விருதுநகர் மாவட்டம், சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில், (04.09.2025) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “தரணி போற்றும் தமிழ்நாடு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு தொடர்பாக, சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் மாநில அளவிலான சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் உலக சுற்றுலாத்தினத்தன்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலா பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு 2025ம் ஆண்டிற்கான மொத்தம் 45 விருதுகள் 17 வகைப்பாடுகளில் வழங்கப்படவுள்ளது. விருது வழங்கப்படும் வகைப்பாடுகள் 1. சிறந்த உள்வரும் பயண முகவர் 2. சிறந்த உள்நாட்டு பயண முகவர் 3. சிறந்த பயண பங்குதாரர் 4. சிறந்த விமான நிறுவன பங்குதாரர் 5. சிறந்த தங்கும் விடுதி 6. சிறந்த உணவகம் 7. சிறந்த (Niche) சுற்றுலாத்தலம் 8. சிறந்த சாகச சுற்றுலா மற்றும் கேம்பிங் சைட் அமைப்பாளர்கள் 9. சிறந்த (MICE) சுற்றுலா அமைப்பாளர்கள் 10. சிறந்த சமூக ஊடகவியலாளர் (Special Media Influencer) 11. சிறந்த சுற்றுலா வழிகாட்டி 12. சிறந்த சுற்றுலா விளம்பரங்கள் 13. சிறந்த சுற்றுலா மேம்பாட்டு வெளியீட்டுகள் 14. சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மேற்கண்டபடி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tntourismawardscom என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2025. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களுக்கு சென்னையில் நடைபெறும் உலக சுற்றுலா தினவிழா (27-09-2025) அன்று வழங்கப்படும் எனவும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர் (மு.கூ.பொ) விருதுநகர் அவர்களை 73977-15688 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (03.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மறவர் பெருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறிந்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் சென்னிலைக்குடி ஊராட்சியில் புதிதாக தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் ரூ.6.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, கட்டுமான பணிகள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, நரிக்குடி மற்றும் காரியாபட்டி ஊராட்சிகளில் (03.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (03.09.2025) சிவகாசி மாநகராட்சி மலையம்மன் திருமண மண்டபம், இராஜபாளையம் நகராட்சி மரக்கண்ணு செட்டியார் நினைவு திருமண மண்டம், திருச்சுழி வட்டம், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காரியாபட்டி வட்டம் டி.வேப்பங்குளம், அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் சமுதாயக்கூடம், நரிக்குடி வட்டம் வேலாயூரணி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற்றன.அதன்படி, திருச்சுழி வட்டம், மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நரிக்குடி வட்டம் வேலாயூரணி மற்றும் காரியாபட்டி வட்டம் டி.வேப்பங்குளம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.பின்னர், காரியாபட்டி அமலா உயர்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெறவுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, இம்முகாமில் பட்டா வேண்டி மனு அளித்து, தீர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும், விவசாயிகளுக்கு விதைப்பைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், எதிர்வரும் 11.09.2025 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (03.09.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிபந்தனைகள் குறித்து தெரிவிக்கையில்:-1. அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் (T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில் (Open type) செல்ல அனுமதி இல்லை.. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE), சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.2. சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள்; வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 08.09.2025-ஆம் தேதிக்கு முன்பாக விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. 3. சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்றுவர வேண்டும். புதிதாக வேறு வழித்தடத்தில் சென்றுவர அனுமதியில்லை.4. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது.5. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.6. வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.7. வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.8. சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.9. பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது.10. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது.11. அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும்.12. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.13. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.14. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்.15. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.16. நடைபயணமாக அஞ்சலி செலுத்த செல்லக்கூடாது. 17. ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.18. செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.19. மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லை20. அலங்கார ஊர்தி அணிவகுப்பு மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை21. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி கிடையாது.22. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2025 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.23. அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் (Registered Political Parties) தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 08.09.2025-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.மேற்கூறிய விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 09.09.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும் நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT ,IIM, IIIT NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் (Central Universities) பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை (BC,MBC,DNC) சார்ந்த மாணவ / மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2025-26ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், கீழ்கண்ட முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5 /மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை-5 / மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய மற்றும் மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள், இக்கல்வி உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் , இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவராகிறார். மேலும் 2025-26-ம் நிதியாண்டிற்கான புதியது (FRESH) மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் (with BONAFIDE Certificate ) தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு இனத்தவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு இனத்தவருக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கும், பரிந்துரை செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 30.09.2025 மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 31.10.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.மேலும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ/ மாணவியர்கள், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்.044-29515942., மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கும்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள், ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2 வது தளம், சேப்பாக்கம், சென்னை -5, தொலைபேசி எண்.94454-77817, மின்னஞ்சல் முகவரி, mbcdnciitschloarship@gmail.com, என்ற முகவரிக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PM NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM)) 08.09.2025 திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேற்கண்ட தொழிற்பழகுநர் சேர்க்கைமுகாமில் அரசு/ பிரபல முன்னணி தனியார் தொழிற்நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும் ITI - இல் உள்ள தொழிற்பிரிவுகளான 1) Fitter 2) Machinist 3) MMV 4) R&AC5) Electrician 6) Turner 7) Welder 8) Wireman 9) Surveyor 10) COPA மற்றும் இதர பிற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று இதுநாள்வரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாதவர்கள், மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும் இத்தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொழிற்பழகுநர் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி காலத்தில் தொழிற் நிறுவனங்களின் நிலைக்கு ஏற்ப மாதந்திர உதவித்தொகையாக ரூ.7700/- முதல் ரூ.13500/-வரை வழங்கப்படும். மேலும் தொழிற்பழகுநர் பயிற்சிக்குப்பின் மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ், (National Apprenticeship Certificates - NAC) மற்றும் முன்னணி நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பும் (Placement) வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, நபிகள் நாயகம் பிறந்த நாளான (மிலாடி நபி) 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., அவர்கள் முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.ஒரு மாணவனின் இயல்பான திறமையை வெளிக் கொணர்வதுதான் கல்வி, செயல்கள் அடிப்படையில் தான் கற்கின்ற கல்வியை மாணவன் எவ்வாறு பயன்படுத்திகிறான் என்ற கற்றல் அடைவை ஆய்வு செய்வதற்கே இந்தப் புதிய ஆய்வு உத்தி கையாளப்பட்டு வருகிறது.ஏற்கனவே எண்ணும் எழுத்தும் என்ற திட்டமும், திறன் வகுப்பறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. மாணவரின் கற்றல் அடைவு சோதிக்கப்படுகின்ற போதுதான் தான் கல்வியில் எந்த நிலையில் அவன் இருக்கிறான் என்பது தெளிவாகிறது. இதை அறிந்து கொண்டு மாணவன் கற்றல் குறைபாடு எத் திறனில் இருக்கிறது அதற்கேற்ப மாணவனுக்குச் சிறப்புப் பயிற்சி மற்றும் கவனம் கொடுக்கப்பட்டு, முழுத் திறமையுள்ள மாணவனாக மாற்றுவதுதான் இந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம்.ஏறத்தாழ 2 முதல் 3 மாதங்களாக SLAS க்கான முழு அறிக்கை பெறப்பட்டவுடன் இதற்கான ஆய்வுக்கூட்டம் பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தை சார்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதனடிப்படையில் இந்த ஆய்வுக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் எத்தனை பள்ளிகள் உள்ளன. எங்கெல்லாம் உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றது. எங்கெல்லாம் அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மேலும் இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இடைநிற்றல் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்க்கை விகிதம் மற்றும் ஒரு மாணவர் சேர்க்கை நடைபெறாத பள்ளிகள் குறித்து என பல்வேறு வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாநில அளவிலான அடைவுத் தேர்வு முடிவுகள் மூலம் நீங்களும் எப்படி பணியாற்றலாம் என்பது அறிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கான கூட்டம் தான் இது. ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு மேற்கொண்டு இன்று 26 வது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.பள்ளிக்கல்வித்துறை என்பது மிகவும் முக்கியமான துறை. தலைமையாசிரியர்களாக நீங்கள் முதலில் தங்களுக்கான பொறுப்புகளை புரிந்து அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு தங்களுக்கான நிறை, குறைகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு குழந்தைகள் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று நினைக்காமல், ஒன்றாம், இரண்டாம் வகுப்பு குழந்தைகள் முழுமையான அந்த வகுப்பிற்கான கற்றல் அடைவு பெற்று அந்த குழந்தைகள் அடுத்த வகுப்பிற்கு செல்வதை உறுதி செய்யவதே முக்கியம்.பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி என்பது மிகவும் முக்கியம். அதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு காலத்தில் ஏதோ ஒரு கல்லூரியில் உயர் கல்விக்கு சேர்ந்தால் போதும் என்ற நிலை மாறி தற்போது தலைசிறந்த கல்லூரிகளில் உயர் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை பெரும் வகையில் நமது பள்ளி மாணவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் பாடத்தோடு வாழ்க்கைக்கான அறத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும். உங்களை கற்றல் அடைவு அடைந்திருக்கிறோமா என்று நீங்களே பரிசோதித்து கொள்ள வேண்டும்.எட்டாம் வகுப்பு வரை நீங்கள் கற்றல் கற்பித்தலை சிறப்பாக செய்தீர்கள் என்றால் அதற்குப் பின்பான கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு எழுதாகி விடுகிறது. ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். படிப்பு என்பது ஒரு நாட்டினுடைய மிகப்பெரிய ஆயுதம். அந்த வகையில் நம் நாட்டை, சமூகத்தை காக்கக் கூடிய ராணுவ வீரர்கள் ஆசிரியர்களாகிய நீங்கள்தான்.தலைமை ஆசிரியர்கள் மாநில கல்வி கொள்கை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களான இரண்டாம் பெற்றோர்களை நம்பித்தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். தேர்ச்சி மட்டும் இல்லாமல் புரிதலோடு கற்றுக்கொள்ள அவருக்கு சொல்லி தர வேண்டும். அதற்கான பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து இருக்க வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1468 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 981 அரசு பள்ளிகள், 453 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 29,353 இந்த SLAS தேர்வில் கலந்து கொண்டனர்.இதில் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் வகுப்பில் மாநில அளவில் 16 வது இடத்தினையும், ஐந்தாம் வகுப்பில் 11 வது இடத்தையும், எட்டாம் வகுப்பில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த தரப்பட்டியலில்; விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 58.5 சதவீதம் பெற்று 18 வது இடத்தை பெற்றுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சவால்கள் உள்ளது. அந்த சவால்களை கடந்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வுக்கூட்டமானது உங்களை ஊக்குவித்து, அடுத்த முறை இந்த மாவட்டத்திற்கு ஆய்வுக்கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்று பாராட்டுகின்ற நிலைக்கு வருவதற்காக தான் நடத்தப்படுகிறது. சிறப்பாக செயல்பட்டிருக்கின்ற பள்ளிகளுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். அதேப்போல் அனைத்து பள்ளிகளும் முதல் இடத்தை பெறுவதற்கு தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தின் SLAS அறிக்கை பெறப்பட்டுள்ளது. உதாரணமாக 9 இலட்சத்து 80 ஆயிரத்து 340 குழந்தைகளின் அறிக்கையானது 3 ஆம் வகுப்பு. 5 ஆம் வகுப்பு மற்றும் 8 வகுப்பு என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருமிருந்து பெறப்பட்டுள்ளது.நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்கின்ற பொழுதுதான் நமது மாவட்டத்திற்கு பெருமை. மாநில அளவில் நமது மாவட்டம் 18 ஆவது இடத்தில் இருக்கின்றோம். அதனை உயர்த்துவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த அறிக்கை என்பது ஒவ்வொரு பள்ளிகளுக்குமானது. எனவே அந்தந்த பாட ஆசிரியர்கள் அனைத்து சூழ்நிலையும் புரிந்து கொண்டு முன்னேறுவதற்கு செயல்பட வேண்டும்.SLAS அறிக்கை குறித்த கருத்து பற்றி நாம் அனைவரும் உள்வாங்கி கொள்ளவேண்டும். தலைமையாசிரியர் என்பவர்கள் கப்பலின் தலைவர் போன்று ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தலைமையாசிரியர்களும் பள்ளி வளாகத்திற்குள் சென்றவுடன் அங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும் உங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். ஆகவே, SLAS அறிக்கையினை முன்னேற்றுவதற்கு அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்.இக்கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.நரேஷ், இணை இயக்குநர்(தொடக்கக் கல்வி) திரு.சுவாமிநாதன், இணை இயக்குநர்(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) திரு.வை.குமார், முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார், முதல்வர்(மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாலையம்பட்டி) திருமதி செல்வி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாந்தி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.