வாட்டசாட்டமாக இருந்து கொண்டு வேலைக்குச் செல்லாமல் நாலு இடத்திலே பிச்சை எடுத்து சாப்பிட்டு விட்டு சுகமாகத் தூங்குபவர்களுக்கு பிச்சையிடுவதில் பயன் இல்லை. இப்பொழுது பிச்சைக்காரர்கள் செல்போன் சகிதமாக அலைந்து திரிந்து பிச்சையெடுத்து அந்திம காலத்திற்கு வங்கியில் பணம் போட்டு வைத்து ஒய்யாரமாக பிச்சை எடுக்கிறார்கள். வசதியாக வாழ்ந்தாலும் கையில் இருந்து சல்லி காசு செலவு செய்யாமல் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் பலர். இவர்களுக்கு உதவி செய்தால் வாங்கியவர்கள் நம்மை ஏமாளிகள் என்று நினைத்து பல விதங்களில் தங்கள் கஷ்டங்களைக் கூறி உதவி கோருவார்கள். இவர்களுக்கு உதவி செய்வதில் எந்த ப்ரயோஜனமும் இல்லை. அனைவரும் அன்னதானம், செய்வதற்கு தயாராக இருக்கின்றனர். விரும்பியும் செய்கின்றனர். அன்னதானம் செய்கிறேன். என்ற பெயரில் நன்கொடை கேட்டு நோட்டும் பேனாவுமாக பலர் தொழிலே செய்கின்றனர். ஐம்பதோ, நூறோ கொடுங்கள் என்று சிட்டையை நீட்டுகின்றனர். ஐம்பது, நூறு, இந்த காலத்தில் மிகச் சிறிய தொகைதான். இந்த நன்கொடை ரசீதை எத்தனை பேரிடம் காட்டி வாங்குகிறார்கள். என்பதே கேள்வி ஆயிரம் பேரிடம் வெறும் 50 ரூபாய் வாங்கினால் எவ்வளவு வரும் கணக்கு போடுங்கள். 50 * 1000 = 50000 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கின்றனர். அன்னதானத்திற்கு 25,000 ரூபாய் செலவழித்து விட்டு மீதியை பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றனர்.எப்படியோ எடுத்துத் தொலையட்டும், நாம சமைத்துப் போட முடியாது. இவர்களாவது செய்கிறார்களே என்று விட்டு விடுகிறோம். இப்படி விடக் கூடாது என்று ஒரு குழுவினர் தாங்களாகவே கடைகளில் தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி, சட்னி, பொட்டலங்களை தினமும் ஐந்தோ, பத்தோ, பாக்கெட்களை வாங்குகின்றனர். அவர்கள் ஆபிசிற்கோ, தொழிற்சாலைக்கோ செல்லும் வழியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், வயதானவர்கள் இவர்களை கவனித்து அவர்கள் கையில் பொட்டலத்தை பிரித்து கொடுக்கின்றனர். அவர்களும் சந்தோஷமாக சாப்பிடுகின்றனர். இந்த அன்னதானம் மேலான அன்னதானம்.அன்னதானம் என்ற பெயரில் நன்றாக உழைப்பவர்கள் கூட வேலைக்கு லீவு போட்டு வயிறார அன்னதானச் சாப்பாட்டை சாப்பிட்டுச் செல்கின்றனர். இவற்றை அன்னதானம் செய்வோர் தவிர்க்க முடியாது தான்.எந்த உதவி ஒருவர் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி அவர்களுடைய வாரிசுகளுக்கும் நல்ல வாழ்க்கையை கொடுக்கிறதோ 'அதுவே உதவி' உதவி பணத்தால் மட்டும் செய்வது இல்லை. எத்தனையோ விஷயங்களில் செய்யலாம். கல்வியால், சேவையால், வாழ்க்கையை முன்னேறச் செய்யும் பல நல்ல விஷயங்களால் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் பொழுது பயோடேட்டா பார்க்க முடியாமா ? என்கிறீர்களா ? முடியாதுதான். உதவி செய்யும் பொழுது மனம் இரங்கி 'பாவம்' என்று தான் நம் கையிலிருந்து காசையோ, பணத்தையோ கொடுக்கிறோம். சற்று யோசித்து இவர்களுக்கு கொடுக்கலாமா ? என்று யோசித்துக் கொடுக்கவும். சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்னல்களில் பச்சிளங் குழந்தைகளை கையில் ஏந்தி பிச்சை எடுப்பவர்கள் பலர். அப்படி இருப்பவர்கள் குழந்தைக்கு 1 நாள் வாடகை ரூ.100 பெற்றோரிடம் கொடுத்துவிட்டு காயும் வெயிலில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பிச்சை எடுக்கின்றனர். குழந்தைக்கு வாய் இருக்கிறதா ? இல்லையே ! இவர்களுக்கு பிச்சை போட்டு குழந்தையின் சாபத்தை நாம் பெற வேண்டாமே ! இந்தக் கொடுமையை உதவி செய்து மேலும் வளர்க்க வேண்டாம்.இப்படி எத்தனையோ தானங்கள் உரியவர்களுக்குச் சென்றடைவதில்லை. (உதவியை காலமறிந்து, இடமறிந்து, செய்யும் உதவியே சரியான உதவியாகும்) ஆக உதவியை செய்வதற்கு முன் யாருக்குச் செய்வது என்பது மிக முக்கியம்.நல்லவர்களுக்கு நாம் செய்யும் உதவிகள் கல்லில் பதித்த எழுத்துக்களாக என்றும் மறையாது. ஆனால் “ஈரம் இல்லாத நெஞ்சங்களுக்கு செய்யும் உதவி, நீரின் மேல் எழுதியதற்குச் சமம்.
பலருடைய உள்ளத்தில் இந்த ஒரு கேள்வி எழாமல் இருப்பதில்லை. தான் செய்யும் ஒவ்வொரு செயலும் சரியா? தவறா? என்று யோசிப்பதிலேயே காலத்தையும், மனசையும் கெடுத்துக் கொள்கின்றனர்.ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பெரியவர்கள் கூட 'உனக்கு எது சரின்னு படுதோ அதைச் சட்டுபுட்டுன்னு செய்வியா?' என்பார்கள்.ஏனென்றால் முடிவெடுப்பதில் யோசித்துக் கொண்டு யாரிடமாவது கேட்டு முடிவெடுக்கலாம் என்றால் அவசர முடிவுகளுக்கு என்ன செய்வார்கள்.சரியா? தவறா? என்ற யோசனை சாதாரண உடை விஷயத்திலிருந்து அடுக்கிக் கொண்டே போகலாம். திருமணத்திற்கோ நிச்சயதார்த்தம், சங்கவிழா, ஏன் துஷ்டி வீட்டிற்குப் போவதற்குக் கூட பல பெண்கள் என்ன புடவை, என்ன நகை போடுவது என்று அலைபாய்ந்து நொந்து போகின்றனர். அவர்கள் மனம் எது சரி? என்ற தெளிவான சிந்தனையை சிந்திப்பதில்லை, சரி சமையலை எடுத்துக் கொள்வோம். விருந்தாளி வருகிறார்கள், வகையா சமைக்கணும், என்ன சமைப்பது என்று யோசித்தே சமைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே தலைவலியில் படுத்து விடுகின்றனர்.வியாபாரத் துறையிலும் சரி முடிவெடுப்பதற்கு படாதபாடு படுவார்கள். பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுப்பதற்குள் உள்ளம் பதறி மனம் படபடத்து செய்வதறியாது திருமணத்தை தள்ளிப் போடுபவர்கள் பலர்.இந்த மனிதர்களிடையே ஒரு சிலா முடிவெடுப்பதில் தாமதிக்காமல் டக்கென்று முடித்து விடுவார்கள். இப்ப என்ன? நடக்கிறது நடக்கட்டும். எந்த வியாபாரம் தான் டென்ஷன் இல்லாதது, வரும் போது பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பிரகாசிக்கிறார்கள். பெற்றவர்களாகஎன்ன ஆகி விடுமோ? என்ற பயம் இருக்கும் வரை நம் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. அதனால் முடிவெடுப்பதில் முட்டாள் தனமான முடிவும் கஷ்டத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்.நாள், நட்சத்திரம் பார்த்து பல விஷயங்களைத் தள்ளிப் போடுபவர்கள் அவசரமாக வைத்தியம் செய்வதைத் தள்ளிப் போட்டு உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வருபவர்கள் பலர் உண்டு.வீட்டை விட்டு புறப்படும் பொழுது மந்தாரமாக இருக்கே குடை எடுத்துட்டுப் போகவா? வேண்டாமா? என்று ரெம்ப நேரம் குழம்புவார்கள். முடிவெடுப்பதில் உள்ள குறை. 'ஒன்று குடை எடுத்துட்டுப் போங்க, இல்லாட்டி நனைஞ்சுட்டு வந்தா உங்க மண்டையிலே என்ன செடியா முளைச்சிடும். துணி தானே நனையும் காயப் போட்டுக்கலாம்! இது துரிதமாக முடிவெடுக்கும் மனைவியின் அபிப்ராயம்.என்ன நடந்தாலும் பரவாயில்லை. நடப்பது நடக்கட்டும் எனக்கு இது சரியென்று படுது நான் செய்கிறேன். தவறாயிட்டா அப்புறம் திருத்திக்கிறேன். இது முடிவெடுப்பதில் தைரியம் உள்ளவர்களின் மனப்பான்மை.நீங்க எப்படி? சரியா இது ? தவறா? ….சரிதான்.
மனிதர்கள் பிறந்ததிலிருந்து குழந்தை, மாணவன், இளைஞன், கணவன், மனைவி, தகப்பன், தாய், தாத்தா, பாட்டி, என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவரைச் சார்ந்து அதாவதுபற்றுதலுடன் தங்களுடைய உள்ளுணர்வுகளைச் சொல்லிக் கொள்ளும் வாய்ப்பு கணவன் மனைவியிடையே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.கணவனுடைய தேவையை யார் அறிவார் மனைவி உருவில் உள்ள தெய்வமே அறியும் என்பது ஆண்களின் கருத்து, பெண்களுக்கு கணவன் தான் என்பதும் யாரும் வேண்டாம் நாம் இருவர் மாத்திரமே இருந்து கொள்ளலாம் என்று நிம்மதியாக இருக்கும் காலத்தில் காலனுடைய கட்டாயத்தில் யாராவது ஒருவரை பிரிய வேண்டிய நிர்பந்தத்தில் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிமை இவர்களை அதிகமாகவே ஏக்கத்திற்கு உள்ளாக்குகின்றது. தனிமையின் கொடுமை அதை அனுபவித்தால்தான் தெரியும். உங்களுக்கென்ன எல்லாவற்றையும் துறந்து நிம்மதியாக இருக்கிறீர்கள். காலைக் கடன்களை முடித்து2 மணி நேரம் பூஜை செய்து, தனக்கு மட்டும் வேண்டிய ஆகாரத்தை செய்து கொண்டு10 மணிக்கு எல்லா வேலைகளையும் முடித்துவிடுகின்றனர். காலை பத்து மணியிலிருந்து இரவு 10 மணிவரை கிட்டத்தட்ட12 மணி நேரம் என்னதான் டி.வி. பார்ப்பது. சுலோகம் சொல்வது வீட்டை துடைப்பது. என்ற பல காரியங்கள் இருந்தாலும் இந்த நேரத்தை எப்படிக் கடத்துவது என்று பலர் அவதிப்படுகின்றனர்.தனிமை படுத்தப்பட்டவர்கள் இளம் வயதினராக இருந்தால் தனக்குப் பிடித்த தொழில், பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பது என்று எத்தனையோ விதமான வேலைகளை ஏற்றுக் கொண்டு தனிமையை விரட்டலாம். வேலை செய்ய முடியாத அளவிற்கு வயோதிகம் அதிகரிக்க , அதிகரிக்கதனிமையில் மன நோய்க்கு ஆளாகி விடுகின்றனர். இப்படி பட்டவர்களுக்கு கொஞ்சம் சமூக சேவை எண்ணம் உள்ளவர்கள். ஏன் தாத்தாக்களைப் பார்த்து பேசுவது சிரிக்க, சிரிக்க அன்பான வார்த்தைகளைக் கூறுவது, பாசத்துடன் உடன் நலனை விசாரிப்பது,கால், கை, வலி என்றால்கை, கால் நீவி விடுவது தலைவலி என்றால் தலை வலித் தைலம் தேய்ப்பது என்ற சிறு சிறு வேலைகளை ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும். நாம் அவர்களுக்குச் செய்யும் சேவைகளால் அவர்கள் கூறும் வாழ்த்துக்கள் இருக்கின்றதே அவைகள் போதும். கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்க தினமும் செல்பவர்கள் வாரத்திற்கு5 நாட்கள் இச்சேவையை செய்ய பழகிக் கொள்ளுங்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பழமொழி இருக்கிறதே.இதை கவனிக்கும் இளைய தலைமுறையினர்5 வயதிலிருந்தே அவர்கள் ஒரு வீட்டிற்கு சென்றால் அங்கு தாத்தா, பாட்டி ரூமிற்கு சென்று பேசவேண்டும் என்ற கொள்கையை நாம் சொல்லாமலே அவர்கள் கடைபிடிப்பார்கள். யாராவது ஒரு தெருவில் இப்படி ஆரம்பித்து அதனுடைய பின் விளைவுகளை நம் பத்திரிக்கையில் பகிர்ந்து கொள்ளலாமே!.
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு 'சொன்னது கருடா சௌக்யமா? அதற்கு கருடனும் எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியம்தான் என்றதாம். நாம் எப்படி அர்த்தம் கொள்ள வேண்டும். பாம்பும் கருடனும் எப்பேற்பட்ட எதிரிகள் அவர்கள் இருவரும்! அருகருகிலேயே இருப்பினும் பாம்புக்கு ஆபத்து இல்லாமல் பரமசிவனுடைய கழுத்தில் இருந்து கொண்டு கருடனை குசலம் விசாரிக்கின்றது. அப்பாம்பு அந்த இடத்தைவிட்டு ஓர் அடி நகன்றாலும் கருடன் கொத்தி தன்னுடைய ஒரு வேளை உணவிற்காக திருப்தியாக சாப்பிட்டுவிடும்.பாதுகாப்பு என்ற எல்லைக்கோட்டை விட்டு சிறிது நகன்றாலும் நம்முடைய கதி பாம்பின் கதி தான். ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது தன் தாயை விட்டு மற்றவரிடம் செல்ல யோசிக்கும். காரணம் தாயின் இருப்பிடம்தான் பாதுகாப்பானது என்பதை குழந்தை உணர்ந்து கொள்கின்றது.5, 6 வயது வரையிலும் கூட விளையாடிக் கொண்டிருந்தாலும் 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை அம்மா என்று ஓடி வந்து சிறிது நேரம் தாயின் மடியில் உட்கார்ந்துவிட்டு மீண்டும் ஓடி விடும். (Secure Feeling) பாதுகாப்பான உணர்வுதான் இதற்குக் காரணம் என்று கண்டறிந்து உள்ளனர்.குழந்தைக்கு இவ்வளவு அழகாகத் தெரியும் பொழுது பெரியவர்களாகிய நாம் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம். புகை பிடித்தல், மது போதைக்கு அடிமையாகுதல், டி.வி. சீரியல்களுக்கு அடிமையாகுதல், தவணை முறையில் சாமான்களை வாங்குதல், அதிரடித் தள்ளுபடிக்கு அடிமையாகுதல், நம் தகுதிக்கு மீறிய நகை, வீடு வாங்குதல் ஆகியவை நமக்கு பாதுகாப்பற்ற விஷ அரக்கர்கள். ஒரு முறை தானே என்று ஆரம்பித்து புகை, மது போன்ற பொருட்களின் மீது அடிமையாகி நாம் மட்டும் இல்லாமல் குடும்பமே நடுத்தெருவிற்கு வருவது. டிவி. சீரியல்களுக்கு அடிமையாகி பசி நேரத்தில் பசியோடு வரும் குழந்தைகளையும், கணவனையும் கண்டுகொள்ளாமல் தன்னை மறந்த நிலையில் பரிமாறுதல், உங்களுடைய தாய்மை உணர்விற்கும் அன்பிற்கும் சேதம் விளைவிக்கும். தவணை முறையில் சாமான்களையும், நகைகளையும், வீட்டையும் மற்றவர்களுக்காக பெருமை காட்டிக் கொண்டு நாம் மாத்திரம் மனதில் படக்படக்கொன்று. பேங்க்காரன் வருவானோ? வட்டிக்காரன் வந்துவிடுவானோ என்ற பயத்தில் ஏன் காலத்தை ஓட்டவேண்டும். எந்த ஒரு பொருளும் நம்முடைய சௌகரியத்துக்குதானே தவிர மற்றவருக்காக அல்ல என்பதை ஒரு போதும் நாம் மறக்கக் கூடாது. நமக்கு நாமே பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறோம்.பணக்காரர்களுடைய சிநேகமும், பகையும் ஆகவே ஆகாது. சிநேகம் இருந்தால் அவர்களுடைய வசதியைப் பார்த்து, ஒன்று பொறாமை அல்லது அவர்களை மாதிரி ஏதாவது ஒன்றை வாங்கலாமே என்று நம்முடைய பட்ஜெட் நம்மை அறியாமலேயே காலியாகும். சிநேகமாவது பராவாயில்லை பகை இருக்கிறதே அது மகா தவறு. பகைமை கொண்டால் பணக்காரன் எப்பொழுது நேரம் கிடைக்கும் என்று ஏதாவது ஒரு வழியில் வஞ்சம் தீர்த்துக் கொள்வான். இவன் பணக்காரன் மீது பகை வைத்திருக்கிறான் இவனோடு நாம் இருந்தால் பணப்படைத்தவன் நம்மையும் ஒதுக்கி விடுவான் என்று மற்றவர்களும் நம்மை ஒதுக்கி விடுவார்கள். பணக்காரர்களை குற்றம் சொல்லவில்லை. நம்முடைய மனதில் பலஹீனத்தை தூண்டும் இவை தேவையில்லை.ஹலோ, ஹலோ இதுவே போதும் நாமும், நம் குடும்பமும் பாதுகாப்பான ஒரு எல்லைக் கோட்டிற்குள் தமக்கு என்று வழிமுறைகளை ஏற்படுத்திக் கொண்டு பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பைப் போன்று குசாலம் விசாரித்துக் கொண்டு நிம்மதியாக வாழலாம். பகட்டிற்காக நம் பாதுகாப்பிற்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை நல்லவனாக இரு. இல்லாவிட்டால் நல்லவனோடு இரு என்று ஏன் கூறினார்கள் புரிகின்றதா?
எத்தனையோ கலைகள் உள்ளன. பேசவதற்கு கூடவா கலை, வாய்க்கு ? வந்தபடியெல்லாம் பேசினால் நன்றாகவா இருக்கும். பேசுவது ரெம்ப சாதாரண விஷயம் என்று பலர் நினைக்கின்றனர். பேசுவதிலும் ஒரு கட்டுப்பாடு, பண்பாடு, கண்ணியம் வேண்டும். எப்படி ? நாம் பேசும் பேச்சு மற்றவர்களின் மனதைப் புன்படுத்தாமல் பேசுவதுதான். யாராவது இதைப் பற்றி யோசித்திருக்கிறார்களா ?ஒரு கடைக்குப் போகிறோம். இது என்ன விலை ? என்று கேட்கிறோம். கடைக்காரர்கள் அதிலேயே விலை இருக்கு பாத்துக்கங்க. என்றால் எப்படி இருக்கும். அந்தக் கடைக்காரன் இருங்கம்மா பாத்துச் சொல்றேன். ஏன்று அமைதியாகச் பேசினால் உங்கள் மனம் குளிருமில்லையா ? எந்தப் பொருளைப் பற்றி நயமாகஎடுத்துக் கூறினால் நீங்களல் வாங்காமல் வருவீர்களா ? பண்பொழுக பேசும் பேச்சில் மயங்காதவர்கள் உண்டா ?மறைந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிறந்த நகைச்சுவை நடிகர் அவர்கள் கட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றார். எதிர் கட்சியாளர் அவ்வூரில் பிரபல டாக்டர். அவ்வூர் மக்கள் அவர் மீது மிகுந்த மரியாதையும். அன்பும் வைத்திருந்தனர். இதை கேட்டவுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒப்புக் கொண்டார்.இக்காலத்து தேர்தல் பிரச்சாரம் என்றால் காதை பொத்திக் கொண்டு ஓடும் அளவிற்கு பண்பற்ற வார்த்தைகள் வரும்.ஆனால் திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களோ, அந்த டாக்டரின் மருத்துவத்தை பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். தனக்காக பிரச்சாரம் செய்ய வந்தவர் இப்படிப் பேசுகிறாரே ? என்று வெளிறிப் போனார். ஆனால் கலைவாணர் அவர்களோ இவ்வளவு பெரிய டாக்டரை தேர்ந்தெடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினால், உங்கள் ஊர் நல்லதொரு மருத்துவரை இழந்து விடும் என்று கண்ணியமாகப் பேசினார். அவர் பிரச்சாரத்தினால் கட்சி வெற்றி பெற்றது.முன்னுக்கு வரும் ஒரு இசையமைப்பாளர் தான் இசை அமைத்ததற்கு தயாரிப்பாளரிடம் ஒரு தொகையைக் கேட்டார். உடனே அந்த தயாரிப்பாளரோ இப்பொழுது நம்பர் ஒன் இசையமைப்பாளருக்கு கொடுத்த செக் ஜெராக்சை காண்பித்து அவருக்கே இவ்வளவு தான் கொடுத்திருக்கிறேன். நீங்கள் கேட்பது நியாயமா ? என்றார். உடனே இளம் இசையமைப்பாளர் எனக்கு குரு, அனுபவம் மிக்க திறமைசாலி, நீங்கள் கொடுத்தது அவருக்கு சின்ன வேலை தான். ஆனால் நானோ முட்டாள். நான் கடுமையாக உழைக்க வேண்டும். என்று மூத்தவரை காயப்படுத்தாமல் தன் வேலையை சாதித்துக் கொண்டார்.ஒரு குழந்தை துறுதுறு என்று இருக்கிறது. அட எவ்வளவு அழகான குழந்தை உடம்பெல்லாம் மின்னுதே என்று சொல்லிவிடக் கூடாது. ஏதாவது குழந்தைக்கு வந்துவிட்டாள் 'சண்டாளன் வாயிலே பட்டே என் குழந்தைக்கு இப்படி வந்து விட்டது' என்பார்கள். அதைத் தவிர்த்து 'கடவுளுடைய ஆசிர்வாதத்தால் நீ நன்றாக இரு' என்று சொல்லிவிட்டால் பிரச்சனை இல்லை.இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. இப்பொழுது தெரிகிறதா! என்ன இருந்தாலும் பேசித் தீர்த்துக்குவோம் என்கிறார்கள் பல சண்டை சச்சரவுகளை கண்ணியமான பேச்சினால் பேசித் தீர்த்துக்கலாம். இப்போ தெரியுதா பேசுவது கூட சுவை என்று. புதுவருடமான இன்றிலிருந்து கண்ணியமாக மற்றவரை புண்படுத்தாத பேசும் கலையை உயர்த்திக் கொள்ளுங்கள். என்னத்தால் கெட்டான் ? பேசியே கெட்டான் என்பர் பலர் .பேச்சையும் அளந்து அளவோடு பேசனும். சிலரை அன்பால் அரவணைத்து பேசி நம்முடைய காரியத்தை சாதிக்கலாம். ஆனால் சிலருக்கு அன்பாக பேசினால் கூட அலட்சியம் காண்பிப்பார்கள். அவர்களை எல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, நயமாக கடிந்து பேச வேண்டும். அதைக் கூட அடாவடியாகப் பேசக் கூடாது. பேச நன்றாகக் கற்றுக் கொண்டுதான் பேச வேண்டும். அதிகாரத்தில் இருக்கிறோம் என்று விட்டு எறிந்து பேசக் கூடாது ஆக பேசவது கலைதான்.
மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே 40 வயதைத் தாண்டியவுடன் கதிகலங்க ஆரம்பித்து விடுகிறது. லேசாக மூட்டுவலி, தலைநரை, இளம் வயதில் உள்ள உற்சாகம், வேகம், எல்லாமே கொஞ்சம், கொஞ்சமாகக் குறைகிறது. ஆனாலும் உழைக்கிறார்கள். தன் குழந்தைகளின் படிப்பு, திருமணம், சொத்து சேர்ப்பது, இவை மட்டும் தான் முன்பெல்லாம் இருந்தது. 'ஒரு வீடு இருந்தால் போதும் நிம்மதி' என்ற வார்த்தைக்கு 'குட்பை' சொல்லும் காலம் வந்து விட்டது.பையனோ, பொண்ணோ, யாருக்குமே தன்னுடைய பெற்றோர்களை வயதான காலத்தில், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு, கனவில் கூட இல்லை என்றே சொல்லலாம். ஏழைகளுக்கு பணக்கஷ்டம், செலவு செய்ய முடியாது. முதியவர்களை Extra பாரமாக தங்களுடைய வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், பணக்காரர்கள் வேலைக்கு ஆட்களை அமர்த்தி கவனித்துக் கொள்வார்கள். மாதம் ஒரு முறையோ, 2 முறையோ, 'ஹலோ' சொல்வார்கள். அதுவும் வெளிநாட்டில் இருந்தால் வருடக் கணக்குதான். நடுத்தர வர்க்கத்தினரோ 2 நாள் பார்ப்பார்கள். அப்புறம் விட்டு விட்டு பார்ப்பார்கள். அவர்களால் பார்க்கவும் முடியாது. பார்க்காமல் இருக்கவும் முடியாது. பெற்றோர்களுக்கு கஷ்டம் இருந்தால் பார்ப்பார்கள் என்றே சொல்லலாம்.வயதான காலத்தில் மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய், யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலை செய்வார்கள். ஒன்று சொல்வதையே திருப்பி, திருப்பி சொல்வார்கள். சின்ன விஷயத்திற்குக் கூட டென்ஷன் ஆகி விடுவார்கள்.அவர்களுடைய கேள்விகளுக்கு இந்த தலைமுறையினரால் பதிலே சொல்ல முடியாது. அடுத்த தலைமுறையினரைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இப்படி இருக்க முதியவர்கள்நாம் ஏன் பிறந்தோம் ? எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறோம். குழந்தைகளை வளர்த்து ஆளாக்க, படிக்க வைக்க வைத்தியம் செய்ய என்று பல வேலைகளுக்கு நாயாக உழைத்திருக்கிறோம். அவரவர்களுடைய தகுதிக்கேற்ப பல இன்னல்களால் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு, தங்களுடைய குழந்தைகளை வளர்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஏன் நம்முடைய கேள்விகளுக்கு பதில் தர கூட பொறுமையில்லை?ஏதோ வேண்டா வெறுப்பாக நம்மைப் பார்க்கின்றனர். 'என்னப்பா முகம் வாடியிருக்கே' 'ஆபிசிலே கஷ்டமா' 'வியாபாரத்தில் ஏதாவது சிக்கலா என்று கேட்டால் கூட ஆரம்பிச்சுட்டீங்களா ! 'நீங்க பாட்டுக்கு நிம்மதியா இருங்கப்பா' நான் பார்த்துக்கிறேன்' என்னை டென்ஷன் ஆக்காதீர்கள் என்று எரிந்து விழுகின்றனர். குடும்பத்தில் என்ன நடக்கிறது ? என்பது கூட தெரியாமல் தத்தளிக்கின்றனர்.எங்களுக்கு தேவையில்லாத விஷயம்தான் எங்களால் சரி பண்ண முடியாதது தான். ஆனால் எங்கள் அனுபவம் சில யோசனைகளைக் கூறுமே ? அதை ஏற்றுக் கொண்டால் என்ன ? என்று வருந்துகின்றோம்.காலையில் எழுந்தவுடன் பொழுது போகாமல் எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். ஏதாவது ஏடா கூடமாகச் செய்து இளையவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றனர். பேசாமல் வாய்மூடி, கைகட்டி, வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் சாப்பிட்டுக் கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டு இருக்க எங்களால் முடியவில்லையே? என்று ஆதங்கப்படுகின்றனர். இந்த நிலைமையில் யார்தான் உயர்வாழ விரும்புவார்கள். பேப்பரில் தன்னைவிட வயதில் சிறியவர்கள் இறந்த செய்தியைப் பார்த்தால் சின்னப் பிள்ளைக்கு சாவு வந்திருக்கே, எனக்கு வரல்லையே, என்று தன் உயிரின் மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.அதுவும் சொத்துப் பிரிக்கிறதுக்கு அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. தன் குழந்தைகள் வெளியூருக்குச் சென்றால் கூட அவர்கள் வெளியூரில் இருக்கும்போது நாம் இறந்து விட்டால் அநாதைப் பிணமாகப் போய் விடுவோமா ? என்ற சந்தேகம். அந்த பயத்தின் விளைவால் எப்ப வருவே ? என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மரணத்திற்கு தயாராக இருந்தாலும் என்ன ஆகுமோ? என்ற மரண பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த முதியவர்களுக்கு, தான் பெற்ற குழந்தைகள் தங்களை உதாசீனப்படுத்தும்போது நாம் ஏன் இவர்களை இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம். அவமானங்களைப் படவா? என்று ஏங்கி ஏங்கி வாழ்கின்றனர்.ஆமா நமக்கு வயசாயிடுச்சு, குழந்தைகளை கஷ்டப்பட்டு ஆளாக்கினோம். அது நம் கடமை, அதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. முதுமை என்றால் பல சுமைகளைத் தாங்கி, தாண்டி வரத்தான் வேண்டும். இப்படி எண்ணினால் முதுமை எப்படி இருக்கும். கண்டிப்பாக ஒவ்வொரு முதுமையும் வாழ்நாளெல்லாம் நாம் ஏன் இவ்வளவு பாடுபட்டோம். இந்த சுமையுள்ள முதுமையைத் தாங்கவா? என்று எண்ணாமல் இருப்பதில்லை. பல்வேறு பட்ட சுமைகளைத் தாங்கும் முதுமை இனிக்குமா? கசக்குமா? இல்லை இரண்டுமில்லா சுமை தாங்கும் முதுமையா ? அவர்களுடைய மனநிலையை பொறுத்தும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் பொறுத்துதான். ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் சுமையைத் தாங்கித்தான் ஆக வேண்டும் முதுமை.
இனிக்கும் வாழ்க்கை தீபாவளி ஸ்வீட்ஸ் மாத்திரம் இனித்தால் போதுமா? வாழ்க்கை இனிக்க வேண்டாமா? வேகமான உலகில் பொறுமை, சகிப்புத் தன்மை இல்லவே இல்லை. சின்ன விஷயத்திற்கு எல்லாம் பொசுக்கென்று கோபம் வந்து விடுகிறது. தோழியிடம், உடன் பிறந்தவர்களிடம், பெற்றோர்களிடம், சொந்தங்களிடம் பகைத்துக் கொண்டு வாழ்வது என்று சர்வ சாதாரணமாகி விட்டது. இதையாவது சரி சொத்துத் தகறாறு, பொறாமையினால் வருவது சகஜம் தானப்பா? என்று விட்டு விடுகிறோம். அதைவிட பயங்கரமான ஒன்று விவாகரத்து, கணவன், மனைவியிடம் உள்ள தகறாறு.கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் எனக்குப் பிடிக்கவில்லை, உடனே டைவர்ஸ் கேட்பது, சொத்து பிரிப்பதில் எனக்கு உப்புக்குப் பெறாத சொத்தை கொடுத்து விட்டார். எனக்கு கொடுத்ததை விட 4 கிராம் கூட உள்ள நகையை தங்கச்சிக்கு கொடுத்து விட்டாங்க. தாய், தந்தையரை என்னால் வைத்துப் பார்க்க முடியாது. இப்படி எத்தனையோ விஷயங்களைப் பிடிக்காமல் எடுத்தெரிந்து பேசுவது.வாழ்க்கை என்றாலே வேப்பம் பூ மாதிரி கசக்கிறது. அதே வேப்பம் பூவை நன்றாக ஆற வைத்துமோரில் உப்பு கலந்து உள்ளே நனைத்துபின் வெயிலில் காய் வைத்து பொல பொல என்று வந்தவுடன் டப்பாவில் அடைத்து வைத்து வேண்டியபொழுது கொஞ்சம் எடுத்து மிதமான தீயில் வேப்பம் பூவை வதக்கி புளித் தண்ணீரில் சிறிது வெல்லம் போட்டு கொதிக்க வைத்து வறுத்த வேப்பம்பூவைப் போட்டால் கசக்கும் வேப்பம் பூ தேனாக ருசியாக இருக்கம்.அதைப் போலத்தான் வாழ்க்கை கசக்கும், கசக்கும் வாழ்க்கையை மோர், உப்பு போன்று பொறுமை சகிப்புத் தன்மையில் ஊறி வெளிவர வேண்டும். கஷ்டங்கள் உங்களை வறுத்து எடுத்தாலும் வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கம். இதுக்குப் போயி ஏன் வருத்தப்பட வேண்டும் என்று விட்டு விடும் மனப்பக்குவம் வேண்டும். பின்பு அன்பு, பாசம் என்ற இனிப்பை கசக்கும் வாழ்க்கையில் கலந்தால் வாழ்க்கை தேன்துளி போன்ற இனிக்கத்தான் செய்யும்.நீங்க என்ன வேப்பம் பூவில் தேன்துளி சொல்கிறீர்களா? வாழ்க்கையில் தேன்துளியா? எப்படி? ரெண்டிலுமே தேன் துளி கண்டிப்பாக இருக்கிறது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பக்குவப் படுத்தும் விதத்தில் வேப்பம் பூ தேனாக இனிக்கிறதல்லவா? அதே மாதிரி தான் நம் வாழ்க்கையை எடுக்க வேண்டியவற்றை அதன்தன் இடத்தில் வைத்துப் பக்குவப்படுத்திப் பார்த்தால் இனிப்பான, இனிமையான வாழ்க்கை இருக்கத்தான் செய்யும். தீபாவளி ஸ்வீட் ஆவது ஒரு லெவலில் திகட்டும். இனிப்பான வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்.'தீபாவளிச் செலவு இருக்கே?' என்று ஒரு பக்கம் கவலைப்பட மறுபக்கம் டெங்குக் காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு பலியாகி விடக்கூடாது என்ற பய உணர்வு மக்களிடையே பரவலாக உள்ளது. இதைத் தவிர்க்க மக்களாகிய நாம் அரசாங்கம் செய்யவில்லையே என்று ஆதங்கப்படுவதை விட நாமே செயலில் இறங்குவதுதான் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.அரசாங்கம் தன் வேலையைத் தாமதப் படுத்தினாலும்'வருமுன் காப்போம்' என்பதைக் கருத்தில் கொண்டு மக்களாகிய நாம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள கவுன்சிலரை அழைத்துக் கொண்டு நீர் தேங்கி இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தும் வேலையைச் சுயமாகச் செய்யலாம். மரம் நடலாம், என்ன தேவை என்பதை நகராட்சிக்கு தெரிவிக்கலாம். அவர்கள் வேலையைக் கிடப்பில் போடாமல் அந்த வார்டில் உள்ளவர்கள் சுழற்சி முறையில் நகராட்சிக்குச் சென்று ஞாபகப் படுத்தலாம்.ஒன்றுபட்டு நன்றாகப் பணியினை செய்யும் பொழுது'நான் சொல்வது தான் சரி' என்ற போக்கிற்கு இடமளிக்காமல் எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு, அவற்றில் எவை சுமூகமாக வேலை நடைபெறுகிறதோ அவற்றைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பாகச் செயல்படுத்துங்கள். பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். இப்பணியினைச் செய்யும் பொழுது, இன்முகத்துடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.யாரும், யாருக்கும். எதிரி அல்ல. அனைவரும் மனிதர்களே! இவற்றில் ஏற்றத் தாழ்வுகள் பலவிதத்தில் இருக்கலாம். ஆனாலும் அனைவரும் சமம்தான். ஆக ஒன்று படுவோம். நன்று செய்வோம்.
