விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (24.01.2025) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மேலும், இராஜபாளையம் வட்டாரத்தில், மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர் ஆக்குதல் என்ற திட்டத்தில் ரூ.1,00,000ஃ-த்திற்கான காசோலை வழங்கப்பட்டது.கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் அப்பகுதிக்குரிய வட்டாட்சியர், செயற்பொறியாளர், நீர்வளத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, விருதுநகர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், முதன்மை செயலாளருக்கு நேர்முக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், வனவிலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டிருப்பின் கள ஆய்வு செய்து கூடிய விரைவில் இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கவும், தாமதமாக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.பின்னர், பரளச்சி, இராஜகோபாலபுரம், தொப்பலாக்கரை, தும்முசின்னம்பட்டி ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு, மாசுப்பட்டுள்ளதால் சிறுநீரக பாதிப்புகள் அதிகளவில் உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.குப்பை கழிவுகளால் சுற்றுச்சுழல் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் இதில் பொது மக்களும் தங்களது கடமைகளை சரிவர பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திருவில்லிபுத்தூர் திரு.தேவராஜ்,இ.வ.ப., வேளாண்மை இணை இயக்குநர் திருமதி க.விஜயா, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்ப பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணான 1098 வடிவில் 1098 பெண் குழந்தைகள் நின்று சாதனை புரியும் நிகழ்ச்சியினை சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இன்று பல்வேறு துறைகளில் குறிப்பாக அதிகாரமிக்க அரசு பணிகளில் இருந்து, நிறைய பொருளாதார வளமிக்க தனியார் துறைகள் மற்றும் நிறைய வணிகத் துறைகளிலும் பெண்களினுடைய பங்களிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது.இதற்கு மிக முக்கியமான காரணம், பெண்களுக்கு என்று நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த வாய்ப்புகளை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு இயற்கையாகவே புத்தி கூர்மை அதிகமாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவிபேணி வளர்த்திடும் ஈசன்மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்லமாதர் அறிவைக் கெடுத்தார்கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்காட்சிக் கெடுத்திட லாமோ?பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்பேதைமை யற்றிடும் காணீர்!பெண்;களுக்கு இயற்கையாகவே அதிகமான ஞானம் இருக்கிறது. பெண்ணுக்குள் அறிவை வளர்ப்பதன் மூலமாக இந்த சமுதாயத்தில் எதெல்லாம் பேதமையாக இருக்கிறதோ, எதெல்லாம் மடமையாக இருக்கிறதோ அவற்றையெல்லாம் அழிப்பதற்கு பெண்களுக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பது தான் என்று 115 ஆண்டுகளுக்கு முன்பாக மகாகவி பாரதியார்; பாடியிருக்கிறார்.அப்படிப்பட்ட ஒரு சமூக சூழலில் பெண்களுக்கு இன்று அவர்கள் நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் காரணமாக நிறைய தொழில்களில் மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கிறார்கள். இருப்பினும் சமூக சூழ்நிலைகள் காரணமாக அவர்கள் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சனைகள், அது குடும்பத்திலிருந்து, சமுதாயத்தில் இருந்து, அவர்கள் பழகக்கூடிய மனிதர்களிடமிருந்து எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளை இரண்டு விதமாக அணுக வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று அறிவியல் பூர்வமாக உளவியலை அணுகுவது, இன்னொன்று சட்டத்தின் மற்றும் அரசினுடைய திட்டங்களின் மூலமாக வாழ்க்கையையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை புரிந்து கொள்ளுதல் ஆகும்.குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ, குழந்தைத் தொழிலாளராகவோ, குழந்தைத் திருமணமோ, பெண் சிசு மற்றும் கருக்கொலையோ, பாலின பாகுபாடோ, ஜாதி வேற்றுமையா, குழந்தைத் கடத்தலோ நடைபெறாமல் தடுத்தல், அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் அல்லது நடைபெறுவது போல் தெரிந்தால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இச்சாதனையை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ், புதுச்சேரி அமைப்பு கண்காணித்து அங்கீகாரம் செய்தனர்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரா.பாஸ்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமதி இல.மீனாட்சி, அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைமை இயக்குனர் திரு.சதீஷ்குமார், பள்ளி தலைமையாசிரியர், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு நடைபெற்ற மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியைகளுக்கான வளர் இளம் பருவ உளவியல் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் (Menstrupedia Comics) தமிழ் புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வளரிளம் பருவத்தில் இருக்கக்கூடிய பதினோரு வயதிலிருந்து 17 வயது வரை பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் இருக்கக்கூடிய மாணவியர்களுக்கு வழிகாட்டுவதற்காக மருத்துவ உளவியல் மற்றும் உடல் சார்ந்த மருத்துவங்கள் பற்றி எடுத்து கூறுவதற்காக இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் இந்திய அளவில் கல்வி மற்றும் மனித வள குறியீடுகளில் நன்கு வளர்ச்சி அடைந்த மாவட்டம். உயர்கல்வி பொருத்தவரையில் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உயர்கல்வி சேர்க்கையில் அதிகமான எண்ணிக்கை கொண்ட முதல் மாவட்டம் விருதுநகர் தான். மனிதவள குறியீடுகளிலும் மிக அதிகமாக உள்ள மாவட்டம்.இப்படி நன்கு வளர்ச்சி அடைந்த விழிப்புணர்வு பெற்ற நமது மாவட்டத்தில் கூட ஒவ்வொரு ஆண்டும் 200- 300 வரையிலான குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதுபோல நமது மாவட்டத்தில் மகப்பேறு புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் 19 வயதிற்குள் தாய்மை பேறு அடையும் சிறுமிகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு சுமார் 700 முதல் 800 வரை இருக்கிறது. இது இன்னும் விழிப்புணர்வுக்கான தேவை இருப்பதை காட்டுகிறது.குறிப்பாக மாணவிகளுக்கு பதின் பருவத்தை புரிந்து கொள்ளுதல், பதின் பருவத்தில் ஏற்படக்கூடிய உளவியல், உடல் சார்ந்த மாற்றங்களை புரிந்து கொள்ளுதல் ஆகியவையோடு அதனை அறிவியல் பூர்வமாக அணுகுதல் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இன்றைக்கு அறிவியல் மனப்பாங்கு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நாம் அறிவியலை படித்து அறிவியல் தகவலை பெற்று ஒரு அறிவியல் நிபுணராகவோ அல்லது படித்த படிப்பாளியாகவோ இருப்பது வேறு, அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. எனவே நிரூபிக்கப்பட்ட அறிவியல் வழியாக, அறிவியல் மருத்துவத்தின் உடைய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு அறிவியல் மனப்பாங்கு மிகவும் முக்கியமானது. அதனை இளம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். 19 வயதிற்குள்ளாக தாய்மை பேறு அடையும் பெண்களின் குழந்தைகள் தான் பெரும்பாலும் எடை குறைவான குழந்தைகளாகவும், குறிப்பிட்ட காலகட்டத்தில் அடைய வேண்டிய உடல், மனவளர்ச்சி அடையாத குழந்தைகளாக இருக்கிறார்கள்.குழந்தை பிறப்பு விகிதம்(IMR) என்று சொல்லக்கூடிய பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டிற்குள் இறந்து போகக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையும் இதுபோன்ற ஒரு வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் பெறக்கூடிய குழந்தைகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, ஒரு குழந்தை பிறப்பு என்பதும், அந்த குழந்தை இறந்து போவது என்பதும் எவ்வளவு பெரிய வலியாக அந்த தாய்க்கும், அந்த குடும்பத்திற்கும் இருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.நாம் வளர்ச்சியடைந்த இந்த சூழ்நிலையிலும் கூட நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மாணவிகளுக்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களில் உளவியல் சார்ந்த மாற்றங்களுக்கு அவர்களை தங்களை தயார்படுத்தி கொண்டிருக்கிறார்களா என்றும் அதனுடைய நன்மை தீமைகளை அறிவியல் மனப்பான்மையுடன் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.நம்முடைய மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பிரச்சனைகளை ஆய்வு செய்து பார்த்தால், இந்த குழந்தைகளுக்கு எல்லாம் நல்ல வழிகாட்டுதலும் ஆற்றுப்படுத்துதலும் அவசியமாகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் படிக்கக்கூடிய உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று நியமிக்கப்படக்கூடிய ஆசிரியர்கள், இது குறித்து மாணவிகளுக்கு குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாளாவது, ஒரு வகுப்பாவது அவர்கள் வாழ்க்கை முறை சார்ந்த கல்வியை, குறிப்பாக அவர்களுடைய உடல் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கும், அதைவிட மிக முக்கியமானது அதற்கான தீர்வுகள் குறித்து அவர்களுக்கு தெரிந்து கொள்வது மிக முக்கியமானது.ஒரு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அறிவியல் பூர்வமாக மருத்துவர்களை அணுகி எப்படி தீர்வு காண்பது. ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனைக்கு எப்படி ஒரு ஆலோசனைகளை பெறுவது. தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை எப்படி முறையாக தீர்வுக்கு கொண்டு வருவது. இவற்றையெல்லாம் அறியாமையின் காரணமாக நமது குழந்தைகளுக்கு தெரியவில்லை. அவற்றை எல்லாம் அவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து வட்டாரங்களில் இருந்தும் சுமார் 200 ஆசிரியர்கள் என்று இந்த நிகழ்ச்சியில் வருகை தந்திருக்கிறீர்கள். ஆசிரியர்களாகிய நீங்கள் ஒவ்வொரு வட்டாரங்களிலும் சென்று தொடர்ச்சியாக செயல்படக்கூடிய நிகழ்ச்சிகளில், நீங்கள் இது குறித்து அறிவியல் பூர்வமாக பேச வேண்டும். அறிவியல் பூர்வமாக இருக்கக் கூடிய தீர்வுகளுக்கு மாணவிகளை ஆற்றுப்படுத்த வேண்டும். தேவை ஏற்படக்கூடிய சூழ்நிலையில் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் நீங்கள் ஆதரவோடும், பெற்றோர்களுக்கு ஆலோசனைத் தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். மாணவிகளை உயர்கல்விக்கும், கல்வியின் வழியாக பெரிய வாய்ப்புகளை பெறுவதற்கும் இருக்க்க்கூடிய சூழ்நிலைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இன்று பெண்களுடைய முன்னேற்றம் என்பது மிகப்பெரிய சமூக முன்னேற்றம். அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பெண்கள் அதிகமாக வருகிறார்கள்.எனவே எதிர்காலத்தில் அவர்கள் வெற்றி அடையக்கூடிய பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவர்கள் பொருளாதாரத்தில் தலைநிமிர வேண்டும். பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்தால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும். அதை மாணவிகள் அடைவதற்கு அவர்களுடைய பதின் பருவத்தை மிக கவனமாகவும் விழிப்புணர்வோடும் ஆரோக்கியமாகவும் கடந்து, அடுத்து வாழ்க்கை தரக்கூடிய பல்வேறு வாய்ப்புகளை பெறக்கூடிய மாணவிகளாக நமது மாணவச்செல்வங்கள் உருவாக வேண்டும். அவர்களுக்கு ஆற்றுப்படுத்தக்கூடிய பணிகளை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். எனவே இந்த நிகழ்ச்சியினை நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு மாணவிகளுக்கான ஒரு ஆரோக்கியமான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் உறுதி மொழி மேற்கொண்டால் அதுதான் இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தின் வெற்றியாக இருக்கும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட மனநல மருத்துவர் மரு.