தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test Training) அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி நர்சிங் (B.Sc Nursing), பொது நர்சிங் மற்றும் (GNM Diploma) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 21 முதல் 35 வயதிற்குள்ளும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்காக கால அளவு ஒன்பது மாதமும் மேலும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து அந்நிறுவனத்தின் சார்பாக ஜெர்மனி நாட்டில் பணிபுரிய ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.2,50,000- முதல் ரூ.3,00,000- வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (29.07.2025) ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (29.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, சாத்தூர் நகராட்சியில் புதிதாக பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, சாத்தூர் நகராட்சி, மேலகாந்திநகர் தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.மேலும், சாத்தூர் நகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் உணவு தயாரிக்க புதியதாக அமையவுள்ள சமையல் கூடத்தினை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகள், கோப்புகள், பெறப்பட்டுள்ள மனுக்கள், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள மனுக்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து தீர்வு வழங்க தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.மேலும், சாத்தூர் நகராட்சியில் மின் மயானம் புதிதாக அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், இருக்கன்குடி அணையினை நேரில் சென்று பார்வையிட்டு, அணையின் கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு, பயன்பெறும் பாசன நிலங்கள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், சாத்தூர் இருக்கன்குடி செல்லும் வழியில் உள்ள ஆட்டுப்பண்ணையினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள், அங்கு ஆடுகள் வளர்த்தல் விதம் குறித்து கேட்டறிந்து, அங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மேலும், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் கிராம கணக்கு பதிவேட்டில் சேர்க்க வேண்டி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் மனு அளித்ததன் பேரில், அவர்கள் கோரிக்கையினை பரிசீலனை செய்து 15 நாட்களுக்குள் இணைய வழியில் பட்டா பதிவேற்றம் செய்து, இ.குமாரலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 பயனாளிகளுக்கும், சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த 1 பயனாளிக்கும் என 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த ஆய்வின் போது, அரசு திட்டங்கள் மற்றும் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், சாத்தூர் வட்டாட்சியர், சாத்தூர் நகராட்சி ஆணையர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத்த தொகை வழங்கி பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத்தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.மேற்படி, திட்டத்தின் கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் ,தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches), கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities),குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities), சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் (ம) பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் ,தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்:1. 10-15 வருடம் வரை இருப்பின் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.10 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.2. 15-20 வருடம் வரை இருப்பின் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.15 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.3. 20 வருடங்களுக்கு மேலிருப்பின் தற்போது வழங்கப்படும் மானியம் ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (28.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் மகளிர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்குளம் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் பால்கோவா தயாரித்து விற்பனை செய்து வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு சுய உதவிக்குழு பெண்களிடம் கலந்துரையாடினார்.பின்னர், பிள்ளையார் குளம் ஊராட்சியில், சமூக முதலீட்டு நிதியிலிருந்து ரூ.50,000/- கடனுதவி பெற்று தேநீர் கடை நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கலந்துரையாடினார் .பின்னர், இராமச்சந்திராபுரம் ஊராட்சியில், பழைய செங்குளம் கிராமத்தில் சுமார் 25 மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.அதனை தொடர்ந்து, இராமச்சந்திராபுரம் ஊராட்சியில், சமுதாய திறன் பள்ளியில் பயிற்சி பெற்று, வட்டார வணிக நலன் நிறுவனத்திடம் இருந்து ரூ.50,000/- கடனுதவி பெற்று போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரை நேரில் சென்று பார்வையிட்டு, கலந்துரையாடினார்.பின்னர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில், கரிசல்காடு விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராஜபாளையம் நகராட்சியில், நாய் அறுவை சிகிச்சை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, இராஜபாளையம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (26.07.2025) அனைத்துத் துறை திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், உடனடியாக தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்தும், கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் குறித்தும் கேட்டறிந்து பல்வேறு துறை சார்ந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நாட்களுக்குள் தீர்வு காணுவதற்கு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பாக அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் விரைந்து முடித்து தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மினி பஸ் திட்டத்தின் செயல்பாடுகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்தும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், ஆலோசனைகள், சந்தை வாய்ப்புகள், நிதி உதவி, மற்றும் பிற தொழில் நுட்ப உதவிகள் வழங்குவது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அறிவியல் பூங்கா அமைக்கும் திட்டப்பணிகள் குறித்தும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர், தொழிலாளர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் நல வாரியம் குறித்தும், நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.வைகை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து நடைபெற்று வரும் திட்டப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ் நாடு அரசால் வழங்கப்படும்.இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: 1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)கீழ்க்காணும் ஆவணங்களுடன், “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர் / மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். .1. குடும்ப அட்டையின் நகல்2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். உள்ளிட்டவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. இம்முகாமானது கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.மேலும், இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.உங்களுடன் ஸ்டாலின் முகாமானது 15.07.2025 முதல் 25.07.2025 வரை நடைபெற்ற 46 முகாம்களில் மொத்தம் 11,145 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் இதுவரை 171 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 10,537 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், இதர மனுக்களுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை (28.07.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப.,அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத்தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் வீதி உலா வந்தது.ஆடிப்பூரத் தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், திருக்கோவில் செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.08.2025 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்கள்/ அவரைச் சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினர் மேற்படி சிறப்பு குறைதீர்க்கும் நாளன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களின் குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஒ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.