விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் (08.03.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பிரதம மந்திரி திவ்ய கேந்திரா திட்டத்தின் மூலமாக Artificial Limbs Manufacturing Corportation of India (ALIMCO)/PMDK நிறுவனம் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்கள்.முதலமைச்சர் அவர்கள் தலைமையில் செயல்படும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதனடிப்படையில், Artificial Limbs Manufacturing Corportation of India (ALIMCO) நிறுவனம் சார்பில், (பேட்டரி மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, ஊன்றுகோல், சிறப்பு நாற்காலி) என118 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.21,34,331/- மதிப்பிலும், TORCHIT நிறுவனம் மற்றும் ONGC நிறுவனம் மூலம் சமூக பங்களிப்பு நிதி (CSR Fund) திட்டத்தில் பார்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் மற்றும் ஸ்மார்ட் கேன் என 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பிலும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் (ஸ்மார்ட் போன்) என 99 பயனாளிகளுக்கு ரூ.16,03,701/- மதிப்பிலும் என மொத்தம் 307 பயனாளிகளுக்கு ரூ.47.38 இலட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இவ்விழாவில் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் (08.03.2025) மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற தாயும் மகனும் இணைந்து ஓடும் நெடுந்தூர விழிப்புணர்வு ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த மராத்தான் போட்டியானது காலை 6.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள நுழைவுவாயில் இருந்து ஆரம்பித்து சூலக்கரை மேடு வரை சென்று மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.இந்த மராத்தான் போட்டியில் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி வசந்தி மற்றும் அவரது மகன் செல்வன் மணிகண்டன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.30,000/-மும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி சங்கரேஸ்வரி மற்றும் அவரது மகன்கள் செல்வன்.குருராகவ் மற்றும் குருசரண் ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக ரூ.25,000/-மும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருமதி ரதி மற்றும் அவரது மகன் செல்வன் ஹரிஷ் என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.20,000/-மும், விருதநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி கனகலெட்சுமி மற்றும் அவரது மகன் செல்வன் காமேஷ்குரு அவர்களுக்கு நான்காம் பரிசாக ரூ.15,000/-மும், மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் தங்கேஸ்வரன் என்பவருக்கு ஐந்தாம் பரிசாக ரூ.10,000/-மும் என வெற்றிப்பெற்ற 5 தாய்மார்கள் மற்றும் அவரது மகன்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.சே.குமரமணிமாறன், சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், அனைத்து தாய்மார்கள் மற்றும் அவர்களது மகன்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 4,42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குவதை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகளை காணொலி காட்சி வாயிலாக இன்று (08.03.2025) வழங்கினார்.அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரகஃ நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 10,569 நபர்களுக்கு ரூ.87.37 கோடி கடனுதவி மற்றும் இணை மானியத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில், ஊரக பகுதியை சார்ந்த 703 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.62.41 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், மற்றும் நகர்புற பகுதியை சார்ந்த 128 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20.50 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், இதர மகளிர் நலத் திட்டங்களின் கீழ் 410 நபர்களுக்கு 2.30 கோடியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 186 நபர்களுக்கு 2.16 கோடியும் ஆக மொத்தம் 10569 நபர்களுக்கு 87.37 கோடி கடனுதவி மற்றும் இணை மானியம் வழங்கப்பட்டது.பெண் பெற்றதால் பெருமை பெற்றோம் என்று சொன்னவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இந்த உலகில் இயற்கை நமக்கு அளித்து இருக்கக்கூடிய மிகப்பெரிய கொடை பெண்கள் தான் என்று சொன்னால் அது நிச்சயமான உயர்வு உணர்ச்சி அல்ல. இயற்கை நமக்கு வழங்கியிருக்க கூடிய இந்த கொடைதான் இந்த பூமி பந்தினுடைய சுழற்சியை, இயக்கத்தை நம்முடைய தலைவர்களை என்றென்றும் காக்கக் கூடியவர்களாக தொடர்ந்து பெண்கள் இருக்கிறார்கள்.அந்தப் பெண்களின் சக்தி, அண்டம் துவங்கிய காலத்திலிருந்து இன்று இருக்கக்கூடிய காலம் பார்த்தால் எங்கெங்கு காணினும் சக்தியானாய் என்று கவிஞர்கள் பாடினார்கள் என்று சொன்னால் உங்கள் சக்தி எல்லா இடங்களிலும் யாவித்து பரவி இருக்கிறது.அப்படி யாவித்து பரவி இருக்கக்கூடிய அந்த பெண் சக்தி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவர்கள் தங்களுடைய சக்தியை இந்த சமுதாயத்தின் பல்வேறு காரணங்களால் அவர்கள் இழக்க நேரிட்ட போது, தந்தை பெரியார் போன்ற சமுதாய தலைவர்கள் உருவாகி பெண்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார்கள்.வடக்கே ஒரு ராஜா செம்முன்றாய் தோன்றினார் என்று சொன்னால், இங்கே தந்தை பெரியார் வந்தார். அவர்தான் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினர். பெண் ஏன் அடிமையானால் என்கின்ற என்ற அவர் எழுப்பிய கேள்விக்கு விடை தான் இன்று பெண்கள் அடிமை இல்லை, அவர்கள் எல்லா துறையிலும் சாதிக்க பிறந்தவர்களாக இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையை வழங்கினார் என்பதற்கு பெரியார் காட்டிய வழி அவர்கள் எழுப்பிய கேள்வி இன்றைக்கு உங்களை உயர்த்தி இருக்கிறது.தமிழ்நாடு பெண் கல்விகளில் சிறந்து இருக்கிறது. இந்திய அளவில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலமாக நிதி உதவிகளை பெற்று பெண்கள் தொழில் முனைவராக இருக்கக்கூடிய மாநிலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தான் என்ற பெருமை பெற்றிருக்கிறது. அந்த பெருமையை நீங்கள் தமிழ்நாட்டுக்கு பெற்று தந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால், உங்கள் மீது அரசும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நம்பி இந்த அரசாங்கம் இருக்கிறது உங்கள் மீது அரசும் முதலமைச்சரும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை என்று உரைக்க சொன்னார் அவர்கள் உங்களுக்கு அறிவித்திருக்க கூடிய அத்தனை திட்டங்களும் மகளிர் உரிமைகளை காப்பதற்கு, உங்களுடைய நலனை பெறுவதற்கு, இந்த சமுதாயத்தில் நீங்கள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமான ஆட்சி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் என்றென்றும் உறுதுணையாக இருப்பார்கள்.எனவே இந்த மகளிர் தின நாளில் நாங்கள் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அல்ல உங்களுடைய பணிகளில் உங்களுடைய சிறப்புகளில் உங்களுடைய உயர்வுகளில் உங்களோடு என் இணைந்திருக்க கூடியவர்களாக நாங்களும் உங்களோடு உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சொல்லி அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நந்தா ஹோட்டல் சர்வீஸ் ரோடு மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வழியாக கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், மதுரை செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சிலை ஆத்துப்பாலம் டி.டி.கே ரோடு வழியாகவும், அருப்புக்கோட்டையில் இருந்து இராஜபாளையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், இராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, இராமநாதபுரம், இராமேஸ்வரம், செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக, புதிய பேருந்து நிலையம் வந்து எம்.ஜி.ஆர் சிலை வழியாக அருப்புக்கோட்டை மேம்பாலம் வழியாகவும், பழைய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு வழியாக செல்ல வேண்டும்.பழைய பேருந்து நிலையத்திலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் மீனாம்பிகை பங்களா வழியாக வரும் மதுரை- சிவகாசி பேருந்துகளும் டி.டி.கே ரோடு,ஆத்துப்பாலம், எம்.ஜி.ஆர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மேற்கு மற்றும் தெற்கு செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சாலை வழியாக செல்ல வேண்டும்.கிழக்கு பகுதிக்கு செல்லும் அருப்புக்கோட்டை மற்றும் அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சிலை, மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.இதனால் புதிய பேருந்து நிலையம் மேலும் சிறப்பாக செயல்படவும், வாகன விபத்துகளை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பள்ளி மாணவ மாணவிகளின் இடையூறு இன்றி செல்வதற்கும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இடையூறு இன்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.