25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 23, 2025

சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில் நுட்ப உதவியாளர்(PMMVY ) தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் .

 சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் தகவல் தொழில்நுட்ப உதவியாளர்(PMMVY ) பணியிடத்திற்கு 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவியின் பெயர்-   தகவல் தொழில் நுட்பஉதவியாளர் (IT Assistant for PMMVY Scheme),  கல்வித்தகுதி  கணினி, தகவல் தொழில் நுட்பபிரிவில் இளங்கலைபட்டம் பெற்றிருக்கவேண்டும், (Educational Qualification- Graduation in Computer/IT). மேலும், முன் அனுபவம், அரசு சாரா தகவல் தொழில்நுட்ப சார்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை,செயல்முறை ஆவணங்கள் அடிப்படையிலான அறிக்கையிடல் வடிவங்களில் குறைந்தபட்சம்  மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும், (Experience Working Knowledge in computers/IT etc with a minumym of 3 years experience in data management, process documentation and web-based reporting formats, at state or district level  with government or non-governmental/ IT bsed organizations).                     வயது வரம்பு( Age Limit Upto 35 Years ) 35 வயதிற்குள் இருக்கவேண்டும். தொகுப்பூதியமாக  மாதந் தோறும் ரூ.20000- வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய  நாள் 25.08.2025 அன்றே கடைசி நாளாகும். மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,  விருதுநகர் மாவட்டம். என்ற முகவரிக்கு சமர்பிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தொிவித்துள்ளார்.

Aug 22, 2025

தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம் தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து, நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (21.08.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம் தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைமை நிலை செயலாளர் திரு.கோவிந்தராஜ், I A S.,(ஓய்வு) அவர்கள், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் திரு.விஜயசங்கர் அவர்கள் மற்றும் திரு.மகாலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5000/- திருமண உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- இயற்கை மரண உதவித்தொகை, 31 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய அட்டைகள் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.55,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.கொரோனா நோய் தொற்று பரவி இருந்த காலகட்டத்தில் எங்களுக்காக உங்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல், எங்களது உயிரை காப்பாற்றி எங்களை சுத்தப்படுத்தி இருக்கிற ஒரே ஒரு மனிதனும் தூய்மை பணியாளர்கள் தான். அதனால் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மைப்பணி என்பது சாதாரண பணியல்ல. நான் துப்புகின்ற எச்சியை நானே திரும்பி பார்க்க மாட்டேன். நான் செய்யக்கூடாத அத்தனையும் உங்கள் கையால் தொட்டு எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய மனித கரங்களாக தெரிகின்றீர்கள்.அதன் அடிப்படையில் தான் உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்திற்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் இதுவரை 32 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தற்போது 33 ஆவது ஆய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இந்த வாரியத்திற்கு 20 கோடி ஒதுக்கினார்கள் என்று சொன்னால் பொதுமக்களுக்காக பாடுபட்டு, நமது உயிரை காப்பதற்காக பாடுபடுகின்ற இந்த மக்கள் நல்ல படியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். தூய்மைப்பணியாளர்கள் பணியின் போது மரணமடைந்தால் ரூ.5 இலட்சம் என்ற தொகை, ரூ.10 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லத்தில் சிறப்பு முன்னுரிமை, தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவத்திட்டம்  என்று ஒவ்வொரு திட்டமாக தேடிப் பிடித்து உங்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும்.தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் ரூ.5000/- ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு தினந்தோறும் ரூ.250/- வீதம் மாதத்திற்கு ரூ.7500/- ஊதியம் வழங்கிட  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன். உங்களுடைய குழந்தையை படிக்க வையுங்கள், கையுறை, முக கவசத்தை பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பாக இருங்கள். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதை பயன்படுத்திக்கொண்டு உங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு என்றைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 வட்டாரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 5260 தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மேற்கண்டவாறு பலன்கள் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் application.tncwwb.com  என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்திடவும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் இன்றைய நாளில் 32 தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டைகள், சிவகாசி மாநகராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் 27 தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரூ.55,000/- மதிப்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் நமது மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. உங்களுடைய கிராம பஞ்சாயத்தில் நடைபெறுகின்ற முகாமில் கலந்து கொண்டு, உங்களுடைய உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இந்த முகாம்களில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். அதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தூய்மைப் பணியாளர்களுக்கென்று தனியாக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, நல வாரிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை போன்றவைகளை பெற்று பயனடையலாம்.தமிழ்நாடு அரசின் மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.

Aug 22, 2025

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான முதற்கட்ட முகாமானது 25.08.2025 அன்று காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது .

விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் தொடர்பான முகாம்கள் நடத்துவதற்கு தமிழக அரசு ‘நான் முதல்வன், உயர்வுக்கு படி” என்ற திட்டத்தினை உருவாக்கியுள்ளது.இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில்  சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.முதற்கட்டமாக அருப்புக்கோட்டை சரகத்திற்கு காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் 25.08.2025 அன்றும், சிவகாசி சரகத்திற்கு காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29.08.2025 அன்றும், சாத்தூர் சரகத்திற்கு எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 02.09.2025 அன்றும்   நடைபெறுகிறது.இம்முகாம்களில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர இயலாத மாணவர்கள், தோல்வியுற்ற மாணவ/ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். 2025-26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லூரியில் சேராத மாணவர்களும் இம்முகாமில்  கலந்து கொள்ளலாம். பல்வேறு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், கலந்து கொண்டு மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கவுள்ளனர்.இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக  கல்லூரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.எனவே உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டு தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 21, 2025

சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.ஆர்.என்.எம் கல்லூரியில், (11.09.2023) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் பாவலர் அறிவுமதி அவர்கள் காலந்தோறும் தமிழின் மாண்புகளையயும் மாற்றங்களையும் மாற்றத்தின் சிறப்புகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் "காலந்தோறும் தமிழ்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணவேணி, பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Aug 21, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (20.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத் துறையின் மூலம், வன்முறையிலிருந்து பெண்களை காப்பதற்கான  செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை (One Stop Centre) மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சின்ன மருளுத்து கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், மருளுத்து கிராமத்தில், இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை வழங்கும் “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் மாணவர்கள் மற்றும் குழந்தையின் பாதுகாவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் தமிழ்நாடு உரிமைகள் என்ற சிறப்புத்  திட்டத்தின் மூலம் வீடு தோறும் சென்று மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.மேலும், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களின் பெயர்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மன்னார் கோட்டை கிராமத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வனத்துறையின் சார்பாக காட்டுப் பன்றிகளை பிடிப்பதற்காக வனத்துறை மூலம் பொருத்தப்பட்ட கூண்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், படந்தால் ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை,  குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Aug 21, 2025

செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் கிராமத்தில் (20.08.2025) உணவு பாதுகாப்புத் துறையும், நியூ கான்செப்ட் இன்பர்மேஷன் பிரைவேட் லிட் என்ற தன்னார்வ நிறுவனமும் இணைந்து நடத்திய, “செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களைக் கொண்டு உணவு சமைத்தலை பற்றிய செயல் விளக்க முகாமினை“ மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களிருந்து உணவு சமைப்பதால், செறிவூட்டப்பட்ட மூல உணவுப் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்தில் குறைபாடு ஏதும் ஏற்படாது. செறிவூட்டப்பட்ட அரிசியை கழுவும் போது மிதக்கும் வெள்ளை நிற அரிசியை நீக்கிவிட வேண்டாம். அதையும் சேர்த்தே சமைக்க வேண்டும். அந்த வெள்ளை நிற அரிசி தான் வைட்டமின்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் ஆகும்.மேலும், தமிழ்நாடு அரசு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாமோலின் எண்ணெயும், இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட உப்பினையும் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.அதன்படி செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்தி சமையல் செய்வது குறித்த செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் பட்டம்புதூர் மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதிகளில் இந்த நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து, சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் எட்டூர் மற்றும் அப்பநாயக்கன்பட்டியில் 21.08.2025 அன்றும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தாயில்பட்டி மற்றும் ஆலங்குளத்தில் 22.08.2025 அன்றும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் தளவாய்புரம் மற்றும் மம்சாபுரம் பகுதியில் 23.08.2025 அன்றும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் இராமகிருஷ்ணாபுரம் மற்றும் கிருஷ்ணன் கோயில் பகுதிகளில் 25.08.2025 அன்றும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் மகாராஜபுரம் மற்றும் தம்பிபட்டி பகுதிகளில் 26.08.2025 அன்றும்,சிவகாசி ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி மற்றும் எரிச்சநத்தம் பகுதிகளில் 28.08.2025 அன்றும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவநத்தம் மற்றும் பாளையம்பட்டி பகுதிகளில் 29.08.2025 அன்றும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் வக்கனாங்குண்டு மற்றும் கல்குறிச்சி பகுதிகளில் 30.08.2025 அன்றும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கல்லூரணியில் 01.09.2025 அன்றும்,  நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் வீரசோழன் பகுதியில் 01.09.2025 அன்றும் நடைபெற உள்ளது. எனவே அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள் குறித்த விளக்கக் கையேடு, சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு.தர்மர், திரு.ஜோதிபாஸ்  மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 21, 2025

தனியார் பால்கோவா உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசு சின்னத்தையும், கூட்டுறவு சின்னத்தையும் பெயர் பலகைகள் மற்றும் லேபில்களில் பயன்படுத்துவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, வழக்கு பதிவு செய்யப்படும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில், தமிழ்நாடு அரசு சின்னத்தையும், கூட்டுறவு சின்னத்தையும் பெயர் பலகைகளிலும், லேபிள்களிலும் பயன்படுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிற்கு வந்த புகார் அடிப்படையில், 19.08.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில்  உணவு பாதுகாப்புத் துறையின் விருதுநகர் மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன் அவர்கள் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர், காவல் துறை அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் பால்வளத் துறை அலுவலர் அடங்கிய கூட்டுக்குழு ஆய்வு நடத்தினார்கள்.       அதில், 12 தனியார் விற்பனை நிலையங்களில் ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை”, ‘கூட்டுறவு பால் பண்ணை” போன்ற பெயர்களையும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சின்னத்தையும் (Emblem) பரவலாகப் பயன்படுத்தியதும்,இரண்டு கடைகளில் தமிழ்நாடு அரசு சின்னமும், மூன்று கடைகளில் ‘தமிழ்நாடு அரசு” என்ற பெயரும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டு, அதனை அகற்ற அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தயாரிப்பு தேதி அச்சிடாமல் லேபிள் விதிமுறைகளை மீறியதற்காக12¾ கிலோ பால் அல்வாவும், 6 ¼ கிலோ பால் பேடாவும், சாட்சியத்திற்காக 2 ½ கிலோ பால்கோவாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.     உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, உணவு வணிகர்களுக்குச் சம்பந்தம் இல்லாத வேறொரு நிறுவனத்தின் பெயரையும், சின்னத்தையும்,  ‘பெயர் பலகையின்” மூலம் விளம்பரப்படுத்துவதும், ‘லேபிளில்” குறிப்பிடுவதும், நுகர்வோர்களைத் தவறாக வழிநடத்துவதாகும் என்பதுடன், அது குற்றச்செயலாகக் கருதி, மேற்கூறிய சட்டத்தின் பிரிவுகள் 52, 53 மற்றும் 58-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் போது, தனிநபர் உரிமை என்று உரிமம் பெற்றுவிட்டு, ‘கூட்டுறவு” என்று பெயர் பலகையிலும், லேபிளிலும் தெரிவிப்பது என்பது, வணிகர் பொய்யான தகவல் வழங்கி உரிமம் பெற்றுள்ளார் என்று பொருளாகி, அது குற்றமாகக் கருதப்பட்டு, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 61-ன் கீழ் தவறிழைப்போருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.  எனவே, எந்தப் பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயர், அல்லது எந்த ப்ராண்ட் பெயரில் டிரேட்மார்க் சான்று பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயரை மட்டும் நிறுவனத்தின் பெயராகவோ அல்லது ப்ராண்ட் பெயராகவோ பெயர் பலகையிலும், லேபிளிலும் இருக்கலாமேயொழிய, வணிகர்களுக்குச் சம்பந்தமில்லாத வகையில் ‘கூட்டுறவு”, ‘தமிழ்நாடு அரசு”, ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை” போன்ற பெயர்களைக் கடைகளின் பெயர் பலகைகளிலோ அல்லது பால்கோவா பாக்கெட்டுகளின் லேபிளிலோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்படுகின்றது.மேலும், அவ்வாறு பெயர்கள் மற்றும் சின்னம் அச்சிட்ட பெயர் பலகைகளை சம்பந்தப்பட்ட உணவு வணிகர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், லேபிளில் 14 நாட்களுக்குள் திருத்தம் செய்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.இதுகுறித்து, விதிகளை மீறியுள்ள வணிகர்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 20, 2025

விருதுநகர் மாவட்டம் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், தோணுகால் அசேபா வளாக திருமண மண்டபத்தில் (19.08.2025) வேளாண்மைத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மேலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.9.02 இலட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவர் டில்லர், பவர் வீடர், சுழல் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கியத் திட்டமான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உயிர்ம வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என்பது வேளாண்மையினருக்கு முக்கியமான நிகழ்வு ஆகும்;. இன்றைய மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான தேவை இயற்கை உணவாகும். இயற்கையோடு இணைந்து நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வதே உயிர்ம வேளாண்மையின் நோக்கமாகும்.கடந்த 50 ஆண்டுகளில் மண்ணின் சத்து அளவு 30-40 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலத்தடி நீரும் இரசாயனங்களால் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. பயிர் சாகுபடிக்கான இடு பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது.  நமது அன்றாட உணவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கலந்துள்ளதால் அனைத்து விதமான நோய்களும் அதிகரித்துள்ளன.எனவே, விவசாயிகள் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை பின்பற்றி நிலங்களில் முழுமையாக இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்த வேண்டும். மனிதன் மட்டுமின்றி கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.  இயற்கை விவசாயம் நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது விவசாயிகளின் பொருளாதார விடுதலைக்கும் அவசியமானதாகும்.எனவே, விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து  கண்காட்சியை பார்வையிட்டு கருத்தரங்கில் வழங்கப்படும் தொழில்நுட்பங்களை பின்பற்றி நமது மாவட்டத்தை இயற்கை வேளாண் சாகுபடியில் மாநில அளவில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும்.  அரசின் முயற்சியோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உயிர்ம வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்.  விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல. இயற்கை விவசாயம் நமது கடமை என்பதை உணர்ந்து மண்ணையும், நீரையும் காப்பாற்றி நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும்.எனவே, அனைத்து விவசாயிகள் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் குறித்தும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பல்வேறு கருத்துக்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு  காட்சிப்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் அதன் வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஜோதிமணி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பிலும், இராஜபாளையம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பழனிச்சாமி அவர்கள் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும், கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையம் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அவர்கள் உயிர்ம வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி என்ற தலைப்பிலும்,கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஜட்டா கவிதா அவர்கள் உயிர்ம வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர்(மாநிலத் திட்டம்) திருமதி முத்துலட்சுமி அவர்கள் வேளாண்மை துறையில் அங்கக வேளாண்மை குறித்த திட்டங்கள் என்ற தலைப்பிலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்)/துணை இயக்குனர் திருமதி அம்சவேணி அவர்கள் மண் மற்றும் நீர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும்,விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் திருமதி வளர்மதி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் விதைகளின் பங்கு என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் திருமதி செல்வி அவர்கள் உயிர்ம வேளாண்மை விலை பொருட்களின் விற்பனை வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி அவர்கள் தோட்டக்கலையில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா அவர்கள் வேளாண்மையை எளிதாக்கும் இயந்திரங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் என்ற தலைப்பிலும், உதவி இயக்குநர்(விதை சான்று மற்றும் அங்ககச் சான்று) திருமதி கோகிலா அவர்கள் உயிர்மச் சான்றோளிப்பு மற்றும் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டம் என்ற தலைப்பிலும், விருதுநகர் விற்பனை குழு செயலாளர் திரு.வேலுசாமி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் வணிகம் மேற்கொள்ளுதல் என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.மேலும், முன்னோடி விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

Aug 20, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Certification in videography and video Editing) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு  ஆதிதிராவிடர் வீட்டு  வசதி மற்றும்  மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு  மற்றும் வடிவமைப்பு  (Certification in  videography and video Editing)  பயிற்சி வழங்கப்படவுள்ளது .தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாகதற் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு   (Certification   in  videography  and   video    Editing)  பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம்  ரூ.3 இலட்சத்திற்குள்  இருக்கவேண்டும்.  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும்,  18  முதல்  30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சிக்கான  கால அளவு மூன்று மாதங்கள் ஆகும்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.  இப்பயிற்சியினை பெறதாட்கோ இணையதளமான(www.tahdco.com)  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் தங்கும் விடுதி மற்றும் உணவு  உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 19, 2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (18.08.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும்  பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சிவந்திபுரம் ஆத்து மேடு தெருவில் மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினர் சேர்க்கையினை நேரில சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், சிவந்திபுரம் ஆத்துமேடு தெவில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பால்கோவா தயாரித்து விற்பனை செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மாத்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தாமரை மகளிர் சுய உதவி குழுவினரின் மசாலா தயாரிக்கும் இடத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம், உற்பத்தி முறை குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும், மாத்தி நாயக்கன் பட்டியில் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் சுயதொழிலுக்கான கடன் உதவி பெற்று கடை நடத்தி வருவதனை நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு பயன் பெறும் சுய உதவிக்குழுக்களில் நபர்களின் எண்ணிக்கை குறித்தும், இதன் மூலம் சுயஉதவி குழுக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களிடையே செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், கடனுதவிகள், மானியங்கள், பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மின் உற்பத்தி கழகத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சத்திரெட்டியாபட்டி ஊராட்சியில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் 'தாயுமானவர் திட்டத்தின் செயல்பாடு, பயன்கள், தாயுமானவர் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் நிலைப்பாடு மற்றும் அவர்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

1 2 ... 55 56 57 58 59 60 61 ... 121 122

AD's