விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (06.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.எந்த ஒன்றிற்கும் சரியான புரிதலோடு உண்மையை சரியாக புரிந்து கொள்ளுதல் தான் மிகப் பெரிய திறனாக பார்க்கப்படுகிறது. யாராது ஒருவரை அவருடைய முகமதிப்பு வைத்து நம்புவதற்கு தான் இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி நமக்கு இருக்கக்கூடிய அறிவை பயன்படுத்தி அறிவின் துணையோடு எந்த ஒன்றும் சரியானதா இல்லையா என்று புரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதுவும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியில் செல்லும் பொழுது உங்களுக்கு அதிகமான கடமைகள் இருக்கிறது.எனவே, இந்த வயதில் உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்ற பொழுது, அதை எப்படி அதற்காக தயார்படுத்தி கொள்வது, வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்தி கொள்வது, அதுவும் குறிப்பாக ஒரு கிராமப்புற சூழலில் இருந்து வரக்கூடிய மாணவிகளுக்கு இன்னும் என்னென்ன வாய்ப்புக்களை இந்த சமூகம் வழங்குகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு தனிமனித, சமூக, பொருளாதாரத்தில் வாழ்க்கை முழுவதும் வரக்கூடிய சிக்கல்களுக்கு நாம் நம்முடைய அறிவின் மூலமாக நம்மை தயார் செய்து கொள்வது மிக முக்கியம்.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.மேலும், மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். ஆனால் அந்த மதிப்பெண்களோடு விழிப்புணர்வு பெறுவது தான் மிகவும் முக்கியம். கல்வியறிவு என்பது அடுத்தவர்களின் அனுபவங்களை நாம் பெற்று கொள்வது. அந்த அனுபவங்கள் தான் நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய தனிமனித, சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு நமக்கு தீர்வுகளை தருகிறது.நாம் மனிதனிடத்தில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களுக்கு நம்முடைய அறிவு துணை செய்கிறது. நாம் படித்து வேலைக்கு சென்று பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு அறிவு தான் துணை செய்கிறது. இதனை தான் திருவள்ளுவர்அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண் என்ற திருக்குறளில், அறிவு என்பது நம்மைத் துன்பத்தில் இருந்து காக்க உதவுகிறது. அறிவிற்கு அந்த திறமை, தகுதி உண்டு. நாம் தான் அந்த அறிவை பெற்றுக்கொள்ளவும், பெற்ற அறிவை பயன்படுத்தி துன்பத்தில் இருந்து காத்துக்கொள்வதும் தொடர்ச்சியான விழிப்புணர்வில் இருக்கிறது.மனிதர்களை மாற்றுவது என்பது அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தான். வாய்ப்புகளை மனிதன் உருவாக்கி கொண்டே இருக்கிறான் அல்லது வாய்ப்புகள் எங்கு எல்லாம் இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறான். தேடக்கூடியவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.இந்த காலகட்டத்தில் எதிர்கால திட்டமிடுதல் செய்வது மிகவும் அவசியம். இன்று மனிதனுடைய வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்வதும், அந்த அடையாளத்தோடு வாழ்க்கையினுடைய சிக்கல்களை எதிர்கொள்வதும் குறிப்பாக பொருளாதாரத்தில் ஒருவர் தன்னிறைவு பெறுவது மிக மிக முக்கியமான ஒன்று.ஒரு காலகட்டத்தில் பெண்கள் இந்த சமுதாயத்தில் தாய்மொழி சமூகமாக இருந்தது. பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருந்தார். வேட்டைச் சமூகமாக இருந்த பொழுதும் கூட பெண்கள் தான் அந்த வேட்டை சமூகத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.பெண்களுக்கான விடுதலை என்று சொல்கின்ற பொழுது அவர் விரும்பிய பணியை செய்வது தான் சுதந்திரம். இன்றைய சமூகத்தில் இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பெண்களுக்கான மிக வலிமையான விடுதலை என்பது அவர்கள் இருக்கக்கூடிய பொருளாதார சுதந்திரம் தான். அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். தான் சம்பாதித்ததை தான் உருவாக்கிக் கொண்ட செல்வத்தை முழுமையாக தானே அந்த செல்வத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைப்பதே மிக முக்கியமான பெண்களுக்கான விடுதலை ஆகும்.அந்த விடுதலை பெறுவதற்கும், பொருளாதார வலிமை பெறுவதற்கும் கல்வி மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதத்தின் துணைக்கொண்டு ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே இப்படிப்பட்ட சிந்தனைகள் பெறுவதற்கும், பொருளாதார வலிமை பெறுவதற்கும், நீங்கள் சிந்திப்பதற்கும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கும் தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து (06.02.2025) பொது தேர்வை எதிர் கொள்ளுதல் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வலையொளி (YOUTUBE) நேரலையில் உரையாற்றினார்.தற்போது பொதுத்தேர்வு ஆரம்பிக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம். தேர்வுகள் என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு தொடர் நிகழ்வு. 10, 11, 12 ஆம் வகுப்புகளில் தேர்வு, அடுத்து நீங்கள் உயர்கல்விக்கு செல்கின்ற பொழுது நிறைய தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும். பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு வேலைக்கு, ஒரு பொறுப்புக்கு அல்லது ஒரு தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தேர்வுகளை எழுதி வெல்ல வேண்டும். பிறகு ஒரு பணிகள் சேர்வதற்;கும் பிறகு பல்வேறு இடங்களில் அது அரசுப்பணி அல்லது தனியார் பணியாக இருந்தாலும் அதில் நிறைய பதவி உயர்வுகளுக்கான தேர்வுகள் கூட இருக்கின்றன.இப்படி தேர்வுகள் என்பது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய ஒரு செயல்பாடு. ஆனால் நாம் ஒன்றை மட்டும் மிக நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டில், ஒரு போரில் முதலில் அவர் தன்னுடைய மனதளவில் வென்று இருக்கிறாரா என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதுபோல இந்த தேர்வினை மாணவர்கள் மனவலிமையோடு எதிர்கொள்ள வேண்டும். இந்த காலகட்டங்களில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளும், நேரங்களும் மிக முக்கியமானது. மாணவச் செல்வங்கள் இந்த இளம் பருவத்தில் அதை அறிந்து கொள்வது உங்களுக்கான வெற்றியை எளிதாக்கும்.எந்த ஒன்றையும் திரும்பத் திரும்ப தொடர்ச்சியாக செய்வதன் மூலமாக உங்களுக்கு அந்த திறமை வருகிறது. எனவே ஒரு சிறந்த படிப்பாளி என்று யாரும் இருப்பதில்லை. தொடர்ச்சியாக அதன் மீது ஆர்வத்தோடு, அதனை முயற்சி செய்பவர் வெற்றி பெறுகிறார். கவனச் சிதறல் என்பது மாணவர்களுக்கு மட்டும் இருக்கக்கூடிய பிரச்சனை இல்லை. இப்பொழுது இருக்கக்கூடிய உலகத்தில் எல்லோருக்கும் எல்லா காலகட்டத்திலும் இருக்கக்கூடிய பிரச்சனைதான். உங்களுடைய கவன சிதறல்களை வேறு நல்ல ஒன்றுக்கு திருப்புங்கள்.நமது மாவட்டம் பள்ளி பொதுத் தேர்வு தேர்ச்சியில் சிறந்த ஒரு மாவட்டமாக தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பொதுத்தேர்வுகளில் மாணவச் செல்வங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் மிகுந்த மன வலிமையோடு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக எப்படி ஒரு தொடர் ஓட்டத்தில் கடைசி ஓட்டம், கடைசி சுற்று என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று இந்த தேர்வு நாட்களில் நீங்கள் இன்னும் மிகுந்த ஆர்வத்தோடும், மன மகிழ்ச்சியோடும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்.தேர்வு என்பது வாழ்க்கை முழுவதும் வந்து கொண்டே தான் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. இந்த தேர்வில்; எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும். ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து இன்னும் சிறிது முயற்சி செய்திருந்தால் இன்னும் மதிப்பெண்கள் அதிகமாக கிடைத்திருக்குமே என்று நினைத்துப் பார்த்தால் அது திரும்ப கிடைக்க முடியாத ஒன்று. எதிர்காலத்தில் இப்படி ஒரு நாட்களை வீணடித்து விட்டோமே அல்லது அந்த நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் இன்று நான்; மகிழ்ச்சியாக இருந்திருப்பேனே என்றும், வாய்ப்பை தவற விட்டு விட்டோமே என்று யோசித்தால் நிச்சயமாக அந்த வாய்ப்புகள் பெரும்பாலும் திரும்ப வரப்போவதில்லை.நீங்கள் படித்ததை இன்னும் ஒரு முகத்தோடு அதை குவியப்படுத்தி, கவனப்படுத்தி தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதும், ஒரு சில பாடங்களில் கவனக்குறைவு அல்லது ஆர்வமாக இல்லை என்றால் அடுத்து வரக்கூடிய வாரங்களில் ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் வருவது, குறைவான மதிப்பெண்கள் வருவது, வெற்றி தோல்வி வருவது என்பதெல்லாம் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். இன்று ஒரு வெற்றியை பெறுபவர் நாளை ஒரு தோல்வியை சந்திப்பார். ஒரு தோல்வியை சந்திப்பவர் நாளை ஒரு வெற்றியை சந்திப்பார். வெற்றியும் தோல்வியும் ஒரு சாலையினுடைய மேடு பள்ளங்களை போன்றது. ஆனால் இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது, என்னால் எவ்வளவு சிறப்பாக அதில் செயல்பட முடியுமோ, என்னுடைய முழு ஈடுபாட்டை எவ்வளவு கொடுக்க முடியுமோ, என்னுடைய ஆர்வத்தை எவ்வளவு முழுமையாக வளர்க்க முடியுமோ, நாளை நான் இதை செய்யாமல் போய்விட்டேன் என்று வருத்தம் கொள்ளாத அளவுக்கு எப்படி செயல்பட முடியுமோ, அப்படி செயல்படுங்கள்.படிப்பு என்பது மிக மகிழ்ச்சியான ஒன்று. உலகின்; பல்வேறு இடங்களில் இது போன்று ஒரு நல்ல சூழல்களில் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாத குழந்தைகள் இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு. யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்த்தால், தங்களுக்கான வாய்ப்புகளை தவறவிடாதவர்கள், தங்களுடைய வாய்ப்புகள் குறித்து நல்ல விழிப்புணர்வு பெற்றவர்கள் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.உங்களுக்கு இருக்கக்கூடிய கைப்பேசி, இணையதள வாய்ப்புகள் என்பது ஒரு இரண்டு பக்கமும் கூர்மையான ஒரு கத்தியை போன்றது. அதை எவ்வளவு லாவகமாக பயன்படுத்தி நமக்கு ஏற்ப அது பயன்படுத்திக் கொள்கிறோமோ அதில்தான் ஒருவருடைய வெற்றி இருக்கிறது. உலகம் முழுவதும் நிறைய வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. இந்தியா முழுமைக்கும் நடக்கக்கூடிய போட்டித் தேர்வுகள் என்பது நிறைய இருக்கிறது. நமது மாவட்டத்திலேயே ஒரு சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் படித்த மாணவர்கள் இன்று இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் இருக்கின்றார்கள். அதற்கெல்லாம் ஒன்றே ஒன்றுதான் காரணம். அவர்கள் பெற்ற ஆர்வம்.இந்த தேர்வு காலகட்டத்தில் நீங்கள் படிப்பதற்கும், கல்வியின் வழியாக உயர்வதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். தேர்வுகள் குறித்து ஒருபோதும் பயம் வேண்டாம். ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் தேர்வுகள் வரும். இது ஒரு இறுதித் தேர்வு அல்லது நிலையான தேர்வு இல்லை. ஒன்றே ஒன்றை மட்டும் தான் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள் வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைகிறார்கள். நமது மாவட்டத்தினுடைய குழந்தைகள் மகிழ்ச்சியை பெறக்கூடிய குழந்தைகளாக, கல்வியின் வழியாக மிகப்பெரிய வாய்ப்புகளை பெறக்கூடிய குழந்தைகளாக பொது தேர்வு கால கட்டத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடும், மிகுந்த தன்னம்பிக்கையோடும் உங்களால் எவ்வளவு முடியுமோ உங்களுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி தேர்வை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்த வலையொளி (YOUTUBE) நேரலை நிகழ்ச்சியினை 90 அரசு உயர்நிலை பள்ளிகள், 100 அரசு மேல்நிலை பள்ளிகள், 67 அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகள், 54 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 311 பள்ளிகளைச் சேர்ந்த 10- ஆம் வகுப்பு பயிலும் சுமார் 25,000 மாணவர்கள், 11- ஆம் வகுப்பு பயிலும் சுமார் 26,000 மாணவர்கள் என மொத்தம் 51,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (05.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கிய கழகம் இணைந்து உருவாக்கிய கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள்(மரபும் புதிதும்) ஆகிய மூன்று புத்தகங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வெளியிட்டார். விருதுநகர் மாவட்டத்தை பற்றிய பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கு குறித்து ஆவணப்படுத்தும் வகையில் பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பண்பாடு, வரலாறு, இலக்கியம், தொழில் ஆகிய நான்கும் ஒரு சமூகத்தில் மிக மிக முக்கியமானது. ஒவ்வொரு தலைமுறை என்று சொல்லக்கூடிய 30 ஆண்டுகளுக்கும் இந்த நான்கும் மாற்றமடையும். அதை ஆவணப்படுத்துவது என்பது எதிர்கால தலைமுறைக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும். அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம், கரிசல் இலக்கிய ஆய்வுக்கோவை - 2023, கரிசல் இலக்கிய மலர், கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்புகளில் இளையோருக்கான பதிவுகள்- பன்னாட்டுக் கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகள், Glimpses Of Virudhunagar District, கரிசல் நிலவியல் கதைகள், ECHOES OF VIRUDHUNAGAR ETHNIC VISUAL CELEBRATION, விருதுநகர் மாவட்டத்தில் காந்தி, கற்றது ஒழுகு மாணவர் விழிப்புணர்வு கையேடு, தமிழ்க் கவிதைகள் ஓர் அறிமுகம், கி.ரா.வின் முத்து கதைகள் பத்து, மரமும் மரபும் ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் இல்லாத அளவிற்கு என்ன மாதிரியான வழக்காடுகள் இருக்கின்றது என்பதை ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்காக சொலவடைகள் என்ற கிராமப்புறத்தில் சொல்லக்கூடிய பழமொழிகள், விடுகதைகள், கிராமத்தில் இருக்கக்கூடிய நம்பிக்கைகள் சார்ந்த கதைகளாக இருக்கக்கூடிய நாட்டார் கதைகள் போன்றவைகள் நிறைய ஆவண படுத்தாமல் இருக்கிறது. அதனை பெரிய குழு அமைத்து, அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து, அதனை இரண்டு விதமாக ஆவண படுத்துகிறார்கள்.ஒன்று புத்தகமாகவும், மற்றொன்று வாய்மொழியாக சொல்லக்கூடியதை வீடியோ மூலமாகவும் ஆவணப்படுத்துகிறார்கள்.ஏறத்தாழ ஒரு 18 மணி நேரம் ஆவணப்படுத்த கூடிய வீடியோவை எடுத்து நமது கரிசல் கழகம் ஆவணப்படுத்தி இருக்கிறது. அதன்படி, புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ள கரிசல் சொலவடைகள் - விடுகதைகள் - நாட்டார் கதைகள், கரிசல் கதைகள், கரிசல் கவிதைகள் (மரபும் புதிதும்) ஆகிய மூன்று நூல்கள் இன்று வெளியிடப்;பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024 மற்றும் மோட்டர் வாகன சட்டத்தின் கீழ் மினி பேருந்தின் கட்டண திருத்தம் வாகன சட்டம் 1988 G.O.Ms.No.33, நாள் 23.01.2025-ன் படி பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு வருகிறது மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 1.5.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:1. அதிகபட்ச தூரம் 25 கிலோ மீட்டருக்கு மிகையாக இருக்கக் கூடாது.2. குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் ((Unserved Route Length) சாலையில் மொத்த பாதை நீளத்தில் 65% க்கு குறைவாக இருக்கக்கூடாது.3. தொடக்கப்பள்ளி/முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.4. முனைய புள்ளியிலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனை மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, ரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், புகழ்பெற்ற வழிப்பாட்டு தளங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் பிராந்திய போக்குவரத்து ஆணையம்/மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து, அதாவது மாநில போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களுக்கு பயணிகளை சென்றடைய உதவும் வகையில் சேவை பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை கூடுதல் தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.5. பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய வழித்தடத்தில் குறைந்த பட்சம் 1.5கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதை இருக்க வேண்டும்.6. மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து அதிகபட்சமாக 25 ஆக இருக்க வேண்டும். மேலும், மினி பேருந்துகள் Wheel Base 390cm-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.7. நிலைப்பேருந்து அல்லது மினி பேருந்து மூலம் வழிதடத்தின் ஒரு பகுதி அல்லது போதுமானதாக இல்லாத பாதைகளில் பொதுமக்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 4 நடைகளுக்கு குறைவாக உள்ளதை சேவை செய்யப்படாத வழித்தடமாக கருதப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் இந்த மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 2024-இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விவரங்களை மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள,; தனியார் அமைப்புகள், பேருந்து மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலரிடம் 10.02.2025க்குள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில், தற்போது நெல், மக்காசோளம் மற்றும் சிறுதானியங்கள் உள்ளிட்டவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெவ்வேறான பயிர்களிலிருந்து பெறப்படும் வைக்கோல், பயிர்களின் தாள்கள், கட்டைகள் மற்றும் இதர பிற கழிவுகள், நிலக்கடலை தொலி மற்றும் உமி தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு கதிர்மணிகள் எடுத்தபின் வரும் கழிவுகளை தான் நாம் பண்ணைக் கழிவுகள் என்று அழைக்கிறோம். அவற்றை எளிதாக தீ வைத்து சுற்றுப்புற சூழலை பாதிக்க விடும் நிலையில் அவற்றை மக்க வைத்து இயற்கை உரமாகவும் சத்தூட்டி உரமாகவும் மாற்றிடலாம்..பண்ணைக் கழிவுகளை சேகரித்தல்விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர் கழிவுகளை ஒரு சேர சேகரித்து அவற்றை பண்ணைகளில் ஏதாவது ஒரு பகுதியில் அதுவும் நீர் ஆதாரம், சாலை போக்குவரத்து உள்ள மேடான இடத்தில் சேகரித்த பண்ணை கழிவுகளை குவியலாக வைக்;க வேண்டும். கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிட வேண்டும். பெரிய பெரிய துண்டுகளாக கழிவுகள் இருந்தால் எளிதாக மக்கிட முடியாது. பசுமை நிற (பச்சை இலைகள்) இலைகளையும் காய்ந்து போன இலைகளையும் கலந்து ஒன்றுடன் ஒன்றாக சேர்க்க வேண்டும். கரிமசத்து மற்றும் தழைச்சத்து விகிதம் தான் மக்கும் முறையை முடிவெடுக்கும். கரிம சத்து மற்றும் தழைச்சத்து விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால் மக்குதல் நடைபெறாது. விகிதம் குறைவாக இருந்;தால் தான் எளிதாக மக்கும். மக்குவித்தலின் போது அதிகம் கரிமசத்து , தழைசத்து உள்ள பண்ணை கழிவுகளை மாற்றி அடுக்கி போடும் போது விரைவாக மக்கும்.மக்குதல் குவியல் அமைத்தல்குறைந்தது, 4அடி உயரத்திற்கு கழிவுகளை போட்டு அவற்றை குவியல் போட வேண்டும். மக்க வைக்கும் இடம் சிறிது உயரத்திலும் நல்ல நிழலில் இருக்க வேண்டும். ஒரு டன் பண்ணை கழிவுகளுக்கு 2 கிலோ வேஸ்ட்-டி-கம்போஸ்டர் /TNAU MICROBYOL CULTURE) இதில் ஏதாவது ஒன்றை 20லிட்டர் நீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதனை குப்பை குவியல் மீது தெளிக்க வேண்டும்.சுஞ்சாணக் கரைசல் நுண்ணுயிரிகளுக்கு நல்லதொரு ஆதாராமாகும். மேலேகண்ட கூட்டுக்கலவை கிடைக்காத போது பசுஞ்சாணக் கரைசலை தெளிக்கலாம். 40 கிலோ பசுஞ்சாணத்தை ஒரு டன் பண்ணைக் கழிவுகளுக்கு மக்குவதற்கு 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். கம்போஸ்ட் படுக்கையில் காற்றோட்ட வசதி ஏற்படுத்திட வேண்டும். மக்கு உரம் தயாரிக்கும் போது 60மூ ஈரப்பதமாக இருக்க வேண்டும்.மக்கிய உரத்தை எப்படி கண்டுபிடிப்பது ?மக்கிய உரத்தின் வெளிப்படை தோற்றமானது அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், மண்ணின் மணமும் ஒவ்வொரு துகள்களின் அளவும் குறைந்தும் காணப்படும். இவற்றை 4 மி.மீ சல்லடைக் கொண்டு சலித்து எடுக்க வேண்டும். மக்காத கழிவுகளை தனியாக சேகரித்து மறுபடியும் மக்கிட செய்ய வேண்டும்.செறிவூட்;டப்பட்ட மக்கிய உரமாக மாற்றுவது எப்படி?சலித்த உரத்துடன் நன்மை செய்யும் நுண்ணுயிர்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் போன்றவைகளை 2% கலந்து அவற்றை 40% ஈரப்பதத்தில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்க 20 நாட்கள் அப்படியே வைத்திருந்தால் அது செறிவூட்டப்பட்ட உரமாகும். (ENRICHED MANURE)மக்கி உரத்தை நிலத்தில் இடுவதால் என்ன பயன்கள்?1) மக்கிய உரத்தை மண்ணில் கலப்பதால், மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை மேம்படுத்தி மண்ணின் கட்டமைப்பு மாறுகிறது.2) தாவர கழிவுகள் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதால் விளைப்பொருட்களின் தரம் உயருகிறது.3) குறைந்த செலவிலே தயாரிக்கப்படுவதால் சாகுபடிக்கான உரச்செலவு கணிசமாக குறையும்எனவ, தற்போது அறுவடை காலம் என்பதால் பயிர் கழிவுகள் மற்றும் பண்ணை கழிவுகளை தீயிட்டு எரிக்கமால் எளிதாக மக்கிட வைத்து நிலத்தில் இடுவதால் சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதுடன் உரச்செலவும் கணிசமாக குறைவதுடன் மண்ணும் வளப்படுத்தப்படுகிறது என விருதுநகர் வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (05.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஜமீன்நத்தம்பட்டி ஊராட்சியில், புதிய மேம்பாலம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சிவலிங்காபுரம் ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.சிவலிங்காபுரம் ஊராட்சியில், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ், தலா ரூ.1.50 இலட்சம் மானியத்தில் இரண்டு வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும்,பின்னர், குறிச்சியார்பட்டி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3.50 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், கிழவிகுளம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.15.15 இலட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆறுமுகம் பழனிகுரு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்I A S., அவர்கள் (05.02.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.மேலும், மனிதர்களுக்கு எத்தனை உயர்வான பண்புகள் இருந்தாலும், மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சில சிக்கல்கள் எதிர்கொள்வதற்கு அனுபவங்கள் தேவைப்படுகிறது. அந்த அனுபவங்களை நாம் இரண்டு முறையில் பெற்று கொள்ள முடியும். ஒன்று நாம் படித்துக் கேட்டு அதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மற்றொன்று அடுத்தவர்கள் செய்த தவறுகளில் இருந்து நாம் ஒரு சரியான பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு தனிமனித, சமூக, பொருளாதாரத்தில் நமக்கு வாழ்க்கை முழுவதும் வரக்கூடிய சிக்கல்களுக்கு நாம் நம்முடைய அறிவின் மூலமாக நம்மை தயார் செய்து கொள்வது மிக முக்கியம். நாம் ஒரு நாளில் 24 மணி நேரத்தில், வேலை பார்க்கும் 8 மணிநேரம், தூங்கும் 8 மணிநேரம் தவிர மீதமுள்ள 8 மணி நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நம் நலம் சார்ந்த வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது.அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண் என்ற திருக்குறளில், அறிவு என்பது நம்மைத் துன்பத்தில் இருந்து காக்க உதவுகிறது. அறிவு என்பது நம்முடைய படிப்பில் இருந்தோ, நம்முடைய மதிப்பெண்களில் இருந்தோ பெறுவது இல்லை. நம்முடைய வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுக்கு எடுத்துச் செல்லக்கூடியதற்கு மிகவும் துணையாக இருக்கும்.மாணவர்களில் பலர் முழுமையாக முயற்சி செய்வதில்லை. வாழ்க்கையின் போட்டிகளில் அறைகுறை முயற்சிகளுக்கு இடமே இருப்பதில்லை. என்னால் முடிந்தவரை முயற்சிப்பது என்பது ஒன்று. எவ்வளவு தேவையோ அவ்வளவு முயற்சிப்பது என்பது தான் வெற்றிக்கானது. நீங்கள் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கவனச்சிதறல் என்பது காலங்காலமாக இருக்கிறது. நாம் ஒன்றை செய்ய முடியாமல் இருப்பதற்கு 100 சரியான காரணங்களைச் சொல்ல முடியும். ஆனால், ஒன்றைச் செய்து முடிப்பதற்கு நம்முடைய ஆர்வம் ஒன்று மட்டுமே முக்கியம். கவனச் சிதறல்கள் தவிர்க்க முடியாதது. நம்முடைய கவனச் சிதறல்களை வேறு ஒரு கவன திருப்புதலால் தான் மாற்ற முடியும்.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என்பது ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் இன்று உலகில் அதிகமாக கிடைக்கிறது. உங்களுடைய கல்வி வாய்ப்புகளாக இருக்கட்டும், வேலை வாய்ப்புகளாக இருக்கட்டும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்கென்று அதிகமான சட்ட வாய்ப்புகள் இருக்கிறது.இந்தக் கால கட்டத்தில் உங்களுக்கு நேரமும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அரசினுடைய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். ஏனென்றால், திறமையை விட, கல்வியை விட, உழைப்பை விட என மற்ற எல்லாவற்றையும் விட ஒரு பெண்ணை வெற்றியாளராக மாற்றுவதற்கு விழிப்புணர்வு தான் மிகவும் அவசியம். எனவே, நீங்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கூனம்பட்டி ஊராட்சி, நாச்சியார்புரம் கிராமத்தில் (05.02.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், இ.குமாரலிங்கபுரம் கோவில்புலிகுத்தி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில்,கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 24 திருநங்கைகளுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S. அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார். அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் அரசு திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்ததார். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள 24 திருநங்கைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.திருநங்கைகள் என்று முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் ஆட்சியில் தான் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்டது. திருநங்கைகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும். தாங்கள் ஆரோக்கியத்தை கவனித்து நல்ல முறையில் தங்களுக்கு வழங்கப்படும் வீடுகளை பயன்படுத்த வேண்டும்.திருநங்கைகளை நாம் அரவணைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எந்த அளவிற்கு முயற்சி எடுத்து வருகிறதோ, அதே அளவிற்கு நாமும் முயற்சி எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.நமது மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு என்று அமையக்கூடிய இரண்டாவது தனிக் குடியிருப்பாக இது அமைந்திருக்கிறது. இது நிச்சியமாக வேறு எந்த மாவட்டத்திலும் இயலாத அளவிற்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சர் அவர்கள் மிகுந்த உறுதுணையோடு இருந்தார்கள். ஏனென்றால், இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டிற்கும் அரசால் வழங்கக்கூடிய தொகையானது ரூபாய் 3,50,000/- ஆகும்.