விருதுநகர் மாவட்டத்தில், மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு அப்பகுதி வார்டு உறுப்பினர் தலைமையில், மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராக கொண்டு அவ்வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்களை 27.10.2025. 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் நடத்தி பின்வரும் பொருள்கள் குறித்து விவாதித்து, அப்பொருள்களில் முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் மூன்று (3) கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக அக்கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி, இக்கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்து அதில் உள்ள இடர்பாடுகளை விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில் திறந்தவெளி இடங்கள், சாலையோரப் பகுதிகள், குளக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளில் சமூக ஆர்வலர்கள் தொழிற்சாலை/இதர நிறுவன பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் மூலம் பராமரிப்பு செய்வது குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் “நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் குறித்து விவாதித்தல். நகாரட்சிப் பகுதிகளில் நகராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். நகராட்சிகளில் அமைந்துள்ள நீர்நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீராதாரங்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. எனவே, மேற்கண்ட கருப்பொருள் தொடர்பாக விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 01 மாநகராட்சி, 05 நகராட்சிகள் மற்றும் 09 பேரூராட்சிகளின் எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் 27.10.2025 (திங்கள்). 28.10.2025(செவ்வாய்) மற்றும் 29.10.2025 (புதன்) ஆகிய 03 தினங்களில் சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர் தலைமையில் அந்தந்த உள்ளாட்சி துறையின் அலுவலக கூட்டுநர் மூலம், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழுக்கூட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு , மேற்கண்ட 09 பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் 03 கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக அக்கோரிக்கைகளை தீர்மானமாக இயற்றி “முதல்வரின் முகவரி மனு” என்ற அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உரிய ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில் ஸ்டார்ட் அப் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டார்ட் அப்கள் விரைவாக வளரும் திறனை கொண்டிருப்பதால் ஒரு பெரிய அளவிலான சந்தையை அடைய முடியும். மேலும் புதிய வணிகம் என்பதால் அவற்றின் எதிர்கால சந்தை தேவையும் நிச்சயமற்றதாக இருக்கும். எனவே இத்தொழிலுக்கு அரசு மானியம் அளித்து ஸ்டார்ட் அப்கள் தொடங்க வழிவகுக்கிறது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் நிறுவனம் அல்லது ஸ்டார்ட் அப் இந்தியாவின் கீழ் பதிவு செய்திருத்தல் அவசியம். இந்நிறுவனம் கம்பெனி சட்டம் 2013-ன் கீழ் தனியார் நிறுவனமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமாகவோ பதிவு செய்யப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் சராசரியாக லாபம் 5 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நிறுவனம் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பிரிந்த கிளை நிறுவனமாகவோ அல்லது மறு சீரமைக்கப்பட்டதாகவோ அல்லது மற்றொரு நிறுவனத்தின் கிளை கூட்டு நிறுவனமாகவோ இருக்கக்கூடாது. புத்தாக்க நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு அல்லது சமூகத்தின் மீது நேர்மறை தாக்கத்தை கொண்டிருத்தல் வேண்டும். புத்தாக்க நிறுவனம் அரசிடமிருந்தோ அல்லது அரசு சார் பிற நிறுவனங்களிடமிருந்தோ எந்த கடனும் வைத்திருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமாக இருத்தல் வேண்டும்.பயிர், கால்நடை மற்றும் மீன்வளம் போன்ற பல்வேறு வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். மொத்த நிதியில் 5 சதவீத நிதியுதவி முதல் நிலையில் உள்ள சிறிய அளவிலான மாதிரி தயாரிக்கும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகபட்ச மானியம் ரூ.1 லட்சம் ஆகும்.புதுமை தொழில் தொடங்குவது இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ஒரு அலகிற்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே துவங்கப்பட்ட புத்தாக்க நிறுவனங்களின் சந்தையை விரிவுபடுத்த ஒரு அலகிற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது. விண்ணப்பித்தினை www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பித்தினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மதிப்பீட்டு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். இதில் தகுதியற்றதாக கண்டறியப்பட்ட நிறுவனங்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு சரியான பதில் கிடைக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் மறுபரிசீலனை செய்யப்படும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேளாண் வணிக துணை இயக்குநர், வேளாண் வணிகம், 105 மதுரை சாலை, ஒழுங்குமுறை சந்தைக் குழு வளாகம், விருதுநகர் 626001 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்திட சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள், பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். ரூ.10 கோடி வரையிலான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களுக்கான புதிய மதிப்பு கூட்டு மையங்களை நிறுவுவதற்கு முதலீட்டு மானியமாக 25 சதவீதமும், தொழில் முன்னேற்றத்தில் பெண்கள் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு குறிப்பாக இவர்களில் பின் தங்கிய வட்டாரங்களில் தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் என மொத்தம் 35 சதவீதம் என்று அதிகபட்சமாக ரூ.1.5 கோடி மானியம் வழங்கப்படும் . திட்டச் செலவில் இயந்திரங்கள் மற்றும் கட்டடங்கள் ஆகியவை உள்ளடக்கிக் கொள்ளலாம். ஆனால், நிலம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவை திட்டச் செலவில் நீங்கலாக்கப்படும். மேலும் பின்னேற்பு தொகையானது முறையே 60% மற்றும் 40% ஆகிய இரண்டு தவணைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். இதைத் தவிர அனைத்துப் பிரிவினருக்கும் 5% வட்டிமானியம் 5 ஆண்டுகளுக்கு பின்னேற்பு மானியமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விடுவிக்கப்படும். மேலும் இத்திட்ட மதிப்பீட்டில் பயனாளிகளின் பங்களிப்பு குறைந்த பட்சம் 5 சதவீதம் ஆக இருக்க வேண்டும் மற்றும் மீதமுள்ள திட்ட நிதியை வங்கியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் அரசின் கடன் உத்திரவாதத்துடன் (CGTMSE) 2 கோடி வரை கடனுதவி 9% வட்டியுடன் பெறலாம். மேலும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம் பெறப்படும் நிதிக்கு 3% வட்டி மானியம் பெறலாம்.