25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 28, 2025

தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் கே.வி.எஸ் ஆங்கில பள்ளியில் (28.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் LMES அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து, உரையாற்றினார்.அறிவியல் என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் எந்த ஒன்றையும்; அறிவியல் பார்வையோடும், மனப்பாங்கோடும் பார்க்க வேண்டும்.  இதனை திருவள்ளுவர்எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று குறிப்பிடுகிறார்.இதில் மெய்ப்பொருள் என்பதற்கு பதிலாக அறிவியலின் படி காண்பது தான் அறிவு என்று அன்றே திருவள்ளுவர் அறிவியல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.நாம் அனைவரும் அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது தான் உண்மையான அறிவு. எனவே, மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அறிவியல் அறிவையும், அறிவியல் மனப்பாங்கையும் ஒருங்கிணைத்து பெற வேண்டும்.எனவே, ஆசிரியர்கள் அனைவரும் இது போன்ற அறிவியல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.மேலும், பெர்னொல்லியின் துப்பாக்கி, மிதக்கும் பந்து, கிரேக்க உபசாரத் தட்டு, தர்பூசணி வெடிப்பு, துளி நைட்ரஜன் தெளிப்பு, பியூட்டேன் மற்றும் அசிட்டோன் வாயு ராக்கெட், காற்று பெரிய துப்பாக்கி, யானை பேஸ்ட் பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்தில் இருந்தும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள், 120 அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 28, 2025

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வோர், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம் 04.03.2025-அன்று நடைபெற உள்ளது

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் செய்வோர், நிலமற்ற ஏழை விவசாயிகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் உள்ளது. பிற திட்டங்களின் மூலமாக கல்வி உதவித்தொகை பெற்றாலும், கூடுதலாக இத்திட்டத்தின் மூலமாகவும் கல்வி உதவித்தொகை பெறலாம்.இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏழை விவசாயிகளின் குடும்பங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமணம், மற்றும் பதிவு பெற்ற விவசாயிகளின் இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும்  காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ், டையாலிஸிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்காக தகுதியான கூடுதல் பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன்படி மாவட்டத்தின் அனைத்து வருவாய் வட்டங்களிலும் வரும் 04.03.2025 -ஆம் தேதி நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 27, 2025

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (27.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சல்வார்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.10 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.பின்னர், தாயில்பட்டி ஊராட்சியில், மண்குண்டாம்பட்டி கிராமத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குழாய் பாலம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், ஜெ.ஜெ.நகரில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,தொடர்ந்து, எதிர்க்கோட்டை ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Feb 27, 2025

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டிற்கான எட்டாம் வகுப்பு தகுதித்தேர்வு சேர்க்கை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இத்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026, பருவத்தில் 8- ம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் சென்னை உட்பட குறிப்பிட்ட சில-மையங்களில் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும், எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களைக் கொண்டது.கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும். நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை - ‘கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட்-248 003” என்ற முகவரிக்கு வரைவோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின், இணையவழியான www.rimc.gov.in    மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.வரைவோலை மூலமாக(By sending Demand Draft) பெற கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட், டேராடூன், உத்தரகாண்ட் - 248 003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து ‘கமாண்டண்ட் இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி டேராடூன்” அவர்களுக்கு வரைவோலைக்குரிய கிளை எச்.டி.எப்.சி. வங்கி, பல்லூபூர் சௌக்,  டேராடூன் (வங்கி குறியீடு -1399) உத்தரகாண்ட்டில் செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினர் ரூ.600- யையும் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கான வரைவோலையை அனுப்பி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.இணையவழி மூலம் (on-line payment)  இராஸ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையவழியான www.rimc.gov.in  மூலமாக பொதுப் பிரிவினர் ரூ.600- யையும் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-யையும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். (கட்டணம் பெறப்பட்ட பின் விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு ஆகியவை விரைவு அஞ்சல் வாயிலாக இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி, கர்ஹிகாண்ட் டேராடூன். உத்தரகாண்ட் 248 003 லிருந்து அனுப்பப்படும்).குறிப்பு:    கமாண்டன்ட் இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி கர்ஹிகான்ட் டேராடூன். உத்தரகாண்ட் அஞ்சல் குறியீட்டு எண் 248-003 என்ற முகவரியை அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் தொடர்பு எண்ணைத் தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அனுப்புதல் வேண்டும்.விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவங்கள். ஒளிநகல் எடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அல்லது இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் (Hologram) முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.அஞ்சல் துறையின் தாமதத்திற்கு இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி பொறுப்பல்ல. தவறான அல்லது முழுமையடையாத முகவரியால் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு போக்குவரத்தில் ஏற்படும் அஞ்சல் துறையின் தாமதம் அல்லது இழப்புக்கு இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி பொறுப்பேற்காது.எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பக் கட்டணம் திரும்பச் செலுத்தப்படமாட்டாது.விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின் மற்றும் சிறுமியர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01-01-2026 அன்று 11 ½ வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02-01-2013-க்கு முன்னதாகவும் 01-07-2014 - க்கு பின்னதாகவும் பிறந்திருத்தல் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட இராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும் பொழுது. அதாவது 01-01-2026- ல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் (Recognized School) ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டிப்பு படியுடன்) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரிக்கு 31.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், மற்ற விவரங்களுக்கு www.rimc.gov.in என்ற இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணையதள சேவையினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 27, 2025

“கலங்கரை”ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (27.2.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து,  விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள “கலங்கரை” - ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.மாதவன் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.போதைப் பொருள் பயன்பாடு என்பது தனி மனிதரின் ஆரோக்கியத்திற்கும், குடும்ப நலத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது. இத்தடையை உடைத்து, போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட “போதை ஒழியட்டும், வாழ்க்கைப் பாதை ஒளிரட்டும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்தகைய உயரிய நோக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கிட அரியலூர், தருமபுரி, ஈரோடு, திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை, கிண்டி-கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம்-அரசு மனநல காப்பகம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.ஒவ்வொரு மையத்திற்கும் மனநல மருத்துவர் தலைமையில், ஆற்றுப்படுத்துநர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர் என ஆறு மனநல மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்படும்.அனைத்து மையங்களிலும் ஒரே வகையில் சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக ‘நிலையான செயல் நடைமுறைகள்’ வரையறுக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படும்.இம்மையங்களில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டோடு போதை மீட்பிற்கான தொடர் சிகிச்சை எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படும்.  எனவே, “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை அனைவரும் பயன்படுத்தி போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், அரசு கல்லூரி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.அனிதா மோகன், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், செவிலியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு  அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 26, 2025

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.கே.பேரடைஸ் மஹாலில் (26.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 3 பகுதிகளில் உள்ள 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறியிருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கட்டணமில்லா பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, புதுமைபெண் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000- வழங்குதல் உள்ளிட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, சாத்தூர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, இராஜபாளையம் ஊரகம், இராஜபாளையம் நகரம்  ஆகிய 12 வட்டங்களில் உள்ள மொத்தம் 1200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர்  (பொ) திருமதி பத்மாவதி, சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, சாத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி நிர்மலா கடற்கரைராஜ் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 26, 2025

உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக்கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பு

விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியில் (26.02.2025) தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்டத்திலுள்ள உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக்கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள்(Impact of Food Packaging Waste to Environment with Remedies on Climate Resilience Approach) என்ற தலைப்பில் நடத்திய மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் அப்படியே தூக்கி எறியக்கூடிய பொருள்களாக நவீன வாழ்க்கை முறை மாறிவிட்டது.  நாம் வாங்கும் ஒரு வேளைக்கான உணவு பொருட்கள் பொட்டலங்களில் ஒரு முறை உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள் அதிகமான உள்ளன.இன்று மாறி வரக்கூடிய சூழ்நிலையில் நகரங்களில் 10 வருடங்களுக்கு முன்னால் உணவுக்காக எத்தனை முறை வீட்டில் அடுப்பை பற்ற வைத்தார்கள் என்று ஒரு ஆய்வு எடுத்துப் பார்த்தால், ஒரு மாதத்திற்கு 90 முறை சாப்பிடுவதற்கு 50 முதல் 60 முறை அடுப்பை பற்ற வைக்கிறார்கள்.தற்போது அந்த 50 முதல் 60 என்ற முறை என்பது 20 முதல் 30 வரை என வந்துவிட்டது. அதாவது பெரும்பாலும் ஒருவேளை தான் வீட்டில் சமையல் செய்கிறார்கள். அவர்களுக்கு வெளியில் இருந்து உணவுப் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. இந்த பார்சல் வாங்கக்கூடிய கலாச்சாரம் அதிகமாய் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நகரங்களிலுமே உணவுகளை வீட்டிற்கே சென்று வழங்கும் சேவைகள் வளர்ந்து விட்டன.அப்படிப்பட்ட சூழ்நிலையில் உணவகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை எப்படி கையாள வேண்டும் என்ற சட்ட விதிகள் இருக்கின்றன. மேலும், குப்பைகள் ஒரு வீட்டில் உருவாகும் போது அதை மேலாண்மை செய்வதற்கு அந்த வீட்டு உரிமையாளருக்கான பொறுப்புகளும் இருக்கின்றன. ஒரே ஒரு பிளாஸ்டிகை எரிப்பதன் மூலமாக, நாம் சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியக்கூடிய நெகிழியை எரித்தோம் என்றால் அதில் வரக்கூடிய புகையில் எல்லா விதமான மோசமான வாயுக்களும் இருக்கின்றன. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய பொருட்கள் அதில் இருக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை.தற்காலிக நமது சௌரியத்திற்காக நாம் வாழக்கூடிய பூமியை ஒவ்வொரு நாளும் மிக மோசமாக மாற்றிக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. நீர்நிலைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைகிறது. நமக்கு இருக்கக்கூடிய முக்கிய பொறுப்புகலில் முக்கியமானது பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பது. குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியின் பயன்பாட்டை குறைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும்.உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை குறைப்பதற்கும், வாடிக்கையாளர்கள் துணிப்பைகள் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் தள்ளுபடி போன்ற புதிய புத்திகளை கையாளலாம். இந்த கூட்டத்தின் நோக்கம் சட்ட வழிமுறைகள், சட்ட பிரச்சனைகளை சொல்வது மட்டும் இல்லை. இந்த கூட்டத்தினுடைய நோக்கம் ஒரு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கடைகளில் சுற்றுச்சூழல்களுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிலி பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்ற முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், பிறகு அதுவே பொது மக்களுக்கு பழகிவிடும்.எனவே, இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. கடைகள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய திடக்கழிவு மேலாண்மையை முறையாக கையாள வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும். குப்பைகள் கொட்டுவது, திறந்த வெளி மலம் கழித்தல், குப்பைகள் எரிப்பது குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை குறைப்பதோடு, வாடிக்கையாளர்கள் துணிப்பைகள் உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் மாற்றத்தை உருவாக்க முடியும். எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள் உட்பட உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 26, 2025

சாத்தூர் நகராட்சி வார்டு-1 பெரியார் நகரில் புதிய பொது விநியோக கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி வார்டு-1 பெரியார் நகரில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பொது விநியோக கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர். திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Feb 25, 2025

