25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 18, 2025

செண்பகப்தோப்பில் நடத்தும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (18.02.2025) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து செண்பகப்தோப்பில் நடத்தும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு, பசுமை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்தை சிறப்பான முறையில் பாதுகாக்கும் வகையில் பசுமை பள்ளி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, மழைநீர் சேகரிப்பு, காய்கறி தோட்டங்கள் அமைத்தல், கழிவுநீர் மறுசுழற்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மாணவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது மாணவர்கள் மூலம் பள்ளி வளாகங்களுக்குள் இயற்கை வளங்களின் நுகர்வைத் தணிக்கை செய்கிறது மற்றும் விலைமதிப்பற்ற வளங்களை வீணாக்குவதைக் குறைக்க நடைமுறை தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பள்ளிகள் நல்ல சுற்றுச்சூழல் மேலாளர்களாக மாற உதவுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செண்பகப்தோப்பில் நடைபெறும் பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாமிற்கு செல்லும் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார். இந்த பசுமை விழிப்புணர்வு பயிற்சி முகாம் 18.02.2025 முதல் 21.02.2025 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (மேகமலை புலிகள் காப்பகம்) திரு.தேவராஜ்,இ.வ.ப., ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 18, 2025

நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் (18.02.2025) நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.இந்தியாவில் மொத்தம் 152 நகராட்களில்,  தமிழ்நாட்டில் மட்டும் 10 நகராட்சியில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா (NAtional geospatial Knowledge – based land Survey of Urban HAbitations – NAKSHA) திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகரம் முன்னோடி திட்டமாக வார்டு 23, பிளாக்:133, மொத்த நகர புல எண்கள். 29, 320-ல் (6.600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்)  இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்வதால் நில உடைமை தகராறுகள் மற்றும் நீண்டகால சட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காகவும், உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும், நிலப்பதிவுகளை வெளிப்படையாகவும், துல்லியமாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல் செய்ய பயன்படுகிறது. புவிசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சொத்துவரி செலுத்துவதற்கு பயன்படுகிறது.இன்று ஒரு பகுதியில் நடக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நகரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகள், வழங்கக்கூடிய பல்வேறு பணிகளுக்கும், சொத்து வரி உள்ளிட்ட வரி விதிப்புகளுக்கும் செய்யப்பட வேண்டிய நில அளவு, சொத்தினுடைய அளவீடுகள் அனைத்தும் பழங்கால முறைகள் தான் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் பொது மக்களுக்கு அந்த சேவைகளை வழங்கக்கூடிய அளவிற்கு நிறைய கால விரையமும், நகராட்சியினுடைய வருவாயும் பாதிக்கப்படுகிறது.அதனை சரி செய்வதற்கு நிறைய நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இவற்றிற்கான தீர்வு தான் இந்த திட்டம். இதன் மூலமாக நகர் பகுதிகளில் இந்த ஆளில்லா வானூர்திகள் என்று சொல்லக்கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமாக துல்லியமாக சர்வே செய்து, அந்த சர்வே செய்யப்பட்ட ஒளி அச்சுக்களை வைத்து, அவற்றை முறையாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மென்பொருள்களை வைத்து, அதனுடைய தரவுகளை எல்லாம் ஆய்வு செய்து சரியான விகிதத்தில் அவற்றை ஜி.பி.எஸ் என்று சொல்லக்கூடிய சரியான புவியியல் துல்லியத்தின் அடிப்படையில் அந்த இடங்களை துல்லியமாக வரையறுக்க முடியும்.அந்த புவியியல் வரையறைக்கு மொத்தமாக நகரை முழுமையாக சர்வே செய்து அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்கு வெளியிடப்படும். அதில் குறைபாடு இருந்தால் மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு செய்வதை அந்த குழு சென்று பார்வையிட்டு, புகார்கள் சரியாக இருந்தால் அந்த ஐயப்பாடுகளை கலைவதற்கும் இந்த திட்டத்தில், நடைமுறையில் உரிய வாய்ப்பு இருக்கிறது.வான்வழி ஆய்வுகள் மூலம் துல்லியமான மேப்பிங் வரைவதற்கும், மாநில அரசுகள் மற்றும் குடிமக்கள் பங்கேற்புடன் நிலப்பதிவுகளைச் சரிபார்ப்பதற்கும், டிஜிட்டல் தளங்கள் வழியாக எளிதாக அணுகவும், புவியில் தரவுகளுடன் துல்லியமாக திட்டமிடலுக்கு பயன்படுகிறது.வான்வழி ஆய்வு துல்லியமாக மற்றும் வேகமான தரவு சேகரிப்பதற்கும், படம் பிடிப்பதற்கும், செங்குத்து நகரங்களுக்கு சாய் கோண கேமரா மூலம் நிலஅளவை செய்வதற்கும், மலைப்பாங்கான நெரிசலான இடம் மற்றும் மர அடர்த்தியாக உள்ள இடங்களில் LiDAR சென்சார் மூலம் நிலஅளவை செய்வதற்கு பயன்படுகிறது.  ஒழுங்கமைக்கப்பட்ட நிலபதிவுகள் இல்லாதது, காலாவதியான மற்றும் முழுமையடையாத தரவு காரணமாக அரசாங்க ஆவணங்களுக்கும், உண்மையான நில உரிமைக்கும் இடையிலான முரண்பாடுகளை தவிர்க்கவும் பயன்படுகிறது. மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பு இல்லாதது, உரிமை தகராறுகள் மற்றும் சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பான சிக்கல்களை தவிர்க்க பயன்படுகிறது.துல்லியமான மற்றும் ஆன்லைன் நிலப்பதிவுகள் கிடைக்கும். நகர்ப்புற நில மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட நகர்ப்புற நில நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கும், வெளிப்படையான மற்றும் வேகமான நிலம் தொடர்பான செயல்முறைகள் கிடைக்கவும் பயன்படுகிறது.எனவே இவற்றை தொடர்ச்சியாக செய்து முழுமையாக நிறைவேற்றுகின்ற போது பொது மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுடைய சேவைகள் விரைவாக கிடைப்பதற்கும், நீதிமன்ற வழக்குகள், கால விரயங்கள் அவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கும் இந்த தொழில்நுட்பத்தின் வழியாக ஒரு மிகப்பெரிய மாறுதல்களை நிச்சயமாக செய்ய முடியும்.எனவே ஒரு வெளிப்படை தன்மையோடு எல்லோருக்கும் சரியாக இந்த சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நக்சா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள், அங்கு இருக்கக்கூடிய குடியிருப்பு நல சங்கங்கள் ஆகியோர் நகராட்சி நில அளவை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலமாக இவற்றை விரைவாக செய்து முடித்தால் நிச்சயமாக நம்முடைய நகரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு அம்சமாக இது திகழும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நில அளவை பதிவேடுகள் துறை) திரு.த.விஜயகுமார், விருதுநகர் நகராட்சி பொறியாளர் திரு.ஆர்.எட்வின் பிரைட் ஜோஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 18, 2025

ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) மரு. இரா.ஆனந்தகுமார்,I A S., அவர்கள் எழுதிய வடைப்பூ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில்  (18.02.2025) நடைபெற்ற விழாவில் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) மரு. இரா.ஆனந்தகுமார்,I A S, அவர்கள் எழுதிய வடைப்பூ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வெளியிட்டார்.மரு.இரா.ஆனந்தகுமார் அவர்கள் இதுவரை 10-த்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். டாக்டர்.இரா.ஆனந்தகுமார் அவர்கள் 2003 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணித் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர். அவர் அடிப்படையில் கால்நடை மருத்துவம் படித்தவர். தமிழ்நாட்டின் முதல் இடம்பெற்று, 2003 ஆம் ஆண்டு தேர்வாகி பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சார் ஆட்சியராக தொடங்கி, மதுரை மாவட்டத்தினுடைய கூடுதல் ஆட்சியர், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்து சென்னை மாநகராட்சியில் மிக முக்கிய பொறுப்புகளை வகித்து, தற்போது ஊரக வளர்ச்சி துறை பயிற்சி துறை ஆணையராக பணிபுரிந்து கொண்டிருக்கக்கூடியவர். அவர் தன்னுடைய தொடர்ச்சியான வாழ்க்கை அனுபவங்களை நூலாக வடித்திருக்கிறார்.நீங்கள் இந்த பூமியில் இன்னும் 50 ஆண்டுகாலம் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்லூரியில் படிக்கக்கூடிய மூன்று ஆண்டுகளில் உங்களுடைய பாடத்திட்டத்தை படித்து, செயல்முறை தேர்வுகள் எழுதி மதிப்பெண்களை பெற்று பட்டம் பெறக்கூடிய இந்த கல்வி என்பது 10 விழுக்காடு மட்டுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்கிறது. மற்ற 90 விழுக்காடு உங்கள் அன்றாட நிகழ்வுகளை நீங்கள் பழகக்கூடிய மனிதர்களை, நீ எதிர்கொள்ளக்கூடிய சமுதாயத்தை நீங்கள் எவ்வாறெல்லாம் கற்றுக்கொண்டு செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.ஒவ்வொருவருக்கும்; மூன்று விதமான வாழ்க்கை உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தொழில் சார்ந்த வாழ்க்கை  ஆகும்.இந்த மூன்றையும் கல்லூரி மாணவ மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும். பாடத்திட்டங்கள் மட்டுமே வழங்காத ஒன்றினை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் நமக்கு மொழியில் இருக்கக்கூடிய புலமையும், அதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலும் தான்.ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் சொல்லப்படாத ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள் இருக்கிறது. ஏன் ஒருவர் பதிவு செய்ய வேண்டும் என்றால் மனிதர்களுக்கு என்று இருக்கக்கூடிய மிகப் பெரிய பண்புகளை விட அவனுக்கு இல்லாத பண்புகள் மற்ற உயிரினங்களை விட அதிகம். மனிதன் இந்த பூமி பந்தில் மிக வலிமையான உயிரினம். மனிதன் தன்னைவிட 100 மடங்கு உடல் எடையில் இருக்கக்கூடிய யானையை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவன்.