விதுபிரபா, விருதுநகர் மருத்துவக்கல்லூரிமருத்துவமனைபேராசிரியர்(மகப்பேறு) மரு.சுதா, மாவட்ட தொற்று நோய் அலுவலர் மரு.நிஜவர்த்தன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி உட்பட மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கல்லூரியில் (24.01.2025) செந்திக்குமார நாடார் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை, மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியில்(24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, தகவல் வளமையம் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (22.01.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையின் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.சமூக ஊடகங்களில் இலவசம் என்று நாம் பார்க்கும் அனைத்திற்கும் ஒரு விலை இருக்கிறது. பொருளாதாரத்தின் முக்கிய கொள்கை என்னவென்றால், உலகத்தில் எந்த ஒன்றும் இலவசம் இல்ல என்பதுதான்.ஒருவர் தன் வாழ்நாளில் செய்ய முடியாத செயல்களை, மற்றொருவர் தனது வாழ்க்கையில் செய்து முடிப்பவரே சிறந்த அறிவாளி. ஒரு இடத்திலிருந்து மற்றொரு மாநிலம் அல்லது நாட்டிற்கு வேலை வாய்ப்பிற்கு செல்கிறார் என்றால் அந்த வேலைக்கான சுய அறிவு, விழிப்புணர்வுகள் மற்றும் வழிகாட்டுதல் முறையாக கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். யார் சிறந்த அறிவாளி என்று பார்த்தால் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து தனக்கான பாடத்தை கற்றுக்கொள்பவர் தான் சிறந்த அறிவாளி. சமூக வலைத்தளங்களில் நாம் கற்றுக்கொள்ள நல்ல விசயங்கள் நிறைந்துள்ளது. சமூக வலைதளங்களை கையாளுவது என்பது இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை கையாளுவது போன்றதாகும். இதில் சரிசமமான நிலை என்பது தான் மிகவும் முக்கியம். சமூக வலைத்தள பதிவுகளை நாம் எவ்வாறு கவனமாக கையாளவேண்டும். அது நமக்கு எவ்வாறு பாதுகாப்பு தருகிறது என ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லோரும் சமூக, பொருளாதார, குடும்ப சூழ்நிலைகளில் ஒரு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.வெற்றி பெற்ற மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் எடுத்து பார்த்தோமேயானால் அவர்கள் 25 வயதிற்குள் தனது வாழ்க்கையில் எடுக்கக் கூடிய முடிவுகள் மிகவும் கவனமாக இருந்திருக்கும். நமது வாழ்க்கை எதனை நோக்கி செல்கிறது என்ற முடிவுகளை சரியாக எடுத்தால் போதும் வெற்றி அடைய முடியும்.உங்களுடைய கல்வியில் மதிப்பெண்ணில் விழிப்புணர்வோடு இருப்பது முக்கியம். அதைவிட முகியம் உங்களுக்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்வதில் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். யார் தங்களுடைய வெற்றிக்கான வாய்ப்புகளை, வாழ்க்கைக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்து தேடிக்கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு புதிய புதிய வாய்ப்புகள் வருகிறது. அந்த வாய்ப்புகள் நிறைய பேர்களுக்கு தெரிந்திருப்பதில்லை.திறமை என்பது என்னவென்றால் எந்த ஒன்றை நாம் தொடர்ச்சியாக செய்கின்றோமே அப்போது அந்த செயலுக்கான திறன் நமக்கு வருகிறது. அதுதான் திறமை. பல நேரங்களில் திறமையானவர்கள் வெற்றி பெறுவது இல்லை. ஏனென்றால் அவர்கள் தொடர்ச்சியாக உழைப்பதில்லை. யார் தொடர்ச்சியாக ஒரு செயலை செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி அடைகிறார்கள்.இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்கு இணையதளத்தில் நிறைய கற்றுக் கொள்வதற்கும் இந்த உலகை புரிந்து கொள்வதற்கும் நீங்கள் தினசரி குறைந்தபட்சம் 2 மணி நேரத்தில் 8 மணி நேரம் வரை செலவிடக் கூடிய இணைய உலகத்தில் நீங்கள் பாதுகாப்போடு இருப்பதற்கு நிறைய விழிப்புணர்வு, நிறைய அறிவுரைகள் தேவைப்படுகின்றன. நிறைய வாய்ப்புகள் குறித்த புரிதலும், விழிப்புணர்வுகளும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் ஆர்வத்தோடு பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் வாழ்வில் சிறந்த வெற்றிகளை பெறக்கூடியவர்களாகவும், துன்பமில்லாத ஒரு வாழ்க்கையை வாழக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளம் பெண்களாக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.முன்னதாக மாணவியர்களுக்கு “சாதிக்கலாம் வாங்க” என்ற தலைப்பில் உயர்கல்வி மற்றும் வேலைவழிகாட்டி புத்தத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் (22.01.2025) கல்லூரி மாணவர்களுக்கான புதுமையான கண்டுபிடிப்பிற்கான கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பார்வையிட்டார்.
பதிவுத்துறைத் தலைவர், சென்னை அவர்களின் சுற்றறிக்கை எண். 51762/எல்3/2024, நாள் 18.12.2024-ன்படி, இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B(4), 47A(1) மற்றும் 47A(3)–ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட 01-01-2025 முதல் 31-03-2025 வரை வருவாய் மாவட்டம் தோறும் சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் இந்திய முத்திரைச் சட்டம் 1899 பிரிவு 19B (4), 47A(1) மற்றும் 47A(3)- ன் கீழும் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழும் நிலுவையில் உள்ள இனங்களை, சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்குண்டான குறைவு முத்திரைத் தீர்வையை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இரண்டாம் தளத்தில் அறை எண். 216-ல் இயங்கி வரும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) அலுவலகத்தில் செலுத்தி ஆவணத்தை விடுவித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (21.01.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரராஜபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.10 இலட்சம் மதிப்பில் அரசு மானியத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வருவதையும், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், சுந்தரராஜபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்தும், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, ஜமீன் கொல்லங்கொண்டான் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறைகள், சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், நக்கனேரி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2011 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.1,02,000 கோடியாக இருந்தது. அப்போது நமது மாநிலத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.7,51,000 கோடியாக இருந்தது.கடந்தாண்டு தாக்கல் செய்த வரவு செலவு திட்ட பட்ஜெட்டின் அளவு ரூ.4,12,000 கோடி.அதே காலகட்டத்தில் நமது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.31.55 இலட்சம் கோடியாக வளர்ந்து இருக்கிறது.2011 ஆம் ஆண்டிற்கும் தற்போது உள்ள காலத்திற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த புள்ளி விவரங்கள் மூலமும் நாம் கடன் வாங்கும் நுட்பத்தையும் அறிந்து கொள்ள முடியும்.இந்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அளவைப் பொறுத்துதான், ஒரு மாநிலம் கடன் வாங்க கூடிய திறன் எவ்வாறு இருக்கிறது.அந்தக் கடனுக்குறிய வட்டியை செலுத்தக்கூடிய திறன் எவ்வாறு இருக்கிறது. அந்த கடனை எவ்வாறு அடைக்க முடியும் என்பதை நாம் உணர முடியும். ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் பொருளாதாரம் வளர வளர நம்முடைய கடன் திருப்பி செலுத்தக்கூடிய திறன் உயரும் என்பது ஒரு சாதாரண அடிப்படை விதி.இதைத் தாண்டி ஏற்கனவே நிதிக் குழு ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை நிர்ணயிக்கிறது. 15- வது நிதி குழுவின் படி, 2021- 22 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலம் 28.7 சதவிகிதம் கடன் வாங்கலாம் என்று சொல்லுகிறது. ஆனால் நாம் வாங்கியது 27.01 சதவிகிதம். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்கு நாம் வாங்கி இருக்கக் கூடிய கடனுடைய சதவீதம்.2022- 23 ஆம் ஆண்டு நிதிக்குழு நமது மாநிலத்திற்கு பரிந்துரைத்தது 29.3 சதவிகிதம். ஆனால் அதற்கும் குறைவாக 26.87 சதவீதம் கடன் வாங்கி இருக்கின்றோம்.2023- 24 ஆம் ஆண்டில் 29.1 சதவிகிதம் பரிந்துரைத்ததில், மிகக்குறைவாக 26.75 சதவிகிதம் கடன் அளவு வைத்திருந்தோம்.2024-25 கடந்தாண்டு 28.9 சதவீதம் நிர்ணயித்ததில் 26.4 சதவீதம் தான் வாங்கி இருக்கின்றோம்.இந்த புள்ளி விவரங்கள் எதை காட்டுகிறது என்றால், இந்த காலகட்டத்தில் நிதிக்குழு என்ன பரிந்துரை செய்திருக்கிறதோ அதற்கு உட்பட்டு தான், அதற்கு குறைவாகத்தான் நம்முடைய கடன் அளவை நாம் பெற்று வருகிறோம். எனவே இந்த வரம்புக்குள் தான் நாம் கடன் வாங்கி இருக்கிறோம் என்பதை கூறிக் கொள்கிறேன்.வாங்கக்கூடிய கடனை எப்படி திருப்பி செலுத்த வேண்டும் என்பதையும், வரம்புக்குள் நாம் கடன் வாங்கி இருக்கிறோமா என்பது தான் முக்கியம். தமிழ்நாட்டினுடைய நிதி நிலைமை என்பது கட்டுக்குள் இருக்கிறது.இந்த முறை வணிக வரியில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் கோடி அதிகமாக வரி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இது நம்முடைய திறமையான நிதி மேலாண்மையை காட்டுகிறது.தொழில்நுட்ப ரீதியாக புள்ளி விவரங்கள் ஆராய்ந்து செயல்பட்டு இருக்கக்கூடிய காரணமாகத்தான் வணிக வரிகள் உடைய சதவீதம் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக நமது மாநிலத்தின் வளர்ச்சி சதவீதம் என்பது 14 சதவீதமாக வந்திருப்பதற்கு நாம் எடுத்திருக்கக் கூடிய பல்வேறு முன்னெடுப்புகள் தான் காரணம்.பொதுவாக நிதி நிலைமையை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் Fund tracking system மூலம் கண்காணிக்கிறோம். மேலும் ஒவ்வொரு Project- க்கும் எப்பொழுது நிதியை விடுவிக்க வேண்டும் என்ற அளவிலே நாம் நிதி மேலாண்மையில் நுட்பமாக செயல்பட்டு இருக்கக்கூடிய காரணத்தினால் நம்முடைய நிதி ஆதாரங்களாக இருந்தாலும் சரி, நிதி மேலாண்மையாக இருந்தாலும் சரி, மிக சிறப்பாகவே அது இருக்கிறது என்பதை நான் கூறிக் கொள்கிறேன். மேலும், பல திட்டங்களுக்கு நாம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.மெட்ரோ ரயில் திட்டத்திற்குமாநிலத்தினுடைய சொந்த நிதியில் இருந்து ரூ. 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து செலவழித்து இருக்கிறது. மின்சார வாரியத்திற்கு ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் கோடி கொடுத்திருக்கின்றோம்.அதுபோலதொடர்ச்சியான இயற்கை பேரிடர்களுக்காக மாநில அரசு நிதி செலவழித்து இருக்கின்றது. அதற்காக மத்திய அரசிடம் ரூ.776 கோடி அதுவும் நமது மாநில பேரிடர் நிதியிலிருந்து வரக்கூடிய தவணையில் இருந்து பெறப்பட்டு இருக்கிறது. இதுபோக பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி கொடுத்து கொண்டு வருகிறோம். ஒன்றிய அரசிடமிருந்து வரக்கூடிய நிதி நமக்கு வந்து சேரவில்லை.சம்ரக்ஷயா அபியான் திட்டத்திற்கு வரவேண்டிய ஏறத்தாழ ரூ.2000 கோடிக்கு மேலான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.அதுபோல பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு தான் அதிகமாக பணத்தை கொடுக்கிறது. கலைஞர்வீடுவழங்கும்திட்டத்தின்கீழ்ரூ.3.50இலட்சம்கூடுதலாகபணம்ஒதுக்கிமாநிலஅரசினுடையசொந்தநிலையில்இருந்துசெலவழிக்கின்றோம்.அதுபோல தமிழ் புதல்வன், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற எல்லா திட்டங்களையும் மாநில அரசாங்கம் சொந்த நிதியில் இருந்து செலவழித்து வருகிறது. இந்த திட்டங்களுக்கு உரிய நிதியை நமக்கு வரக்கூடிய வருவாயில் இருந்து நாம் திறம்பட செய்யக்கூடிய காரணங்களினால் தான், பட்ஜெட்டில் எந்த திட்டத்திற்கு என்ன நிதி ஒதுக்கின்றோமோ அதை தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கி சிறப்பான முறையில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்தார்.