25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 12, 2025

வீடு வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, பூமி பூஜையில் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீடு வேண்டி மனு அளித்ததன் பேரில், அவரின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, மாற்றுத்திறனாளிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.08.2025) நேரில் சென்று வழங்கி, வீடு கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-2025 ஆம் ஆண்டில்  11 வட்டாரங்களில், 1011 வீடுகள் கட்டுவதற்கு  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 910 வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மேலும், 2025-2026 - ஆம் ஆண்டில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 357 வீடுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 243 வீடுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 276 வீடுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 124 வீடுகளும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 321 வீடுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 214 வீடுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 189 வீடுகளும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 164 வீடுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 47 வீடுகளும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 96 வீடுகளும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 200 வீடுகளும் என மொத்தம் 2231 வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கடந்த  09.08.2025 அன்று நடைபெற்ற பல்நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, முகாமிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகை தந்த அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை ஊராட்சி சேர்ந்த நாகவிஜயா என்ற மாற்றுத்திறனாளி வீடு வேண்டி மனு அளித்ததன் பேரில், அவரின் கோரிக்கையை ஒரே நாளில் பரிசீலனை செய்து, அவருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று வழங்கி, வீடு கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சென்ற போது, மாற்றுத்திறனாளியின் குறைகளை கேட்டறிந்து, அவருக்காக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையினை பெற்று, அரசின் இரு வேறு திட்டங்கள் மூலம் பயன்பெற்ற மாற்றுத்திறனாளியும், அவரை பராமரித்து வரும் அவரது தந்தையும் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும்  தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தனம், அரசுக் கல்லூரியில்  (11.08.2025) போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் செந்திக் குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.மது உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகிப்பதனால், மன ரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளும், வேலையின்மை மற்றும் வேலையிழப்பு, பொருளாதாரப் பிரச்சனைகள், சமுதாயத்தில் அவப்பெயர்களும் அதன் மூலம் மது அருந்துவோரின் குழந்தைகளின் முன்னேற்றத்தில் பாதிப்புகள், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையிலும்  பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் “போதை இல்லா தமிழ்நாடு“ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக இன்று, விருதுநகர் செந்திக் குமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இன்று  போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.அதன்படி, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்ற  உறுதிமொழியினை அனைத்து மாணவ, மாணவிகளும் ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (கலால்) திரு.ரமேஷ், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) திரு.சண்முகசுந்தரம், விருதுநகர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.யோகேஷ்வரன், விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், சுமார் 1200-ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  (11.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரையில் செவித்திறன் குறைபாடுயுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் விடுதியில் 32 மாணவர்கள் தங்கி பயில்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களுக்கு கற்பிற்கப்படும் கல்விமுறை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி சூலக்கரையில் உள்ள  அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய், காப்பகத்தின் செயல்பாடுகள், மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் வசதிகள், அவர்களது கல்வி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சூலக்கரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுத்தினார். மேலும், அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை,  குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (11.08.2025)  பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில்  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு,  மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,78,289  சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.மனித உடல் இயங்க வேண்டும் என்றால் அதிகமான சத்துக்கள் வேண்டும். மனிதனுடைய உடல் கட்டமைப்பு புரதச்சத்துக்களில் தான் வருகிறது. நமது உடல் எடையை பொறுத்தமட்டில் ஒரு கிலோ எடைக்கு சுமார் 1 கிராம் புரத சத்து உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். நம்முடைய உடலுக்கு தேவையான புரதச்சத்தை விட குறைவாக நாம் பெறும் போது தான் உடல் வலிமை குறைகிறது.இந்நிலையில்  நம்முடைய வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் ஒட்டுண்ணியாக செயல்பட்டு, நாம் உட்கொள்ளும் உணவில்  இருந்து சத்துக்களை உறிஞ்சி  கொள்ளும்.சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும். இதனடிப்படையில், விருதுநகர், பட்டம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து அப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு உண்ட பின்னர்,  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை  வழங்கினார்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும்,மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ஆரோக்கிய ரூபன்ராஜ், மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2025

அருப்புக்கோட்டையில் 12.08.2025 அன்று நடைபெறயிருந்த வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 14.08.2025 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டத்தில் 12.08.2025 அன்று நடைபெறயிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டு, 14.08.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் அருப்புக்கோட்டை  வருவாய் கேட்டாட்சியர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.எனவே, அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான விவசாய பெருமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என அருப்புக்கோட்டை  வருவாய்  கோட்டாட்சியர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 11, 2025

