விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் (04.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள் கல்லூரி பருவம்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். நீங்கள் சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகன்.இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம். மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைக்கு அறிவியல் மனப்பாங்கு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நாம் அறிவியலை படித்து அறிவியல் தகவலை பெற்று ஒரு அறிவியல் நிபுணராகவோ அல்லது படித்த படிப்பாளியாகவோ இருப்பது வேறு, அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.எனவே யார் எதை சொன்னாலும் அது நமக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதனை திருவள்ளுவர்எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற திருக்குறளில் குறிப்பிடுகிறார். இன்றைக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய அல்லது சில ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொள்ள இருக்கக்கூடிய வாழ்வியல் சிக்கல்கள் குறித்து உங்களுக்கு மிகத் தெளிவான அறிவியல் பூர்வமான, சட்ட அடிப்படையிலான தரவுகள் அடிப்படையிலான நியாயமான வழிகாட்டுதல் முறையை வழங்குவதற்கான நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி.இப்போது எடுக்கக்கூடிய முடிவுகள் தான் அடுத்து வரக்கூடிய 50 ஆண்டுகளுக்கு உங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடியதாக இருக்கும். அதனால், அந்த முடிவை அறிவின் துணையோடு அறிவியல் மனப்பாங்கோடு எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களுடைய கல்லூரியில் நீங்கள் பாடத்தை கற்றுக் கொள்வது ஒரு 20 விழுக்காடு தான். மீதமான வாழ்க்கைக்கு தேவையான 80 சதவீதம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடத்திலும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.ஒரு சக தோழி இடத்தில் சக நண்பர்களிடத்தில் எப்படி பழகுவது , கனிவாக இருப்பது என்றும் எந்தெந்த இடங்களில் கோபம் கொள்ள வேண்டுமோ அங்கு கோபம் கொள்ள வேண்டும். கனிவாக இருக்கக்கூடிய அதே நேரத்தில் எங்கெல்லாம் No அல்லது வேண்டாம் என்று சொல்லக்கூடிய சூழ்நிலை வருகின்றதோ அதை தைரியமாக எதிர்கொள்ள கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என்பது ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று உலகில் அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.எனவே நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரு தெளிவான திட்டமிடுதலும், தெளிவான பார்வையும், தெளிவான லட்சியமும் இருந்தால் தொடர்ச்சியான முயற்சிகள் மூலமாக நீங்கள் ஒரு இலக்கை அடைய முடியும். நீங்கள் ஏதாவது ஒன்றை முயற்சி செய்து கொண்டு பாதியில் விட்டு விடாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டிருந்தால் வெற்றி பெற முடியும்.இதைவிட முக்கியமானது நீங்கள் இந்த கல்லூரி காலகட்டத்தில் கற்று கொள்வதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் அன்றாடம் நிறைய இருக்கிறது. இந்த சமூக ஊடகங்கள், வலைதளங்களில் உள்ள கருத்துக்களில் நன்மைகளும், தீமைகளும் இருக்கின்றன. அன்னப்பறவை என்பது பாலில் இருந்து நீரை மட்டும் தனியாக பிரித்து தனக்கு தேவையான பாலை மட்டும் எடுத்துக் கொள்கிறதோ அதுபோல அப்படி உங்களுக்கு தேவையான நன்மைகளும் தீமைகளும் கலந்தே தான் இருக்கிறது அதில் நன்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நன்கு பெற்று கொள்ளுங்கள் ஒரு வேலை உங்கள் பாதையில் தீமைகள் வந்தால் அதை அறிவின் துணையோடு எதிர் கொண்டு மிக பக்குவமாக அதிலிருந்து நன்மைகளை மட்டும் பெற்று மாணவ செல்வங்களாக நீங்கள் உருவாக வேண்டும்.இந்த வாழ்க்கை நிறைய வாய்ப்புகளை தந்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உயர்வதற்கும், உங்கள் பெற்றோர்கள், உங்கள் குடும்பத்தினரை உயர்த்துவதற்கும், சமூகத்துக்கு பயனுள்ள மனிதர்களாக வாழ்வதற்கும், எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு நீங்கள் அறிவையும், ஆற்றலையும், அன்புகளையும், அனுபவங்களையும் பெற்றுக் கொள்வதற்கு இந்த கல்லூரி காலகட்டத்தில் இணையதளம், அலைபேசியினை முறையாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுக்கொண்டு வெற்றி பெறுவதற்கு தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..
விருதுநகர் மாவட்டம் மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர்; முனைவர் வீ.ப.ஜெயசீலன்I.A.S., அவர்கள் எச்சரிக்கை விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஈஞ்சார் கிராம எல்லைக்குட்பட்ட சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் கடந்த 22.01.2025 அன்று உரிய அனுப்புகைச் சீட்டின்றி கனிமம் ஏற்றி வந்த TN 95 D 8988 என்ற பதிவெண் கொண்ட டிராக்டரானது சிவகாசி சார் ஆட்சியர் அவர்களால் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, மல்லி காவல் நிலையத்தில் வழக்கு எண்: 19/2025 என பதிவு செய்யப்பட்டு, சம்பந்தபட்ட கனிம திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமம், பெரியகுளம்; கண்மாயில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் அள்ளிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட ஆணையினை முறைகேடாக பயன்படுத்தி கிராவல் மண் அள்ளிக்கொண்டிருந்த TN 67 AF 3867, TN 79 M 4275, TN 67 AF 0462, TN 58 AZ 1042, TN 95 C 5625, TN 95 C 1924, TN 95 D 5247 ஆகிய பதிவெண்கள் கொண்ட டிப்பர் லாரிகளும், ஒரு கிட்டாச்சி இயந்திரம், TN 84 C 1869 மற்றும் TN 67 BF 4314 ஆகிய பதிவெண்கள் கொண்ட JCB இயந்திரங்களும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சாத்தூர் வட்டாட்சியர் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு எண்: 45/2025 என பதிவு செய்யப்பட்டு, சம்பந்தபட்ட கனிம திருட்டில் ஈடுபட்ட நபர்கள் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தப்பிச்சென்ற நிலையில் கைது செய்ய காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது சுரங்கங்களும் கனிமங்களும் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1957 பிரிவு 21(1)-ன்படி தண்டனைக்குறிய குற்றமாகும். மேலும், இச்செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 303(2)-ன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும். மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகர்த்தக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (03.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. 18 -வயதிற்கு பிறகு நீங்கள் சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகன். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். நீங்கள் அடுத்தவர்கள் பாதுகாப்பை முதன்மையாக கொண்டும், உங்களின் உடைய பாதுகாப்பையும் ஒரு வாகனத்தை பொறுப்புடன் இயக்குவீர்கள் என்ற முதிர்ச்சியின் அடிப்படையில் உங்களுக்கு வாகனம் உரிமம் வழங்கப்படுகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.எவ்வளவு உயரத்தில் ஒரு பொருள் இருக்கிறதோ அவ்வளவு உயரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். அப்பொழுது தான் அந்த பொருள் நமக்கு கிடைக்கும் என்பதை போல உங்களின் உடைய தேவையும், விருப்பமும் எந்த உயரத்தில் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எது ஒன்று கஷ்டம் என்று நினைக்கிறீர்களோ அதை யாராவது ஒருவர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.எனவே, இந்த பருவத்தில் அது குறித்து நீங்கள் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும். உயர்வான நம்பிக்கை எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை என்பது உங்களுக்கு நீங்கள் ஏற்படுத்தி கொண்ட வளையம். அதனை போக்கி கொள்ள வேண்டும். உங்களை விட திறமையும், உழைப்பும் குறைவாக உள்ளவர்களுக்கு வாய்ப்பை நீங்கள் கொடுத்து விடுகிறீர்கள். உங்களின் உடைய தொடர்ச்சியான முயற்சியால் எல்லாவற்றையும் மாற்ற முடியும்.ஒரு சமூக அறிவியல் தத்துவத்தை நமது இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. எந்த ஒன்றையும் சமூக பார்வையோடு, சமூக அரசியல் பொருளாதாரத்தோடு, தத்துவங்களோடு இணைந்து பார்க்க வேண்டும் என்று பல நூற்றாண்டுகள் கடந்த இலக்கியத்திலும் நம்மால் பார்க்க இயலும்.