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அவர்களிடம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பயனாளிகளின் விண்ணப்பங்கள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மூலம் முன்மொழியப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவினரால் கூர்ந்தாய்வு செய்யப்படும். பின்னர் அவை மாநில அலவிளான திட்ட ஒப்புதல் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் தலைமையில் இயங்கும் திட்ட ஒப்புதல் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து பயனாளிகளை தேர்வு செய்வார்கள்.மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேளாண் வணிக துணை இயக்குநர், வேளாண் வணிகம், 105 மதுரை சாலை, ஒழுங்குமுறை சந்தைக் குழு வளாகம், விருதுநகர் 626001 அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (23.10.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் ஊராட்சியில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் ரூ.8.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நாற்றாங்கால் பண்ணையில் நர்சரி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, வத்திராயிருப்பு வட்டம், குன்னூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் சார்பில், ஆதிதிராவிடர் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்று இதுவரை இணைய வழிபட்டா கிடைக்கப்பெறாத 9 குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணையவழி பட்டாக்களை பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.பின்னர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், குன்னூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிவரும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான முதல் தவணைத்தொகை ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கி கட்டுமான பணிகளை பார்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஸ்ரீஅம்பாள் கிராண்ட் திருமண மண்டபத்தில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை மற்றும் நபார்டு வங்கி இணைந்து வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்து 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.மத்திய அரசு, அறுவடைக்கு பிந்திய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2032 - 2033 வரை) வங்கிகள் மூலம் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-2026 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கிறது. 7ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3% வட்டிக்குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.இந்த உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG), பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படுகிறது.இக்கருத்தரங்கில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், நபார்டு வங்கி, முன்னோடி வங்கி, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில் மையம் அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி மு.சுமதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.மேலும் இக்கருத்தரங்கில் வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருமதி எம்.செல்வி, மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) திருமதி.அனுசா எலிசபெத், வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி எஸ்.சுபா வாசுகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆர்.பாண்டிசெல்வன், இணைப்பதிவாளர்(மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) திரு.ஜீவா, துணை இயக்குநர்(மாவட்ட தொழில் மையம்;) திரு.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டம் தொடர்பாக விரிவான திட்ட விளக்க உரையாற்றினார்கள்.மேலும் இக்கருத்தரங்கில் விவசாயிகள், வங்கியாளர்களுடன் இணைந்து வேளாண் உட்கட்டமைப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வேளாண் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட முன்னோடி விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு, பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் உறுப்பினர்கள் என சுமார் 140 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.10.2025) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டத்தில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் அவர்கள் சிறுபான்மையினர் நலன் திட்டங்கள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட முஸ்லீம் உதவும் சங்கம் மூலம் 200 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட கிருஸ்துவ உதவும் சங்கம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 210 பயனாளிகளுக்கு ரூ.24.54 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சிறுபான்மையின மக்களை பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கான கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை நோக்கமாக கொண்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும், சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்சிறுபான்மையினர்நலன்சிறப்புக்குழுவினைஅமைத்துஅரசாணையினைவெளியிட்டார்கள்.அதனடிப்படையில், (முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய) சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறது.சிறுபான்மையினருக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து இதுவரை 10 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, இன்று 11 ஆவது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு பொது கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைத்திட விருதுநகர் வட்டம் கோட்டைப்பட்டியில் நகராட்சிக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் தலா ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி நிலம் கிருஸ்துவ/ இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பார்வையிடப்பட்டது.மேலும், இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்களுக்கு கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்திட நிலம் கோரி வரும் மனுக்கள், தேவாலயம்/மசூதி கட்டிட தடையில்லாச் சான்றிதழ் கோரி வரும் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்திட வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், இக்கூட்டத்தில் முஸ்ஸிம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கங்களின் செயல்பாடுகள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், உலமா பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் மானியத்திட்டத்தின் செயல்பாடுகள், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள், கிறித்துவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள், கிறித்தவர்/முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கல்லறைத்தோட்டம்/கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(TAMCO) மூலம் வழங்கப்பட்ட கடனுதவிகள், சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், பிரதான் மந்திரி ஜன்விகாஸ் கார்யகிராம் திட்டம்(PMJVK) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், சிறுபான்மையினர் மக்களின் கோரிக்கைகள் மற்றும் கடனுதவி பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சிறுபான்மையின இன மக்களுக்கு அனைத்து அரசு திட்டங்கள் சார்ந்த உதவிகளை பெற தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு.த.ஜான்சன் தேவசகாயம், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.கனகராஜ்(சாத்தூர்), திரு.மாரிமுத்து(அருப்புக்கோட்டை), கிருஸ்துவ/முஸ்லீம் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட முஸ்லீம் மற்றும் கிருஸ்துவ சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். அதன்படி பட்டியல் இன மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்காக தங்களது பங்கினை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்தவகையில்2025ஆம்ஆண்டுடாக்டர்அம்பேத்கர்விருதுபெறவிரும்புவோர்,தங்களைப்பற்றியமுழுவிவரங்களுடன் https://cms.tn.gov.in/cms_migrated/document/forms/ annalambedkar_award_applnform_t_290824.pdf (or) https://tinyurl.com/ambedkaraward என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 - ம் ஆண்டுமுதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2025-26) ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் வங்கிகள்/தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ (அ) பொதுசேவைமையங்கள் (Common Service Centres(CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு சம்பா-நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.491/- எனவும், மக்காச்சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.319/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.136/- எனவும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.160/- எனவும், பாசி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.251/- எனவும், உளுந்து, துவரை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252/- எனவும், பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.473/- எனவும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.314/- எனவும், எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.122/- எனவும் மற்றும் சூரியகாந்தி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.188/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் கடைசிநேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் கொத்தமல்லி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.583/- எனவும், மிளகாய் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1109/- எனவும், வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1573/- எனவும், வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.4426/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ம் ஆண்டின், நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2025 அன்றும், மக்காச்சோளம், கம்பு, துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2025 அன்றும், சம்பா-நெல் மற்றும் சோளம் பயிருக்கு 16.12.2025 அன்றும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2025 அன்றும் மற்றும் எள் பயிருக்கு 31.01.2026 அன்றும் கடைசி நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு, பயிர் காப்பீடு பதிவு செய்ய கொத்தமல்லி பயிருக்கு 17.01.2026 அன்றும், மிளகாய், வெங்காயம் பயிருக்கு 31.01.2026 அன்றும் மற்றும் வாழை பயிர்களுக்கு 28.02.2026 அன்றும் கடைசி நாட்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதினையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கைபேரிடர்களையும், பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீட்டை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி, தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.10.2025) வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.01.10.2025 முதல் 31.12.2025 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். கடந்த 15.10.2025 முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு, பாதிக்கப்பட்ட இடங்கள், மனித இழப்பு, கால்நடைகள் இழப்பு, குடியிருப்புகள் சேதம் உள்ளிட்டவற்றை முறையாக கணக்கிடப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நீர் வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கண்மாய்களையும் ஆய்வு செய்து, கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டு, போதியளவு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, உபரி நீரை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் கரையோரங்களில் வசிக்கக் கூடிய பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.மேலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேற்றிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர், மின்சாரம், சாலை, பொது சுகாதாரம் ஆகியவைகளை அவ்வப்போது கண்காணித்து உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும்.குடிநீர்தொட்டிகளில்குளோரினேசன்செய்யப்பட்டகுடிநீரினைவிநியோகம்செய்யப்படவேண்டும்.நெடுஞ்சாலைத்துறை சார்பில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திட வேண்டும்.உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும், சுகாதாரத் துறையின் மூலம் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக்குழு ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறை சார்பில், பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் இயற்கை இடர்பாடுகள் போது சீரிய முறையில் செயல்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தேவையான பயிற்சி அளித்திட வேண்டும். மீட்புப்பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவைப் படகுகள் ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.வேளாண்மைத்துறை மூலம் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிட வேண்டும். விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், விதைகள், உரங்களை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.மின்சாரத்துறை சார்பில், மின்சாரம் தடையின்றி கிடைத்திடவும், பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்திடவும், போதுமான அளவு மின்கம்பங்கள் மற்றும் அவசர காலங்களில் பணியாற்றிட பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டிடங்களை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டு பழுந்தடைந்துள்ள கட்டடங்களை மழைக்காலங்களில் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) திரு.அமர்நாத், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கள் பெரியாறு அணையில் (21.10.2025) வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இராஜந்திரன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S, அவர்கள் ஆகியோர் உள்ளனர்.