வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.10.2025) வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.01.10.2025 முதல் 31.12.2025 வரையிலான வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
கடந்த 15.10.2025 முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு, பாதிக்கப்பட்ட இடங்கள், மனித இழப்பு, கால்நடைகள் இழப்பு, குடியிருப்புகள் சேதம் உள்ளிட்டவற்றை முறையாக கணக்கிடப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகள், அணைகள், நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, நீர் வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கண்மாய்களையும் ஆய்வு செய்து, கண்மாய் கரைகள் பலப்படுத்தப்பட்டு, போதியளவு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, உபரி நீரை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய் கரையோரங்களில் வசிக்கக் கூடிய பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் மக்கள் தங்குவதற்கு ஏதுவாக பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.மேலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்தவும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேற்றிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர், மின்சாரம், சாலை, பொது சுகாதாரம் ஆகியவைகளை அவ்வப்போது கண்காணித்து உரிய நடவடிக்கைஎடுக்கவேண்டும்.குடிநீர்தொட்டிகளில்குளோரினேசன்செய்யப்பட்டகுடிநீரினைவிநியோகம்செய்யப்படவேண்டும்.நெடுஞ்சாலைத்துறை சார்பில் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திட வேண்டும்.
உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும், சுகாதாரத் துறையின் மூலம் மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக்குழு ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் போன்ற நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காவல் துறை சார்பில், பருவமழை காலங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நிலையிலான ஒரு குழுவினை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் இயற்கை இடர்பாடுகள் போது சீரிய முறையில் செயல்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தேவையான பயிற்சி அளித்திட வேண்டும். மீட்புப்பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவைப் படகுகள் ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.வேளாண்மைத்துறை மூலம் வெள்ளக் காலங்களில் வேளாண் பயிர்கள், தோட்டப் பயிர்கள் மற்றும் இதரப் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிட வேண்டும். விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், விதைகள், உரங்களை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
மின்சாரத்துறை சார்பில், மின்சாரம் தடையின்றி கிடைத்திடவும், பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்திடவும், போதுமான அளவு மின்கம்பங்கள் மற்றும் அவசர காலங்களில் பணியாற்றிட பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டிடங்களை சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டு பழுந்தடைந்துள்ள கட்டடங்களை மழைக்காலங்களில் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும், வடகிழக்குப் பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை இடர்பாடுகளிலிருந்து காப்பாற்றிட வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) திரு.அமர்நாத், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply