இந்திய தேர்தல் ஆணையம் தற்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கென ‘சிறப்புத் தீவிரத் திருத்த” (Special Intensive Revision – SIR) பணிகளை மேற்கொள்ள உத்தேசித்து இதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை கடந்த 10.09.2025 அன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.இம் மாநாட்டில் ‘சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆணையம் மதிப்பீடு செய்தது. பீகார் மாநிலத்தில் நடைபெற்றுவரும் ‘சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகளில் பின்பற்றப்பட்ட உத்திகள், கட்டுப்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விளக்கக்காட்சி பீகார் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்டது.ஒவ்வொரு மாநிலத்திலும், இதற்கு முன்னர் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட தேதி மற்றும் அத்திருத்தத்தின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, அச்சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பின்னர் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பதிவேற்றுவது குறித்த நிலையையும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது பட்டியலில் உள்ள வாக்காளர்களை, கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் போது இருந்த வாக்காளர்களுடன் இணைப்பதற்கான நிலையையும் அவர்கள் வழங்கினர்.எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் நிலையும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதையும், மேலும், அதில் தகுதியற்ற எந்தவொரு நபரும் சேர்க்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், தகுதியுள்ள குடிமகன் எவரும் எளிதாக சமர்ப்பிக்கும் வகையில் ஆவணங்கள் அமைந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான அனைத்துப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 100 வயதைக் கடந்த வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்த்தல், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் பெறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்யும் பணி மற்றும் அவர்களது மாற்றுத்திறன் குறித்த விபரத்தைப் பதிவு செய்யும் பணி ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்புச் செய்யும் பொருட்டு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்களும் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆனைக்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் தனியார் நிறுவனமான சுரபி அறக்கட்டளை மூலம் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I A S., அவர்கள் (13.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், மாணவர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (13.09.2025) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் என்கின்ற மாபெரும் மருத்துவ முகாம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிந்தையில் உதித்த முத்தான திட்டங்களிலே ஒன்றாக அமைந்து தமிழ்நாட்டில் கடைக்கோடியில், பட்டி தொட்டிகளில் இருக்கக்கூடியவர்களை நாடி சென்று அவர்களுக்கு பரிசோதனைகள் வழங்கும் திட்டமாக இன்றைக்கு உருவாகி இருக்கிறது. இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வி, சுகாதாரம் இரண்டிலும் மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நரிக்குடியில் இந்த முகாமில் பார்க்கின்ற பொழுது இந்த கிராமத்தில் இருந்து மட்டுமல்ல, இந்த ஒன்றியத்தினுடைய பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் இன்று கூடியிருக்கக் கூடிய காட்சியை பார்க்க முடிகிறது.இந்த முகாமில் பல்வேறு துறையினுடைய வல்லுனர்கள் இங்கே இருக்கிறார்கள். உங்களின் மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர், அருப்புக்கோட்டை நகர்ப்பகுதி மருத்துவமனையில் கிடைக்கக்கூடிய வசதிகள் நம்முடைய கிராம பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் சிறப்பு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அது குறித்து, அந்த கிசிச்சைக்கான காப்பீடுகள் உடனே கிடைக்கும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.மருத்துவத்துறையிலே இது மாபெரும் திட்டம். நம்மைக் காக்கும் 48, இன்னுயிர் காப்போம் திட்டம், நலம் காக்கும் மருத்துவம் போன்ற திட்டங்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைவதாக உள்ளது. இந்த திட்டங்கள் மக்களிடம் பாராட்டை பெற்று மக்களிடையே நம்பகமான திட்டமாக இந்தியாவிலே முதன்மை இடம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக நமது முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார். எனவே இந்த முகாமினை இப்பகுதிகள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.நலம் காக்கும் ஸ்டாலின் முகாமானது 02.08.2025 அன்று முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் 1256 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள், 17 சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவுநோய் கண்டறிதல்,மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்,கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவுநோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது., இன்று (13.09.2025) ஆறாவது கட்டமாக நடைபெறும் இம்முகாமில் குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.அதன்படி, இன்று நரிக்குடி, மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டையினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் (12.09.2025) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா. I. A. S.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகலினையும், பட்டா வேண்டி மனு அளித்து, திர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும் மின் இணைப்பில் பெயர் மாற்றும் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசிலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றும் செய்த நகலினையும் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகம் முழுவதும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 36 பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் பிரதி வாரம் சனிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 02.08.2025 அன்று சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முதல் முகாமில் சுமார் 1200 நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.அதன்படி,13.09.2025 அன்று நரிக்குடி மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ்ரே, நீரழிவு நோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் பரிசோதனை, மின் இதய வரைபடம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கருப்பை வாய் பரிசோதனை, காச நோய் மற்றும் தொழு நோய், சிறுநீரக நோய் பரிசோதனை, உள்ளிட்ட 24 வகையான இரத்த பரிசோதனைகளும் மற்றும் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் மருத்துவம், இயன்முறை மருத்துவம், நீரழிவு நோய் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், சித்தா மருத்துவம், எலும்பு மருத்துவம், இருதய மருத்துவம், பல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற இலவச சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், இம்முகாமில் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகள் மட்டும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்று திறனாளிகளுக்கான அரசு அடையாள அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் வருவாய்துறையினர் மூலமாக வருமானச் சன்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு இச்சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செப்டம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.09.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்த முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பிரிவு 27(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு இந்த திட்டத்தின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக குறை தீர்ப்பு அலுவலராக திரு.மு.ஜெயபிரகாஷ் என்பவர் கடந்த 06.08.2025 முற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் பணியேற்பு செய்து பணிபுரிந்து வருகிறார்.இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார். பிரச்சனைகள் நடக்கும் இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்வார். பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பிற புகார்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்வார்.மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் தங்களின் புகார்களை மனுக்களாக குறைதீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் என்ற முகவரிக்கும் மற்றும் mgnregsvnrombudsperson@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நிவர்த்தி செய்யும் வகையில் பொது மக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அலுவலரான திரு.மு.ஜெயபிரகாஷ் என்பவர் 8925811346 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வேளாண்மை உழவர் நலத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (11.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை கீழ் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட்ட பசுந்தாள் உர விதைகள், தக்கைப்பூண்டு விதைகள் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.மேலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் வேளாண்மை பொறியியல்துறை கீழ் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தில் 70 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட விசை களை எடுக்கும் இயந்திரத்தினை (பவர் வீடர்) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி, இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சியில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் மானியத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வழங்கப்பட்டுள்ள தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் கால்நடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாக்குளம் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனத்தில் அமைக்கப்பட்ட மகாகனி மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், முத்து வெங்கட்ராயபுரத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்து வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பிறை ஊரணி தூர்வாரப்பட்டு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி ஊராட்சி, சிங்கம்மாள்புரம் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறையின் கீழ் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலையில் தமிழ்நாடு நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தில் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் நிலக்கடலையிலிருந்து எண்ணெய் பிரித்து, எடுத்தல் மற்றும் தரம்பிரிக்கும் மதிப்பு கூட்டு நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் தரம், பணியின் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.முன்னதாக, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உரப்படுக்கை 50 சதவீத மானியத்திலும், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் மக்காச்சோள செயல்விளக்க திடல் இடுபொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாணான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, வேளாண்மை துணை இயக்குநர் (வே.வணிகம்) திருமதி செல்வி, செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-2026 கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (11.09.2025) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு மருத்துவ சேவைகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வருகிறது. கடந்த நான்காண்டு ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மற்றும் சேவைகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆவது நிதி ஆணைய சுகாதார மானியம் 2025-2026 கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பில் பொது சுகாதார அலகு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த புதிய கட்டடம் ஆய்வக அறை, மருந்து வழங்கும் அறை, மருத்துவர் அறை மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.இது போன்ற மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும். எனவே, மருத்துவ சேவைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.ந.மணிகண்டன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, செயல் அலுவலர் திரு.அன்பழகன், உதவி செயற்பொறியாளர் திரு.முத்து, உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1-2025 முதல்நிலைத் தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு (Mains Examinations) பயிற்சி வழங்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1-2025 முதல்நிலைதேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயிலுவதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.