25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Feb 23, 2025

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவி தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

 முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றியபோது “பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்”என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் – 13, நாள் – 12.02.2025-ன்படி ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்ற  விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பு நாளேடுகளில் வெளியானதைத் தொடர்ந்து இத்திட்டம் குறித்தான பயனாளர்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் கீழ்கண்டவாறு விளக்கங்கள்  தெரிவிக்கப்படுகிறது.  பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் குழந்தைகளில்10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ, 4,000/-ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குரூ, 6,000/-ம், ஆகிய ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் பணப்பலனை பெறவும்,    பட்டாசு தொழிற்சாலை விபத்தில் தாய் தந்தை இருவரில் எவரேனும் ஒருவர் மரணமடைந்த நிகழ்வில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.2,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) தாய் தந்தை இருவரும் மரணமடைந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு செலவினம் ரூ.4,000/-ம், (18 வயது பூர்த்தி ஆகும் வரை) பெறவும்  10.11.2024க்கு முன் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10.11.2024 அன்று  18 வயது  நிறைவடையாதவர்களாகவும் 10.11.2024க்கு பிந்தைய  விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் விபத்து நிகழ்ந்த நாளன்று 18 வயது நிறைவடையாதவர்களாகவும்  இருந்தால் விண்ணப்பிக்கலாம்.பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவி தொகை பெறமேற்குறிப்பிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு  அரசுக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்10.11.2024 அன்றைய தேதியில் உயர் கல்வி பயிலும் மற்றும் 10.11.2024க்கு பிறகு உயர் கல்வியில் சேரும் குழந்தைகள் எவரேனும் இருந்தால் விண்ணப்பிக்கலாம். .  மேற்குறிப்பிட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஏதுவாக  இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின்   பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம், தொடர்பு அலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “ இணை இயக்குநர், தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம். கதவு எண்- 4,NSPN ஆறுமுகநாடார் ரோடு, தங்கம் மகால் முதல் தளம், சிவகாசி  - 626 123. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும்படியும், மேலும் விண்ணப்பத்துடன் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விண்ணப்பிக்கும் குழந்தைகளின் பிறந்த தேதி ஆதாரமாக பிறப்புச்சான்றிதழ் அல்லது கல்வி சான்றிதழ்  ஆகியவற்றை இணைத்து அனுப்பும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், இது பற்றி கூடுதல் விவரங்கள் அறிய 9865958876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447 45064 (இணை இயக்குநர், சிவகாசி)  ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்     மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 23, 2025

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான வைகை ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு நிறைவேற்றப்பட உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தினை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட மல்லாங்கிணறு கலைஞர் திடலில் இன்று (23.02.2025) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு  வைகை ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.75.85 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.கிரண் குரலா,I A S., அவர்கள், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.நவாஸ்கனி அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்திரு.கே.என்.நேருஅவர்கள்,வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறைஅமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்கள்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு ஏற்கனவே உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் உள்ளூர் நீராதாரத்தின் வாயிலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 1.75 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு             1.00 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்களால் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் நீங்கலாக காரியாபட்டி பேரூராட்சிக்கு 2.38 மில்லியன் லிட்டர் மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு 1.84 மில்லியன் லிட்டர் என கணக்கிட்டு அப்பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 29.10.2024 நாளிட்ட அரசு அரசாணை வாயிலாக ரூ.75.85 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு தேவைப்படும் குடிநீரினை வைகை ஆற்றில் 11 நீர் உறுஞ்சு கிணறுகளிலிருந்து 3.96 கிலோ மீட்டர் நீளம், 100MM விட்டமுள்ள இரும்பு குழாய்கள் (DI) வழியாக 9.20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, பின்பு 2.38 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ள 1.80 இலட்சம் லிட்டர் மேல் சமநிலை நீர்தேக்கத் தொட்டிக்கு (Balancing Reservoir) உந்தப்பட்டு அங்கிருந்து 58.61 கிலோ மீட்டர் நீளமுள்ள இரும்பு குழாய் (DI pipe) மற்றும் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் (HDPE) தன்னோட்ட குழாய்கள் (Gravity Main) மூலம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு முறையே 80 ஆயிரம் மற்றும் 1.00 இலட்சம் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு அனுப்பப்படவுள்ளது.அங்கிருந்து குடிநீர் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் குழாய் 13.79 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள 23 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் மற்றும் 13.98 கிலோ மீட்டர் பதிக்கப்படுவதன் மூலம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 22 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் குடிநீர் உந்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படள்ளது.இத்திட்டம் நிறைவுறும் போது இவ்விரு பேரூராட்சிகளிலும் உள்ள 36,200 மக்கள் பயன்பெறுவார்கள்.

