“கலங்கரை”ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் (27.2.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள “கலங்கரை” - ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.மாதவன் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.
போதைப் பொருள் பயன்பாடு என்பது தனி மனிதரின் ஆரோக்கியத்திற்கும், குடும்ப நலத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது. இத்தடையை உடைத்து, போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட “போதை ஒழியட்டும், வாழ்க்கைப் பாதை ஒளிரட்டும், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, போதைப் பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய உயரிய நோக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கிட அரியலூர், தருமபுரி, ஈரோடு, திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை, கிண்டி-கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம்-அரசு மனநல காப்பகம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு மையத்திற்கும் மனநல மருத்துவர் தலைமையில், ஆற்றுப்படுத்துநர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர் என ஆறு மனநல மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்படும்.
அனைத்து மையங்களிலும் ஒரே வகையில் சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக ‘நிலையான செயல் நடைமுறைகள்’ வரையறுக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படும்.இம்மையங்களில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டோடு போதை மீட்பிற்கான தொடர் சிகிச்சை எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படும்.
எனவே, “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை அனைவரும் பயன்படுத்தி போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு நல்வாழ்வு வாழ்ந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசு கல்லூரி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.அனிதா மோகன், மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், செவிலியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply