25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 15, 2024

புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் பதிவு சான்றிதழ் பெறாமல் இயங்கி வரும் நாட்டு/சேம்பர் செங்கல் சூளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து சேம்பர்/நாட்டு சூளைகள் பதிவு பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் பெற்று நாட்டு செங்கல் சூளை பதிவு கட்டணம் ரூ.300/-, சேம்பர் பதிவு கட்டணம் ரூ.3000/-, சேம்பர்/நாட்டு செங்கல்சூளை விண்ணப்பக் கட்டணம் ரூ.1500/- மற்றும் மண்ணுக்குரிய ஆண்டு கனிம கட்டணம் நாட்டு செங்கல்சூளைக்கு 1 முதல் 14 அடுப்புகள் வரை ரூ.10,000/-, 15 அடுப்புகளுக்கு மேல் ரூ.12,000/, சேம்பர் செங்கல் சூளைக்கு 1 முதல் 16 அடுப்புகளுக்கு ரூ. 60,000/-, 17 முதல் 26 அடுப்புகளுக்கு ரூ.75,000/- மற்றும் 27 அடுப்புகளுக்கு மேல் ரூ.90,000/-  அரசுக்கு செலுத்தி முறைபடுத்திட செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.மேலும், நடப்பாண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில்1. திரு.கிருஷ்ணன் த/பெ பெத்தணன், 2.திரு.ராமசாமி த/பெ சோலைசெட்டியார், 3.திரு.பெருமாள் பிச்சை த/பெ சீனிவாசகன், 4.திரு.திருப்பதி த/பெ கிருஷ்ணன், 5.திரு.அழகர்சாமி த/பெ சோலைசெட்டியார் ஆகியோருக்கு சொந்தமான நாட்டு செங்கல் சூளையும், சிங்கம்மாள்புரம் கிராமத்தில் 6.திரு.முருகன் த/பெ ராமசாமி, 7.திரு.சேதுராமசாமி த/பெ ராமசாமி, மற்றும் 8.திரு.கோவிந்தராஜ் த/பெ கோபால் ஆகியோருக்கு சொந்தமான நாட்டு செங்கல் சூளைகளும் (மொத்தம் எட்டு) மட்டுமே முறையாக  செங்கல்சூளை பதிவு சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்நேர்வில், விருதுநகர் மாவட்டத்தில் செங்கல்சூளை பதிவு சான்றிதழ் பெறாமல் இயங்கி வரும் நாட்டு/சேம்பர் செங்கல்சூளை உடனடியாக உதவி இயக்குநர் அலுவலத்தை அனுகி உடனடியாக பதிவு சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 14, 2024