பழங்குடியின முகாம்களில் வாழும் 71 பழங்குடியினர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் ஆதார் அட்டைகள் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  (09.08.2025) மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பழங்குடி இன முகாம்களில் வாழும் 61 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்களையும், 3 நபர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 7 நபர்களுக்கு ஆதார் அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு வட்டத்தில் ராம் நகர், ஜெயந்தி நகர், அத்திக்கோவில் ஆகிய 3 முகாம்களிலும், இராஜபாளையத்தில் அய்யனார் கோவிலில் 1 முகாமிலும் என மொத்தம் 4 முகாமில் ஏறத்தாழ 200-ற்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சமீபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்ட போது,ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள் வேண்டி கோரிக்கைகளை வைத்தனர்.அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடர்புடைய கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உடனடி தீர்வுக்கு உத்தரவிட்டிருந்தார்.அந்த வகையில், பெரும்பாலும் முன்பு மலைவாழ் மக்களின் பிறப்பு வீட்டிலேயே நடந்ததாலும், மருத்துவமனையில் ஏற்படும் குழந்தை பிறப்புகளுக்கு அவர்களின் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பிறப்புச்  சான்றிதழ்களை பெறாமல் இருந்ததையும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை பெற   இருந்த நடைமுறை சிக்கல்களை கண்டறிந்து, அதனை சரி செய்து பழங்குடியின மக்களுக்கு வழங்கிட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  அதன்பேரில், உரிய அரசு அலுவலர்கள் உடனடியாக பரிசீலனை செய்து, அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எல்லாம் களைந்து, அவர்களுக்கு 15 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இதுவரை பிறப்புச் சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாமல் இருந்த சுமார் 16 முதல்  70 வயதுள்ள முதியவர்களுக்கு கூட இதன் மூலம் பிறப்புச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளது.இதற்காக மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.உதயசங்கர், சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி,   வட்டாட்சியர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 11, 2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்முதியவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம்,  சிவந்திபட்டி கிராமத்தில் வருவாய்த்துறையின் மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் அதிகமான பட்டாக்களை வழங்கிய மாவட்டமாக நமது மாவட்டம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை சுமார்  40000 -த்திற்கும்  மேற்பட்ட பட்டாக்களை வழங்கி இருக்கிறது.மேலும், உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்  நடைபெற்று வரும் முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டி விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மனுவை உடனடியாக பரிசீலனை செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், இன்று திருவில்லிபுத்தூர் வட்டம்,  சிவந்திபட்டி கிராமத்தில்,   வருவாய்த்துறையின்   மூலம், இலவச வீட்டுமனைப் பட்டா ஆணை பெற்று, வீடுக்கட்டி குடியிருந்து வரும் 17 பயனாளிகளுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்கினார்.இந்நிகழ்வின் போது, சிவகாசி கோட்டாட்சியர் திரு.பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 11, 2025

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டை வட்டம், குல்லூர்சந்தை கிராமத்தில்  (09.08.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது  02.08.2025 அன்று  அமைச்சர் பெருமக்கள் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம்  முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம்,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம்,     நீரழிவுநோய் மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத  மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது.    மேலும், இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இன்று அருப்புக்கோட்டை வட்டம், குல்லூர்சந்தை கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிஅடையாளஅட்டையினைமாவட்டஆட்சித்தலைவர்அவர்கள்வழங்கினார்.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, வட்டாட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 11, 2025

சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திட அனுபவம் வாய்ந்தவர்கள் இணையதள முகவரியில் ஏல விற்பனையில் கலந்து கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் அகற்ற அனுமதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து வசிக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. ஆபத்தான இந்த குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.இது குறித்து மதுரை வீட்டு வசதி பிரிவு, செயற்பொறியாளர் (ம) நிர்வாக அதிகாரி அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பு - விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் அமைந்துள்ள சிதிலமடைந்த 72 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் பழுதடைந்து குடியிருக்கத்தக்க இயலாத நிலையில் உள்ளதால் இடித்து இக்கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளன.இப்பணிக்கு அரசு துறை கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திய அனுபவம் வாய்ந்தவர்கள் 11.08.2025 முதல் https://tntenders.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஏல விபரங்களை பார்த்து மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Aug 09, 2025

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.08.2025) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான இணைய வழியில் விண்ணப்பிக்க QR குறியீட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025 (Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.  இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும்  நடத்தப்படவுள்ளன.  தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம்  வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம்  வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.எனவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in  வாயிலாக  16.8.2025  க்குள்  முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமாரமணிமாறன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 58 59 60 61 62 63 64 ... 121 122

AD's



More News