விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலில் போட்டியிடமால் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு 31.07.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12 ஆயிரத்து 913 பேர் கிராம ஊராட்சி ஒன்றியங்களிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 பேர் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் மாநகராட்சி / நகராட்சி/ பேரூராட்சி ஆகியவற்றிற்கான வார்டு உறுப்பினர் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமண உறுப்பினர்களாக நியமிப்பதற்கான விண்ணப்பங்களை https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிக்கு https://.tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இது நாள் வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் வசித்து வரும் பேரூராட்சி எல்லைக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல்அலுவலரிடமும், நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் வருகிற 31.07.2025 அன்று மாலை 3.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அச்சங்குளம் ஊராட்சியில் (24.07.2025) விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (25.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும், அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அருகில் சிப்காட் அமையவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, சிப்காட் அமைப்பதற்கான முன்னேற்றப்பணிகள், திட்ட செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கேட்றிந்தார்.பின்னர், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், விதை உற்பத்தி மையம், விதை சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்கினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு கால்நடைகள் வளர்த்தல் விதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, காரியாபட்டி வட்டம் தோணுகால் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மின்சாரத் துறையில் பெயர் மாற்றம் செய்வதற்கு மனு அளித்த விண்ணப்பதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து, மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்த ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்பு, பழக்கன்றுகள் தொகுப்பு மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், தோணுகால் ஊராட்சியில் (25.07.2025) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் முகாமானது மாவட்டத்தில் 15.07.2025 முதல் நடைபெற்று வருகிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.அந்த வகையில் (25.07.2025) அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், செட்டிக்குறிச்சி சமுதாயக்கூடத்திலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கே.செட்டிக்குளம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் சமுதாயக்கூடத்திலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், ஆண்டியேந்தல் ஊராட்சி ருகிலும், சிவகாசி மாநகராட்சி வார்டு எண் 6-ல் சூர்யா மஹாலிலும், இராஜபாளையம் நகராட்சி வார்டு எண்-5ல் என்.ஆர்.கே.திருமண மஹாலிலும்,அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், தோணுகால் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்த நகலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், வேளாண்மைத்துறையின் கீழ், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தில் துவரை விதைகள் 20 கிலோ 50 சதவீத மானியத்திலும், பருத்தி உற்பத்தி பெருக்கு திட்டத்தின் கீழ், பருத்தி நுண்ணூட்ட உரம் 12.5 கிலோ 75 சதவீத மானியத்திலும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், காய்கறிகள் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்று விதைகள் தொகுப்பு 100 சதவீத மானியத்தில் 2 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த சிறப்பு முகாமானது, 29.07.2025 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், காரிச்சேரி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மத்தியசேனையில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டி கிராம பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில், இராஜபாளையம் நகராட்சியில், அருள்புத்தூர் கிராம சமுதாயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், அயன்நத்தம்பட்டி கிராமள முத்தாலம்மன் திருமண மண்டபத்தில், அருப்புக்கோட்டை (நகராட்சி) வார்டு -6ல், தேவாங்கரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காரியாபட்டி (பேரூராட்சி) முகாம் 2-ல், அம்லா திருமண மஹாலில்,30.07.2025- அன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ரோசல்பட்டி முகாம் 1-ல் , சமுதாயக்கூடத்தில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லி கிராமம், அஸ்வின் திருமண மஹாலில், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி கிராமம் வார்டு 16-ல், வி.பி.சி. கட்டடத்தில், சிவகாசி மாநகராட்சி வார்டு 7-ல் ஆர்.ஆர்.மஹாலில், திருவில்லிபுத்தூர் நராட்சி வார்டு -6ல் முத்துச்சாமி நாடார் திருமண மஹாலில், செட்டியார்பட்டி பேரூராட்சி முகாம் 2-ல் நெல் அரசி வியாபாரி திருமண மஹாலில்,31.07.2025- சிவகாசி மாநகராட்சி, சுக்கிரவார்பட்டி கிராம தொடக்கப்பள்ளியில், திருவில்லிபுத்தூர் ஊராட்சி, பூவாணி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் மண்டபத்தில், இராஜபாளையம் நகராட்சி, புத்தூர் கிராம சமுhயக்கூடத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி கிராமம் அழகாபுரி மக்கள் மன்றத்தில், விருதுநகர் (நகராட்சி) வார்டு 6-ல் பெரிய பள்ளி வாசல் திருமண மஹாலில், சாத்தூர் (நகராட்சி) வார்டு 6-ல் ராஜகோபால் திருமண மஹாலிலும், நடைபெறுகிறது.மேலும், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங் களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, , I A S, அவர்கள் (24.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெள்ளூர் கிராமத்தில் நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து, வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்தும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.பின்னர், பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை சுமார் 10 கி.மீ. தூரத்தில் ரூ.120 கோடி மதிப்பில் சுற்றுச்சாலை பணிகள் மற்றும் பாலங்கள் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிப்பதற்கும் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக துவங்கப்பட்ட செம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (அருப்புக்கோட்டை வட்டாரம்) மற்றும் இலுப்பையூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ( நரிக்குடி வட்டாரம்) மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான கீழ்கண்ட பணியாளர்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. மருந்தாளுநர்களுக்கு 2 பணியிடங்களும், ஆய்வக நுட்புநர்நிலை-3 (Lab Technician Gr-III) பணியாளர்களுக்கு 8 பணியிடங்களும், செவிலியர்களுக்கு, (RCH,NCD,RBSK,MMU,NBSU) 60 பணியிடங்களும், பல்நோக்கு சுகாதாரபணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை- II (MPHW HI Gr-II) பணியாளர்களுக்கு பணியிடங்களும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு (Multi Purpose Hospital Worker) பணியிடங்களும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http://virudhunagar.