தனியார் பால்கோவா உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசு சின்னத்தையும், கூட்டுறவு சின்னத்தையும் பெயர் பலகைகள் மற்றும் லேபில்களில் பயன்படுத்துவோர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, வழக்கு பதிவு செய்யப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில், தமிழ்நாடு அரசு சின்னத்தையும், கூட்டுறவு சின்னத்தையும் பெயர் பலகைகளிலும், லேபிள்களிலும் பயன்படுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிற்கு வந்த புகார் அடிப்படையில், 19.08.2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையின் விருதுநகர் மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன் அவர்கள் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர், காவல் துறை அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் பால்வளத் துறை அலுவலர் அடங்கிய கூட்டுக்குழு ஆய்வு நடத்தினார்கள்.
அதில், 12 தனியார் விற்பனை நிலையங்களில் ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை”, ‘கூட்டுறவு பால் பண்ணை” போன்ற பெயர்களையும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சின்னத்தையும் (Emblem) பரவலாகப் பயன்படுத்தியதும்,இரண்டு கடைகளில் தமிழ்நாடு அரசு சின்னமும், மூன்று கடைகளில் ‘தமிழ்நாடு அரசு” என்ற பெயரும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டு, அதனை அகற்ற அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தயாரிப்பு தேதி அச்சிடாமல் லேபிள் விதிமுறைகளை மீறியதற்காக12¾ கிலோ பால் அல்வாவும், 6 ¼ கிலோ பால் பேடாவும், சாட்சியத்திற்காக 2 ½ கிலோ பால்கோவாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டப்படி, உணவு வணிகர்களுக்குச் சம்பந்தம் இல்லாத வேறொரு நிறுவனத்தின் பெயரையும், சின்னத்தையும், ‘பெயர் பலகையின்” மூலம் விளம்பரப்படுத்துவதும், ‘லேபிளில்” குறிப்பிடுவதும், நுகர்வோர்களைத் தவறாக வழிநடத்துவதாகும் என்பதுடன், அது குற்றச்செயலாகக் கருதி, மேற்கூறிய சட்டத்தின் பிரிவுகள் 52, 53 மற்றும் 58-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் போது, தனிநபர் உரிமை என்று உரிமம் பெற்றுவிட்டு, ‘கூட்டுறவு” என்று பெயர் பலகையிலும், லேபிளிலும் தெரிவிப்பது என்பது, வணிகர் பொய்யான தகவல் வழங்கி உரிமம் பெற்றுள்ளார் என்று பொருளாகி, அது குற்றமாகக் கருதப்பட்டு, மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 61-ன் கீழ் தவறிழைப்போருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
எனவே, எந்தப் பெயரில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயர், அல்லது எந்த ப்ராண்ட் பெயரில் டிரேட்மார்க் சான்று பெறப்பட்டுள்ளதோ, அந்தப் பெயரை மட்டும் நிறுவனத்தின் பெயராகவோ அல்லது ப்ராண்ட் பெயராகவோ பெயர் பலகையிலும், லேபிளிலும் இருக்கலாமேயொழிய, வணிகர்களுக்குச் சம்பந்தமில்லாத வகையில் ‘கூட்டுறவு”, ‘தமிழ்நாடு அரசு”, ‘விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்”, ‘பால் பண்ணை” போன்ற பெயர்களைக் கடைகளின் பெயர் பலகைகளிலோ அல்லது பால்கோவா பாக்கெட்டுகளின் லேபிளிலோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்படுகின்றது.
மேலும், அவ்வாறு பெயர்கள் மற்றும் சின்னம் அச்சிட்ட பெயர் பலகைகளை சம்பந்தப்பட்ட உணவு வணிகர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும் என்றும், லேபிளில் 14 நாட்களுக்குள் திருத்தம் செய்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.இதுகுறித்து, விதிகளை மீறியுள்ள வணிகர்களுக்கு எதிராக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply