விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (02.12.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.அமர்நாத், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திருமதி இ.கார்த்திகேயனி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள ஜெய் ஹோட்டலில்(02.12.2024) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களுக்கு “காலநிலை மாற்றத்தில் திடக்கழிவு மேலாண்மையின் தாக்கம்(Impact Of Solid Waste Management in Climate Change)” என்ற தலைப்பில் நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஏறத்தாழ 15,000 முதல் 17,000 நபர்கள் சாலை விபத்துக்களினால் மரணமடைகிறார்கள். இதில் 80-90 சதவீதம் நபர்கள் பொருளாதாரத்தில் அவர்களுக்கும், அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருக்கக்கூடிய 18 முதல் 65 வயது வரையிலான காலகட்டத்தில் இருக்கக்கூடியவர்களாக உள்ளனர். இதில் 60-70 விழுக்காடு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தான் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 500 லிருந்து 600 பேர் ஓராண்டில் சாலை விபத்தில் மரணம் அடைகிறார்கள்.அடுத்து மிக முக்கியமான பிரச்சனையாக பார்ப்பது, இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறிப்பாக காற்று மாசுபாடு மற்றும் அது சார்ந்த நிலைகளில் உயிரிழக்கக் கூடியவர்களில் 65 வயதுக்கு கீழே மரணமடைக்கூடியவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தை தொடுகிறது.சாதாரண நிமோனியா காய்ச்சலாக இருந்து நுரையீரலை பாதித்து கடைசியில் இறப்பிற்கு கொண்டு போய் விடுவது அல்லது சில காற்று மாசுபாடுகளின் காரணமாக ஏற்படக்கூடிய நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள், பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவை காற்று மாசுபாடுவதால் ஏற்படும் பிரச்சினைகள்.காற்று மாசடைவதால் ஏற்படக் கூடிய உயிரிழப்பை விட மனிதன் தான் வாழக்கூடிய நாளில் ஆரோக்கியமற்ற ஒரு வாழ்நாளை எதிர்கொள்ளக்கூடிய நாட்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக குடும்ப பொருளாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிப்பது தொற்று நோய்களாக இருக்கக்கூடிய காலரா வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள். அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இதனால் அதிகப்படியான பாதிப்புகள் வருகிறது.தற்போது, ஒரு குழந்தை பிறந்து 7 வயது வரையில் வருடத்திற்கு சராசரியாக 15 நாட்கள் உடல் சரியில்லாமல் போகுமென்றால், சுற்றுச்சூழல் மாசின் காரணமாக அந்த எண்ணிக்கை 20 முதல் 25 ஆக உயரும். அந்த 25 நாட்களும் அந்த நடுத்தர அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் பெற்றோர்கள்; வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை மற்றும் மருத்துவ செலவின் காரணமாக அந்த குடும்பத்தின் பொருளாதாரத்தை பாதிக்கும். இதுபோன்ற பாதிப்புகளின் பொருளாதார மதிப்பீட்டை எடுத்து பார்த்தால், அது மிக அதிக அளவில் இருக்கிறது.எனவே திடக்கழிவு மேலாண்மை என்பது இடத்தை பார்ப்பதற்கு சுத்தமாக வைப்பதற்கான அழகியல் மதிப்பீடு மட்டுமல்லாமல், இதற்கு பின்னால் இருக்கக்கூடிய மனிதர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளில் ஒவ்வொருவரும் மிகப்பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும் சிந்தனையும் செலுத்தக்கூடிய அளவிற்கான பிரச்சனையாக தற்போது உருமாறி இருக்கிறது.மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய சூழலில், அதுவும் அடர்த்தியான மக்கள் தொகை இருக்கக்கூடிய சூழலில், அதுவும் நடுத்தர வர்க்கம் அதற்கு கீழான மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய நாடுகளில் இந்த சுற்றுச்சூழலால் ஏற்படக்கூடிய உடல்நலம் பாதிப்பும், அதை ஒட்டிய பொருளாதார பாதிப்புகழ் அதிகம். எனவே இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.புகைப்பிடித்தல் கூடாது என்று காலங்காலமாக விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாத குப்பைகள் இருப்பதன் மூலமாக நம்முடைய திடக்கழிவு மேலாண்மையை முறையாக செய்யாமல் இருப்பதன் மூலமாக ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அதுவும் குறிப்பாக திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தும் நிலையில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இதற்குப் பின்பு இருக்கக்கூடிய அறிவியலையும், சமூகப் பொருளாதாரத்தையும், எளிய மனிதர்களின் உடல் நலத்தையும் புரிந்திருக்கிறோமா என்பதை எடுத்துக் கூறும் நோக்கில் தான் இந்த பயிற்சி. இது மிக முக்கியமான சமூக பிரச்சனை. இந்தியாவின் தலைநகராக இருக்கக்கூடிய புது டெல்லியில் சமீபத்தில் காற்றின் தரக்குறியீடு அதன் அபாய அளவை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது.அடுத்து குடிநீர் தரத்தின் குறியீட்டை பார்த்தால், திடக்கழிவு மேலாண்மை சரியில்லாமல் உள்ள இடங்களில் நீர்நிலைகளும் மாசடைகிறது. அதுபோல நுரையீரல் புற்றுநோய் நோய், தோல் புற்றுநோய் ஆகியவை சுற்றுச்சூழல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளால் செல்களில் ஏற்படக்கூடிய திடீர் மாற்றத்தினால் உருவாகக் கூடியது. எனவே, திடக்கழிவு மேலாண்மையை முறையாக புரிந்து கொண்டு, தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முறையாக கையாள வேண்டும். திடக்கழிவு மேலாண்மையில் தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம். கடைகள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய திடக்கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். குப்பைகள் கொட்டுவது, திறந்த வெளி மலம் கழித்தல், குப்பைகள் எரிப்பது குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாற்றத்தை உருவாக்க முடியும். எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் திரு.ராமராஜ் உட்பட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (02.12.2024) ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 43 பள்ளி மாணவர்களுடன் ‘Coffee With Collector” என்ற 130-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,IA S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 130-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்;ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2-வது கரிசல் இலக்கியத் திருவிழா- 2024 டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் சிவகாசியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்காக, சிறுகதை எழுதுதல் மற்றும் கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேற்கண்ட போட்டிக்கான படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாக இருக்க வேண்டும். கரிசல் நிலவியல், வாழ்வியல், பண்பாடு, வழக்காறுகள், தொழில்கள், சமூகங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளாக இருக்க வேண்டும்.இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தில் பயிலும் அனைத்து விதமான கல்லூரி மாணவ/மாணவிகள் கலந்து கொள்ளலாம். சிறுகதைப் போட்டிக்கான படைப்புகளை டிசம்பர்-07-க்குள் karisalshortstories@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும். புதுக்கவிதைப் போட்டிக்கான படைப்புகளை டிசம்பர்-07-க்குள் karisalkavithai2024@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94874-21826 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.படைப்புகளை அனுப்பும் போது கல்லூரி / பிரிவு / உள்ளிட்ட விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு வேண்டும்.சிறந்த படைப்புகள் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.இரண்டு போட்டிகளுக்கும் தனித்தனியாக முதல்பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசு ரூ.7,000/- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000/- வழங்கப்படும். சிறந்த 5 கவிதைகளுக்கு ஊக்கப்பரிசு தலா ரூ.2000/- வழங்கப்பட உள்ளது எனவும், இப்போட்டிகளுக்கு 07.12.2024 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் (01.12.2024) உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஒவ்வொரு வருடமும் ‘உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1” அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம், உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1 அனுசரித்தல் நிகழ்ச்சி "உரிமை பாதையில்" என்ற கருப்பொருளை மையமாக வைத்து அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி. /எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பல்வேறு சேவை அமைப்புகளை மாவட்ட அளவில் ஓருங்கிணைத்து எச்.ஐ.வி தடுப்பு மற்றும் ஆதரவு சேவைகளை அளித்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மொபைல் நம்பிக்கை மையங்களின் மூலம் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் எச்.ஐ.வி புதிய தொற்றுகள் இல்லாத நிலையினை உருவாக்கிட தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழக சுகாதார துறை, அரசு சாரா நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும்பிற துறைகளுடன் இணைந்து எச்.ஐ.வி தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் எச்.ஐ.வி தடுப்பு பணிகளை செயல்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம், துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி மற்றும் மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, மாவட்டதிட்டமேலாளர்(எய்ட்ஸ்கட்டுப்பாடு)திரு.வேலையா,மேற்பார்வையாளர்கள், தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு 01.09.2024 வரையிலான புள்ளி விவரங்களின்படி, மாவட்டத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 22 மாணவர்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 130 மாணவர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 மாணவர்களும்,திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 31 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 68 மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 63 மாணவர்களும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 18 மாணவர்களும் என மொத்தம் 534 மாணவர்கள் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கும் மேலாக இடைநிற்றல் மாணவர்களாக உள்ளனர்.இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), துணை ஆட்சியர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட அலுவலர்களுக்கு ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தனித்தனியாக இடைநின்ற மாணவர்களின் விபரங்கள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு அலுவலர்களும் , மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர நடவடிக்கை எடுக்கும் வகையில், நவம்பர்-2024 முதல் வாரத்திலிருந்து கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்;குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (30.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பட்டி ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், ரூ.55 ஆயிரம் மானியத்தில் ஒரு வீடு சீரமைக்கப்பட்டுள்ளதையும்,கவுண்டம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.12.12 இலட்சம் மதிப்பீட்டில், புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளதையும்,பின்னர், செவலூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.5.63 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரியினையும்,அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ், தலா ரூ.55 ஆயிரம் மானியத்தில் இரண்டு வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும்,புதுக்கோட்டை ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தலா ரூ.3.10 இலட்சம் மானியத்தில் 2 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,மேலும், எம்.புதுப்பட்டி ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ. 126.57 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும்,கட்டசின்னம்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.14.41 இலட்சம் மதிப்பீட்டில் முனியாண்டி கோவில் ஊரணி வரத்து கால்வாய் தூர்வாரப்பட்டு வருவதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (29.11.2024) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விபத்து மரண உதவித்தொகைகளையும் மற்றும் கட்டுமானத் தொழிலாளியின் குழந்தைக்கு கல்வி உதவித்தொகையினையும் என மொத்தம் ரூ.10.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.அதன்படி, கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கட்டுமானத் தொழிலாளி லேட் திரு.காளிராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகையினையும், லேட் திரு.மாரிச்செல்வம் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான உதவித்தொகையினையும் என மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவி தொகைக்கான காசோலைகளையும்,கட்டுமானத் தொழிலாளி திரு.சீமைச்சாமி என்பவரின் மகன் செல்வன் ஸ்ரீமான் என்பவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவப்படிப்பு பயிலுவதற்கான கல்வி உதவித்தொகை ரூ.50,000/-க்கான ஆணையையும் என மொத்தம் ரூ.10.50 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வின் போது, தொழிலாளர் உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிதாஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பிற்கிணங்க 09.12.2024 அன்று ஜவகர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் இப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும் .ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு- 1. இந்தியாவின் பிரதமாராக நேருவின் பணி 2. அண்ணல் காந்தியின் வழியில் நேரு 3. பஞ்சசீலக் கொள்கை கல்லூரி மாணவர்களுக்கு- 1. நேருவின் வெளியுறவுக்கொள்கை 2. நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் 3. சுதந்திரப் போராட்டத்தில் நேரு.பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000-, இரண்டாம்பரிசு ரூ.3000-, மூன்றாம் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர்கள், துணை சுகாதார செவிலியர், இயன்முறை மருத்துவர் மற்றும் நுண்கதிர் வீச்சாளார் ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 12.12.2024 பிற்பகல் 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.