காரியாபட்டியில் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி பேருந்து நிலைய வணிக வளாகம் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அலங்கார வளைவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும்அமைச்சர்கள்  திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் பேரூராட்சியில், பேரூராட்சிகள் துறை சார்பில், ரூ.2.11 கோடி மதிப்பில்  புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி பேருந்து நிலைய வணிக வளாகம் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அலங்கார வளைவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில்,   நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்(13.10.2024) திறந்து வைத்தனர்.அதன்படி விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடங்களையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அலங்கார வளைவுகளையும், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கடைகள், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.13.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் என மொத்தம் ரூ.2.11 கோடி  மதிப்பிலான பல்வேறு புதிய கட்டமைப்புகளை அமைச்சர் பெருமக்கள் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, நகராட்சி நிர்வாகத்துறைக்கு  கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா ரூ.24 ஆயிரம் கோடி என ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இதுவரை இல்லாத வகையில் ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கும் ரூ.20 கோடி முதல் 25 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசின் காலகட்டத்தில்தான். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 60 சதவிகிதம் மக்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதிக நிதிகளை வழங்கி திட்ட பணிகளை மேற்கொள்வதால் தான், இந்த அளவுக்கு தமிழகத்தில் உள்ள 25 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர முடிகிறது.நகராட்சிகளை பொறுத்தவரையில் சாலைகள், பாதாள சாக்கடைகள், புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நகர்ப்புற வளர்ச்சிகளில் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அனைவருக்கும் உரிய குடிநீர் தர வேண்டும். சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நல்ல மின்சார வசதிகளை தர வேண்டும். மழைநீர் சேமிப்பு வசதிகளை தர வேண்டும். இந்த பணிகளை செய்வதற்காகத்தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதிகளவு நிதிகளை தந்து கொண்டிருக்கின்றார் .முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்பதற்கு முன்னால் வரை, தமிழ்நாட்டில் சுமார் 4.26 கோடி மக்களுக்குத்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தரப்பட்டது. தற்போது கடந்த மூன்று ஆண்டு காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ஏறத்தாழ ரூ.30 ஆயிரம் கோடி பணம் ஒதுக்கீடு செய்து, பணிகள் மேற்கொண்டு, கூடுதலாக 3 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 1 கோடியே 25 இலட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுத்தாகி விட்டது. மீதமுள்ள சுமார் 1.75 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குடிநீர் திட்டங்கள் மட்டுமல்ல, கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டங்கள் சென்னையில் உருவாகி வருகிறது.மேலும், 20,000 மக்களுக்கு மேலாக உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றுவதற்கும், 25 ஆயிரம் மக்களுக்கும் மேலாக இருக்கின்ற பகுதிகளை நகராட்சியாக மாற்றுவதற்கும், 1.5 இலட்சம் மக்கள் தொகை இருந்தால், அதை மாநகராட்சியாக மாற்றுவதற்கும், அதிக மக்கள் வாழும் ஊராட்சிகளை பிரித்து, புதிய ஊராட்சிகளை உருவாக்குவதற்கும், புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கி, உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வாய்ப்பு அளிக்கவும் அரசு அதிகாரிகளின் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.எனவே, குடிநீராக இருந்தாலும், சாலைகள், பாதாளச்சாக்கடை, மழைநீர் சேமிப்பு, உள்ளிட்ட வசதிகளாக இருந்தாலும், வணிக வளாகங்களாக இருந்தாலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, பொது மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகராட்சி அமைப்புகள், பேரூராட்சி அமைப்புகள், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  குடிநீர் வசதி, சாலை, பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சி போன்ற அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற  உயர்ந்த நோக்கில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், வைகை நதியிலிருந்து குடிநீர் திட்டம் உள்ளிட்டவைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுமார் ரூ.75 கோடி அளவிற்கு வைகையிலிருந்து  காரியாபட்டி பேரூராட்சிகளுக்கு தண்ணீர் தருவதற்கு ஒரு புதிய திட்டம் இந்த ஆண்டு அரசு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வைகையிலிருந்து நிலையூர், கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.   சென்னம்பட்டி அணைக்கட்டில் இருந்து கால்வாயில் அரை நூற்றாண்டு காலத்திற்கு பின்பு தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது என்றால், இந்த பூமி தண்ணீர் தேசமாக உருவாகி இருக்கிறது. அனைத்து இடங்களிலும் பூமி செழுக்கிறது. விவசாயம் செழுக்கிறது. இந்த பெருமை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சேரும்.காரியாபட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.168.00 இலட்சம் மதிப்பீட்டில் காரியாபட்டி பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாக கடைகளானது தரைத்தளம் மற்றும் முதல்தளம் என இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் 26 எண்ணம் கடைகள் பேருந்து நிலைய உட்புறமும், 10 எண்ணம் கடைகள் வெளிப்புறமும் அமைக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி நகரை சுற்றி அருகில் உள்ள 135 கிராமங்களும் தினசரி பயன்படுத்தும் பேருந்து நிலையமாக உள்ளதால் பேரூராட்சியின் வருவாயை நிறைவேற்றும் வண்ணம் கடைகள் கட்டப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் 4 தொடக்கப்பள்ளிகளும், 2 நடுநிலைபள்ளிகளும் 3 உயர்நிலைபள்ளிகளும், 2 அரசு மேல்நிலை பள்ளிகளும் உள்ளதால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். மேலும் இப்பேரூராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரி வந்து செல்லும் வணிக நகரமாக உள்ளதால், இந்த வசதிகள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

Oct 14, 2024

தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது சிலைக்கு, விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன் அவர்கள் மற்றும் சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் அவர்கள் ஆகியோர் (13.10.2024) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Oct 12, 2024

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (10.10.2024)  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு.செ.ஆனந்த் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.மாவட்டத்தில்  1000- த்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளும், 3000- த்திற்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், விபத்துக்களை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் இருக்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக தொடர்ச்சியாக இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் அடங்கிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான  கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு முடிவுகள், தீர்மானங்கள் எடுக்கப்பட்டு பட்டாசு தொழிற்சாலைகளில்,  பாதுகாப்பான உற்பத்திகள் செய்வதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.தற்பொழுது வரக்கூடிய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி, எந்தெந்த சூழ்நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து தெரிந்து கொண்டு, உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட விபத்துகளில் எந்தெந்த சூழலில் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றது என்பன குறித்தும் ஆய்வு செய்து பார்த்தால்,  அதில் பெரும்பாலும் மனித தவறுகளால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்களை எப்படி கையாள்வது, விபத்துக்களை எவ்வாறு முற்றிலுமாக தவிர்ப்பது என்பது குறித்த பயிற்சி வகுப்புகள் மிக மிக முக்கியம். எனவே, இந்த கூட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு, அரசின் மூலம் பட்டாசு விபத்தினை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்கள், உறுதுணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் 1570 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1101 உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. மற்ற தொழிற்சாலைகளில் நிகழும் விபத்துக்களை விட பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்கள்  அதிகமாக ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகமாக உள்ளதால், பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்களை தடுக்க, விரும்பும் உரிய மாற்றம் எப்பொழுதுமே நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். நாம் எந்த விதமான மாற்றங்கள் தொழிற்சாலையில் நடைபெற வேண்டும் என்றும்,  எது நடக்க கூடாது  என்றும் நாம் செய்யும் செயல்களினால் தான் முடிவாகிறது.2023 ஆம் ஆண்டு பட்டாசு தொழிற்சாலை விபத்தில் தமிழ்நாட்டில்; 27 விபத்துக்களில் 79 தொழிலாளர்கள்  இறந்துள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 15 விபத்துக்களில்  28 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட 17 விபத்துக்களில் 52 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில், 12 விபத்துகளில் 42 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக  அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து உற்பத்தியை மேற்கொள்வது ஒன்றே தீர்வாகும். 2023 - 2024 ஆம் ஆண்டில் நடந்த  வெடி விபத்துக்களை பகுப்பாய்வு செய்து பார்த்த பொழுது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக இரசாயனங்களை பயன்படுத்துவதாலும், அதிகமான  நபர்களை பணிக்கு அமர்த்துவதாலும் இரசாயனங்கள் நீர்த்து போவதாலும், இரசாயனங்களை கலவை செய்யும் பொழுதும், உராய்வு, அதிர்ச்சி, இரும்பால் ஆன பொருட்கள் மூலமாகவும் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது.மேலும், இதில் 80 சதவிகிதம் விபத்துக்கள் மனித தவறுகளால் தான் ஏற்படுகிறது.  எனவே, பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி அனைவரும் தங்களை பாதுகாத்து கொண்டு, பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்கள் - தொழிற்சாலைகள் சட்டம், வெடிபொருள் சட்டம், படைக்கலச் சட்டம், பட்டாசு உற்பத்தியில் நிர்வாகத்தின் பங்கு, தொழிலாளர் பங்கு, சட்ட விரோத பட்டாசு தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Oct 12, 2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (10.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் , I A S ,, அவர்கள் நேரில் சென்று, கோட்ட அளவிலான வருவாய்த்துறை கோப்புகள், பணிகள் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து, அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் தற்போதைய நிலை உள்ளிட்டவை குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். உடன் சாத்தூர் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் அவர்கள் உள்ளார்.

Oct 12, 2024

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)    2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில்  இந்த ஆண்டு (2024-2025) முதல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ்  கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ராபி பருவத்தில் (அக்டோபர் முதல்) பயிர் செய்யவுள்ள பயிர்களுக்கு விவசாயிகள்  அனைவரும் வங்கிகள்ஃ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres (CSC)) மூலமாகவோ பயிர்களை காப்பீடு  செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு  சம்பா-நெல் பயிருக்கு      ரூ. 447ஃ- எனவும், மக்காச்சோளம்  பயிருக்கு ரூ. 316/- எனவும், சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 135/- எனவும், கம்பு பயிருக்கு ரூ. 160/- எனவும், பாசிப்பயறு, உளுந்து, துவரை பயிர்களுக்கு ரூ.228/- எனவும், பருத்தி பயிருக்கு ரூ.441/- எனவும், நிலக்கடலை பயிருக்கு ரூ.311/- எனவும், எள் பயிருக்கு ரூ.120/- எனவும் மற்றும்  சூரியகாந்தி பயிருக்கு ரூ.187/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்  கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணம் ஏக்கருக்கு கொத்தமல்லி பயிருக்கு ரூ.568/- எனவும், மிளகாய் பயிருக்கு ரூ.1005/- எனவும், வெங்காயம் பயிருக்கு ரூ.1744/- எனவும் மற்றும் வாழை பயிருக்கு ரூ.3404/- எனவும் தெரிவிக்கப்படுகிறது.விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டின் நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகளுக்கு 15.11.2024 எனவும், மக்காச்சோளம், கம்பு,  துவரை மற்றும் பருத்தி பயிர்களுக்கு 30.11.2024, சம்பா-நெல் மற்றும்   சோளம் பயிருக்கு 16.12.2024; எனவும், நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி பயிர்களுக்கு 30.12.2024; எனவும் மற்றும் எள் பயிருக்கு 31.01.2025 வரையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு பதிவு செய்ய கடைசி நாள் கொத்தமல்லி பயிருக்கு 17.01.2025; எனவும் மிளகாய் மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு 31.01.2025 எனவும் மற்றும் வாழை பயிர்களுக்கு 28.02.2025 எனவும் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book)  முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ  உரிய காப்பீடு கட்டணம் (Premium)  செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Oct 12, 2024

இளம் சாதனையாளர்களுக்காக பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoarship Portal) விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளர்களுக்காக பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoarship Portal)  விண்ணப்பிக்கலாம்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:  இதர பிற்படுத்தபட்டோர், பொருளாhரத்தில் பின் தங்கியவர்கள்,சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.                     இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம்,   இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2024, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள்: 31.10.2024புதுப்பித்தல்:  இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Schoalrship Portal) Renewal Application )  என்ற இணைப்பில் (Link)  சென்று OTR Number (One Time Registration)) பதிவு செய்து 2024-2025 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.புதியது இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும். எனவே , 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் ((Mobile number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரப்பெறும். மேற்படி , OTR Number பயன்படுத்தி  2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (http://schlarship.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை  பயன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Oct 12, 2024

மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா-2024, நிறைவு நாள் நிகழ்ச்சி

விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் (10.10.2024) மூன்றாவது விருதுநகர் புத்தக திருவிழா-2024 நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த புத்தக திருவிழாக்கள் மாவட்டந்தோறும் தலைநகரங்களில் நடக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு, அதன்படி, 2021 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு, இந்த ஆண்டு மூன்றாவது புத்தகத் திருவிழா நமது விருதுநகர் மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த புத்தகத்தில் திருவிழா நடந்த 14 நாட்களாக பள்ளி குழந்தைகள், இளைஞர்கள், பொதுமக்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் என ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து புத்தகத் திருவிழாவை கண்டு களித்து இருக்கிறார்கள்.இந்த புத்தகத் திருவிழா கடந்த ஆண்டை ஒப்பிடுகின்ற போது, கடந்த ஆண்டு விட ஆயிரக்கணக்கான மக்கள் கூடுதலாக இதைக் கண்டு ரசித்திருக்கிறார்கள். விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததற்கு பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரவேண்டும்  என்பதற்காக கடந்த மூன்று நாட்கள் மட்டும் புத்தகத் திருவிழா நீட்டிக்கப்பட்டது.ஏறத்தாழ 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள்  புத்தக திருவிழாவினை கண்டுகழித்து  இருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு விற்பனையில்  ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவில் புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன.ஆனால் புத்தகத் திருவிழாவினுடைய நோக்கம் என்பது புத்தகத்தினுடைய விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். புத்தகத்தினுடைய விற்பனை வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது முக்கியமான தேவையாக இருந்தாலும்,  புத்தகத் திருவிழாவினுடைய நோக்கம் அந்த வணிக நோக்கம் மட்டுமல்ல.ஏனென்றால் புத்தகத் திருவிழாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடத்துவதை விட தற்பொழுது நடத்துவதற்கு தான் மிக அதிகமான தேவை இருக்கிறது. சென்ற தலைமுறைகளில்  ஒவ்வொரு வீடுகளிலும் ஏதாவது ஒரு  பத்திரிக்கையாவது வாசித்து கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒன்றை வாசிப்பது அவர்களின் தேவையாக இருந்தது. ஏனென்றால் அன்று கையில் கைபேசி இல்லை. இன்று கைப்பேசி தரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை பார்ப்பதற்கு நமக்கு உண்மையிலேயே நேரமில்லை.இன்று கைபேசியில் உள்ள சிறந்த படங்களை பார்ப்பதற்கு நமக்கு நேரம் பத்தாது, அந்த அளவுக்கு படங்கள், சிறந்த படங்கள் இருக்கின்றன. ஆனால் இது போன்று இன்று எல்லாவற்றிற்குமே நமக்கு கைப்பேசி அவ்வளவு பெரிய வாய்ப்பாக இருக்கிறது.ஒரு விசயத்தை  தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டால் அதற்கான தேவை மறைந்து விடுகிறது. இது மனித உடலின் அறிவியலும் அதைத்தான் சொல்கிறது. நமது உடலில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தாமல் தற்போது ஒரு தேவையற்றதாக இருக்கக்கூடிய வால் ஞானப்பல், குடல்வாழ்  ஆகியவையே அதற்கு உதாரணம்.எந்த ஒன்றை நாம் பயன்படுத்தாமல் இருக்கின்றோமே, அது காலப்போக்கில் கரைந்து காணாமல் போய்விடும். அதற்கு நமது உடம்பு சிறந்த உதாரணம். இது போன்ற மாற்றம் தான் இன்று ஆரம்பித்து இருக்கின்றது. நம்மளுடைய மிக அதிக அடிப்படையான மனிதருக்கு உரிய திறன்களாக இருக்கக்கூடிய சிந்தனைத் திறனுக்கான தேவையை தொழில்நுட்பங்கள்  தேவையற்றதாகி  கொண்டிருக்கின்றது. இன்று இருக்கக்கூடிய நவீன தொழில்நுட்பம் குறிப்பாக இன்று ஆரம்பித்து மிகப்பெரிய பயன்பாட்டை தொடங்கியிருக்க கூடிய தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.  இந்த தொழில்நுட்பம்  மனித குலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இது  நிச்சயமாக தேவையான ஒன்று தான்.  ஆனால் இதுபோன்று நமக்கு அடிப்படையாக இருக்கக் கூடிய அடிப்படை சிந்தனை திறன்,  பண்புகளை  நாம் மறந்து விடக்கூடாது.எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும்  அவையெல்லாம் மனிதர்களுடைய திறன்களுக்கு உறுதுணையாக தான் இருக்க முடியுமே தவிர ஒருபோதும் மனிதருடைய திறன்களை நகர்த்தி விட்டு, அந்த இடத்தை அது பிடித்துக் கொள்ள முடியாது. அது பிடித்துக் கொள்வது மனிதர்களுக்கு நீண்ட காலம் ஒரு நன்மையை தரக்கூடியதாக இருக்காது என  ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.ஓராண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பக்கங்களையாவது  படிக்கின்ற போது தான் நமக்கான சுய சிந்தனை வளரும்.ஆனால் எல்லோரும் சொல்லக்கூடிய அறிவுரைகளை நாம் புரிந்து கொள்வதற்கும், நமக்கு எது சரி எது தவறு என்று சொல்லக்கூடிய, வரக்கூடிய தகவல்களில் எவற்றையெல்லாம் நம்ப வேண்டும், எவற்றையெல்லாம் ஆராய வேண்டும் என்பது குறித்து புரிந்து கொள்வதற்கான  மிக அடிப்படை தேவையான தனி மனிதனுடைய அறிவும், சிந்தனையும் இன்றைய தொழில்நுட்ப உலகம் நமக்கு அதற்கான இடத்தையும் நேரத்தையும் தர மறுக்கிறது. அது நமக்கு தெரிவதில்லை.