சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில், (04.09.2025) தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “தரணி போற்றும் தமிழ்நாடு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து "மாபெரும் தமிழ்க்கனவு" என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022- 2023 மற்றும் 2023 - 2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 இலட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்கில் சிறப்பாக நடத்தப்பட்டன.
இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையும் பண்பாட்டின் செழுமையும், சமூகச் சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலகம் மூலம் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சித் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் உயர்கல்;வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் கல்விக்கடன், வங்கிக்கடன், மாவட்ட தொழில் மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோர் திட்டங்கள், மான்யத்துடன் கூடிய கடன்உதவிகள், தாட்கோ மூலம் தொழில்முனைவோர்களுக்கான அரசுத் திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வாய்ப்புகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் கண்;காட்சி மற்றும் விற்பனை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களது சிந்தனை மற்றும் திறனை நிரூபிக்கும் வகையில் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி விருதுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பின் சிறந்த கேள்விகள் எழுப்பிய கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி விருதுகளும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பல்வேறு கல்லூரிகளிலிருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply