25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 16, 2025

தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  அவர்கள் முன்னிலையில்  (15.02.2025) நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.செவலூர் ஊராட்சி சிலோன் காலனியில்  உள்ள மேய்க்கால் புறம்போக்கில் சுமார் 7.26 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றாங்கால் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில் பெரும்புலவர் கபிலர் நாற்றாங்கால் தொகுதி, அய்யன் திருவள்ளுவர் நாற்றாங்கால் தொகுதி, மருத்துவ பேராசான் அகத்தியர் நாற்றாங்கால் தொகுதி, தமிழ் மூதாட்டி ஓளவையார் நாற்றாங்கால் என மொத்தம் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு 5.20 இலட்சத்துக்கு மேல் நாற்றாங்கால் வளர்க்கப்பட்டு வருகிறது.இதில் தேக்கு, புளி, வேம்பு, பூங்கன், தோதகத்தி, வில்வம், கருவாகை, அயல்வாகை, குமிழ், செம்மரம், ஆத்தி, நீர் மருது, சந்தனம், மகா கனி, சீத்தா, கொய்யா, கொடிக்காய் புளி, பப்பாளி, நாவல், பலா, முருங்கை, பூவரசு, பெரு நெல்லி, தூங்கு மூஞ்சி வாகை, ஈட்டி, இலவம் பஞ்சு, மஞ்சள் கடம்பூ, வேங்கை, ஆனை குன்று மலை, சரங்கொன்றை, நொச்சி, செம்மரம், மலைவேம்பு, மஞ்சள் கொன்றை, பென்சில், சவுக்கு, ஆலி, முந்திரி, மயில் கொன்றை, பேய் இலவம், கரு நொச்சி, வாகை, மல்பேரி, சரக்கொன்றை, கருங்கொன்றை, சொர்க்கம், மாதுளை, செம்பருத்தி, சிறியா நங்கை, தூதுவளை உள்ளிட்ட சுமார் 50 வகைகளுக்கு மேலான நாற்றாங்கால் இனங்கள் உள்ளது. குறிப்பாக பழம் தரும் மரக்கன்றுகள் வகைகள், நிழல் தரும் மரக்கன்று வகைகள், மருத்துவகுணம் கொண்ட மரக்கன்று வகைகள் மற்றும் பூத்துக் குலுங்கும் அழகுக்கான மரக்கன்று வகைகள் வளர்க்கப்படுகிறது.இந்த தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை இன்று   நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 16, 2025

சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள்  (15.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. 18 -வயதிற்கு பிறகு நீங்கள் சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகன். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது.  ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைக்கு அறிவியல் மனப்பாங்கு என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. நாம் அறிவியலை படித்து அறிவியல் தகவலை பெற்று ஒரு அறிவியல் நிபுணராகவோ அல்லது படித்த படிப்பாளியாகவோ இருப்பது வேறு, அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது என்பது வேறு. இரண்டிற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.எனவே யார் எதை சொன்னாலும் அது நமக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  இன்றைக்கு உங்களுக்கு இருக்கக்கூடிய அல்லது சில ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொள்ள இருக்கக்கூடிய வாழ்வியல் சிக்கல்கள் குறித்து உங்களுக்கு மிகத் தெளிவான அறிவியல் பூர்வமான, சட்ட அடிப்படையிலான தரவுகள் அடிப்படையிலான நியாயமான வழிகாட்டுதல் முறையை வழங்குவதற்கான நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சி.இப்போது எடுக்கக்கூடிய  முடிவுகள் தான் அடுத்து வரக்கூடிய 50 ஆண்டுகளுக்கு உங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடியதாக இருக்கும். அதனால், அந்த முடிவை அறிவின் துணையோடு அறிவியல் மனப்பாங்கோடு எடுக்க வேண்டும்.தங்களுடைய  வாழ்க்கையில் பல்வேறு தனிமனித, சமூக, பொருளாதாரத்தில்  வாழ்க்கை முழுவதும் வரக்கூடிய சிக்கல்களுக்கு நாம் நம்முடைய அறிவின் மூலமாக நம்மை தயார் செய்து கொள்வது மிக முக்கியம்.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.மேலும், மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். ஆனால் அந்த மதிப்பெண்களோடு விழிப்புணர்வு பெறுவது தான் மிகவும் முக்கியம். கல்வியறிவு என்பது அடுத்தவர்களின் அனுபவங்களை நாம் பெற்று கொள்வது. அந்த அனுபவங்கள் தான் நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய தனிமனித, சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு நமக்கு தீர்வுகளை தருகிறது.நாம் மனிதனிடத்தில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களுக்கு நம்முடைய அறிவு துணை செய்கிறது. நாம் படித்து வேலைக்கு சென்று பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு அறிவு தான் துணை செய்கிறது. அறிவிற்கு அந்த திறமை, தகுதி உண்டு.  நாம் தான் அந்த அறிவை பெற்றுக்கொள்ளவும், பெற்ற அறிவை பயன்படுத்தி துன்பத்தில் இருந்து காத்துக்கொள்வதும் தொடர்ச்சியான விழிப்புணர்வில் இருக்கிறது.மனிதர்களை மாற்றுவது என்பது அவர்களுக்கு கிடைக்கும்  வாய்ப்புகள் தான். வாய்ப்புகளை மனிதன் உருவாக்கி கொண்டே இருக்கிறான் அல்லது வாய்ப்புகள் எங்கு எல்லாம் இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறான். தேடக்கூடியவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.இந்த வாழ்க்கை நிறைய வாய்ப்புகளை தந்திருக்கிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உயர்வதற்கும், உங்கள் பெற்றோர்கள், உங்கள் குடும்பத்தினரை உயர்த்துவதற்கும், சமூகத்துக்கு பயனுள்ள மனிதர்களாக வாழ்வதற்கும், எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு நீங்கள் அறிவையும், ஆற்றலையும், அன்புகளையும், அனுபவங்களையும் பெற்றுக் கொள்வதற்கு இந்த கல்லூரி காலகட்டத்தில் இணையதளம், அலைபேசியினை முறையாக பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுக்கொண்டு வெற்றி பெறுவதற்கு தான் இந்த நிகழ்ச்சி என   மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 16, 2025

திருத்தங்கல் கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் திருத்தங்கல் கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் (15.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழுவில கீழ் திருந்தங்கல் முழு நேர கிளை நூலகம் திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலகம் 1958 ஆம் ஆண்டு திறுக்கப்பட்டது. நூலகத்தில் 45,000 க்கு மேற்பட்ட நூல்கள் உள்ளது. மேலும் 8646 பேர் உறுப்பினராக உள்ளனர்.  இப்பகுதி பொது மக்களும், மாணவ மாணவிகளும் மற்றும் போட்டித்தேர்விற்கு தயாராகிவரும் இளைஞர்களும் இந்நூலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நூலகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கணிப்பொறி வசதியும் இலவச வை-பை மற்றும் நகலெடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சொந்த கட்டிடத்தில் செயல்படும் இந்நூலகத்திற்கு மாநிலங்களுக்கான சிறப்பு நிதி உதவித்திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் நூலகத்தில் இலக்கணம், இலக்கியம், இலக்கிய வரலாறு, மொழி வரளாறு, ஆராய்ச்சிக்கட்டுரைகள், திறனாய்வு நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், திருக்குள்ள தொடர்பான திறனாய்வு நூல்கள், தமிழ் அகராதிகள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்ற முற்றிலும் 10000 தமிழ் நூல்களைக் கொண்ட பிரத்தியேக தமிழ் நூலகமாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த நூலகம் கல்லூரி மாணர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும், தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும்,  தமிழ் அறிஞர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய தனித்துவமான நூலகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுஇந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 14, 2025

இருஞ்சிறை அரசு உயர் நிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இருஞ்சிறை அரசு உயர் நிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S அவர்கள் (14.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

