திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை (28.07.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப.,அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் திருஆடிபூரத் திருத்தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஆடிப்பூரத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடிப்பூரத்தேரோட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்.திருத்தேரானது கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் கோவிந்தா, கோபாலா என்ற கோஷத்துடன் வீதி உலா வந்தது.
ஆடிப்பூரத் தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது. காவல்துறையின் மூலம் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குற்றங்களைத் தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது. வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், திருவில்லிபுத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.தங்கம் ரவிக்கண்ணன், திருக்கோவில் செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply