விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவாலி ஊராட்சி சீனியாபுரம் கிராமத்தில் (19.03.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் மண்டலத்தில், செயல்பட்டு வரும் ஆர்.ஏ.430 இராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஆர்.ஏ.429 சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் வி.ஏ.31 விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் அந்தந்த வட்டார விவசாயிகள் படிவம் 16 மற்றும் 17 உடன் உரிய பங்குத் தொகை மற்றும் பிரவேச கட்டணம் செலுத்தி தனியரது ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல் மற்றும் 2 புகைப்படத்துடன் விண்ணப்பித்து உறுப்பினராக சேர்ந்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் இது தொடர்பாக, ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆர்.ஏ.430 இராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 97863-36396 மற்றும் செயலாட்சியர் 76959-53836 என்ற தொலைபேசி எண்ணிலும், ஆர்.ஏ.429 சிவகாசி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 90425-19911 மற்றும் செயலாட்சியர் 94420-58126 என்ற தொலைபேசி எண்ணிலும், வி.ஏ.31விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முதன்மை நிர்வாக அலுவலர் தொலைபேசி எண் 98434-81831 மற்றும் செயலாட்சியர் 97151-09134 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும்,‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், ஆகியோர் தகுதியானவர்கள்.இத்திட்டத்திற்கான முக்கியமான தகுதிகள்:01. முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு கிடையாது.02. படைப்பணியின் போது காலமான படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்த பட்ச வயது வரம்பு 21 ஆகும்.03. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.04. விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை.05. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. எனவே,‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தேவையான விவரங்களை பெற விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (04563-296382) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை- நம்ம ஊரு திருவிழா சென்னை 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது.இவ்வாண்டும் மேற்காண்ட 8 இடங்களிலும் இக்கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி வரை முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது- நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22 சனிக்கிழமை அன்றும், தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மார்ச் 23 ஞாயிறு, விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அரசு கலைக்கல்லூரியில் நிகழ்ச்சி பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மாவட்ட அளவிலானத் தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் (Google Form) மூலம் மார்ச் 20 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது தூத்துக்குடி மாவட்டத்திற்கான பொறுப்பாளர் திரு.ஆறுமுகம், பரதநாட்டிய ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி,தூத்துக்குடி,தொலைபேசிஎண்.8098091257என்றஎண்ணில்தொடர்புக்கொண்டுபதிவுசெய்துக்கொள்ளலாம்.கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது.ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2026 ஆம் ஆண்டு சென்னை சங்மம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்.கலை பண்பாட்டுத் துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக் கலைஞர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (18.03.2025) காரியாபட்டி, நாசியா(Nazia)கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் 35 மாணவ, மாணவியர்களுடன் நடைபெற்ற "Coffee with Collector” என்ற 157-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 157 -வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.தமிழ் ஆர்வத்தை வளர்த்தல், சிறுகதை படைத்தல், படைப்பிலங்கியங்கள்;, தமிழ் அறிஞர்கள் குறித்தும் கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (17.03.2025) நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர்(Coffee With Collector) என்ற 156- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கலந்துரையாடினார்.பெரும்பாலான அரசுப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள் வாயிலாக மாநில மற்றும் ஒன்றிய அரசின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்படுகின்றன. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள்; நடைபெற்று வருகிறது. இதில் போட்டித் தேர்விற்கான பயிற்சி கையேடுகள், பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சிறிய அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றது.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியால் போட்டித்தேர்வுக்கு பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், வேலைவாய்ப்பை பெற்று தரும் உயர்ந்த நோக்கத்திலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுடன், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தனியாகவும், குழுவாக இணைந்து பயில்வதற்கும், அனைத்து நாட்களிலும் ஏழை எளிய மாணவர்கள் மிகுந்த காற்றோட்ட வசதி மற்றும் குடிநீர் வசதியுடன் படிப்பதற்கும், மாணவர்கள் மாலை நேரங்களில் மின் விளக்கு வசதியுடன் படிப்பதற்கும், எளிதாக பேருந்து வசதியுடன் இங்கு வந்து பயில்தற்கும் வசதியாக ரூ.50 இலட்சம் மதிப்பில் போட்டித்தேர்வு பயில்வோர் பூங்கா அமைக்கப்பட்டு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.அதன்படி, இன்று நடைபெற்ற சிறப்பு காபி வித் கலெக்டர்(Coffee With Collector) 156- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.இக்கலந்துரையாடலின் போது, போட்டித்தேர்வுக்கு தங்களை தயார் செய்தது, அதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் போட்டித் தேர்வு பயில்வோர் பூங்கா மூலம் அரசு வழங்கும் இலவச பயிற்சிகள், கையேடுகள், குறிப்புகள் ஆகியவற்றின் பயன்கள், மேலும் பயிற்சியை மேம்படுத்த தேவையான வசதிகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.மேலும், அரசுப் பணியில் சேரவிருக்கும் தேர்வர்களுக்கு வாழ்த்துக்களையும், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -4 தேர்விற்கு இலவச பயிற்சி பெற்று தேர்வான 24 போட்டி தேர்வர்கள் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இது போன்று போட்டித்தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற ஏதுவாக எண்ணற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தமிழ்நாடு அரசுக்கும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (17.03.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 65 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6800- வீதம் மொத்தம் ரூ.4.42 இலட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இராஜபாளையம் வட்டம், சங்கரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி ஜோதிமுத்து என்பவரின் மகன் காந்தி பாண்டி(வயது 14) கண்மாய் கலிங்களில் சிக்கி மரணமடைந்ததால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளையும்,மாவட்ட தொழில் மையம் சார்பில், மக்களுடன் முதல்வர் முகாமில் மனு அளித்திருந்தவர்களில், திருத்தங்கலைச் சேர்ந்த திரு.கருப்பசாமி என்பவருடைய விண்ணப்பம் அண்ணல் அம்பேத்கர் தொழில் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ரூ.3.57 இலட்சம் கடன் வழங்கப்பட்டு, அதற்கான ரூ.1.27 இலட்சம் மானியத்தொகையினையும்,பாலவநத்தத்தைச் சேர்ந்த திரு.சி.வெங்கடேஷன் என்பவருடைய விண்ணப்பம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ரூ.5 இலட்சம் கடன் வழங்கப்பட்டு, அதற்கான ரூ.1.25 இலட்சம் மானியத்தொகையினையும்,என ஆக மொத்தம் ரூ.7.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி) திரு.காளிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 21.03.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, CEPHAS MEDICAL PRIVATE LIMITED, BALASANKA TVS, BHARATHI AIRTEL போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, I.T.I.டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 21.03.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. மேலும், இம்முகாமில் பாரத பிரதமரின் தொழிற் பயிற்சி திட்டத்திற்கான பதிவு முகாமும் இணைந்து நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேர்ந்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிலக பயிற்சியும், வருடம் ஒரு முறை மானியமாக ரூ.6000- மற்றும் மாத ஊக்கத் தொகையாக ரூ.5000- வழங்கப்படும். இத்திட்டத்தில், சேர விருப்பமுள்ள 21 முதல் 24 வரை வயதுடைய மற்றும் கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டயப்பொறியாளர், இளங்கலை கலை, அறிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு, வணிக நிர்வாகம் மற்றும் பார்மஸி பட்டம் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேரில் வருகைபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான விபரங்களை https://pminternship.mca.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம், 2025-2026 ஆம் ஆண்டுக்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க் / ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. அக்னி வீர் திட்டத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 12.03.2025 முதல் 10.04.2025 வரை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கல்வி தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விவரம் பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு செயல் திட்டங்களில் ஒன்றான “குழந்தைகள் இலக்கியத்” திருவிழா- 2025, 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய தினங்களில் கிருஷ்ணன் கோயில் லிங்கா குளோபல் பள்ளியில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 4- ஆம் வகுப்பு முதல் 7- ஆம் வகுப்பு வரை பயிலும் 300 -க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் (இணை இயக்குநர்), பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் குழந்தைகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சியினை நடத்தவுள்ளார்.மேலும், “குழந்தைகள் இலக்கியத் திருவிழாவின் தொடக்க விழாவில் எழுத்தாளரும், நடிகர் மற்றும் கதைச்சொல்லி என பன்முக ஆளுமை கொண்ட திரு.பவா செல்லதுரை அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.மேலும், குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் சிறுவர்களுக்கான கதைகள், பொம்மலாட்டம், மன நல பயற்சிகள், சிறுவர் திரைப்படங்கள், மேஜிக், போன்ற நிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழுவிவாதம், குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம், கலகல வகுப்பறை, மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்தல் போன்ற பல்வேறு அமர்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற உள்ளது. குழந்தைகள் இலக்கியத் திருவிழா நிறைவு விழாவில் எழுத்தாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை (சாகித்திய அகாடமி விருதாளர்) சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். எனவே, குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.