Feb 14, 2025

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 21.02.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், சூலக்கரையில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN,  AANAIMALAI TOYOTO, VVV & SONS EDIBLE OIL PRIVATE LIMITED, RK MOTORS, DEVENDRAN PLASTIC PRIVATE LIMITED  போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு; I.T.I .டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 21.02.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது  முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.   இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 14, 2025

இருஞ்சிறை கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில், புனரமைக்கும் பணியினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இருஞ்சிறை கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில், ரூ.1.60 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள்துவக்கி வைத்தார்.நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவம் கூறுகிறது. வானத்திலிருந்து ஒரு சொட்டு நீர் கீழே விழுந்தால் தான் கீழே இருக்கக்கூடிய பயிர்களுக்கும், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே தான் மழை நீர் என்பது நம்மை பொருத்தமட்டில் ஒரு உயிர் நீர் என்கின்ற வகையிலே நாம் எப்போதும் அதற்கு தலைவணங்கி மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று அதனை வணங்குகிறோம்.அப்படி வானின்று வழங்கக்கூடிய இந்த பெருமழை நீரை தேக்கி வைக்கக்கூடிய இத்தகைய கண்மாய்கள், அதற்கான பாசன வசதிகள், அதற்கான வரத்துக் கால்வாய் என்று இந்த கட்டமைப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நம்முடைய  தொகுதி மேற்கே இருந்து கிழக்கே சாய்வாக இருக்கக்கூடிய காரணத்தினால்  மழைச்சாரலில் இருந்து உருண்டு வரக்கூடிய பல இடங்களில் நீரைத்தேக்கி, அதற்கு பிறகு கடலிலே உபரி நீராக கலக்கக் கூடிய வகையில் இந்த நீர்பாசனம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அந்த வகையில் நம்முடைய இருஞ்சிறை கண்மாய் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்ககூடிய மிகப்பெரிய கண்மாய்களிலேயே முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  இது போன்ற கண்மாய்க்கு  அன்றைய முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் கண்மாய்களை சீரமைக்கக்கூடிய திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரக்கூடிய பணிகள், கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகள்  மேற்கொள்ளப்பட்டது.அதற்கு பிறகு இத்தகைய கண்மாய்களை எல்லாம் சீரமைக்க வேண்டும், புனரமைக்க வேண்டும் என்றும், வருங்கால சமுதாயத்திற்கு நாம் விட்டு செல்லக்கூடிய இயற்கையான கட்டமைப்புகளை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும், மதில்களை சீரமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான்; நம்முடைய மாவட்டத்தில்; இத்தகைய முயற்சிகளை பெரிய அளவில் எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே  இருக்கக்கூடிய இந்த கண்மாய்களிலேயே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலமாக நாம் இந்த பகுதியிலே அதிகமான மழை நீர் வருகின்ற பொழுது சேமித்து வைக்க முடியும் என்ற அடிப்படையில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருஞ்சிறை கிராமத்தில் உள்ள இருஞ்சிறை கண்மாய்க்கு கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்திகுளம் அணைக்கட்டின் இடது பிரதான கால்வாயின் மூலம் பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.இருஞ்சிறை கண்மாயினை புனரமைக்கும் பணிக்காக தமிழக சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு (Environment Management Agency of Tamilnadu Corporate Environment Responsibility Fund) நிதியின் கீழ், ரூ.1.60 கோடி மதிப்பில் இப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த புனரமைக்கும்  பணிகளில்  கண்மாய் கரை 5120 மீட்டர் நீளத்திற்கு பலப்படுத்தும் பணிகளும், மொத்தம் 6 மடைகளில் 1 மடை மறுகட்டுமானம் மற்றும் 5 மடைகள் சீரமைக்கும் பணிகளும், கலுங்கு மறுகட்டுமானம் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.இதன் மூலம் 138 மில்லியன் கன அடி நீர்தேக்கப்பட்டு,  சுமார் 509.05 ஹெக்டேர் (1258 ஏக்கர்) பாசனப்பரப்பு பயன்பெறும்.