ட் கேஸ் என்று அலைகின்றனர்.சரி பாதியாக ,எடுத்துக் கொள்ளச் சட்டம் இருப்பினும் எத்தனைபேர் ஏமாந்து விடுகின்றனர். தனக்கு சேர வேண்டியதை அண்ணனோ, தம்பியோ, தமக்கையோ, கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மண் அள்ளிப்போடுகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு எழுதி வைக்கின்றனர். நான் என்ன ஏமாளியா ? சும்மா விடமாட்டேன் என்று ஏமாற்றப்பட்ட குழந்தைகள் பெற்றோர்களிடம் முறையிட்டு வருத்தப்படும் பொழுது, வயோதிகத்தால் என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று ஆதங்கப்படத்தான் செய்கிறார்களே ஓழிய, வேறொன்னும் செய்வதற்கு இயலாமல் போய் விடுகிறது. கோபம் பெற்றோரிடம் திரும்புகிறது. அப்புறம் கோர்ட், கேஸ்தான்.எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்த தன் சம்பாத்தியத்தை கடைசி காலத்தில் ,நம் கண்ணெதிரே உயிருக்குயிராய் நேசித்த குழந்தைகள், சண்டைபோட்டுக் கொள்வதை காணச் சகிக்குமா ? ஏன்தான் சம்பாதித்தோமோ ? பேசாமல் இருந்திருக்கலாம்.இப்படி தாய், தந்தையர் சொத்துக்காக சண்டை போடுவதைப் பார்த்து ,பிள்ளைகளுக்கு நிச்சயமாக சம்பாதிக்கும் ஆசை போய் விடும். அப்படியே சம்பாதித்தாலும் சேர்த்து வைக்கும் பழக்கத்தை விட்டு விடுவார்கள். தங்களுக்கு மட்டும் வைத்துக் கொண்டு மீதிப் பணத்தை செலவழித்து விடுவார்கள். சிக்கனமா ? நோ சான்ஸ்!ஐந்துதலை நாகப் பாம்பைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். பாம்பிற்கு உடம்பு ஒன்றுதான் இருக்கும். தலைகள் மாத்திரம் 5 இருக்கும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஐந்து குழந்தைகளும் ஒன்றுதான் .அதை உணராமல் சண்டை போட்டுக் கொள்கின்றனர் .சண்டை போடாமல் சுமூகமாகப் பேசி உங்கள் பிரச்சனைகளை கோபப்படாமல் நிறுத்தி, நிதானமாக எடுத்துரைத்து ,அவரவர்களுடைய பங்கினை சாமார்த்தியமாகப் பெறுவதே நல்ல முடிவு.சகோதரர்களிடமோ, சகோதரிகளிடமோ, சண்டை போட்டு வாங்கும் சொத்துக்கள் நாம் இருக்கும் வரைதான் நம்முடையது .அது கூட பெண்ணோ, பையனோ, தன் பிள்ளைகள் பெயரில் எழுதி வாங்கி விடுவார்கள். எப்படியும் நம் வாரிசுகளுக்குத்தான் செல்லும், நமக்கு வர வேண்டியவை வராமல் ,ஏமாற்றப்பட்டு விட்டால் நம் வாரிசுகள் யாருக்கேனும், எந்த வழியிலாவது வந்து சேரத்தான் செய்யும். அதில் சந்தேகமே இல்லை. வாரிசுகளுக்குத்தானே மூன்றாவது தலைமுறைகளுக்கு வந்து எந்த விதத்திலாவது வந்து சேர்ந்து விடும்.அதைத் தவிர்த்து காலமெல்லாம் கோர்ட்டிற்கு அலைவதில் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அப்படி முடியவில்லை என்றால் பேசாமல் விட்டு விடுவது நல்லது. மேலே இருக்காரே உலக கோர்ட் ஜட்ஜ் அவர் பார்த்துப்பார். சேர வேண்டியவர்களுக்கு எந்த வழியிலாவது வரும். பாசம் உங்களிடம் இருப்பதா ? இல்லையா ? என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. 

