25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 13, 2025

திருக்குறள் முற்றோதல் போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த வெற்றி பெற்ற மாணவர்கள் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த வெற்றி பெற்ற மாணவர்கள் (24.07.2024) கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் 25 வது ஆண்டினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிகள் 30.12.2024 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக கல்வி சுற்றுலா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு  இன்று அழைத்து செல்லப்பட்டனர். இச்சுற்றுலாவில் 53 மாணவர்கள் கலந்து கொண்டு அய்யன் வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் அமைப்பு குறித்து தெரிந்துகொண்டனர்.இந்த பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Feb 13, 2025

சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், பேராலி சாலை, ஓம் சக்தி திருமண மண்டபத்தில்  (13.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,I A S., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் முதியோர்களை கௌரவித்தார்.   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான திட்டங்களையும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் சமூக நலத்துறை மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது.  புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்து இத்துறையில் முறையாக திறம்பட நிர்வாகித்து வருகிறது.அதுபோல முதியோர் இல்லம் தொடங்கி, அரசு அங்கீகாரம் பெற்று இருந்தும் நிதியுதவி கிடைக்காமல் இருந்தாலும், புதிதாக முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்றால், விண்ணப்பிக்கும் போது அதனை முறையாக பரிசளித்து அதற்கான அனுமதியும், உதவிகளும்  வழங்கப்படுகின்றன.மேலும், அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை ஏற்று அவர்களுக்கு உணவு, உடை தங்குமிடம் உள்ளிட்டவற்றை உருவாக்கித் தந்து, அவர்கள் 21 வயது வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என சுமார் 36 அரசு குழந்தைகள் இல்லம், 147 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பாராமரிக்கட்டு வருகின்றனர். அவர்களுக்கும் விளையாட்டு விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கும் அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி, ஆற்றுப்படுத்துதல், விளையாட்டு, பயிற்சி, ஓவியம், இசை போன்ற கலைகள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்தத் துறை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் புத்துயிர் பெற்று பல்வேறு திட்டங்கள், சட்டங்கள் குழந்தைகள் நலன், பெண்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இது போன்ற திட்டங்களை ஆதரவற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும், பெண்களுக்கும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முதியோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2025

இராஜபாளையத்தில் 15.02.2025 அன்று நடைபெறவுள்ள காமிக்ஸ் திருவிழா(Comics Thiruvizha) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் குழந்தைகள் பதிவு செய்து கொள்ளலாம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியில் உள்ள சித்திரக்கதைகள் நூலகத்தில் காமிக்ஸ் திருவிழா(Comics Thiruvizha) நிகழ்ச்சி 15.02.2025 அன்று நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம். இதில் கேலி சித்திரம், முகமுடி தயாரித்தல் போட்டி, நாடகம், உடை அலங்காரம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இந்த காமிக்ஸ் திருவிழா நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள், அவர்கள் பள்ளி பயிலும் பள்ளியை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 13, 2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா,I A S, அவர்கள்,  விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள்  துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு சத்துணவு திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், சத்துணவு மையங்கள், மாவட்ட அளவில் செயல்படும் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ் முதல்வன் திட்டம், திருமண நிதி உதவி திட்டம், திருநங்கைகள் சுயதொழில் துவங்கிட மானிய திட்டம், திருநங்கைகள் அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி பதிவு விவரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், 18 வயது முடிவுற்ற பயனாளிகளின் முதிர்வுத் தொகை வழங்கப்பட்ட விவரம், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தின் செயல்பாடுகள், மகளிர் உதவி எண், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழங்கப்பட்டு வரும் சேவைகள், முதியோர் இல்லங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த வளாகங்கள், ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், மகளிர் குறுகிய கால தங்கும் இல்லங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை சார்ந்த அரசு அலுவலருடன் ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு குறித்த மருத்துவத்துறையின் புள்ளி விவரங்கள் கிடைத்தவுடன் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதுபோல கர்ப்ப காலத்தில் பெண்களின் ஊட்டச்சத்து வளர்ச்சியினை முறையாக கண்காணித்து, அவர்களுக்கான ஊட்டசத்துக்கள் கிடைக்கச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைப் பேறு அடைவதை உறுதி செய்ய வேண்டும்.மதிய உணவு திட்டத்தில் சமையல் கூடத்திற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படின் தொடர்புடைய அரசு துறைகளிடம் தெரிவித்து அதனை உறுதி செய்ய வேண்டும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமையால் பாதிக்;கப்படும் பெண்களுக்கு முதற்கட்டமாக அவர்களின் நகை, பணம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக அவர்களுக்கு சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நலக வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்.,I A S., விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2025

தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு போற்றும் வகையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்  (13.02.2025) தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு போற்றும் வகையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.

Feb 12, 2025

மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, வாழ வந்தாள்புரம் முதல் கோட்டூர் வரை, வே.வ. வன்னியப்பெருமாள் கல்லூரி(VVV காலேஜ்) முதல் நல்லமநாயக்கன்பட்டி வரை(NH47), விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஒண்டிப்புலி நாயக்கனூர் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் வாழவந்தாள்புரம் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் சென்னல்குடி வரை, விருதுநகர் ஆத்துப்பாலம் முதல் மங்களம் பிரிவு வரை, விருதுநகர் ஏ.ஆர் கிரவுண்ட் முதல் மத்தியசேனை விலக்கு வரை, வெற்றிலை முருகன்பட்டி முதல் காரியாபட்டி முக்கு ரோடு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட் பேக்டரி முதல் மேட்டமலை வரை, ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை, விருதுநகர் சிட்கோ முதல் மெட்டுக்குண்டு காலனி வரை, சண்முகசுந்தரபுரம் விலக்கு முதல் மலைப்பட்டி வரை, ராமசாமிபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, பாலவனத்தம் முதல் சென்னல்குடி வரை, பாலவனத்தம் முதல் கோட்டைநத்தம் வரை, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முதல் மேட்டுப்பட்டி வரை, முக்குளம் முதல் கட்டன்குளம் விலக்கு வரை, மெட்டுக்குண்டு காலனி முதல் சண்முகசந்தரபுரம் விலக்கு வரை, துலுக்கப்பட்டி முதல் மேட்டமலை வரை, காரியாபட்டி முதல் வெற்றிலைமுருகன்பட்டி வரை, காரியாபட்டி பேருந்து நிலையம் முதல் என்.நெடுங்குளம் வரை, காரியபட்டி பேருந்து நிலையம் முதல் குறிஞ்சான்குளம் வரை, பகுதி அலுவலகம் அருப்புக்கோட்டை அலுவலக எல்லைக்குட்பட்ட அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலி குறிச்சி வரை, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலியூரான் வரை,சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தேவர் சிலை முதல் சாமிநத்தம் வரை, வெற்றிலையூரணி முதல் கூத்தனாட்சியாபுரம் வரை, அய்ய நாடார் காலேஜ் முதல் இடையன்குளம் வரை சிவகாசி அரசு மருத்துவமனை முதல் வடமாலபுரம் காலனி பிரிவு வரை, வெற்றிலையூரணி முதல் சேதுராமலிங்கபுரம் வரை, திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட லட்சுமி நாராயண மஹால் முதல் பொட்டல்பட்டி வரை, மல்லி முதல் இனாம் கரிசல்குளம் வரை கிருஷ்ணன் கோவில் முதல் பண்டிதன்பட்டி வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் பி.மீனாட்சிபுரம் வரை, (மல்லி முதல் அன்னை சத்யா நகர் வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் மல்லி வரை, கிருஷ்ணன் கோவில் முதல் அழகாபுரி வரை, அழகாபுரி முதல் சுந்தரபாண்டியம் வரை, சீசாபுரம் முதல் கூமாப்பட்டி வரை, பட்டியகல் முதல் கீழக்கோட்டையூர் வரை, பட்டியக்கல் முதல் மகாராஜபுரம் வரை, முத்துவெங்கடராயபுரம் முதல் வங்கார்பட்டி வரை, பகுதி அலுவலகம், இராஜபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட காட்டன் மார்க்கெட் முதல் நரிமேடு வரை, ஆர்டிஓ ஆபீஸ் முதல் தொட்டியபட்டி வரை, சத்திரப்பட்டி முதல் கோபாலபுரம் வரை, காந்தி சிலை முதல் அன்னத்தலை விநாயகர் கோவில் வரை, சாராபட்டி முதல் குறுக்கம்பட்டி வரை, தளவாய்புரம் பேருந்து நிலையம் முதல் முறம்பு வரை, சம்சிகாபுரம் முதல் தும்பகுளம் வரை, ராஜபாளையம் ரயில்வே நிலையம் முதல் சமத்துவபுரம் வரை, ரெட்டியாபட்டி முதல் அப்பநாயக்கன்பட்டி வரை, புதிய பேருந்து நிலையம் முதல் நத்தம்பட்டி வரை, சுந்தரராஜபுரம் முதல் பத்மா மருத்துவமணை வரை, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முதல் ஹீத் டிரஸ்ட் வரை, இளந்திரை கொண்டான் முதல் சொக்கனாதபுத்தூர் விலக்கு வரை, எம்.கே.எஸ் பெட்ரோல் பல்க் முதல் அட்டைமில் முக்கு ரோடு வரை.மேற்கண்ட 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்றுகளுடன் 10.02.2025 முதல் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 12, 2025

இரயில்வே காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள 32438 பல்வேறு பணிக் காலிப்பணியிடங்கான அறிவிப்பு 21.01.2025 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 23.01.2025 ஆம் தேதியிலிருந்து 22.02.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 17.02.2025 அன்று விருதுநகர்.ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது.. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/8hB1dvzGvctLtMAs9  என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொள்ளலாம். எனவே இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S , அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Feb 12, 2025

கல்லூரிகளுக்கு பள்ளி மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ அல்லது சேர்ப்பதோ, அரசு அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் மாணவர்களை அணுகினாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அரசு பொது தேர்வு நடக்கும்பொழுதும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் அணுகி அவர்களை சேர்ப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.ஒரு சில ஆசிரியர்களே மாணவர்களின் விவரங்களை இது போன்ற கல்லூரிகளுக்கு தருவதாகவும் புகார்கள் வருகின்றன. அவ்வாறு கல்லூரிகளுக்கு மாணவர்களின் விவரங்களை அளிக்கவோ, மாணவர்களை சேர்க்கவோ கூடாது. மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் இருப்பின் அந்தந்த பள்ளியினுடைய முதுகலை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரையே அணுகி ஆலோசனை பெற வேண்டும்.கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ அல்லது சேர்ப்பதோ, அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் மாணவர்களை நேரடியாக அணுகினாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 12, 2025

திருவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசு வைத்தான்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசு வைத்தான்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (12.02.2025) நடைபெற்றது.இம்முகாமில், 42 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ரூ.45,73,658/- மதிப்பிலும், 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா 9,67,895/- மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.39,500/- மதிப்பிலும், தோட்டக்கலைத் துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.7385/- மதிப்பிலும், 13 பயனாளிகளுக்கு ரூ.13,00,000/-மதிப்பிலான விபத்து நிவாரண தொகைகளையும், 18 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 132 பயனாளிகளுக்கு ரூ.68.88 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஒரு பெண்ணுக்கு உண்மையான வலிமை என்பது நிறைய சுதந்திரம் இருக்கலாம். பெண்ணிற்கு கல்வி கற்பதற்கான முழு சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் இப்படி எத்தனை சுதந்திரம் இருந்தாலும், பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் தான். தன்னுடைய பொருளாதாரத்திற்கு மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது. புதிய  பயிற்சிகளை பெற்று, கடனுதவிகள் பெற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறக்கூடிய பொருளாதார வலிமை மிகுந்த பெண்களாக நமது பெண்கள் இருக்க வேண்டும்.மேலும், கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது.  நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.20 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலமாக பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தொழிற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று  பல்வேறு துறைகளின் சார்பாக அதிகமான கடன்களையும் வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களுக்கு தொடர்ச்சியாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடனை பெற்று நீங்கள் அனைவரும் அதனை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் கடனை  பெற்று அதனை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்று, கடனையும் அடைத்து, வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்ள  வேண்டும்.தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை,  இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை  ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று  வழங்கப்பட்டு வருகிறது.ஒரு குடும்பத்திற்கு அவர்கள் வழங்கக்கூடிய பரிசு என்பது அவரது உடல்நலம் தான். ஒருவருடைய உடல்நலத்தை சிறப்பாக பேணிக்காத்து கொள்ள வேண்டும். 30 வயது கடந்த உடன் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய  வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசினுடைய மருத்துவத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்தியாவிலேயே அதிகப்படியான பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ஒரு மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். 18 வயதிற்கு  கீழ் உள்ள பெண்களுக்கு உடல் நிலையும், மன நிலையும் ஒரு குழந்தையை சுமக்கக் கூடிய  அளவில் இல்லை.அதனால் பிறக்கக்கூடிய குழந்தைகள் குறைப்பாட்டுடன் பிறக்கிறார்கள். 18 வயதிற்கு  கீழ் உள்ள பெண்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரும்புச்சத்தின் அளவும் குறைவாக தான் உள்ளது. எனவே குழந்தை திருமணத்தை  அனைவரும் சமூகமாக சேர்ந்து அவற்றை எதிர்க்கொள்ள வேண்டும்.மேலும், நமது பகுதியில் அதிகமான இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகமான போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஒவ்வொரும் தொழில் முனைவோராக ஆக வேண்டும். நமது மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் மிக அதிகமான சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செய்யக்கூடியதில் ஒன்றாக இருக்கிறது. அதனால்  தான் அனைத்து இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவி வழங்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு  பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, வட்டாட்சியர் திரு.பாலமுருகன் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 12, 2025

வேளாண் அடுக்கு திட்டத்திற்காக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க 10.02.2025 முதல் 10 நாட்கள் கிராம அளவில் சிறப்பு முகாம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் ஒன்றிய அரசு வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் பதிவு விவரம், நில உடமை வாரியாக புவியிடக்குறியீடு செய்த பதிவு விவரம் ஆகிய 3 விவரங்களும் முக்கியமானவை ஆகும். இதில் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் திட்டமானது, ஒன்றிய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி மாநில முழுவதுமாக செயல்படுத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மின்னணு முறையில், அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம்.ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிதில்லை. அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டஙகள் பெற்றுக்கொள்ள முடியும். பிரதமரின் கௌரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தற்போது ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று அறுபத்து நான்கு விவசாயிகள் பிரதமரின் கவுர நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் பதிவு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டத்தின் மூலம் தரவுகளையும் சரிபார்த்து அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் 601 வருவாய் கிராமங்களிலும் ஊராட்சி அலுவலகங்களில் 10.02.2024 முதல் 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுநர்கள் வருகை தந்து, தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர்.எனவே விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு வந்து அடையாள எண் பதிவு செய்ய தங்களின் விவரங்களை வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

AD's



More News