மேலும், கண்மாயின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, இருஞ்சிறை கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தி செய்ய உறுதுணையாக இருக்கும் என  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இன்றைய நாள் இந்த பகுதிக்கு ஒரு மிக முக்கியமான ஒரு நாள். தமிழர்களுடைய அறிவின் அடையாளமாக இருக்கும் வள்ளுவர் பெருந்தகைஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்என்று ஒரு திருக்குறளை எழுதி இருக்கிறார். அதனுடைய பொருள் நாம் நல்ல செயல்களை செய்து கொண்டே வேண்டும். அந்த நல்ல செயல்களை செய்வதற்கு என்னென்ன வகைகளில் எல்லாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ, அந்த முயற்சிகளையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.  நமது பகுதியில் அமைந்திருக்கக் கூடிய அனைத்து நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அதற்கு அரசினுடைய நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி வந்தாலும், அது போதாமையாக இருக்க கூடிய சூழ்நிலையில், இன்னும் எந்தெந்த வகையில் எல்லாம் இதுபோன்ற நல்ல பணிகளுக்கு நிதிகளை பெற முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி, இது குறித்து விவாதித்து, இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் கண்டறிந்து, நிறுவனங்களினுடைய சமூக பொறுப்பு நிதி என்று தனியார் நிறுவனங்கள் தாங்கள் ஈட்டக்கூடிய லாபத்தில் இரண்டு சதவீதத்தை இது போன்ற  பணிகளுக்கு செலவிட வேண்டும் என்று இருக்கக்கூடிய அத்தகைய சமூக பொறுப்பு நிதிகளையும் பெற்று நமது மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதையும் தாண்டி இன்னும் நிதி தேவைப்படுகின்ற போது, குறிப்பாக நமது வறட்சியான பகுதிகளில் இருக்கக்கூடிய கண்மாய்களை தூர்வார வேண்டும். இந்தப் பகுதியில் மட்டுமே ஏறத்தாழ 2 ஒன்றியங்களை சேர்த்து 300 க்கும் மேற்பட்ட சிறு, பெரிய கண்மாய்கள் இருக்கின்றன.அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் மேலும் வேண்டுகோளை வைத்த போது, அரசின் சார்பாக இயங்கக்கூடிய நிறுவனங்கள், அரசினுடைய நிதி நிறுவனங்கள், அரசினுடைய பல்வேறு பொதுத்துறை அமைப்புகள் போன்றவற்றில் சமூகப் பொறுப்பு நிதி இருக்குமா என்று தேடிப்பார்த்து, அப்படி ஒரு துறையில் இருந்து தான், இந்த இளஞ்சிறை கண்மாயை தூர்வாருவதற்கு ஏறக்குறைய ரூ.2 கோடி மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய பெரும் முயற்சியால் பெற்று, இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இப்படி தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள், அரசினுடைய நிதி பட்ஜெட் நிதியை தாண்டி ஒதுக்கப்படக்கூடிய நிதி திட்டங்களுக்கும் தாண்டி இன்னும் அதிகமாக பெற்று, இந்த பகுதியினுடைய வறட்சியை போக்க வேண்டும், இந்த பகுதியினுடைய விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யக்கூடியது தான் இது.இந்த இளஞ்சிறை கண்மாய் மிக முக்கியமான நமது மாவட்டத்தினுடைய மூன்றாவது பெரிய கண்மாய். ஏறத்தாழ 138 மில்லியன் கன அடி அளவில் தண்ணீரை தேக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. சுமார் 1300 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதியும், குடிநீர் வசதியும், நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு இந்த கண்மாயின் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.இந்த பகுதியில் விவசாயத்தை வளப்படுத்துவதற்கும், அதுவும் குறிப்பாக கிருதுமால் நதியில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீரை பெறுவதற்கும்,  இதற்கு இடதுபுறம் இருக்கக்கூடிய கால்வாய் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நீரை பெறுவதற்குரிய முயற்சிகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.நீர்வளத்துறை அலுவலர்கள் விரைந்து இந்த திட்டத்தை முடிக்க வேண்டும். அதேபோன்று எடுத்திருக்கக்கூடிய அனைத்து தூர்வாரக் கூடிய பணிகள், பலப்படுத்தக் கூடிய பணிகள், மதகுகளை புரணமைக்க கூடிய பணிகள் எல்லாம் விரைந்து முடித்து, ஒரு காலத்தில் இந்த பகுதிகள் ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்பாக கூடுதலாக விவசாயம் நடைபெற்ற பகுதி, அவற்றை மீண்டும் கொண்டு வந்து இந்த பகுதியினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்துறை இயன்ற பணிகளை எல்லாம் செய்ய வேண்டும், விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2025