சிவகாசி முதல் விருதுநகர் மார்க்கம் நகர் பேருந்துகளில்சிவகாசியிலிருந்து விருதுநகர் வரும் பேருந்துகள் நந்தா ஹோட்டல், புறவழிச்சாலை, எம்ஜிஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டிடிகே ரோடு, மீனாம்பிகை பங்களா பழைய பேருந்து நிலையம் சென்று, மீண்டும் அதே வழியாக சிவகாசி செல்ல வேண்டும்.சாத்துார் முதல் வத்திராயிருப்பு மற்றும் அருப்புக்கோட்டை முதல் வத்திராயிருப்பு மார்க்கம் செல்லும் புறநகர் பேருந்துகளில்வத்தியிராயிருப்பிலிருந்து விருதுநகர் வழியாக சாத்தூர் செல்லும் பேருந்துகள் கணபதி மில், எம்ஜிஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டிடிகே ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியாக திரும்ப செல்ல வேண்டும்.இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, முதல் இராமநாதபுரம், இராமேஸ்வரம் மார்க்கம் (அழகாபுரி, சிவகாசி வழி) அருப்புக்கோட்டை பேருந்துகள்விருதுநகருக்குள் நுழையும் போது நந்தா ஹோட்டல், புறவழிச்சாலை, எம்.ஜி.ஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், அல்லம்பட்டி வழியாக அருப்புக்கோட்டை இராமநாதபுரம் செல்ல வேண்டும். இராமநாதபுரம், அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகருக்குள் நுழையும் பேருந்துகள் கருமாதிமடம், புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை, கணபதி மில் சந்திப்பு, புறவழிச்சாலை வழியாக இராஜபாளையம், தென்காசி மார்க்கம் செல்ல வேண்டும்.இதன்படியான வழித்தட மாறுதல்கள் 09.03.2025 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.03.2025) நடைபெற்ற சிறப்பு “ காபி வித் கலெக்டர்” 151-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் 30-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சி 07.01.2022 அன்று தொடங்கப்பட்டு, மொத்தம் 150 கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மேலும் இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு, தங்களின் துறை மற்றும் பணிகள் சார்ந்த வாய்ப்புகள், படிப்புகள் மற்றும் அதற்கான திறமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி ஊக்கப்படுத்தி, அவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற 151 வது அமர்வு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் அனுபவங்கள், படைப்புகள், பெறப்பட்ட அங்கீகாரங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, ஆக்கப்பூர்வமான படைப்புகளை புதிய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வது குறித்தும், புதிய படைப்பாளர்களை உருவாக்குதல், அதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் 12 ம் வகுப்பு தேர்வு எழுதி கொண்டியிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படவுள்ளது.மாணவர்கள் தங்களது ஆர்வம் மற்றும் திறமைகளை பொருத்து, ஏற்கனவே உள்ள வாய்ப்புகள் மற்றும் படிப்புகள் குறித்த முழுமையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.உயர்கல்வி சேர்க்கைக்கான இணையவழி மற்றும் நேர்முக விண்ணப்ப வழிமுறைகள் குறித்த விளக்கங்களும் பெற்று கொள்ளலாம்.தேர்வு முடிவுகள், அது தொடர்பான பயம், தேர்வு முடிந்த பின் தொடரும் மன அழுத்தம் தொடர்பான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். அரசுத்துறைகள் வழங்கும் கல்வி உதவித் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்வி கடன் குறித்த விபரங்களும் பெறலாம்.இந்த சிறப்பு ஆலோசனை மையமானது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த 26.03.2025 அன்று முதல் செயல்படும். இந்த ஆலோசனை மையத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல், உளவியல் சார்ந்த வழிகாட்டல் ஆகியவை பெற்று பயன் பெறலாம்.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்வி அறக்கட்டளை மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, உயர்கல்விக்கு தேவையான அனைத்து ஆலோசனைகள் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான உதவிகளும் வழங்கப்படும். எனவே மாணவர்கள் சிறப்பு ஆலோசனை மையத்தின் மூலம் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-1 க்கான அறிவிப்பு 01.04.2025 அன்று வெளியிடவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கவிருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் 11.03.2025 அன்று ஆரம்பிக்கவுள்ளது.இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 தொலைபேசி எண் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்.எனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (07.03.2025) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு ஃ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், 100 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வழிகாட்டி என்கிற வீதத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இருக்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், பாடம் வாரியாக எடுக்க வேண்டிய மதிப்பெண்கள், உயர்கல்வியில் உள்ள துறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது முக்கியம். எடுத்த மதிப்பெண்களை வைத்து என்ன விதமான வாய்ப்புகளை பெறமுடியும் என்பது குறித்த தெளிவும், விழிப்புணர்வும் இருப்பது அதைவிட மிக முக்கியம். பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி அத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிற்றல் உள்ள மாணவர்களை கண்டறிவதில் முறையான புள்ளி விவரங்கள், இணையதளத்தில் வருகை பதிவு செய்வதனால் கிடைக்கப்பெறுவதன் மூலம், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து பள்ளி இடைநிற்றல் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகின்றன. அதைபோல், கல்லூரிகளிலும் மாணவர்களின் இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் அதற்கான காரணங்களை கண்டறிந்து, முறையான தீர்வுகள் மூலம் அவர்கள் உயர்கல்வி தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 167 பள்ளிகளைச் சேர்ந்த 182 முதுகலை ஆசிரியர்கள், 80 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளாகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக மாணவர்கள் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, விண்வெளி குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், விண்வெளி குறித்த ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட நட்சத்திர பார்வை நிகழ்வினை (Stargazing event - Exploring on Night Sky) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S அவர்கள் (06.03.2025) துவக்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.மேலும், மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம், மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள ராம்கோ சுற்றுசூழலியல், கொடைக்கானலில் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியில் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, விண்வெளி குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், விண்வெளி குறித்த ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட நட்சத்திர பார்வை நிகழ்வு (Stargazing event - Exploring on Night Sky) இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய முன்னெடுப்பு மூலம் நகரப்பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்து வரும் விண்வெளியை பார்வையிடும் இந்த வாய்ப்பு விருதுநகர் மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிக்கு நேரடியாக சென்று பயன்பெறும் வகையில் அமைகிறது.ஒரு நட்சத்திரம் எப்படி அமைந்திருக்கிறது. நட்சத்திரத்தை பார்க்கிறபோது எந்த அமைப்பில் இருக்கிறது. நட்சத்திரத்தை வைத்து எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதையெல்லாம் கண்டுபிடிக்கலாம்.விண்வெளி என்பது ஒரு பெரிய துறை.பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு செல்கின்ற போது விண்வெளி தொடர்பான படிப்புகள், ஆராய்ச்சிகள் இருக்கின்றன. அது குறித்து மாணவர்களுக்கு ஆர்வத்தைவும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காக தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்வின் மூலம் பாடப்புத்தகத்தில் மட்டுமே படித்து வந்த விண்வெளி குறித்த தகவல்களை தொலைநோக்கின் மூலம் தெளிவாக காணமுடிந்தது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் எங்களுடைய உயர் கல்வி மற்றும் வாழ்க்கைக்கான இலக்கை நிர்ணயிப்பதற்கான ஒரு தூண்டுகோலாகவும், வழிகாட்டியாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கோட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி குறுவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சியின் விரிவாக்கப்பகுதியினை பிரித்து பாலையம்பட்டி கிழக்கு மற்றும் பாலையம்பட்டி மேற்கு என புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக அருப்புக்கோட்டை வட்டம், பாலையம்பட்டி முதல்நிலை ஊராட்சி பொதுமக்களுடன் 11.03.2025 அன்று மாலை 4.00 மணியளவில் பாலையம்பட்டி கிராமம், விஜய் மஹாலில் விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கிராம பொதுமக்களுடன் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.எனவே, இந்த புதிய வருவாய் கிராமம் ஏற்படுத்துவது தொடர்பாக பாலையம்பட்டி கிராம பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.