இந்த ரூ.3,50,000ஃ- த்தினை இரண்டு மூன்று தவணைகளாக அந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு, அவர்களே அவர்களுடைய வசதிக்கேற்ப, தேவைக்கேற்ப கட்டிக்கொள்ளக்கூடிய வாய்ப்பை கலைஞர் கனவு இல்லம் திட்டம் வழங்குகிறது. ஆனால், அதே நேரத்தில் சமூகத்தில், பொருளாதாரத்தில், மிகுந்த நலிவுற்ற, ஒரு நிலையான வருமானம் இல்லாத விளிம்பு நிலை மனிதர்களாக இருக்கக்கூடிய திருநங்கைகளுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.ஒரு குழுவாக அமைந்து, அந்த குழுவினுடைய ஒத்துழைப்போடு ஒரு வீடு கட்டி முடிப்பதற்கு உண்டான செலவுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் மானியத்துடன் மீதமுள்ள தொகைக்காக சமூக பொறுப்பு நிதியை பெற்று தலா ரூ.6.50 லட்சம் மதிப்பில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த திட்டத்தை மிக நேர்த்தியாகவும், அழகாகவும், மிகுந்த தரத்தோடு முடிப்பதற்கு அமைச்சர் அவர்கள் உறுதுணையோடு இருந் தார்.. அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்., இந்த திருநங்கைகளுக்கு அரசின் உடைய திட்டங்களை எல்லாம் பயன்படுத்தி, அவர்களின்; வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சிறப்பான திட்டங்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I.A.S அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.இரா.தண்டபாணி, செயற்பொறியாளர் திருமதி வெண்ணிலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், திருநங்கைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் வருகின்ற 07.02.2025 அன்று முகாம் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S.., அவர்கள் தகவல்.TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில், மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடுஅரசால் நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான/சொந்தமாக உள்ள நிறுவனங்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட சந்தைஇணைப்புகள், நிதி மற்றும் செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குகிறது.பெண் தொழில்முனைவோர் மத்தியில் தங்களின் தொழிலுக்குத்தேவையான இணக்கப்பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் இல்லாதது அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்கும்விரிவாக்கத்திற்கும் ஒருபெரும் தடையாகவுள்ளது.இதுகுறித்து, மதுரை மாவட்டம் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள பெண் தொழில்முனைவோர் நிறுவனங்களுக்கு அடிப்படை மற்றும் மேம்பட்ட இணக்க சேவைகளை வழங்குவதற்காக மதுரையில் Compliance Mela-வினைTN-RISE ஏற்பாடு செய்துள்ளது. கீழ்க்கண்ட சேவைகள் அங்கு வழங்கப்படுகின்றன :● PAN● TAN●உதயம் (UDYAM)● FSSAI● GST●வர்த்தக முத்திரை (Trade Mark)●காப்புரிமை தாக்கல் (Patent Filing)● DPIIT பதிவு (DPIIT Registration)●நிறுவனப்பதிவு (Company Registration)●இறக்குமதி ஏற்றுமதி சான்றிதழ் பதிவு (Import Export Certificate Registration)●ஆயுஷ் சான்றிதழ் பதிவு (AYUSH Certificate Registration)● NPOP சான்றிதழ் விண்ணப்பம் (NPOP Certificate Application)●இன்குபேஷன்டிரைவ் (Incubation Drive)●கடன் வசதி இணைப்பு (Credit Facilitation)●பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் உதவி (Packaging and Labeling Drive)மேற்காண் சேவைகளின் மூலம் பெண் தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:வேளாண் உணவு வர்த்தகமையம், அலங்காநல்லூரில் பிரதானசாலை மதுரையில் வருகின்ற 07.02.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறுகிறது.தொடர்புக்கு: 1) கார்த்திகேயன் (EDO)- 9994142115 2) மாரிகணேஷ் (EFO)- 9514737043 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்