May 01, 2023

கனவு மெய்ப்பட வேண்டும்

 மதிப்பிற்குரிய அப்துல்கலாம் ஐயா அவர்கள்” கனவு காணுங்கள்என்று சொல்கிறார். அதைத் தவறாக எடுத்துக் கொண்டவர்கள், எத்தனை பேர்.? நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தூங்குகிறார்கள்.” ஆனா கனவே வர மாட்டேன் என்கிறதே” பலர் வருத்தப்படுகிறார்கள்.கலாம் ஐயா, அவர்கள் சொன்ன கனவு என்ன என்று தெரியுமாவாழ்க்கையில் ஓர் லட்சியம், குறிக்கோள் வேண்டும் அதைப்பற்றிக் கனவு காண வேண்டும். எந்தக் கனவு நம்மைத் தூங்க விடாமல் செய்யுமோ, அந்த லட்சியக் கனவைக் காணும்படி கூறியிருக்கிறார். இக் கனவை நிஜமாக்கிப் பார்க்க, எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதில் தவறே இல்லை. அது சராசரி மனிதனுக்கு வரும் சுயநலம் சார்ந்த ஆசை. அப்படிப்பட்ட ஆசை யதார்த்தமானது. சாப்பாட்டிற்கு, குடியிருக்க வீடு, வெளியில் சென்று வருவதற்கு வாஹனம் என்று ஆசைப்பட்டு சம்பாதிப்பதில் தவறு  இல்லை.யானைக்குத் தன் பலம் தெரியாததால் யானைப் பாகன் சொல்வதையும், சர்க்கஸ் மாஸ்டர் சொல்வதையும் கேட்டு அதன்படி அடக்கமாக வேலை செய்கிறது. தன்பலம் தெரிந்தால் சும்மா விடுமா! இது எதை ஞாபகப்படுத்துகிறது லட்சியம் இல்லாத மனிதர்களின் நடைப் பயணங்கள் மாதிரி.வித்தியாசமான சிந்தனை. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பொழுது,, அது கடவுள் குற்றமாகிவிடுமோ கடவுளுக்குச் செய்த துரோகமாக மாறி விடுமோ! என்று எல்லாவற்றையும் மதத்துடன் இணைப்பது பெருந்தவறு,” நம்ம ஜாதியிலே இந்த மாதிரி யாருமே தொழில் செய்ததில்லையே”, என்று மதம் தாண்டி சிந்திப்பதில்லை.சரி எல்லாவற்றையும் மறந்து ஒரு லட்சியத்தை குறிக்கோளை, நம்பிக்கையுடன் செயல்படுத்த நினைக்கிறோம். நம்பிக்கை என்ற சின்ன செடி வளர்கிறது. அச்செடியை ஆடுகள் மேய்ந்து விடுவதைப் போல யாராவது அந்த நம்பிக்கைக்கு ஒரு பிரேக் போட்டால் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அது வளர்ந்து பெரியதாகி, எந்த ஆடு மேய்ந்ததோ, அதுவே அந்த மரத்தின் நிழலில் ஒதுங்கும்.