25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 13, 2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (13.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,இ.ஆ.ப., அவர்கள், இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் திருமதி ஐ.சா.மெர்சி ரம்யா,I A S, அவர்கள்,  விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள்  துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவு சத்துணவு திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், சத்துணவு மையங்கள், மாவட்ட அளவில் செயல்படும் வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகள், புதுமைப்பெண் திட்டம், தமிழ் முதல்வன் திட்டம், திருமண நிதி உதவி திட்டம், திருநங்கைகள் சுயதொழில் துவங்கிட மானிய திட்டம், திருநங்கைகள் அடையாள அட்டை, திருநங்கைகளுக்கான ஓய்வூதியம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி பதிவு விவரங்கள், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், 18 வயது முடிவுற்ற பயனாளிகளின் முதிர்வுத் தொகை வழங்கப்பட்ட விவரம், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் மற்றும் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தின் செயல்பாடுகள், மகளிர் உதவி எண், ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழங்கப்பட்டு வரும் சேவைகள், முதியோர் இல்லங்கள், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த வளாகங்கள், ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள், மகளிர் குறுகிய கால தங்கும் இல்லங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை சார்ந்த அரசு அலுவலருடன் ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் குழந்தைகள் பிறப்பு குறித்த மருத்துவத்துறையின் புள்ளி விவரங்கள் கிடைத்தவுடன் குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதுபோல கர்ப்ப காலத்தில் பெண்களின் ஊட்டச்சத்து வளர்ச்சியினை முறையாக கண்காணித்து, அவர்களுக்கான ஊட்டசத்துக்கள் கிடைக்கச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைப் பேறு அடைவதை உறுதி செய்ய வேண்டும்.மதிய உணவு திட்டத்தில் சமையல் கூடத்திற்கு தேவையான மின்சார வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படின் தொடர்புடைய அரசு துறைகளிடம் தெரிவித்து அதனை உறுதி செய்ய வேண்டும். திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தொகைகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமையால் பாதிக்;கப்படும் பெண்களுக்கு முதற்கட்டமாக அவர்களின் நகை, பணம், கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை திருமணம் தடுப்பு குறித்து தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக அவர்களுக்கு சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கி, நமது மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பை நலக வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்.,I A S., விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2025

தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு போற்றும் வகையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில்  (13.02.2025) தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு போற்றும் வகையில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.

Feb 12, 2025

மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதன்படி, விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, வாழ வந்தாள்புரம் முதல் கோட்டூர் வரை, வே.வ. வன்னியப்பெருமாள் கல்லூரி(VVV காலேஜ்) முதல் நல்லமநாயக்கன்பட்டி வரை(NH47), விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஒண்டிப்புலி நாயக்கனூர் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் வாழவந்தாள்புரம் வரை, விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முதல் சென்னல்குடி வரை, விருதுநகர் ஆத்துப்பாலம் முதல் மங்களம் பிரிவு வரை, விருதுநகர் ஏ.ஆர் கிரவுண்ட் முதல் மத்தியசேனை விலக்கு வரை, வெற்றிலை முருகன்பட்டி முதல் காரியாபட்டி முக்கு ரோடு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட் பேக்டரி முதல் மேட்டமலை வரை, ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை, விருதுநகர் சிட்கோ முதல் மெட்டுக்குண்டு காலனி வரை, சண்முகசுந்தரபுரம் விலக்கு முதல் மலைப்பட்டி வரை, ராமசாமிபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, பாலவனத்தம் முதல் சென்னல்குடி வரை, பாலவனத்தம் முதல் கோட்டைநத்தம் வரை, விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முதல் மேட்டுப்பட்டி வரை, முக்குளம் முதல் கட்டன்குளம் விலக்கு வரை, மெட்டுக்குண்டு காலனி முதல் சண்முகசந்தரபுரம் விலக்கு வரை, துலுக்கப்பட்டி முதல் மேட்டமலை வரை, காரியாபட்டி முதல் வெற்றிலைமுருகன்பட்டி வரை, காரியாபட்டி பேருந்து நிலையம் முதல் என்.நெடுங்குளம் வரை, காரியபட்டி பேருந்து நிலையம் முதல் குறிஞ்சான்குளம் வரை, பகுதி அலுவலகம் அருப்புக்கோட்டை அலுவலக எல்லைக்குட்பட்ட அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலி குறிச்சி வரை, அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் முதல் புலியூரான் வரை,சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தேவர் சிலை முதல் சாமிநத்தம் வரை, வெற்றிலையூரணி முதல் கூத்தனாட்சியாபுரம் வரை, அய்ய நாடார் காலேஜ் முதல் இடையன்குளம் வரை சிவகாசி அரசு மருத்துவமனை முதல் வடமாலபுரம் காலனி பிரிவு வரை, வெற்றிலையூரணி முதல் சேதுராமலிங்கபுரம் வரை, திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட லட்சுமி நாராயண மஹால் முதல் பொட்டல்பட்டி வரை, மல்லி முதல் இனாம் கரிசல்குளம் வரை கிருஷ்ணன் கோவில் முதல் பண்டிதன்பட்டி வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் பி.மீனாட்சிபுரம் வரை, (மல்லி முதல் அன்னை சத்யா நகர் வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் மல்லி வரை, கிருஷ்ணன் கோவில் முதல் அழகாபுரி வரை, அழகாபுரி முதல் சுந்தரபாண்டியம் வரை, சீசாபுரம் முதல் கூமாப்பட்டி வரை, பட்டியகல் முதல் கீழக்கோட்டையூர் வரை, பட்டியக்கல் முதல் மகாராஜபுரம் வரை, முத்துவெங்கடராயபுரம் முதல் வங்கார்பட்டி வரை, பகுதி அலுவலகம், இராஜபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட காட்டன் மார்க்கெட் முதல் நரிமேடு வரை, ஆர்டிஓ ஆபீஸ் முதல் தொட்டியபட்டி வரை, சத்திரப்பட்டி முதல் கோபாலபுரம் வரை, காந்தி சிலை முதல் அன்னத்தலை விநாயகர் கோவில் வரை, சாராபட்டி முதல் குறுக்கம்பட்டி வரை, தளவாய்புரம் பேருந்து நிலையம் முதல் முறம்பு வரை, சம்சிகாபுரம் முதல் தும்பகுளம் வரை, ராஜபாளையம் ரயில்வே நிலையம் முதல் சமத்துவபுரம் வரை, ரெட்டியாபட்டி முதல் அப்பநாயக்கன்பட்டி வரை, புதிய பேருந்து நிலையம் முதல் நத்தம்பட்டி வரை, சுந்தரராஜபுரம் முதல் பத்மா மருத்துவமணை வரை, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முதல் ஹீத் டிரஸ்ட் வரை, இளந்திரை கொண்டான் முதல் சொக்கனாதபுத்தூர் விலக்கு வரை, எம்.கே.எஸ் பெட்ரோல் பல்க் முதல் அட்டைமில் முக்கு ரோடு வரை.மேற்கண்ட 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்றுகளுடன் 10.02.2025 முதல் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 12, 2025

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பி.எஸ்.ஆர்.பொறியியல்  கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (12.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது.  ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்  என்ற திருக்குறளில், வள்ளுவர் அறிவு என்பது நம்மைத் துன்பத்தில் இருந்து காக்க உதவுகிறது. அறிவு என்பது நம்முடைய படிப்பில்  இருந்தோ,  நம்முடைய மதிப்பெண்களில் இருந்தோ பெறுவது இல்லை. நம்முடைய வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்லக்கூடியதற்கு மிகவும் துணையாக இருக்கும்.ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கை இருக்கிறது.தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை. இந்த மூன்றிலும் நீங்கள்  அனைவரும் அடுத்து வரக்கூடிய 50 ஆண்டுகள் பயணிக்க  வேண்டும். உங்களுக்கு தேவையான கற்றலை இந்த கல்வி தருகிறதா.நாம் எவற்றை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்.நமக்கு இருக்கக்கூடிய வாய்ப்புகள் எத்தகையது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.யார் சொல்கிறார் என்பதும் முக்கியமல்ல. அவர்கள் சொல்லக்கூடிய கருத்து புரிந்து கொள்வதற்கான அடிப்படை அறிவை புரிந்து கொள்வது தான்  மிக  அவசியம்.அறிவியல் அறிஞராக இருப்பதை விட அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று. எந்த ஒன்றிற்கும் அறிவியல் பூர்வமான தர்க்க ரீதியான தீர்வுகளை நாம் பெற வேண்டும். ஒரு  சிக்கல்கள் வந்தால், அது குறித்து சட்ட ரீதியாக நாம் எப்படி அதனை அணுகுவது. மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு எப்படி அறிவியல் பூர்வமாக ஒரு மருத்துவ உதவியோ  அல்லது அது சார்ந்த உதவிகளையோ எப்படி பார்ப்பது. இன்று சட்டப்பாதுகாப்புகள் என்னென்ன? சட்ட வழிமுறைகள் என்னென்ன? இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது.சமூக வலைத்தளங்களில் நாம் கற்றுக்கொள்ள நல்ல விசயங்கள் நிறைந்துள்ளது. சமூக வலைதளங்களை கையாளுவது என்பது இரண்டு பக்கமும் கூர்மையாக உள்ள கத்தியை கையாளுவது போன்றதாகும். இதில் சரிசமமான நிலை என்பது தான் மிகவும் முக்கியம். சமூக வலைத்தள பதிவுகளை நாம் எவ்வாறு கவனமாக கையாளவேண்டும். அது நமக்கு எவ்வாறு பாதுகாப்பு தருகிறது என ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எல்லோரும் சமூக, பொருளாதார, குடும்ப சூழ்நிலைகளில் ஒரு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.மிக புகழ்பெற்ற தத்துவஞானி மனிதன் என்பவன் தன்னால் செய்ய முடியாமல் போன, தன்னால் தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து உருகும் ஒரு  குற்ற உணர்ச்சியின் தொகுப்பு என்று குறிப்பிடுகிறனர். அப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது. உங்களுக்கு  என்ன விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லப்படக்கூடியது தான் இந்த நிகழ்ச்சி.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.கல்வி, உழைப்பு, திறமை  இந்த மூன்றும் தான் மனிதனின் உடைய வெற்றியை தீர்மானிக்கிறது. ஆனால், இம்மூன்றும் இருக்கக்கூடிய எல்லோரும் முன்னேறவில்லை.வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள்  தேடிய தேடல்கள் தான். எனவே, கல்வி, உழைப்பு, திறமை இந்த மூன்றும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம். நல்ல வாய்ப்புகள், விழிப்புணர்வுகள் பெற்றவர்கள் குறித்த தெளிவு பெற்றவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.நீங்கள் எவ்வளவு விரிவாகவோ, ஆழமாகவோ தேடுகிறீர்களோ நீங்கள் அவ்வளவு மிக மதிப்பு மிக்க வைரங்களை வாழ்க்கையில் பெறுவீர்கள். இன்றைக்கு மாறி வரக்கூடிய உலகில் கற்றல், கற்பித்தல், புதியனவற்றை தெரிந்து கொள்ளுவதற்கான சூழல் மிகப்பெரிய அளவில் மாறி உள்ளது.எனவே, நீங்கள் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உங்களது தனிப்பட்ட வாழ்வில், சமூக வாழ்வில் உங்களுடைய குடும்ப வாழ்வில், தொழில் வாழ்வில் இவற்றிற்கு எல்லாம் தனக்கு தேவையான தகவமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென                             மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 12, 2025

இரயில்வே காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள 32438 பல்வேறு பணிக் காலிப்பணியிடங்கான அறிவிப்பு 21.01.2025 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 23.01.2025 ஆம் தேதியிலிருந்து 22.02.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு வரும் 17.02.2025 அன்று விருதுநகர்.ஸ்ரீ வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இவ்வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது.. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/8hB1dvzGvctLtMAs9  என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொள்ளலாம். எனவே இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S , அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Feb 12, 2025

கல்லூரிகளுக்கு பள்ளி மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ அல்லது சேர்ப்பதோ, அரசு அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் மாணவர்களை அணுகினாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை அரசு பொது தேர்வு நடக்கும்பொழுதும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் அணுகி அவர்களை சேர்ப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.ஒரு சில ஆசிரியர்களே மாணவர்களின் விவரங்களை இது போன்ற கல்லூரிகளுக்கு தருவதாகவும் புகார்கள் வருகின்றன. அவ்வாறு கல்லூரிகளுக்கு மாணவர்களின் விவரங்களை அளிக்கவோ, மாணவர்களை சேர்க்கவோ கூடாது. மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் இருப்பின் அந்தந்த பள்ளியினுடைய முதுகலை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரையே அணுகி ஆலோசனை பெற வேண்டும்.கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ அல்லது சேர்ப்பதோ, அங்கீகாரம் இல்லாத கல்லூரிகள் மாணவர்களை நேரடியாக அணுகினாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 12, 2025

திருவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசு வைத்தான்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், படிக்காசு வைத்தான்பட்டி கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் (12.02.2025) நடைபெற்றது.இம்முகாமில், 42 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ரூ.45,73,658/- மதிப்பிலும், 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா 9,67,895/- மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.39,500/- மதிப்பிலும், தோட்டக்கலைத் துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.7385/- மதிப்பிலும், 13 பயனாளிகளுக்கு ரூ.13,00,000/-மதிப்பிலான விபத்து நிவாரண தொகைகளையும், 18 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 132 பயனாளிகளுக்கு ரூ.68.88 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும்; அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதை எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அதனடிப்படையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.ஏழை எளிய கிராமப்புற மக்கள் தமக்கான சந்தேகங்களை போக்கிக் கொண்டு, அறிவியல் பூர்வமாக தெரிந்து கொண்டு பயன்பெறுவதே இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதின் நோக்கம். தமிழ்நாடு அரசு மூலம் ஒவ்வொரு துறையின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஒரு பெண்ணுக்கு உண்மையான வலிமை என்பது நிறைய சுதந்திரம் இருக்கலாம். பெண்ணிற்கு கல்வி கற்பதற்கான முழு சுதந்திரம், விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் இப்படி எத்தனை சுதந்திரம் இருந்தாலும், பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது அவர்களுடைய பொருளாதார சுதந்திரம் தான். தன்னுடைய பொருளாதாரத்திற்கு மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது. புதிய  பயிற்சிகளை பெற்று, கடனுதவிகள் பெற்று, தன்னம்பிக்கையோடு முன்னேறக்கூடிய பொருளாதார வலிமை மிகுந்த பெண்களாக நமது பெண்கள் இருக்க வேண்டும்.மேலும், கால்நடைத்துறையின் சார்பில், ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் அந்த இடத்தில் தீவனப் பயிர்களை வளர்ப்பதற்கு உரிய கடன் வழங்கப்படுகிறது மற்றும் கால்நடைகளை பராமரிப்பதற்கு உரிய கடன்களும் வழங்கப்படுகிறது.  நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.20 இலட்சம் பேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலமாக பல்வேறு பொருளாதார வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தொழிற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று  பல்வேறு துறைகளின் சார்பாக அதிகமான கடன்களையும் வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்களுக்கு தொடர்ச்சியாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கடனை பெற்று நீங்கள் அனைவரும் அதனை முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் கடனை  பெற்று அதனை நல்ல முறையில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் பெற்று, கடனையும் அடைத்து, வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்ள  வேண்டும்.தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை,  இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை  ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகளை நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று  வழங்கப்பட்டு வருகிறது.ஒரு குடும்பத்திற்கு அவர்கள் வழங்கக்கூடிய பரிசு என்பது அவரது உடல்நலம் தான். ஒருவருடைய உடல்நலத்தை சிறப்பாக பேணிக்காத்து கொள்ள வேண்டும். 30 வயது கடந்த உடன் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்ய  வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசினுடைய மருத்துவத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்தியாவிலேயே அதிகப்படியான பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் ஒரு மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நமது மாவட்டம் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலே முதல் மாவட்டமாக இருக்கிறது.18 வயதிற்கு குறைவாக உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது மிகப்பெரிய குற்றமாகும். 18 வயதிற்கு  கீழ் உள்ள பெண்களுக்கு உடல் நிலையும், மன நிலையும் ஒரு குழந்தையை சுமக்கக் கூடிய  அளவில் இல்லை.அதனால் பிறக்கக்கூடிய குழந்தைகள் குறைப்பாட்டுடன் பிறக்கிறார்கள். 18 வயதிற்கு  கீழ் உள்ள பெண்களுக்கு இரத்த சோகை என்று சொல்லக்கூடிய இரும்புச்சத்தின் அளவும் குறைவாக தான் உள்ளது. எனவே குழந்தை திருமணத்தை  அனைவரும் சமூகமாக சேர்ந்து அவற்றை எதிர்க்கொள்ள வேண்டும்.மேலும், நமது பகுதியில் அதிகமான இளைஞர்கள் படித்து வேலைவாய்ப்பை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகமான போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் ஒவ்வொரும் தொழில் முனைவோராக ஆக வேண்டும். நமது மாவட்டத்தில் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் மிக அதிகமான சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் செய்யக்கூடியதில் ஒன்றாக இருக்கிறது. அதனால்  தான் அனைத்து இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவி வழங்கப்படுகிறது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு  பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, வட்டாட்சியர் திரு.பாலமுருகன் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 12, 2025

வேளாண் அடுக்கு திட்டத்திற்காக விவசாயிகளின் தரவுகள் சேகரிக்க 10.02.2025 முதல் 10 நாட்கள் கிராம அளவில் சிறப்பு முகாம்

தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் ஒன்றிய அரசு வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் பதிவு விவரம், நில உடமை வாரியாக புவியிடக்குறியீடு செய்த பதிவு விவரம் ஆகிய 3 விவரங்களும் முக்கியமானவை ஆகும். இதில் நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் திட்டமானது, ஒன்றிய அரசின் வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி மாநில முழுவதுமாக செயல்படுத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மின்னணு முறையில், அனைத்து விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் அனைத்து அரசு திட்ட உதவிகளும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும். நில விவரங்களை இணைப்பதன் மூலம் அனைத்து துறை திட்டங்களையும் எளிதில் பெறலாம்.ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிதில்லை. அரசு நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் நலத்திட்டஙகள் பெற்றுக்கொள்ள முடியும். பிரதமரின் கௌரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும் மாநிலத் திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தற்போது ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று அறுபத்து நான்கு விவசாயிகள் பிரதமரின் கவுர நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் பதிவு (பார்மர் ரிஜிஸ்டர்) திட்டத்தின் மூலம் தரவுகளையும் சரிபார்த்து அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் 601 வருவாய் கிராமங்களிலும் ஊராட்சி அலுவலகங்களில் 10.02.2024 முதல் 10 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதகர்கள் மற்றும் மகளிர் திட்ட சமுதாய வள பயிற்றுநர்கள் வருகை தந்து, தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர்.எனவே விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு வந்து அடையாள எண் பதிவு செய்ய தங்களின் விவரங்களை வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 10, 2025

பொது நியாய விலைக் கடைகளில் - POS இயந்திரத்தில் மின்னணு கைரேகை பதிவுகளை 12.02.2025 முதல் 15.02.2025 வரை பதிவு செய்து கொள்ளலாம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA)  படி வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப அட்டைகளான PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மற்றும் இதர குடும்ப அட்டைகளின் உறுப்பினர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள  நியாய விலைக் கடைகளில் 12.02.2025 முதல் 15.02.2025 வரை தங்களது கைவிரல் ரேகை பதிவு செய்யலாம்.மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அல்லது அருகிலுள்ள நியாய விலைக் கடை POS இயந்திரத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என்பதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 10, 2025

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் (10.02.2025)  பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு,  மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்படுகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,79,432 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.மனித உடல் இயங்க வேண்டும் என்றால் அதிகமான சத்துக்கள் வேண்டும். மனிதனுடைய உடல் கட்டமைப்பு புரதச்சத்;துக்களில் தான் வருகிறது. நமது உடல் எடையை பொறுத்தமட்டில் ஒரு கிலோ எடைக்கு சுமார் 1 கிராம் புரத சத்து உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். நம்முடைய உடலுக்கு தேவையான புரதச்சத்தை விட குறைவாக நாம் பெறும் போது தான் உடல் வலிமை குறைகிறது.இந்நிலையில்  நம்முடைய வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் ஒட்டுண்ணியாக செயல்பட்டு, நாம் உட்கொள்ளும் உணவில்  இருந்து சத்துக்களை உறிஞ்சி  கொள்ளும்.சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது குடல் ஆரோக்கியம் தான். நம்முடைய கைகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு கால இடைவெளியிலும் இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலமாக உடல் ஆரோக்கியமும், குடல் ஆரோக்கியமும் பெற முடியும்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 112 113 114 115 116 117 118 ... 121 122

AD's



More News