மனிதன் தன்னைவிட வலிமையான புலியையும், சிங்கத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவன். ஏன் அதன் இருப்பை கூட பூமி பந்தில் கேள்விக்குள்ளாக்க கூடியவன் மனிதன். பல மிருகங்களை விட ஏன் எல்லா மிருகங்களை விட மேம்பட்ட பகுத்தறிவு சிந்தனையை ஆறாம் அறிவை கொண்டவன் மனிதன். அப்படிப்பட்ட உயிரினங்களுடைய பரிணாம வளர்ச்சியில் மேன்மையான வடிவத்தை வைக்கக்கூடிய மனிதன் கூட பல உயிரினங்களுடன் ஒப்பிடுகின்ற பொழுது அதனுடைய மரபு வலிமைகள் குறைபடலாம்.மனிதர்களிடம் மரபுக் கடத்தலை எடுத்து பார்த்தால், மரபுக் கடத்தலில் மனிதன் மற்ற உயிரினங்களை விட சற்று கீழ்மட்டமாகவே இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன் இந்த பூமியில் வாழ்வதற்கு இந்த வாழ்க்கை முழுவதும் அனுபவங்கள் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் நிகழக்கூடிய  நூற்றுக்கணக்கான அனுபவங்கள்;. ஒரு தனி மனிதனுக்குள் ஒரு நாளில் சொல்லப்படாத அனுபவம் மிக்க 100 கதைகள் இருக்கும். இவையெல்லாம் அவன் பூமிக்குள் செல்கின்ற பொழுது அவன் மறைந்து விட்ட பிறகு , அவனோடு சேர்ந்து அவன் அனுபவங்களும், அவன் கற்ற செல்வங்களும் எல்லாம் புதைக்கப்பட்டு விடுகிறது.எனவே, மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையை, அனுபவங்களை பதிவு செய்வது என்பது மிக மிக முக்கியமானது. எந்த ஒன்றையும் பதிவு செய்வது, எந்த ஒன்றையும் எழுதுவதும், அதை பேசுவதும் கருத்துக்களை வெளிப்படுத்துவதும் என்பது மிக முக்கியமான பண்பு.  அந்த பண்புதான் கல்லூரியில் மாணவர்கள் பாடத்திட்டங்களுக்கு வெளியே நிச்சயமாக கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அதை கற்றுக் கொள்வதற்கு இதுபோன்ற நூல்கள் தான் உதவி செய்கிறது.மனிதர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் தேவைப்படுகிறது. வாழ்வியல் சிக்கல்கள் எதிர்கொள்வதும், தனக்கு வரக்கூடிய துன்பத்தில் இருந்து துன்பங்களை விலக்கி, வாழ்வியல் இன்பங்களை பார்ப்பதும். அதற்கு அவர்களுக்கு அனுபவம் தேவைப்படுகிறது. அந்த அனுபவங்கள் இரண்டு வழிகளில் கிடைக்கும். ஒன்று நாமே தவறு செய்து அவர்களின் மூலமாக கற்றுக்கொண்டு நெறியோடு இருப்பது. இன்னொன்று அடுத்தவர்கள் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வது. முதலாவது விலை மதிப்பு மிக்கவை. இரண்டாவது எளிதில் கிடைப்பது. அடுத்தவர்களின் அனுபவங்களிலிருந்து நமக்கான வாழ்வியல் பாடங்;களை கற்றுக்கொள்வது என்பது நமது கற்றலில் மிக முக்கியமான ஒன்று. அது பள்ளி கல்வி பாட புத்தகங்களில் நிகழ்வதில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் தான் நிகழ்கிறது. அதற்காக இதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு பணிச்சுமைகளும் மத்தியில் தொடர்ச்சியாக எழுதக்கூடிய மரு.இரா.ஆனந்தகுமார் அவர்களின் நூலை படிப்பது என்பது நம் எல்லோருக்கும் வாழ்வில் அனுபவமாகும். நீங்களும் நிறைய வாசிப்பதற்கும், வாசிப்பின் மூலமாக மொழி ஆற்றலை பெறுவதற்கும், நீங்களும் பயன்படுத்துவதற்கும் இது போன்ற விழாக்களையும் நூல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S., கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 18, 2025

கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப்படிப்பு பயிலும் கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைக்கு உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.02.2025) கட்டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில், பணியிடத்து விபத்தில் மரணமடைந்த 4 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைகள், அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப்படிப்பு பயிலும் கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைக்கு ரூ.50000- கல்வி உதவித்தொகை என ஆக மொத்தம் ரூ.20.50 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியம் முதலான 20 நலவாரியங்கள் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் துறையின் கீழ் செயல்படுத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 20 அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் நிதி உதவி விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, கட்டுமானப் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் பதிவு பெற்ற / பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளியின் வாரிசுதாரர்களுக்கு பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை ரூ.5,00,000- வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த  திரு.கணேசன் த/பெ.மாரிமுத்து, திரு.சசிகுமார் த/பெ.நடராஜன், திரு.கணேசன் த/பெ.முத்து மற்றும் திரு.மாரிமுத்து த/பெ.சதுரகிரி ஆகிய 4 கட்டுமானத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.20 இலட்சம் உதவித்தொகைக்கான ஆணைகளையும்,கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைக்கு ரூ.50000- கல்வி உதவித்தொகையையும், என ஆக மொத்தம் ரூ.20.50 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.ஜெ.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 18, 2025

அரசுப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.02.2025) அரசுப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.

Feb 17, 2025

வேளாண் பணிகளுக்கு விவசாயிகள் அறுவடை செய்யும் இயந்திரங்களின் வாடகை நிர்ணயம் மற்றும் உரிமையாளர் விபரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தனியாருக்குச் சொந்தமான 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.நெல் அறுவடை காலங்களில் அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப தனியார் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரர்களை அணுக வேண்டியும், மேலும் வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனை தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்படி உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் 2025 ம் ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களுடனான  ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அறுவடை செய்ய பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூபாய் 2600/- எனவும் டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூபாய் 1800/- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. எனவே நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் பெற்று விவசாயிகளின் அறுவடை பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 4456 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களின் விபரங்கள் அதாவது 3909 எண்கள் டயர் வகை அறுவடை இயந்திரங்கள் மற்றும் 547 எண்கள் செயின் வகை அறுவடை இயந்திரங்கள் விபரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழவன் செயலியில் வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள 24 எண்கள் டயர் வகை இயந்திரங்கள் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Feb 17, 2025

திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொழில் முனைவுத்(CM-ARISE) திட்டத்தின் மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணபிக்கலாம்

திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை  சார்ந்தவர்கள் தொழில் முனைவோராக ஆக வாய்ப்பு.   விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE)  திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.1.  லோடு ஆட்டோ, 2. கார் 3. பயணிகள் ஆட்டோ, 4. ஜெராக்ஸ் கடை, 5. சென்ட்ரிங்,  6. வெல்டிங், 7. டிபார்மென்ட் ஸ்டோர், 8. கார்மெண்ட்ஸ், 9. அரிசி கடை, 10.ஆவின் பாலகம், 11. எலக்ரிகல்ஸ்,12. பிரவுசிங் சென்டர்,13. பியுட்டி பார்லர் மற்றும் பிற தொழில்கள்.திட்ட  மதிப்புத் தொகையில் 3.5% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய  வங்கிக்கடனுடன் வழங்கப்படும்.  இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% சதவீத வட்டி மானியம்  வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் (https//newscheme.tahdco.com) தொழில் முனைவோர்களாக திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும்  விருப்பமுள்ளவர்கள்  விண்ணப்பம்  செய்து பயன் பெறலாம்.மேலும்  விபரங்களுக்கு  தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி  விவரம்  பெற்று  உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 17, 2025

முன்னேற விழையும் மாவட்டம்(Aspirational District) தொடர்பாகநடைபெற்று வரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை உயர் அலுவலர்களிடம்ஒன்றிய இணை அமைச்சர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (17.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் முன்னிலையில்  ஒன்றிய இணை அமைச்சர்(கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்)  திரு.ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்கள் தலைமையில், முன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பினால் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் மேம்பாட்டு, உள்கட்டமைப்பு (அடிப்படை கட்டுமானம்), நிதி மேலாண்மை (அனைவருக்கும் வங்கி சேவை) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 112 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு,  அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் வளர்ப்பு, அடிப்படை கட்டுமானம், நிதிநிலை சேர்ப்பு(அனைவருக்கும் வங்கி சேவை) ஆகிய துறைகளில் தனிக்கவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசினால் முன்னேற விழையும் மாவட்டங்களாக(யுளிசையவழையெட னுளைவசiஉவள) தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, காரணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி, இந்த காரணிகளின் தரத்தினை மேம்படுத்த தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கு மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்(கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்) திரு.ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.முன்னதாக விருதுநகர், திருவில்லிபுத்தூர், சிவகாசி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு  மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி,  இணை இயக்குநர் (விவசாயம்) மற்றும் அரசு  அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 16, 2025

அருப்புக்கோட்டை ம.ரெட்டியபட்டியில்பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ம.ரெட்டியபட்டியில் (16.02.2025) பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், பதிவுத்துறைத் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,I A S,  அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும்   வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்   திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்த நாள் நம்முடைய திருச்சுழி தொகுதியினுடைய வரலாற்றில் குறிப்பாக நம்முடைய ம.ரெட்டியப்பட்டி பகுதியின் உடைய வரலாற்றில் மிக மிக முக்கியமான நாளாக நான் கருதுகிறேன்.கனவு மெய்ப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு கனவு நினைவாகிறது என்கின்ற வகையில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்த பகுதியின் கனவாக இருந்த இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.ஒரு நீண்ட பயணம் அது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு நபர்களின் கோரிக்கையாக இருந்தாலும், நிர்வாக காரணங்களால் அது தள்ளிப் போய் கொண்டு இருந்தது. உதவி தேவைப்படக்கூடிய காலத்தில் சரியான நேரத்தில் செய்யக்கூடிய அந்த உதவிதான் இந்த உலகத்தை காட்டிலும் பெரியதாக இருக்கும் என்று சொல்வதைப் போல, நம்முடைய பகுதி மக்கள் நன்மைக்காக ஒவ்வொரு முறையும் பந்தல்குடிக்கும், பெருநாழிக்கும், கமுதிக்கும் அழைந்து கொண்டிருக்கக்கூடிய அந்தக் கஷ்டத்திலிருந்து உங்களுக்கு அருகாமையிலேயே அதனை உருவாக்குவதற்கு நம்முடைய மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இந்த சார் பதிவாளர் அலுவலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.இதனை சட்டமன்றத்தில் அறிவித்ததோடு தொடர் முயற்சியின் காரணமாக, இந்த கோப்பிற்கு பல்வேறு விதிவிலக்குகள் தேவை என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்த பகுதிக்கு தேவை என்பதை உணர்ந்து இன்றைக்கு அவற்றுக்கெல்லாம் விலக்குகளை அளித்து நமது நீண்ட கால கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.அரசுக்கு வணிகவரித் துறையின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கின்றது. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் வணிகவரிகளை, ஜிஎஸ்டி வசூலில் எல்லா மாநிலங்களை காட்டிலும் மிக அதிகமான அளவில், நம்முடைய மாநிலத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் வரி வருவாய் ஈட்டி தறக்கக்கூடிய பெருமை இந்த துறைக்கு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பதிவுத்துறை பெற்றிருக்கக் கூடிய வளர்ச்சி மிகப் பெரியது.தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு மிகப்பெரிய கட்டமைப்பு உருவாக்கி தருகிறது. தமிழ்நாட்டினுடைய பழைய கட்டிடங்களுக்கு எல்லாம் ஒரு புதுப்பொழிவை உருவாக்குகிறது. தொடர்ச்சியாக நம்முடைய பதிவுத்துறைகளில் இயங்கி கொண்டிருக்கக் கூடிய கட்டிடங்களுக்கெல்லாம் புதிய கட்டிடங்களை நவீன வசதிகளோடு செய்யப்பட்டு வருகிறது.நம்முடைய பகுதி வளர வேண்டிய பகுதி இன்னும் வளர்வதற்கும், இந்த பகுதியினுடைய பல்வேறு வளர்ச்சிக்கும், இப்பகுதியினுடைய மக்களின் நலத்திற்கும் இந்த பகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.

Feb 16, 2025

தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  அவர்கள் முன்னிலையில்  (15.02.2025) நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.செவலூர் ஊராட்சி சிலோன் காலனியில்  உள்ள மேய்க்கால் புறம்போக்கில் சுமார் 7.26 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றாங்கால் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில் பெரும்புலவர் கபிலர் நாற்றாங்கால் தொகுதி, அய்யன் திருவள்ளுவர் நாற்றாங்கால் தொகுதி, மருத்துவ பேராசான் அகத்தியர் நாற்றாங்கால் தொகுதி, தமிழ் மூதாட்டி ஓளவையார் நாற்றாங்கால் என மொத்தம் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு 5.20 இலட்சத்துக்கு மேல் நாற்றாங்கால் வளர்க்கப்பட்டு வருகிறது.இதில் தேக்கு, புளி, வேம்பு, பூங்கன், தோதகத்தி, வில்வம், கருவாகை, அயல்வாகை, குமிழ், செம்மரம், ஆத்தி, நீர் மருது, சந்தனம், மகா கனி, சீத்தா, கொய்யா, கொடிக்காய் புளி, பப்பாளி, நாவல், பலா, முருங்கை, பூவரசு, பெரு நெல்லி, தூங்கு மூஞ்சி வாகை, ஈட்டி, இலவம் பஞ்சு, மஞ்சள் கடம்பூ, வேங்கை, ஆனை குன்று மலை, சரங்கொன்றை, நொச்சி, செம்மரம், மலைவேம்பு, மஞ்சள் கொன்றை, பென்சில், சவுக்கு, ஆலி, முந்திரி, மயில் கொன்றை, பேய் இலவம், கரு நொச்சி, வாகை, மல்பேரி, சரக்கொன்றை, கருங்கொன்றை, சொர்க்கம், மாதுளை, செம்பருத்தி, சிறியா நங்கை, தூதுவளை உள்ளிட்ட சுமார் 50 வகைகளுக்கு மேலான நாற்றாங்கால் இனங்கள் உள்ளது. குறிப்பாக பழம் தரும் மரக்கன்றுகள் வகைகள், நிழல் தரும் மரக்கன்று வகைகள், மருத்துவகுணம் கொண்ட மரக்கன்று வகைகள் மற்றும் பூத்துக் குலுங்கும் அழகுக்கான மரக்கன்று வகைகள் வளர்க்கப்படுகிறது.இந்த தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை இன்று   நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

AD's



More News