தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம் தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து, நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (21.08.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர்கள் நல வாரியம் மூலம் தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைமை நிலை செயலாளர் திரு.கோவிந்தராஜ், I A S.,(ஓய்வு) அவர்கள், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர்கள் திரு.விஜயசங்கர் அவர்கள் மற்றும் திரு.மகாலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப்பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5000/- திருமண உதவித்தொகை, 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- இயற்கை மரண உதவித்தொகை, 31 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய அட்டைகள் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.55,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் வழங்கினார்.
கொரோனா நோய் தொற்று பரவி இருந்த காலகட்டத்தில் எங்களுக்காக உங்களுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல், எங்களது உயிரை காப்பாற்றி எங்களை சுத்தப்படுத்தி இருக்கிற ஒரே ஒரு மனிதனும் தூய்மை பணியாளர்கள் தான். அதனால் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மைப்பணி என்பது சாதாரண பணியல்ல. நான் துப்புகின்ற எச்சியை நானே திரும்பி பார்க்க மாட்டேன். நான் செய்யக்கூடாத அத்தனையும் உங்கள் கையால் தொட்டு எங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற நீங்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய மனித கரங்களாக தெரிகின்றீர்கள்.அதன் அடிப்படையில் தான் உங்களை எல்லாம் சந்திக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்திற்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றோம். தமிழகம் முழுவதும் இதுவரை 32 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தற்போது 33 ஆவது ஆய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
இந்த வாரியத்திற்கு 20 கோடி ஒதுக்கினார்கள் என்று சொன்னால் பொதுமக்களுக்காக பாடுபட்டு, நமது உயிரை காப்பதற்காக பாடுபடுகின்ற இந்த மக்கள் நல்ல படியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். தூய்மைப்பணியாளர்கள் பணியின் போது மரணமடைந்தால் ரூ.5 இலட்சம் என்ற தொகை, ரூ.10 இலட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது. தூய்மைப்பணியாளர் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, கலைஞர் கனவு இல்லத்தில் சிறப்பு முன்னுரிமை, தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவத்திட்டம் என்று ஒவ்வொரு திட்டமாக தேடிப் பிடித்து உங்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் நன்றிக்கடனுடன் இருக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் ரூ.5000/- ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு தினந்தோறும் ரூ.250/- வீதம் மாதத்திற்கு ரூ.7500/- ஊதியம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன்.
உங்களுடைய குழந்தையை படிக்க வையுங்கள், கையுறை, முக கவசத்தை பயன்படுத்தி நோய் நொடி இல்லாமல் பாதுகாப்பாக இருங்கள். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு முகாம்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதை பயன்படுத்திக்கொண்டு உங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வாதாரத்தை கொடுப்பதற்கு என்றைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 வட்டாரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 5260 தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.இம்மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மேற்கண்டவாறு பலன்கள் வழங்க ஏதுவாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தின் application.tncwwb.com என்ற இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்திடவும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் இன்றைய நாளில் 32 தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டைகள், சிவகாசி மாநகராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் 27 தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரூ.55,000/- மதிப்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் நமது மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் பல்நோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. உங்களுடைய கிராம பஞ்சாயத்தில் நடைபெறுகின்ற முகாமில் கலந்து கொண்டு, உங்களுடைய உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இந்த முகாம்களில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற எல்லா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். அதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் தூய்மைப் பணியாளர்களுக்கென்று தனியாக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, நல வாரிய அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை போன்றவைகளை பெற்று பயனடையலாம்.தமிழ்நாடு அரசின் மூலம் தூய்மைப்பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு சென்றடையும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என தெரிவித்தார்.
0
Leave a Reply