25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 14, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.08.2025 அன்று நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.08.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி, கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் கூட்டத்தினை நடத்த முழு ஒத்துழைப்பு அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று(12.08.2025) இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.2.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (12.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 52 அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் கிராமப்புற மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், குருதி பகுப்பாய்வு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் புரோப், இ.சி.ஜி, Crash cart, Radiant Warmar, Biochemistry analyser    உள்ளிட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்கள் ரூ.2.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.இந்த மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  (12.08.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பொது மேலாளர்கள் திரு.ராமசுவாமி(புவி அறிவியல் ஆய்வகம், சென்னை), திருமதி மீடா பிரசாத்(மனிதவளம்), மரு.ஹிமான்சு குக்ரீதி உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2025

பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்(12.08.2025) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்  கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் மற்றும் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை இணைந்து அமைக்கப்பட்டுள்ள பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த மையம் மூலம் பொது மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வதற்கான மாதிரிகள் இங்கு சேகரிக்கப்பட்டு, அதற்கான பரிசோதனை அறிக்கைகளும் இங்கே வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான நோயாளிகள் பரிசோதனை மாதிரிகள் வழங்குவதற்காக ஆய்வகத்திற்கு செல்வதை தவிர்த்து, இங்கு வழங்குவதன் மூலம் கூட்டம் நெரிசல் இல்லாமலும், நோய் தொற்று பரவும் அபாயம் இல்லாமலும் இருக்கும்.அதன்படி, இந்த பொது மருத்துவ மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கை மையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2025

முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் கீழ் அமைச்சர் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (12.08.2025) வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை சென்னையில் தொடங்கி  வைத்தார்.அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம் மற்றும் நேரு மைதானம் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று குடிமைப் பொருட்களை வழங்கினார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் மற்றும் எழுவனி பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில்சென்றுகுடிமைப்பொருட்களைவழங்கினார்.தமிழ்நாட்டில் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றைடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய எண்ணத்தின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்"  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களுக்கும் 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆக மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலே குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தகுதியுள்ள குடும்ப அட்டைகள் மற்றும் பயனாளர்கள் விபரம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையிடமிருந்து பெறப்பட்டு கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மின்னனு எடை தராசு, e-PoS  இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப்பொருட்கள் பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விற்பனை செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 நியாய விலைக்டைகளில் கூட்டுறவுத் துறை மூலம் 46,808 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 230 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2,678 குடும்ப அட்டைகளில் உள்ள பயனாளர்களுக்கும் என மொத்தம் 49,716 குடும்ப அட்டைகளில் உள்ள 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 822 வாகனங்கள் மூலம் அவரவர் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யப்படவுள்ளது.அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம் மற்றும் நேரு மைதானம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் பயன்பெறும் 227 குடும்ப அட்டைகளின் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதேடி குடிமைப்பொருட்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், அ.முக்குளம் பகுதி நியாயவிலைக் கடையில் உள்ள 598 குடும்ப அட்டைகளில் 40 குடும்ப அட்டைகளுக்கும், எழுவனி பகுதி நியாயவிலைக் கடையில் உள்ள 246 குடும்ப அட்டைகளில் 14 குடும்ப அட்டைகளுக்கும் என மொத்தம் 54 குடும்ப அட்டைகளின் பயனாளிகளுக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடுதேடி குடிமைப்பொருட்களை  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தின் மூலம் அனைத்து வட்டங்களிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே வீடுதேடி குடிமைப்பொருட்களை வழங்கினார்கள்.

Aug 13, 2025

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி(எம்.ரெட்டியபட்டி) ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், மாநில திட்டக்குழுவின் சார்பில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் பின்தங்கிய வட்டாரங்களான திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்(12.08.2025) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்கள் வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும், பின்தங்கிய வட்டாரங்கள் இனம் காணப்பட்டு அந்த வட்டாரங்களின் வளர்ச்சிக்காக வளர்ச்சி திட்;டத்தை உருவாக்கி, அதற்கான மூன்று ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கப்பட்டு, அந்த செயல் திட்டத்தை மூன்று நிதி ஆண்டுக்கான அறிக்கையாக மாற்றி, அதன்பிறகு திட்டப்பணிகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உடல்நலம் மற்றும் ஊட்டசத்து, சமூக நலன், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைகள் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 7 தலைப்புகளின் கீழ் 131 வளர்ச்சி குறியீடுகளை  (Key Developmental Indicators) (KDI’s)  அடிப்படையாக கொண்டு வட்டார அளவிலான திட்டம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி,  வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்,  2025 ஆம் ஆண்டிற்கான வட்டார ஆண்டுத்திட்டம் தயாரிக்கும் பொருட்டு பணிகள் தேர்வு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் திரு.வீ.கேசவதாசன், மாவட்ட திட்ட அலுவலர் திரு.முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2025

பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் / நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல மையங்கள் / நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை  மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள்ஃ மையங்கள் ( Mental Health Establishments) செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் / அனைத்தும் மனநல பராமரிப்புச் சட்டம் 2017 - ன் படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய அலுவலக முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010. தொலைபேசி எண் : 044 - 2642 0965, Email : tnsmha@gmail.com  முகவரியில் விண்ணப்பிக்கலாம்.  மேலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மேற்காணும் இணையதள முகவரியிலோ தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 044 - 2642 0965 - என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் / நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

தம்மசக்கரபரிவர்தன திருவிழாவிற்கு புனிதபயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது .

தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 - ஆம் ஆண்டில் நாக்பூர்தீசஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கரபரிவர்தன திருவிழாவிற்கு புனிதபயணம் மேற்கொண்டு திரும்பியவர்களுக்கு ECS முறையில் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதற்கான விண்ணப்பபடிவத்தினை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in  என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி  -ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பராம்பரியகட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி குறிப்பு.

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது.                  வெளிநாட்ட வேலைக்குச் செல்ல விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் eMigrate( https://emigrate.gov.in) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில்/ முதலாளியிடம் வேலை செய்ய இருக்கிறீர்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதிகொள்வது அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஓப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன.வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாச்சாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்லும் நபர் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி (Exit Permit) பெறுவது அவசியமாகும். ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம்/முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் வேலைக்கு செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக்கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும், இது கைது, அபராதம் அல்லது சிறை தண்டனைக்கே இட்டுசெல்லும்.வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும்:இந்தியாவிலிருந்து அழைப்புக்கு: 1800 309 3793, வெளிநாடுகளிலிருந்து :080 6900 9900 (Missed Call); 0 80 6900 9901, மின்னஞ்சல்:nrtchennai@gmail.com/ nrtchennai@tn.gov.in, வலைத்தளம் : https;//nrtamils.tngov.in, என்ற முகவரியில்   வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடும் நபர்கள், குறுக்கு வழிகளை தவிர்த்து, அரசு அமைத்துள்ள சட்டபூர்வமான வழியில் செல்லும்போது தான் பாதுகாப்பான வாழ்க்கையை பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2025

சுதந்திர தினமான 15.08.2025 அன்று ஒரு நாள் மட்டும் F.L-1, F.L-2, F.L-3/FL3AA மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் ,செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA  மற்றும் FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி,  சுதந்திர தினமான 15.08.2025 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்   (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும்  FL11 மதுபான உரிம ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது  The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 12, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (11.08.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.  இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.காளிமுத்து,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.சோ.பாலாஜி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 57 58 59 60 61 62 63 ... 121 122

AD's