எந்த ஒரு செயலுக்கும் குடும்பத்தின் ஒத்துழைப்பு கண்டிப்பாக வேண்டும். அவரவர்கள் அவரவர்களுடைய விருப்பப்படி செய்வதற்கு ,ஆவண உதவிகள் செய்யாவிட்டாலும், உபத்ரவம் செய்யக்கூடாது. “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்களே” ! என்று அங்கலாய்ப்பதை விட்டொழித்து ,அன்பினால் அனைவரையும் கட்டிப் போட்டு விடலாம். அரவனைத்துக் கொள்ளலாம். நம்பிக்கை, குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, மூன்றாவதாக மற்றவர்களின் விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளவே கூடாது.'வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இதுதானடா'நம்முடைய எதிரிகள் தான் நம்மை அழிக்க வேண்டும் என்றில்லை. உங்களை உங்களவர்களே அழிக்கத் திட்டம் போடுவார்கள். அதற்கும் அஸ்திரம் தயாராக வைத்திருக்க வேண்டும். பணம் சம்பாதித்தாகிவிட்டது. தனக்கென்று ஒரு வீடு, வாஹனம், சாப்பாட்டிற்கு குறைவே இல்லை. தன்னுடைய லட்சியம் என்ற குறிக்கோளை அடைந்து விடுகிறான். வாழ்க்கை இனிக்கிறது. அப்பொழுது அவனுக்கு பேராசை ஏற்படுகிறது. இன்னொரு வீடு, நிலங்கள், தங்கக் கட்டிகள் என்று சேர்ந்து வைக்க ஆரம்பிக்கின்றனர். இந்தப் பேராசையினால் நிம்மதி கெடுகிறது.அதிகமாக வரும் செல்வத்தை பொதுநலம் சார்ந்த நிறுவனங்களுக்காக செலவழிக்கலாம்.நம்பிக்கை, லட்சியம், குடும்பத்தினர் ஒத்துழைப்பு, நல்ல விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது விதண்டாவிதமான விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது. பேராசையை விட்டொழிப்பது. நம் முன்னேற்றத்தில் தடைக்கற்கள் போடும் எதிரிகளை அன்பினால் வசப்படுத்துவதுபோன்றவற்றை செய்வதால் என்ன ஆகும். நம்முடைய கனவு மெய்ப்படும்.'முடிந்ததை முடிப்பவர்கள் முடிவெடுப்பவர்கள். முடியாததை முடிப்பவர்கள் முடி சூடுவார்கள்'ஒரு பறவையை எடுத்துக் கொண்டால் தனக்கென்று ஒரு கூட்டைத் தான் கட்டிக் கொள்ளும் பறவை ஒரு நாளும்“இரண்டு மூன்று கூட்டைக் கட்டிக் கொள்வோம்” என்று நினைத்ததே இல்லை. இது இயற்கை நமக்குச் சொல்லும் பாடம்.குரங்கினை கவனித்துப் பாருங்கள். ஒரு க்ஷண நேரம் கூட சும்மா இருப்பதில்லை. அப்படியே உட்கார்ந்தாலும் தலையில் பேன் எடுத்துக் கொண்டிருக்கும். ஏன் என்றால் அதற்குள்ள சக்தியை இப்படி அலைந்து தான் வீணாக்க முடியும். குரங்கிலிருந்து வந்த மனிதர்களுக்கு அதே சக்தியைத் தான் கொடுத்திருக்கிறார். கடவுள். அதை ஒழுங்குபடுத்தும் திறமை உள்ளவர்களால் மட்டுமே தங்களுடைய லட்சியக் கனவுகளை மெய்ப்படுத்த முடியும். 