Feb 21, 2025

மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கியக் கழகம் மற்றும் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி இணைந்து நடத்தும் உலக தாய்மொழி தினவிழா நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

விருதுநகர்  வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், கரிசல் இலக்கியக் கழகம் மற்றும் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி இணைந்து நடத்தும் உலக தாய்மொழி தினவிழா நிகழ்ச்சியில் (21.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.இன்று உலக தாய்மொழி தினம். நாம் எப்படி அன்னையர் தினம்  சிறப்பாக கொண்டாடுகிறோம். அது போல ஒவ்வொருவருக்கும் அவரது தாய் உணர்வு ரீதியாக, அன்பு ரீதியாக எவ்வளவு மிகுந்த நெருக்கத்திற்கு ஆட்டபட்டவரோ, அதே போன்று  தாய்மொழியும் அவரவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்.மிகவும் புகழ் மிக்க ஒரு பொருளாதார கோட்பாட்டில்,  இந்த உலகத்தில் எந்த ஒன்றும் இலவசம் அல்ல என குறிப்பிடுகிறது. மேலும், மொழியை ஏன் பாதுகாக்க வேண்டும், ஏன் ஒவ்வொருவரும் தாய்மொழியை கொண்டாடுகிறார்கள் என்ற அடிப்படை கேள்விக்கு விடையை கண்டுபிடித்தால் நாம் ஒவ்வொருவருமே அவரவர் தாய்மொழியை கொண்டாடுகிறோம்.பாரதிதாசன் அவர்கள்  தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலில்; உயிரும் தமிழும் ஒன்றுதான். தமிழ்மொழி என்பது 2000 ஆண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்ட இலக்கண இலக்கிய வளங்களை கொண்டது. இன்றளவும் உலகெங்கும் அதிகளவு கொண்டாடப்படக்கூடிய மொழியாக தொன்றுதொட்டு தொடர்ச்சியான இலக்கண இலக்கிய வளங்களை கொண்ட மொழியாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் பத்து கோடிக்கும் அதிகமானவர்கள் பேசக்கூடிய ஒரு மொழியாக இன்றளவும் இருக்கிறது. தமிழ் மொழியில்; 2000 ஆண்டுகளாகவே எந்த ஒரு மாற்றமும் இல்லை.  2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கக்கூடிய சங்க இலக்கியங்களை எடுத்துப் பார்த்தால் மொழிகளுக்குள் ஒரு பெரிய வேறுபாடு இல்லை.நமது மொழி ஒரு இறுகியத் தன்மை உடையதா என்று பார்த்தால் புதிய அறிவியல் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு இந்த மொழி தனது தகவமைப்புகளை பெறவில்லையா என்று பார்த்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த தொழில் நுட்பங்கள் வேறு. தற்போது உள்ள தொழில்நுட்பங்கள்  வேறு. அதற்கு ஏற்ப மொழித்தன்னை தகவமைத்து கொண்டிருக்கிறதா என்றால், இதுக்கு இலக்கணமே வழிவகைத்துக் கொண்டிருக்கிறது.ஆங்கிலம் என்பது உலகின் உடைய இணைப்பு மொழி, அறிவு மொழி, அறிவியல் மொழி. நாம் புதுபுது சிந்தனைகளை பெறுவதற்கும்,அறிவியல் தொழில்நுட்பம் பெறுவதற்கும், வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும், ஏன் பாடத்திட்டத்தை பயில்வதற்கும் ஆங்கிலம் தான் வருகிறது.   நமது மொழியை படிப்பதன்  மூலமாக நிறைய புரிதல் மற்றும் தனிப்பட்ட நலன்கள் இருக்கிறது. நமது மொழி என்பது நமக்கு பல்வேறு இலக்கிய செல்வங்களை கொண்டு தருகிறது. அந்த இலக்கிய செல்வங்கள் என்பது நாம் எப்போது எல்லாம் சோகமாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் நமக்கு ஆறுதல் தெரிகிறது. நீங்கள் பறப்பதற்கு வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தீர்கள் என்றால் அப்போது சிறகுகளை தருகிறது. நம் வாழ்க்கையினுடைய போக்குகளில் துன்பங்கள் எதிர்கொள்கின்ற பொழுது சற்றே அருகில் வந்து ஆறுதல் படுத்துகிறது. இன்பக் களிப்புகளை வெற்றிகளை கொண்டாடுவதற்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதைப் போன்று ஆகச் சிறந்த வடிவம் மொழியாகும்.தமிழ்மொழி அற்றுப்படுத்துவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், தாங்கிப் பிடிப்பதற்கும் உதவுகிறது. இன்றைய சூழலில் முறையான நமக்கான கல்வி, வேலைவாய்ப்பு என எப்படி இருந்தாலும்  ஆணிவேராக இருக்க வேண்டியது நம்முடைய தமிழ் மொழி. இந்த தமிழ் மொழி நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். இலக்கிய செல்வங்களை பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருக்கிறது அதனை தேடினால் கண்டறிய முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 20, 2025

சிவகாசி மாநகராட்சிக்குட்;பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (20.02.2025) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் மூலம் ஊரகம், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், நலத்திட்டங்கள், சேவைகள் முறையாகவும், தரமானதாகவும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிசெய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதன்படி, சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து நுண் உரம் தயாரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, இரயில்வே பீடர் சாலையில், சிறு பாலம் அமைப்பதற்கான சாத்திக்கூறுகள் குறித்தும், ஹட்சன் பிளாட் சாலையில் உள்ள தெருவிளக்குகள் குறித்தும், முஸ்லீம் தெருவில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடத்தினையும், வேலாயுத ரஸ்தா சாலையில் உள்ள நான்கு முக்கு பகுதியில் சாலை அகலப்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திடக்கழிவு மேலாண்மை,  கழிவு நீர் வடிகால், பொதுமக்களுக்கான குடிநீர் உள்ளிட்டவற்றை முறையாக மேற்கொள்வது குறித்து தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 20, 2025

மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மதி பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை  மதி பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S., அவர்கள் திறந்து வைத்தார்.பின்னர், இராஜபாளையம் வட்டார இயக்க மேலாண்மை அலகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராஜபாளையம் வட்டாரத்தை சேர்ந்த 42 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.49.50 இலட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு கடனுதவிகளையும்,கிழவிகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.35 கோடி மதிப்பிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.2.95 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மகளிர் சுய உதவிக்களுக்கு வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பெண்கள்; மகளிர் சுய உதவிக்குழுவில்; இருக்கின்றனர். அதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறு சிறு தொழில்களை செய்யக்கூடியவர்களாகவும், தொழில் முனைவோர்களாக இருக்கிறார்கள்.நிறைய பேர் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்கள். இந்த சுய உதவி குழுவில் இணைகின்ற பொழுது அதன் மூலமாக நன்மைகளை பெறக்கூடிய சகோதரிகளாக மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த பெண்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் இன்னும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.பெண்களுக்கான விடுதலை என்று சொல்கின்ற பொழுது அவர் விரும்பிய பணியை செய்வது தான் சுதந்திரம்.இன்றைய சமூகத்தில் இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பெண்களுக்கான மிக  வலிமையான விடுதலை என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பொருளாதார சுதந்திரம் தான். அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். தான் சம்பாதித்ததை, தான் உருவாக்கிக் கொண்ட செல்வத்தை முழுமையாக தானே அந்த செல்வத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைப்பதே மிக முக்கியமான பெண்களுக்கான விடுதலை ஆகும்.பெண்கள்  தங்களுக்கான அரசு திட்டங்களை தெரிந்துகொண்டு,  தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளை பெற்று, அரசு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை முறையாக முதலீடு செய்து தங்களுடைய வருமானத்தை பெருக்கி, குடும்ப  பொருளாதாரத்தையும், சமூக பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்)  திரு. திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Feb 20, 2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில்- மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.விண்ணப்பதாரர், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.(அல்லது)குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றுள் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.இதற்கான விண்ணப்படிவத்தை விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாவட்ட அல்லது துறை சார்ந்த  இணையத்தளமான www.virudhunagar.nic.in அல்லது https://dsdcpimms.tn.gov.in- முகவரியில் விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.  தகுதிவாய்ந்த  நபர்கள் அதற்கான படிவத்தில் 07.03.2025  (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை - 600 010. என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 20, 2025

குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959-ன்படி சாதாரண கற்கள், மண், கிராவல், கிரானைட் போன்ற சிறுவகை கனிமங்கள் மற்றும் 31 வகையான சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள், மற்றும் சுண்ணாம்புக்கல் போன்ற பெரு கனிம குவாரிகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் செங்கல் சூளை பதிவு சான்று பெறுவற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24.02.2024 தேதி முதல் மின்னணு முறையில் இணையதள வாயிலாக மட்டுமே பெறப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.மேற்கண்ட சிறுகனிமங்களுக்கான குவாரி குத்தகை உரிமம் கோர விண்ணப்பிக்கும் நபர்கள் www.mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக உரிய படிவத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 20, 2025

மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.19425.99 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (20.02.2025) மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்    முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தின் 2025-26 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம்   மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டதுநபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னுரிமை துறைகளுக்கு 2025-26ஆம் ஆண்டில், ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு வங்கிக் கடன் அளவிடப்பட்டுள்ளது.தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு ரூபாய் 9998.59 கோடியாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூபாய் 7918.08 கோடியாகவும், பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு சுட்டுதல் மற்றும் மீள்சக்தி) ரூபாய் 1509.32 கோடியாகவும்என மொத்தம் ரூ.19425.99 கோடி  அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.அதற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வெளியிட்டார்இக்கூட்டத்தில் நபார்டு மாவட்ட மேலாளர் திரு. ராஜா சுரேஷ்வரன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு. பாண்டிசெல்வன்,  வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Feb 20, 2025

ஒற்றை பயன்பாட்டு நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்

"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP)  கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 இலட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 இலட்சம் பரிசு வழங்கப்படும்.இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் (TNPCB) ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர் /அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட்டு, விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகளை (கடின நகல்) 01.05.2025 அன்றுக்குள்  சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Feb 20, 2025

“பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுக்கான உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

 முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் உரையாற்றிய போது “பட்டாசு தொழிற்சாலைகளில், ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர் கல்வி வரையிலான அனைத்துக் கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும்” என்ற அறிவிப்பினை தொடர்ந்து தற்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (எம்1) துறை அரசாணை (நிலை) எண் : 13, நாள் 12.02.2025 ன் படி  ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.          இத்திட்டத்தின் படி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மரணமடைந்த பெற்றோர்களின் கல்வி பயிலும் வாரிசுகளில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.4,000-ம், 12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.6,000 -ம் ஒரு தடவை பணப்பலனாக அளிக்கப்படும். மேலும் பராமரிப்பு செலவினங்களுக்காக 18 வயது பூர்த்தி ஆகும் வரை ஒவ்வொரு வாரிசுக்கும் பெற்றோரில் ஒருவரை விபத்தில் இழந்திருந்தால் ரூ.2,000-ம் பெற்றோர் இருவரையும் இழந்திருந்தால் ரூ.4,000-ம் மாத உதவித்தொகையாக வழங்கப்படும்.மேலும் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலும் பொறியியல் மற்றும் பிற தொழிற் பட்டயப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் செலுத்த வேண்டிய கட்டணமும், தொழிற்நுட்பக் கல்வி, செவிலியர் மற்றும் பிற பட்டயப் படிப்புகள் பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.55 ஆயிரம் வரையும் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மேலும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் வாரிசுதாரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம்  கல்வி உதவி தொகை வழங்கப்படும்.               10.11.2024 அன்றோ அதற்கு பிறகோ மேற்சொன்ன அரசாணையில் கூறியுள்ள விதிகளின் படியான தகுதியான பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஏதுவாக இறந்தவரின் பெயர், பட்டாசு தொழிற்சாலையின் பெயர், விபத்து நாள், வாரிசுகளின் விவரம், வயது மற்றும் கல்வி விவரம் மற்றும் தொடர்பு அலைபேசி எண், முகவரியுடன் கூடிய விவரங்களுடன் “இணை இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் , கதவு எண்: 4, NPSN ஆறுமுகநாடார் ரோடு, தங்கம் மஹால் முதல் தளம், சிவகாசி - 626 123” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கும் படியும், விபத்தில் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றையும் இணைத்து அனுப்பும் படி  பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய 98659-58876 (இணை இயக்குநர், விருதுநகர்), 93447-45064 (இணை இயக்குநர், சிவகாசி) அவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.    

AD's



More News