நல்லொழுக்கத்தை நாம் திரும்ப திரும்பக் கடைபிடித்தால் அது பழக்கமாகி விடும். அதுபோல தான் நீங்கள் தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெறலாம். அதனை மேம்படுத்துவதற்குரிய நாற்றாங்காலாக இந்த கல்லூரி வாழ்க்கை இருக்கும். உங்களது வெற்றி என்பது வானளவில் உயரத்தில் சிறகடித்து பறக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின் போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், முன்னாள் படைவீரரின் திருமணமாகாத மகள் ,விதவை மகள்கள் ,ஆகியோர் தகுதியானவர்கள். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டிமானியமும் வழங்கப்படும். மேலும் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.இத்திட்டத்திற்கான முக்கியமான தகுதிகள்:01. முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது 55.02. மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்த பட்ச வயது வரம்பு 21 அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும்.03. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.04. விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை.05. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் அவர்களைச் சார்ந்தவர் மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (04563-296382) தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், (01.02.2025) தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றியடைந்த சுமார் 1000 மாணவர்கள் பங்குபெற்ற மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025 நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மாணவர்களுக்கு தமிழ் இலக்கியங்கள், திருக்குறளை ஏன் கற்க வேண்டும். அது எந்த வகையில் பயன்படும் என்ற மிகச் சிறப்பான கேள்வு எழும். பதினோராம் வகுப்பு முடித்துவிட்டு 12-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து சிறந்த மதிப்பெண்களை பெற்று, தமிழ்நாட்டினுடைய தலைசிறந்த கல்லூரிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சேர்வதற்கு பெரும்பாலும் ஆர்வத்தோடு இருப்பீர்கள்.ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கிஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்மின்னோர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையதுதன்னேர் இலாத தமிழ்! என்ற பாடலினுடைய மையப் பொருள் உலகின் இருளை அகற்றுவதற்கு இரண்டு பொருள்களால் முடியும். ஒன்று உதிக்கும் சூரியன். சூரிய வெளிச்சத்தில் உலகின் உடைய இருள் போகும். அதே போல் இந்த உலகின் உடைய இருளை அகற்றுவதற்கு தமிழும் இருக்கிறது என்று தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது.உலகில் எவையெல்லாம் காலம் காலமாக மனிதர்களுடைய அறியாமையிலோ அல்லது சுயநலத்திலோ மனிதர்களுக்கு கிடைக்காமல் போகிறதோ, அதை தத்துவங்கள் விட்டு நிரப்பும். அதற்குத்தான் இலக்கியங்கள் உலகெங்கும் பிறந்திருக்கின்றன. மனிதர்களுடைய வாழ்வியலுக்கு தத்துவங்களும், அறக்கருத்துக்களும் மிக மிக அவசியம். அந்த தத்துவங்களை அறக்கருத்துக்களை அதனுடைய பயனை இரண்டாக வகுக்க முடியும். இதை தமிழ் இலக்கியத்தில் திருக்குறளில் மட்டுமல்ல உலகின் செம்மார்ந்த இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் இந்த இரண்டு பகுப்பை பார்க்க முடியும்.ஒன்று சமூகத்திற்கு என்ன தருகிறது. இன்னொன்று தனிமனித முன்னேற்றத்திற்கு என்ன தருகிறது. தனி மனிதன் முன்னேறியதற்கு பிறகு அவன் வழியாக இந்த சமூகம் முன்னேறும். இந்த சமூகத்தை எல்லோரும் முன்னேற்றுவார்களா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை.அதைக்கான விடையை திருக்குறளில் இருந்து எடுக்க முடியும். இந்த சமூகத்தின் போக்கை தீர்மானிக்கக் கூடியவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு சில மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதை நமது இலக்கியங்கள் மட்டுமல்ல சாக்ரடீஸ் போன்ற அரசியல் தத்துவங்கள் ஞானிகளும் குறிப்பிடுகிறார்கள். மருத்துவ துறையில் அதனுடைய போக்கை அடுத்த அரை நூறு ஆண்டுகளுக்கு தீர்மானிக்க கூடியவர்களும், பொறியியல் துறையினுடைய அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளால் அதனுடைய போக்கை தீர்மானிக்க போவதும், அற இலக்கியங்களால் சமூகத்தினுடைய போக்கை தீர்மானிப்பவர்களும் ஒரு சில மனிதர்கள் தான். அப்படிப்பட்ட மனிதர்களை தேர்ந்தெடுத்து இந்த தனி மனித முன்னேற்ற வாழ்வியல் தத்துவங்களை இலக்கியத்தின் வழியாக அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மைய நோக்கத்தில் தான் நீங்கள் இலக்கியம் படிக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக தான் இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா உட்பட அரசு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள சுமார் 1000- க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியினை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோழிகள், பண்ணைக்கோழிகள், வாத்துகள் மற்றும் வான்கோழிகளை வைரஸ் கிருமியால் உண்டாக்கப்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் தாக்குகிறது. இந்நோயின் முக்கிய அறிகுறிகளாவது, கோழிகள் தீவனம் உண்ணாமை, சோர்ந்து போய் இருத்தல், வெள்ளை நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படுதல், நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழிகள் நடக்க இயலாமல் போகும் ஆகியவை ஆகும். இந்நோய் ஏற்படின் கோழிகள் வளர்ப்போருக்கு அதிகளவில் பொருளாதார இழப்பு நேரிடும். மேலும் நோய் கண்ட கோழிகளை சிகிச்சை மேற்கொள்வது கடினமானது ஆகும். எனவே கோழிகள் வளர்ப்போர், கோழிப்பண்ணையாளர்கள் எட்டு வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இத்தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் இந்நோயினை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்திற்கு இப்பணிக்கென 1.68 இலட்சம் டோஸ் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து 115 கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பாக நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு இலவச கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை கால்நடை வளர்ப்போர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், (31.01.2025) தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த மாநாடு துவக்க விழா நிகழ்ச்சியில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக சிறப்புறையாற்றினார்கள்.அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின் தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2024-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் “திருக்குறள் மாணவர் மாநாடு 2025" என்ற நிகழ்வு, மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.திருக்குறள் என்பது இலக்கிய நூல் மட்டுமல்ல. அது உலகப் பொதுமறை நூலாகும் என்பதை எடுத்துக்காட்டக் கூடிய வகையில் ஏராளமான நிகழ்வுகள், இலக்கிய விழாக்கள் நடந்திருந்தாலும், தமிழ்நாடு அரசினுடைய சார்பில் தீராக் காதல் திருக்குறள் என்கின்ற தலைப்பில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு, அத்திட்டத்தின் உடைய ஒரு பகுதியாக திருக்குறள் மாணவர் மாநாடு நடைபெறுவது என்பது சால சிறந்த ஒன்று.உலக பொதுமறை நூலக இருக்கக்கூடிய திருக்குறளுக்கு புகழ் சேர்த்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். வள்ளுவர் கோட்டமாக இருந்தாலும், கலைஞரின் உடைய உரைகளாக இருந்தாலும், குறளோவியமாக இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் சாலச் சிறந்ததாக அமைந்திருக்கக்கூடிய, தென்கோடி முனையில் குமரியில் அமைந்திருக்கக்கூடிய வானளாவிய வள்ளுவர் சிலையாக இருந்தாலும், இவையெல்லாம் கலைஞர் அவர்கள் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றி நமக்கு வழங்கிய கொடைகள்.வருங்காலத்தில் உயர்கல்விக்கு செல்லும் பொழுது புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவைகள் மூலம் உங்களில் பலர் நிச்சயம் பயனடைவீர்கள். அதற்கு முன்னோட்டமாகவும், அதே நேரம் தமிழ் மீதான உங்களுடைய ஆர்வத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தான், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தி அதில் 1500 மாணவர்களை தேர்வு செய்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ.1500/- வழங்கப்படுகிறது.அதற்குரிய முன்னெடுப்புக்காக தீராக் காதல் திருக்குறள் என்ற திட்டத்தைதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு உருவாக்கிய பெருமை இதே மாவட்டத்தைச் சேர்ந்த மைந்தன் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களை சேரும். தந்தை பெரியார் 1925-ல் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பின்புதான் திருக்குறள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் தொடங்குகிறது. அதற்கு முன்பு திருக்குறளுக்கு எழுத்தப்பட்டியிருந்த உரைகளை குறிப்பிட்டு, விமர்சிக்க தொடங்கிய பெரியார் அவை திருக்குறளின் மூலக்கருத்துக்கு எதிராக இருப்பதை எடுத்துச் சொன்னார்.1999-ம் ஆண்டு இறுதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்திற்கு பொதுமறையை தந்த அய்யன் வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உலக தமிழர்களை உற்சாகப்படுத்தினார் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். அச்சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாட்டின் உடைய முதலமைச்சர் அவர்கள் 25-ஆம் ஆண்டு விழாவை எடுத்து அய்யன் வள்ளுவரையும், திருக்குறளையும், தமிழகத்தையும் பெருமைப்படுத்தினார்.இப்போட்டியில் உங்களுக்கு கிடைத்த வெற்றி என்பது உங்களுக்கான வெற்றி அல்ல. தமிழுக்கான வெற்றி. தமிழ் தொடர்ந்து வெல்லட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியினுடைய 90 விழுக்காடு, நீங்கள் பெற்றுக் கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும் நிகழ்ச்சிகள், உங்கள் பங்கேற்பு, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இருக்கிறது.தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலமாக திருக்குறளையும், தமிழ் இலக்கியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.தமிழ் இலக்கியத்தில் இருக்கக்கூடிய பெருமைகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அடுத்த 50, 60 ஆண்டுகளுக்கு உங்களுடைய வாழ்க்கையில் எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் மொழியை, இலக்கியத்தை, தமிழில் மொழி தரக்கூடிய வழுமியங்களை, திருக்குறள் தரக்கூடிய உயர்ந்த செம்மார்ந்த அனுபவங்களை, நீங்கள் கைக் கொண்டு உயர்வதற்கும், நீங்கள் வழி காட்டுவதற்கும் இந்த நிகழ்ச்சி உறுதுணையாக அமையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா உட்பட அரசு அலுவலர்கள், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள சுமார் 1000- க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (30.01.2025) வருவாய்த்துறை அலுவலர்களுடனான டிசம்பர் - 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு.இரா.இராமசுப்பிரமணியன் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.தி.ராமநாதன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திருமதி ந.கலைவாணி,சிறப்பாக பணியாற்றிய சிறந்த தனி வட்டாட்சியர் (ச.பா.தி) களில் இராஜபாளையம் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திரு.பா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி சீ.உமா அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி வீ.கிருஷ்ணவேணி அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ)ஃ வட்ட வழங்கல் அலுவலர்களில் இராஜபாளையம் தனிவட்டாட்சியர் (கு.பொ.வ.) திரு.மு.வடிவேல் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் திரு.தெ.அறிவழகன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், விருதுநகர் வட்ட வழங்கல் அலுவலர் திரு.செ.பாஸ்கரன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் திரு.சி.சிங்கராஜ் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-1 திரு.ஆ.பிரின்ஸ் ரஞ்சித்சிங் அவர்களுக்கும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-2 திருமதி சி.பானுமதி அவர்களுக்கும் இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் திரு.தே.சுப்பிரமணியன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்டத் துணை ஆய்வாளர்களில் திருச்சுழி வட்டத்துணை ஆய்வாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களுக்கு முதல் பரிசும், வத்திராயிருப்பு வட்டத்துணை ஆய்வாளர் திருமதி.பெ.செல்வி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்களுக்கு மூன்றாம் பரிசும்,சிறந்த தனி வருவாய் ஆய்வாளர்களில் (கு.பொ.வ.) அருப்புக்கோட்டை வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.சு.சசிகுமார் அவர்களுக்கு முதல் பரிசும், சிவகாசி வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.மா.கோட்டைராஜ் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், இராஜபாளையம் வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.கே.பாலமணிகண்டன் அவர்களுக்கு மூன்றாம் பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.முன்னதாக, சிவகாசியில் நடைபெற்ற “சுவையுடன் சிவகாசி” உணவுத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றதை பாராட்டி சிவகாசி சார் ஆட்சியர் திருமதி நா.ப்ரியா ரவிச்சந்திரன் அவர்களுக்கும், விருதுநகரில் நடைபெற்ற “விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025” உணவுத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றதை பாராட்டி சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.மு.சிவக்குமார் அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி நா.ப்ரியா ரவிச்சந்திரன், I A S, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, போதைபொருள் ஒழிப்பு மற்றும் நீர்நிலைகள் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தலைமையில் (30.01.2025) நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான 2- ஆவது திருக்குறள் மாணவர் மாநாடு - 2025- ஐ வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் தொடங்கி வைக்கவுள்ளனர்.அறநெறிகளை பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் திருக்குறளின்; தொன்மை மற்றும் மாண்பினை பறைசாற்றும் விதமாக "தீராக் காதல் திருக்குறள்" திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கிடையே திருக்குறளின் அடிப்படையில் வாழ்வியல் கோட்பாடுகளை அடித்தளமாக அமைத்து, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தையும் செழுமைப்படுத்தும் முயற்சியாக, தமிழ்த் திறனறிவுத் தேர்வு-2024-ல் வெற்றி பெற்ற தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களையும் அழைத்து 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் “திருக்குறள் மாணவர் மாநாடு 2025" என்ற நிகழ்வு, மாவட்ட நிர்வாகத்தால், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.இம்மாநாட்டில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் திறனறித் தேர்வு- 2024- ல் வெற்றி பெற்ற மாணவர்களில், சிறந்த மற்றும் ஆர்வமுள்ள மாணாக்கர்கள் தேர்வு செய்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.மேலும், இம்மாநாட்டில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் டாக்டர் சங்கர சரவணன் அவர்கள் குறள் வினாடி வினா போட்டியினையும், திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் சங்கத்தமிழும் திருக்குறளும் என்ற தலைப்பில் தமிழ் ஓசை இசை நிகழ்ச்சியினையும் மற்றும் ஊடகவியலாளர் திரு.கார்த்திகைச் செல்வன் அவர்கள் திருக்குறள் விவாத மேடை நிகழ்ச்சியினையும் நடத்த உள்ளனர். மேலும், இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பிலும், பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்ற தலைப்பிலும், கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் அழகே தமிழே என்ற தலைப்பிலும், திரு.ஆர்.விஜயாலயன் அவர்கள் உயர்கல்விக்கு வழிகாட்டல் என்ற தலைப்பிலும், பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர் திரு.முத்துக்குமரன் அவர்கள் தமிழும் நானும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.மாணவர்களுக்கு மொழியாற்றலும், சமூக உணர்வும் மேம்படுத்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள், பேச்சுப்போட்டி, சிறுகதை எழுதுதல் போட்டி, கவிதை எழுதுதல் போட்டி உள்ளிட்ட தனிநபர்களுக்கான போட்டிகளும், நடனம், நாடகம், பாவனை நாடகம், வினாடிவினா, திருக்குறள் விவாத மேடை உள்ளிட்ட குழுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. மேலும், மதுரை மேஸ்ட்ரோ சைமன் இன்னிசைக் குழுவினரின் தமிழ்-திரையிசை பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.எனவே, இந்த மாநாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.