Mar 31, 2023

அரசாங்கம் என்ன செய்யும்

எங்க பார்த்தாலும் கட்டுப்பாடு சகிக்கலே I Want to be free. அம்மா, அப்பா. பாட்டி. தாத்தா. சமயம். சமுதாயம். அரசாங்கம். பாடங்கள் எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. இதற்குத்தடா, அதற்குத் தடா என்று தடைகள். நம் வாழ்க்கை தறிகெட்டுப் போகாமல் இருக்க, முன்னோர்கள் செய்த வழிதான் இவை.குற்றால அருவியிலே மழை நேரம் சாதாரணமாக தண்ணீர் விழும் பொழுது ஆனந்தக் குளியல் போடுகிறோம். அதே அருவியில் வெள்ளப்பெருக்கெடுத்தால் நம்மால் குளிக்க முடியுமா ? முடியாது கட்டுப்பாடில்லாமல் விழும் தண்ணீரில் குளிக்கத் தடைபோடுகின்றனர். நாமும் நமக்குள் இந்த அருவியிலே 'தலை வச்சோம், செத்தோம்' என்று நமக்கு நாமே கட்டப்பாடு செய்து கொள்கிறோம். அதெப்படி ? என்னை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று தலையைக் கொடுத்தால் என்ன ஆகும். டிஸ்கவரி சேனலில் காட்டப்படும் கடலுக்கு அடியில் தான் இருப்போம். இல்லாவிட்டால் மீனுக்கு இரையாகிவிடுவோம்.ஹெல்மெட் போடுங்கள். அடிக்கடி இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அதிலும் மண்டையில் அடிபட்டு சாகும் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மெதுவாகச் செல்லுங்கள். வேகத்தை குறையுங்கள், ம்ஹீம் யார் கேட்கிறார்கள். சூர்யா, விஜய், அஜித் , ஸ்டண்ட் சீன்களில் பாதுகாப்பாக கயறு கட்டி வேகமாக ஒட்டுவது போல பாவலாவை நிஜம் என்று நம்பி, நம் வீட்டு பிள்ளைகள் ஸ்டைலாக ஒட்டி,விழுந்து மண்டை உடைந்து இறக்கிறார்கள். இதற்காக அரசாங்கம் திடீரென்று சட்டத்தைக் கொண்டு வந்தது. கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று. ஏன் ? நமக்குத் தெரியாதா ? அரசாங்கம் சொல்லும் வரை நமக்கு மூளை எங்கு சென்றது என்று தெரியவில்லை. உடனே ஹெல்மெட்டை வாங்கிக் குவித்தனர். ஹெல்மெட் வியாரிகளுக்கு சூப்பர் லாட்டரி.திடீரென்று ஹெல்மெட் போட்டாலும் ஆபத்து வருகிறது. ஹெல்மெட் போடுவதால் கொஞ்சம் காது கேட்பதில்லை. தலைவலி வருகிறது. தரமற்ற ஹெல்மெட்டினால் ஆபத்து கூடுகிறதே ஒழிய குறைவதற்கு வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பினர் வாதமிட, அரசு சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது. எப்படி ? ஹெல்மெட் போட்டுக் கொண்டு மிதவேகத்தில் ஒட்டினால் இந்த லோகத்தில் தொடர்ந்து வாழலாம். இல்லா விட்டால் பரலோகத்தில் உடனே செட்டில் ஆகி விடலாம். என்று தான். என்ன செய்யும் அரசாங்கம்.கட்டுப்பாடற்ற வாழ்க்கை ஒருக்காலும் சுபமாக இருப்பதில்லை. சாலை விதிகளைக் கூட கடைபிடிப்பதில்லை. கட்டுப்பாடற்ற மனிதர்கள் சாலை நடுவே நின்று நண்பனிடம் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும், (படிக்கும் மாணவர்கள் கூட) காரோ, பஸ்ஸோ, ஹாரன் அடித்தால் திரும்புவதாகத் தெரியவில்லை. அப்படியே திரும்பினாலும் ஒரு முறைப்பு அங்கே இடம் இருக்கில்லா ? ஒதுங்கிப்போ ! என்ற பாவனையுடன், இவர்களே இப்படி என்றால் கிராமப்புற மக்களுக்கு என்ன தெரியும். டிராபிக் ரூல்ஸை, சிக்னலை யாரும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. இந்திய மக்களின் விலை மதிப்பற்ற, உயிரை துச்சமாக அலட்சியப்படுத்துவதால், எத்தனை உயிர்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன.மக்கள் நடைபாதையில் கடை போடுபவர்கள் தங்கள் வியாபாரத்திற்கு உரிய சாமான்களை சாலை ஓரத்தில் போட்டு வியாபாரம் செய்வது ,மண்ணிக்க முடியாத குற்றம். ஏன் அந்த சாலையில் விபத்து நேர்ந்தால் சாலையோரக் கடைக்காரர்கள் வியாபாரிகள் கூட விபத்திற்கு காரணமாணவர்களேயாவர். அவர்களுக்குக் கூட பாவத்தில் பங்கு உண்டு.பல தவறுகளை நாம் தெரியாமல் செய்கிறோம். ஆனால் தெரிந்து செய்யும் தவறுகளால் நாம் மன்னிக்க முடியாத குற்றவாளியாக மாறி, இப்பிறப்பிலும்,மறு பிறப்பிலும், நாம் அனுபவித்தே ஆக வேண்டும். ஆகவே நம் முன்னோர்கள் சமயம், சமுதாயம், அரசாங்கம், பாடங்கள், வேதங்கள் சொல்லியவற்றில் உள்ள கருத்துக்கள். கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நாமும், நம் நாடும். செழித்து வளர்வோம் என்பதில் சந்தேகமே இல்லை. 

Mar 01, 2023

முடிவு எடுப்பதில் தாமதம் வேண்டாமே !

பலருடைய உள்ளத்தில் இந்த ஒரு கேள்வி எழாமல் இருப்பதில்லை. தான் செய்யுயம் ஒவ்வொரு யெலும் சரியா ? தவறா ? என்று யோசிப்பதிலேயே காலத்தையும், மனசையும் கெடுத்துக் கொள்கின்றனர். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெரியவர்கள் கூட உனக்கு எது சரின்னு படுதோ அதைச் சட்டுபுட்டுன்னு செய்வியா ? என்பார்கள்.ஏனென்றால் முடிவெடுப்பதில் யோசித்துக் கொண்டு யாரிடமாவது முடிவெடுக்கலாம். என்றால் அவசர முடிவுகளுக்கு என்ன செய்வார்கள். கேட்டுசரியா ? தவறா ? என்ற யோசனை சாதாரண உடை விஷயத்திலிருந்து அடுக்கிக் கொண்டே போகலாம். திருமணத்திற்கோ நிச்சயதார்த்தம், சங்கவிழா, ஏன் துஷ்டி வீட்டிற்குப் போவதற்குக் கூட பல பெண்கள் என்ன புடவை, என்ன நகை போடுவது என்று அலை பாய்ந்து நொந்து போகின்றனர். அவர்கள் மனம் எது சரி ? என்ற தெளிவான சிந்தனையை சிந்திப்பதில்லை. சரி சமையலை எடுத்துக் கொள்வோம், விருந்தாளி வருகிறார்கள். வகையா சமைக்கணும், என்ன சமைப்பது என்று யோசித்தே சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தலைவலியில் படுத்து விடுகின்றனர்.வியாபாரத் துறையிலும் சரி முடிவெடுப்பதற்கு படாதபாடு படுவார்கள். பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்குள் உள்ளம் பதறி மனம் படபடத்து செய்வதறியாது திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள் பலர்.இந்த மனிதர்களிடையே ஒரு சிலர் முடிவெடுப்பதில் தாமதிக்காமல் டக்கென்று முடித்த விடுவார்கள். இப்ப என்ன ? நடக்கிறது .நடக்கட்டும் எந்த வியாபாரம் தான் டென்ஷன் இல்லாதது வரும்போது,பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக பிரகாசிக்கிறார்கள்.என்ன ஆகி விடுமோ ? என்ற பயம் இருக்கும் வரை நம் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. ஆதனால் முடிவெடுப்பதில் முட்டாள் தனமான முடிவும் கஷ்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்.நாள், நட்சத்திரம் பார்த்து பல விஷயங்களைத் தள்ளிப் போடுபவர்கள் அவசரமாக வைத்தியம் செய்வதைத் தள்ளிப் போட்டு உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வருபவர்கள் உண்டு.வீட்டை விட்டு புறப்படும் பொழுது மந்தாரமாக இருக்கே ,குடை எடுத்துட்டுப் போகவா ? வேண்டாமா ? என்று ரெம்ப நேரம் குழம்புவார்கள். முடிவெடுப்பதில் உள்ள குறை" ஒன்று குடை எடுத்துட்டுப் போங்க ,இல்லாட்டி நனைஞ்சுட்டு வந்தா உங்க மண்டையிலே என்ன செடியா முளைச்சிடும். துணி தானே நனையும் காயப் போட்டுக்கலாம்" ! இது துரிதமாக முடிவெடுக்கும் மனைவியின் அபிப்ராயம். என்ன நடந்தாலும் பரவாயில்லை, நடப்பது நடக்கட்டும் எனக்கு இது சரியென்றுபடுது நான் செய்கிறேன். தவறவிட்டா அப்புறம் திருத்திக்கிறேன் இது முடிவெடுப்பதில் தைரியம் உள்ளவர்களின் மனப்பான்மை நீங்க எப்படி ? முடிவெடுப்பதில்  தாமதம்  வேண்டாமே !

Jan 31, 2023

வருமுன் காக்க

 நம் நாட்டில் உள்ள மனித உயிர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்றால் பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. மனித உயிர்களை பாதுகாப்பதில் அரசாங்கமும், பொதுமக்களும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்."கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் " என்பது தொடர் கதையாகி விட்டது. ஒரு தொழிற்சாலை சினிமா தியேட்டர், திருமண மண்டபம், போக்குவரத்து சாலைகள், கல்வி நிறுவனங்கள், இவற்றை எல்லாம் எதற்காக உருவாக்கி இருக்கிறார்கள். மனிதர்கள் நலமாக வாழத்தானே ? அதுவே எமலோகப் பாதையாக இருந்தால் எப்படி ?தொழிற்சாலைகளில் உற்பத்தி, தரம் மாத்திரம் பார்த்தால் போதுமா ? அங்கு வேலை செய்யும் தொழிலாளரின் உயிருக்கு பாதுகாப்பு உள்ளதா ? என்பதை யாராவது யோசித்திருப்பார்களா ? இதுவரை இல்லை . இப்பொழுது கொஞ்சம், கொஞ்சமாக சிந்திக்க தொடங்கி உள்ளனர். சினிமா தியேட்டரும், அப்படித்தான். மக்களிடையே ரசிகர் மன்றத் தகராறு, ஈவ்டீசிங் ,கைகலப்பு, சிகரெட் பிடித்து அமர்த்தாமல் எரிவது, படம் போட்ட பிறகு, இருட்டாக இருக்கும் பொழுது தவறுதலாக கீழே விழுவது, தீ பிடித்தல், கெட்டுப்போன உணவு, போன்ற பிரச்சனைகள் வராமல் காப்பது, தியேட்டர் உரிமையாளரின் கடமை.திருமணமண்டபத்தில் ஹோமம் செய்யும் பொழுது ,மேலே கூரை இருப்பது எல்லாம் எப்பேற்பட்ட ஆபத்தில் சென்று முடிந்திருக்கிறது என்று ,யாரும் கூறத் தேவையில்லை. கண்கூடாகப் பார்த்திருக்கிறோமே ! வீடியோ வயரில் தட்டி விழுவது, மண்டபம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று ஓவர் ஆக பாலீஸ் போடுவது, போன்றவை சறுக்கி விழ வாய்ப்புகள் உண்டல்லவா ? இவற்றை மண்டபத்தார் கவனிக்க வேண்டும்.போக்குவரத்து சாலை விதிகளை பின்பற்றாமல், நம் கண்முன்னே எவ்வளவு அசம்பாவிதங்கள் விபத்துக்கள் நடக்கின்றன. வேகமாக ஒடும் மணல், குப்பை, நீளமாக கம்பிகள் நீட்டி உள்ள லாரிகள், டிராக்டர்களின் அசுர வேகத்தில் மண் பறக்கும் போது 2 வீலரில் வரும் பலருடைய உயிருக்கு, உலை வைத்து விடுகின்றது. விலை மதிப்பற்ற உயிருக்கு 300, 400, அதிகப்படியான காசு பார்க்கும் வாஹன உரிமையாளர்களை எப்படி மாற்றுவது, யோசிக்க வேண்டும். லாரி, டிராக்டர், பஸ், கார், டிரைவர்கள் கண்மூடித்தனமாக வேகம், படக்,படக்கென்று திரும்புவது, ஓவர்டேக் செய்வது,ஓவர்லோட் ஏற்றுவது, இவையெல்லாம் சாலை விபத்துக்களை கைநீட்டி வரவேற்கின்றன.பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சாலைகளில் பத்திரமாக வரவேண்டும் என்ற திகிலுடன், பள்ளிக் கூடம் அனுப்பும் பெற்றோர்களுக்கு, தீப்பிடிக்காமல் இருக்க வேண்டுமே என்றபுதிய திகில் சேர்ந்து கொண்டது. கும்பகோணத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரணம் என்ன ? பின் விளைவுகளை கவனிப்பது இல்லை.ஆபத்துக்கள் எப்படி எல்லாம் வரும் என்பதை ஆராய்ந்து ,அதைத் தவிர்ப்பதற்கான எல்லா அணுகுமுறைகளையும், கவனமாகச் செய்ய வேண்டும். நம் யோசனைக்கும் அப்பாற்பட்டு ஏற்படும் விபத்தினை, இனி வராமல் காப்பாற்றும் வழி முறையை பின்பற்ற வேண்டும். அவந்தலைவிதி போய்விட்டான் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.விலைமதிப்பற்ற மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் .வெளிநாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் ,தொழிலாளர்களின் பாதுகாப்புதான் முக்கியம் .அதன் பின்பு தான் தரம். நாமும் "வருமுன் காக்க" வேண்டியது நம் கடமையாகும்.

1 2 3 4

AD's



More News