விருதுநகர் மாவட்டம் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், தோணுகால் அசேபா வளாக திருமண மண்டபத்தில் (19.08.2025) வேளாண்மைத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மேலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.9.02 இலட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய பவர் டில்லர், பவர் வீடர், சுழல் கலப்பை உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கியத் திட்டமான மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உயிர்ம வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி என்பது வேளாண்மையினருக்கு முக்கியமான நிகழ்வு ஆகும்;. இன்றைய மனிதன் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான தேவை இயற்கை உணவாகும். இயற்கையோடு இணைந்து நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்வதே உயிர்ம வேளாண்மையின் நோக்கமாகும்.
கடந்த 50 ஆண்டுகளில் மண்ணின் சத்து அளவு 30-40 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலத்தடி நீரும் இரசாயனங்களால் பெரும் அளவில் பாதிப்பு அடைந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. பயிர் சாகுபடிக்கான இடு பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது. நமது அன்றாட உணவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் கலந்துள்ளதால் அனைத்து விதமான நோய்களும் அதிகரித்துள்ளன.
எனவே, விவசாயிகள் இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களை பின்பற்றி நிலங்களில் முழுமையாக இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்த வேண்டும். மனிதன் மட்டுமின்றி கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். இயற்கை விவசாயம் நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது விவசாயிகளின் பொருளாதார விடுதலைக்கும் அவசியமானதாகும்.
எனவே, விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கண்காட்சியை பார்வையிட்டு கருத்தரங்கில் வழங்கப்படும் தொழில்நுட்பங்களை பின்பற்றி நமது மாவட்டத்தை இயற்கை வேளாண் சாகுபடியில் மாநில அளவில் முதலிடத்திற்கு கொண்டு வர வேண்டும். அரசின் முயற்சியோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உயிர்ம வேளாண் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும். விவசாயம் என்பது ஒரு தொழில் அல்ல. இயற்கை விவசாயம் நமது கடமை என்பதை உணர்ந்து மண்ணையும், நீரையும் காப்பாற்றி நமது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடமையாகும்.
எனவே, அனைத்து விவசாயிகள் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள் குறித்தும், புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையிலும், வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் பல்வேறு கருத்துக்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் உயிர்ம வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் அதன் வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஜோதிமணி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பிலும், இராஜபாளையம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பழனிச்சாமி அவர்கள் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும், கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையம் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் முனைவர் கண்ணன் அவர்கள் உயிர்ம வேளாண்மை இடுபொருட்கள் உற்பத்தி என்ற தலைப்பிலும்,
கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஜட்டா கவிதா அவர்கள் உயிர்ம வேளாண்மையில் பூச்சி நோய் மேலாண்மை என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குநர்(மாநிலத் திட்டம்) திருமதி முத்துலட்சுமி அவர்கள் வேளாண்மை துறையில் அங்கக வேளாண்மை குறித்த திட்டங்கள் என்ற தலைப்பிலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்)/துணை இயக்குனர் திருமதி அம்சவேணி அவர்கள் மண் மற்றும் நீர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலும்,
விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குனர் திருமதி வளர்மதி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் விதைகளின் பங்கு என்ற தலைப்பிலும், விருதுநகர் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் திருமதி செல்வி அவர்கள் உயிர்ம வேளாண்மை விலை பொருட்களின் விற்பனை வாய்ப்புகள் என்ற தலைப்பிலும், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி அவர்கள் தோட்டக்கலையில் அங்கக வேளாண்மை என்ற தலைப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா அவர்கள் வேளாண்மையை எளிதாக்கும் இயந்திரங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் என்ற தலைப்பிலும், உதவி இயக்குநர்(விதை சான்று மற்றும் அங்ககச் சான்று) திருமதி கோகிலா அவர்கள் உயிர்மச் சான்றோளிப்பு மற்றும் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டம் என்ற தலைப்பிலும், விருதுநகர் விற்பனை குழு செயலாளர் திரு.வேலுசாமி அவர்கள் உயிர்ம வேளாண்மையில் வணிகம் மேற்கொள்ளுதல் என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள்.மேலும், முன்னோடி விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் தங்களின் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
0
Leave a Reply