இன்று  கைப்பேசிகளில் உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் நாம் பார்க்கும்  நமக்கு பிடித்த ஒன்று தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். அதனால் அதில் நாம் அதிகநேரம் செலவழித்து  விடுகிறோம்.இது போன்ற தொழில்நுட்பங்கள் தரக்கூடியது, நம்முடைய நேரத்தையும் நம்முடைய சிந்தனையையும் அதை நோக்கி அது இழுத்துக் கொண்டிருக்கிறது.  இதை புரிந்து கொண்டு நமக்கான பொழுதுபோக்குகள் என்ன இணையதளத்திலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களிலும் எவற்றையெல்லாம்  பயன்படுத்திக் கொள்ள  வேண்டுமோ, அதை பயன்படுத்த வேண்டும். மனிதர்களுக்கு  மிக அடிப்படையாக இருக்கக் கூடிய அவர்களுடைய அடிப்படை சிந்தனையை,  இந்த தொழில்நுட்பங்கள் நகர்த்தி விடுவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. அதற்கான ஒரு மாற்று வாய்ப்புகளை சொல்லித் தருவது தான் புத்தகத் திருவிழாக்கள். ஒவ்வொருவருக்கும்  ஏதேனும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு புத்தகங்கள் நிச்சயமாக உதவுகிறது.  இன்று நாம் வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்க கூடிய ஒரு பொருள்  இளைஞர்களிடத்தில் இருக்கக்கூடிய போதை பழக்கம்.இன்று இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு, நம் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டும் என்றால் இது போன்ற பல்வேறு திசை மாற்றிகளை நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.ஒரு விஷயத்தை பண்ணாதே என்று சொல்வதன் மூலம் அதில் அவ்வளவு வெற்றி கிடைக்காது. அவர்களை அந்த செயல்களில் இருந்து வேறு ஒன்றுக்கு செயல்பட வைப்பதற்கு அறிமுகப்படுத்த வேண்டியது மூத்தவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுடைய கடமை. அவர்களுக்கு அது போன்ற வேறு நல்ல வாய்ப்புகள் உருவாக்கி தர வேண்டியது மிக முக்கியம். அந்த வேறு வாய்ப்புகளில் மிக முக்கியமான ஒன்று, ஏதேனும் ஒரு துறையில் புத்தகங்களை வாசிக்க வைப்பது தான்.இன்று வாசிப்பது என்பது நாம் கிடைக்கக்கூடிய நேரத்தில் பொழுதுபோக்குக்கான தேவைகள் என்று இல்லை. அது கடந்த தலைமுறையில் இருந்தது. இன்று நாம் நேரத்தை ஒதுக்கி ஏதாவது ஒரு பொருள் குறித்து ஒன்று, இரண்டு பக்கங்களாவது வாசிக்கத் தொடங்க வேண்டும். அதன் மூலமாக நமக்கு ஏற்படக்கூடிய நம்பிக்கைகளும், நமக்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகளும், சிந்தனை மாற்றங்களும் நிச்சயமாக நமக்கு உதவும்.  அதற்காகத்தான் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.நமது  விருதுநகரில் பங்குனி திருவிழாவிற்கு அடுத்து,  நிறைய பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடக் கூடிய ஒரு நிகழ்ச்சியாக இந்த புத்தகத் திருவிழா  இருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் பெருமை.இன்னும் கூட்டங்கள் அதிகமாக வர வேண்டும். இது குறித்த விழிப்புணர்வும் புத்தக திருவிழாவுக்கு வர வேண்டிய சூழலும் தேவையும் நிச்சயமாக வருங்காலத்தில் ஏற்படும் என்று  உறுதியாக நம்புகிறேன்.புத்தக திருவிழா என்பது ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கக்கூடிய ஒரு  திருவிழாவாக, நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கக்கூடிய செல்வத்திற்கு ஒரு பகுதியாக இந்த புத்தகத் திருவிழாவை உருவாக்க  வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும்,  இந்த புத்தககத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக பணியாற்றிய அரசு  அலுவலர்களை பாராட்டி, வாழ்த்து மடல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், சிறப்பாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுப்பணியாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.மேலும், இந்த புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்  மாவட்ட ஆட்சித்தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு, 1,07,574 பார்வையாளர்கள்  கலந்து கொண்டுள்ளனர். மேலும் 5592 மாணவர்கள் புத்தக உண்டியல் மூலம் சேமிக்கப்பட்ட பணத்தின் வாயிலாக புத்தகத்தை வாங்கி சென்றுள்ளனர். இந்த புத்தக திருவிழாவில்  சுமார் ஒரு கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, சார் ஆட்சியர்(சிவகாசி) திருமதி ந.ப்ரியா ரவிசந்திரன்,இ.ஆ.ப., தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு. பிர்தௌஸ் பாத்திமா, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சிவகுமார் (சாத்தூர்), திரு.வள்ளிக்கண்ணு,(அருப்புக்கோட்டை) உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 12, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் அக்டோபர்-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  கேட்டுக் கொள்கிறார்கள்.

Oct 10, 2024

மாவட்டத்தில் உள்ள ஒருமித்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதியுதவி தொடர்புடைய தகவல் பரப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் செயல்படுத்தப்பட்டு  வரும் திட்டங்களில் வழங்கப்படும் நிதியுதவி குறித்து, மாவட்டத்தில் உள்ள ஒருமித்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான  நிதியுதவி தொடர்புடைய தகவல் பரப்பு நிகழ்ச்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,  I A S., அவர்கள் (08.10.2024) அன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து உரையாற்றினார்.குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில்களில் இந்திய அளவில்  மிக முக்கியமான இடத்தை வகிப்பது விருதுநகர் மாவட்டம். குறிப்பாக சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை  உள்ளிட்ட வட்டங்களில் அதிகப்படியான  நிறுவனங்கள் உள்ளன.இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்தியாவின்  பொருளாதாரத்திற்கான முதுகெலும்பு.  ஏனென்றால் நாட்டினுடைய உள்நாட்டு உற்பத்தியில்  30 விழுக்காடும், மொத்த தனியார் நிறுவனங்களினுடைய வேலை வாய்ப்பில் 50 விழுக்காட்டையும், குறு, சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்கள் தான் பங்கு வகிக்கின்றன.    நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய குறியீட்டில் ஒன்றான  மக்கள் கையில் பணப்புழக்கத்திற்கான குறியீட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  நேரடி தொடர்பு உள்ளது.மாவட்டத்தில் இந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு  மாதமும் வங்கியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கடனுதவிகள், மானியங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் பகுதி வாரியாக இந்த நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தினுடைய கிழக்கு பகுதியான அருப்புக்கோட்டை பகுதிகளில் பெரிய தொழில் வளர்ச்சிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.  அங்கு அரசினுடைய முக்கியமான திட்டமான ஏறத்தாழ  800  ஏக்கர் நிலப்பரப்பில்  உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்கா வரவிருக்கிறது. விருதுநகர்- சாத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள குமாரலிங்கபுரத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்று இந்த பகுதியில் பல்வேறு  பெரிய நிறுவனங்கள்  வரக்கூடிய சூழலில்  அதை ஒட்டி செயல்படக்கூடிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடைய வளர்ச்சியும் மிக முக்கியமான பங்காற்றக்கூடிய  வாய்ப்பை பெறும். குறிப்பாக சிவகாசி பகுதிகளில் ஏறத்தாழ 400 க்கும் மேற்பட்ட பெரிய அச்சுத் தொழில் நிறுவனங்களும் அதை ஒட்டி இருக்கக்கூடிய 1000 க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களும், பட்டாசு தொழிற்சாலைகளை பொறுத்த வரையில் 1400 க்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சாலை உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நகரினுடைய வளர்ச்சிக்கு ஏற்ப பொழுதுபோக்கு சூழல்களிலும், மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதற்கான பணிகளுக்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை  உள்ளிட்ட வட்டங்களில் அதிகப்படியான  நிறுவனங்கள் உள்ளன.நமது மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் முடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுகின்ற போது இந்த நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் வணிக சுற்றுச்சூழல் நன்றாக உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.  நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சிகள்  வழங்கப்பட்டு வருகின்றது. நமது மாவட்டத்தில் இந்த பகுதியில் கல்வியில் சிறந்த மாணவர்கள் உள்ளனர். உங்களுக்கு தேவையான பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கல்லூரியின் இறுதி ஆண்டுகளில் வேலை வாய்ப்பு தேடும் போது, உங்களுக்கு தேவையான தகுதியின் அடிப்படையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு திறன் மேம்பாடாக பயிற்சி அளிக்க முடியும்.உங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணிகளுக்கான திறன்களை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக வாய்ப்பு இருக்கின்றது. நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு உட்கட்டமைப்பு தேவைகள், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கட்டமைப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும்,  இது தொடர்பாக அரசுக்கு எதுவும் முன்மொழிவை தர வேண்டும் என்றாலும், எப்போதும் நீங்கள் தாராளமாக எங்களை  சந்திக்கலாம். மேலும், ஆலோசனைகளை குறைகளையும் தெரிவிக்கலாம். என நமது மாவட்டத்தினுடைய தொழில் வளர்ச்சிக்கு இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் தொழில் வளர்ச்சிக்கும் நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்போடு மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றோம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  , அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.இராமசுப்பிரமணியன், சிறு, குறு, நடுத்தர நிறுவன பிரதிநிதிகள், வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 68 69

AD's



More News