இந்திய அளவில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் முன்னேற்றமடைந்த மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்து நிதி ஆயோக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் கடந்த 2018-ம் ஆண்டு நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து, அதிலிருந்து 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த 112 மாவட்டங்களில் தமிழகத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர் வள ஆதாரங்கள், அனைவருக்குமான நிதிச் சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு, சாலை வசதி, குடிநீர், ஊரக மின் வசதி தனிநபர் இல்லக் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்தக் காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ஒவ்வொரு மாதமும் பதிவேற்றம் செய்து அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியீடு செய்கிறது. அந்த வகையில் இந்த பட்டியலில் உள்ள விருதுநகர் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதற்காக முன்னேற விழைகிற மாவட்டம் திட்டத்தின் (ADP(Aspirational District Program)) கீழ் விருதுநகர் மாவட்டம் ரூ.3 கோடி விருதையும் பெற்றுள்ளது.ஆரம்ப சுகாதார கட்டமைப்பினை மேம்படுத்தி தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய, விருதுநகர் பொது சுகாதாரத்துறை "விரு கேர்" (எசைர உயசந) என்ற மாவட்ட தாய், சேய் கண்காணிப்பு மையத்தினை துவங்கியது.கர்ப்பிணி முதல் குழந்தை பிறந்து 5 வயது வரை தொடர்ந்து அவர்களது உடல் நலத்தில் அக்கறையுடன் செவிலியர்கள் மருத்துவர்கள் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்குகிறார்கள். ஏதேனும் குறைபாடுகள், உடல் நல தொந்தரவு இருந்தால் உடனடியாக அவர்களை அணுகி தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது என சிறப்பு கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.மேலும், கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மகப்பேறு தாய்மார்கள் இறப்பு ஏதும் இல்லாத நிலையை அடைந்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் முன்னோடியாக விருதுநகர் திகழ்வதாகவும் நிதிஆயோக் பாராட்டியுள்ளது.

Feb 25, 2025

வளரிளம் பெண்களுக்கான இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஜி.எஸ்.டி.மஹாலில் (25.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் - காவேரி படுகை (ONGC) இணைந்து இரத்த சோகையற்ற விருதுநகரை உருவாக்குவோம் என்ற முன்னெடுப்பில், வளரிளம் பெண்களுக்கான இரத்தச்சோகை ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் இரும்புக் கண்மணிகள் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார்.இந்த திட்டத்தின் மூலம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வளரிளம் பெண்கள் இரத்தசோகையற்ற, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நமது மாவட்டத்தில் உள்ள விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் பெண் குழந்தைகளிடத்தில் இருக்கக்கூடிய இரத்த சோகை குறைபாடு தொடர்பாக எடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஏறத்தாழ 50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இரத்தசோகை பாதிப்புடன் இருக்கிறார்கள் என தெரியவருகிறது.இதில் 2 சதவீதமான பெண் குழந்தைகள் ஒரு தீவிரமான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதாவது அவர்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரத்தத்தின் உடைய இரும்புச்சத்தின் அளவு குறைந்து உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். மிதமான இரத்தசோகை பாதிப்புக்குண்டான குழந்தைகள் ஏறத்தாழ 25 சதவிகிதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு  மருந்து, மாத்திரை, தீவிரமான ஊட்டச்சத்துக்கள் மூலமாக சரி செய்ய வேண்டும். மீதமுள்ள 38 சதவிகித குழந்தைகள் உணவு பழக்க வழக்கங்களின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.அதிகமாக வலுவை தாங்கக்கூடிய அளவிற்கு கட்டிடத்தை கட்டி எழுப்புவதற்கு போதுமான அளவு அடித்தளம் எப்படி முக்கியமோ, அதுபோல ஒரு மனிதன் 75 ஆண்டு காலம்  சராசரியாக வாழ்கிறார்கள் என்றால், இதில் மிக முக்கியமான நாட்கள் என்பது குழந்தைகளுடைய முதல் ஆயிரம் நாட்கள் ஆகும்.அதாவது ஒரு தாயினுடைய வயிற்றில் அது கருவாக உருவானதிலிருந்து குழந்தையின் உடைய 1000 நாட்கள் என்பது ஏறத்தாழ  இரண்டரை வயது வரைக்கும் அவர்களுக்கு முழுமையான உடல் வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்கிறது. அப்பொழுதுதான் அடிப்படையான மூளை வளர்ச்சி, மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி எல்லாம் ஏற்படுகிறது.இந்த நேரத்தில் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு அவசியமோ, அது போல் எதிர்கால வாழ்க்கைக்கு மனிதன் வாழக்கூடிய நாட்களில் மிக முக்கியமான உடல் வழு ஏற்படக்கூடிய அந்த பதின்ம பருவ வயதுகளில், அவர்களுக்கான புரதச்சத்தின் மூலமாக ஏற்படக்கூடிய உடல் கட்டுமானம், கால்சியம் சத்தின் மூலமாக ஏற்படக்கூடிய  எலும்பு வலுப்பெறுதல் இவற்றையெல்லாம் சரிவிகித உணவு என்கிறோம். அதாவது எல்லா சத்துக்கள் இருக்கக்கூடிய அளவிற்கு உணவை இருக்க வேண்டும்.உணவு என்பது நம்முடைய பசியை மட்டும் போக்குவதற்கானது அல்ல. இந்த உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரத சத்து, கொழுப்பு சத்து  போன்ற பெரிய அளவிலான சத்துக்கள் தேவைப்படுகிறது. அதே போல் பொட்டாசியம் போன்ற சிறிய அளவிலான சத்துக்களும் நமக்கு தேவைப்படுகிறது. நுண் ஊட்டச்சத்துகளும், பெரிய ஊட்டச்சத்துகளும் ஒரு மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அவை பெரும்பாலும் நமக்கு உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கிறது. ஆனால் எந்த உணவில் எந்த சத்துக்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு நாம் எல்லா சத்துக்களும் கிடைக்கக்கூடிய அளவிற்கு நம்முடைய உணவை வைத்துக்கொள்வதுதான் சரிவிகித உணவு.பசியை மட்டும் போக்குவது சரியான உணவு முறை அல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் ரத்தத்தில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து அளவை சரியாக கவனிக்கவில்லை என்றால் பின்னால் ஒரு பெரிய பாதிப்புக்குள்ளாகி ஒரு பெரிய அளவிலான மருத்துவ உதவியை நாட வேண்டி இருக்கும்.நாம் சாப்பிட வேண்டிய உணவுதான் நமக்கு மருந்து. அதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தசோகையை தவிர்ப்பதில் மிக முக்கியமானது  இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் அதிகமாக உட்கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகி இரத்த சோகையை சரிசெய்ய இயலும்.ஒரு பெரிய பிரச்சினையில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்த உணவு குறித்த புரிதல் மிக அவசியம். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி மூலமாக, நமது பகுதிகளில் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு இரத்தசோகை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கப்படுகிறது.ஊட்டச்சத்து பெட்டகம் என்பது உணவு பொருட்களாகும். சரிவிகித உணவு நன்றாக சாப்பிட்டு வந்தால் அது தான் மருந்து. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று அடிக்கடி வந்து ஹீமோகுளோபின் அளவு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான சமூகத்தின் எதிர்காலம் என்பது உடல் நலன் தான்.  இதனை பற்றி நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல் உங்களுடைய நண்பர்களுக்கும் எடுத்து கூற வேண்டும். நீங்கள் அனைவரும் மிகச்சிறந்த முன்னேற்றத்தை பெற்றிருக்கக்கூடிய மாணவிகளாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் ஊட்டச்சத்து தொகுப்பு வட்டார வாரியாக திருச்சுழியில் 996, நரிக்குடியில் 130, காரியாபட்டியில் 845 மற்றும் அருப்புக்கோட்டையில் 965 ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வில் முதல் கட்டமாக 245 மாணவிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, திருச்சுழி வட்டார மருத்துவ அலுவலர் மரு.புனிதா, மாவட்ட சுகாதார அலுவலர்கள், இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் - காவேரி படுகை நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 107 108 109 110 111 112 113 ... 121 122

AD's



More News