திருக்குறள் முற்றோதல் போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த வெற்றி பெற்ற மாணவர்கள் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டனர்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த வெற்றி பெற்ற மாணவர்கள் (24.07.2024) கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு  சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் 25 வது ஆண்டினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிகள் 30.12.2024 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக கல்வி சுற்றுலா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு  இன்று அழைத்து செல்லப்பட்டனர். இச்சுற்றுலாவில் 53 மாணவர்கள் கலந்து கொண்டு அய்யன் வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் அமைப்பு குறித்து தெரிந்துகொண்டனர்.இந்த பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Feb 13, 2025

சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், பேராலி சாலை, ஓம் சக்தி திருமண மண்டபத்தில்  (13.02.2025) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சமூக நல ஆணையர் திருமதி ஆர்.லில்லி,I A S., அவர்கள் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் முதியோர்களை கௌரவித்தார்.   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான திட்டங்களையும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் சமூக நலத்துறை மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது.  புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், திருமண நிதியுதவி போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்து இத்துறையில் முறையாக திறம்பட நிர்வாகித்து வருகிறது.அதுபோல முதியோர் இல்லம் தொடங்கி, அரசு அங்கீகாரம் பெற்று இருந்தும் நிதியுதவி கிடைக்காமல் இருந்தாலும், புதிதாக முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்றால், விண்ணப்பிக்கும் போது அதனை முறையாக பரிசளித்து அதற்கான அனுமதியும், உதவிகளும்  வழங்கப்படுகின்றன.மேலும், அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்களில் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை ஏற்று அவர்களுக்கு உணவு, உடை தங்குமிடம் உள்ளிட்டவற்றை உருவாக்கித் தந்து, அவர்கள் 21 வயது வரை பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு என சுமார் 36 அரசு குழந்தைகள் இல்லம், 147 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பாராமரிக்கட்டு வருகின்றனர். அவர்களுக்கும் விளையாட்டு விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கும் அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி, ஆற்றுப்படுத்துதல், விளையாட்டு, பயிற்சி, ஓவியம், இசை போன்ற கலைகள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.இந்தத் துறை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் புத்துயிர் பெற்று பல்வேறு திட்டங்கள், சட்டங்கள் குழந்தைகள் நலன், பெண்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு வருகிறது.இது போன்ற திட்டங்களை ஆதரவற்றவர்களுக்கும், முதியோர்களுக்கும், பெண்களுக்கும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பெ.கீதா ஜீவன் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முதியோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 13, 2025

இராஜபாளையத்தில் 15.02.2025 அன்று நடைபெறவுள்ள காமிக்ஸ் திருவிழா(Comics Thiruvizha) நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் குழந்தைகள் பதிவு செய்து கொள்ளலாம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் சிங்கராஜா கோட்டை பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியில் உள்ள சித்திரக்கதைகள் நூலகத்தில் காமிக்ஸ் திருவிழா(Comics Thiruvizha) நிகழ்ச்சி 15.02.2025 அன்று நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொள்ளலாம். இதில் கேலி சித்திரம், முகமுடி தயாரித்தல் போட்டி, நாடகம், உடை அலங்காரம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.இந்த காமிக்ஸ் திருவிழா நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் 5 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள், அவர்கள் பள்ளி பயிலும் பள்ளியை அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 13, 2025

வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 18.02.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.      

1 2 ... 111 112 113 114 115 116 117 ... 121 122

AD's



More News