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 23.07.2025 அன்று முதல் 07.08.2025 அன்று மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வீட்டு சுகாதார உதவியாளர் (Home Health Aide) பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புடன் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.17000/- வரை கிடைக்க வழி வகை செய்யப்படும். .குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி பெற தாட்கோ இணைய தளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு இரண்டு மாதம். மேலும் , சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி, உணவுக்கான செலவினம் நிறுவனம் மூலமாக வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2025-26 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ‘வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி, அறுவடை காலங்களில் அதிக வரத்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வரத்தினை ஒழுங்குபடுத்திடவும், வேளாண் விளைபொருட்களைளள எளிதில் சந்தைப்படுத்திட ஏதுவாகவும், ஒழுங்குமுறை விறபனைக்கூடத்தின் நீட்சியாக, வட்டாரம் தோறும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அனைத்து வகையான வேளாண் விளைபொருட்கள் மறைமுக ஏலம் மற்றும் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.தற்போது 11 வட்டாரத்திற்கும் தலா ஒரு பொது சேகரிப்பு மையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை வட்டாரத்திற்கு வேலாயுதபுரம், விருதுநகர் வட்டாரத்திற்கு மீசலூர், காரியாபட்டி வட்டாரத்திற்கு அயன் அல்லிகுளம், திருச்சுழி வட்டாரத்திற்கு முத்துராமலிங்கபுரம், நரிக்குடி வட்டாரத்திற்கு உலக்குடி, இராஜபாளையம் வட்டாரத்திற்கு சேத்தூர், திருவில்லிபுத்தூர் வட்டாரத்திற்கு அச்சம்தவிழ்த்தான், வத்திராயிருப்பு வட்டாரத்திற்கு குன்னூர், சிவகாசி வட்டாரத்திற்கு புதுக்கோட்டை, வெம்பக்கோட்டை வட்டாரத்திற்கு எம்.துரைச்சாமிபுரம், சாத்தூர் வட்டாரத்திற்கு பெரிய கொல்லப்பட்டி ஆகிய கிராமங்களில் பொது சேகரிப்பு மையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.பொது சேகரிப்பு மையங்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் நீட்சியாக கருதி, வேளாண் பெருமக்களையும் வியாபாரிகளையும் இணைத்து வணிகம் மேற்கொள்ளும் மையமாக கருதப்படுகிறது.பொது சேகரிப்பு மையங்களில் வைத்து விவசாயிகள் விற்பனை செய்வதால் கால விரயம் மற்றும் போக்குவரத்து செலவு குறைகிறது.மேலும் மற்ற மாவட்டங்களிலிருந்து வணிகர்கள் விற்பனையில் பங்குபெறுவதால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். பொது சேகரிப்பு மையங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விலை நிலவரங்களை கொண்டு விவசாயிகள் தங்களது விலைபொருட்களின் தரத்திற்கேற்ப விற்பனை விலையை அறிந்து கொள்ள முடிகிறது.வேளாண் விளைபொருட்களை பொது சேகரிப்பு மையம் மூலம் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அல்லது வட்டார அளவில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர்கள் (வேளாண் வணிகம்) ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறுவடைக்கு பிந்திய வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட நீண்ட கால கடன் வசதி திட்டமாக வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளில் (2020-2021 முதல் 2032 - 2033 வரை) வங்கிகள் மூலம் பிணையமற்ற குறைந்த வட்டியிலான கடன் வழங்கப்படுகிறது.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 2025-2026 நிதியாண்டுக்கு ரூ.26 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிக்கு அதிக பட்சமாக ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கிறது 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3மூ வட்டிக்குறைப்பு (Interest Subvention) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பயன்பெறலாம்.கடன் வசதி பெற தகுதியான இனங்கள்:இத்திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய விநியோக தொடர் சேவை, சேமிப்புக்கிடங்குகள், சேமிப்பு கலன்கள் (Silos), சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், போக்குவரத்து வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு அறுவடைக்குப்பின் வேளாண்மைக்கான உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றும் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிர் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.கடன் வசதியை பெற தகுதியானவர்கள்மேற்காணும் உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு (JLG), பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோர், புதியதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கும், மத்திய, மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் முன்மொழியப்படும் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகளுக்கும் கடன் வசதி செய்து தரப்படும்.அரசு அறிவித்துள்ள இந்த வேளாண் உட்கட்டமைப்புகளுக்கான கடன் வசதியின் மூலம் வேளாண் விளைபொருட்கள் வீணாகாமல், சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் வகையில் கிராமப்புறங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்க இயலும். இந்த கடன் வசதியை பெற விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனியார் தொழில் முனைவோர்கள் தங்கள் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், நபார்டு வங்கி மேலாளர்கள் அல்லது வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் https://agriinfra.dac.gov.in என்ற இணைய முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக்கிளைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (23.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், எல்லிங்க நாயக்கன்பட்டி ஊராட்சியில் பிரதான் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.7.45 இலட்சம் மதிப்பில், குமரன்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து, செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய்சேய் நலப் பரிசு பெட்டகங்களை வழங்கினார். மேலும் அங்கு சிகிச்சை பெற வந்த புறநோயாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.மேலும், குந்தலபட்டி ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.16 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.