எண்ணிலடங்கா தர்மங்கள் நாம் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். நம்மால் முடிந்த உதவிகளை, தேவைப்படுவோர்க்கு தக்க சமயத்தில் செய்வது தர்மம் கடவுளின் எண்ணிலடங்காத படைப்புகளில் இயற்கையுடன் கூடிய உயிரினங்களை படைத்திருக்கிறான். வெறும் மனிதர்கள் உள்ள பூமியை மாத்திரம் படைத்திருக்கலாமே ? ஏன் புலி,சிங்கம், யானை, ஆமை, மீன், முதலை, திமிங்கலம், பல்லி, பூச்சி, மரம், செடி கொடி, என்று படைத்திருக்கிறார். சிலிக்கான் சிப்ஸ் இல்லாமல் கம்ப்யூட்டரை செயல்படுத்த முடியுமா ? முடியாதே, ஏதோ காரண காரியத்திற்காகத்தான் விலங்குகளுடன் மனிதனையும் படைத்திருக்கிறான்.ஆறு அறிவுகள் நிறைந்த மனிதன் விலங்கின.ங்களையும், மரம், செடி, கொடிகளையும், பாதுகாக்கும் அறிவுள்ளவன் என்று தான். அவனே அதை அழிக்கத் தொடங்கிவிட்டால் யாருக்கு நஷ்டம் ?மனிதனுக்குத்தானே !கடவுளின் படைப்புத்தொழில்யாராலும்அறியமுடியாதஅளவுவிஸ்வரூபமுடையது.படைத்தவற்றை தகுந்த முறையில் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை ஆனால், இங்கு என்ன நடக்கிறது புலி, யானை, காண்டா மிருகம் போன்றவற்றை தோலுக்காவும், கொம்புகளுக்காகவும் கொன்று குவித்து, தன்னையும், தன் வீட்டையும் அலங்கரித்துக் கொள்கிறான். மரங்களை வெட்டி சாய்த்து தன் வீட்டை நிமிர்த்திக் கட்டி பெருமை கொள்கிறான்.நம்மைக் காத்துக் கொள்ள கோவிலுக்குச் சென்று பெயருக்கு அர்ச்சனை செய்து, பாலாபிஷேகம், அன்னதானம், அங்கபிரதட்சணம், யாகம் என்று செய்கிறோமோ, கடவுளே, என் குடும்பத்தைக் காப்பாற்று என்று கூறுகிறோம். கடவுள் என்ன செய்வார்? முழித்துக் கொண்டு இருக்கிறார். எதற்கு காப்பாற்றுவதற்கா ! இல்லை என்ன செய்வது ? என்று தான்.மனிதர்கள் சுகமாக வாழ எல்லா வசதிகளையும், ஒருதூசி அளவு கூட குறைவில்லாமல் செய்திருக்கின்றேனே ? இன்னும் என்ன காப்பாற்றுவது என்றுதான்.தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கின்றோம், இந்த கோவிலுக்கு இத்தனை லட்சம், கோடி என்று கொடுக்கும் தனவான்களே ,நீங்கள் செய்யும் இந்த தர்மம் உங்களுடைய வாரிசுகளால் செய்ய முடியுமா ? சிந்தியுங்கள்.அன்னத்தை கொடுக்கும், விளை நிலங்கள் எல்லாம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறதே,? பூமித்தாயைக் காப்பாற்ற வேண்டாமா? *உதாரணத்திற்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பட்டினி கிடந்து, சாகும் தருவாயில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு விருந்து கொடுத்தால் அவர்களால் சாப்பிட முடியுமா ? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ! முதலில் அவர்களை எழுப்ப என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ ,அதைச் செய்து விட்டு பின்பு தான் விருந்துணவு கொடுக்க முடியும்.இதுவரை செய்த தவறை (மரம் வெட்டுவது) இனிமேல் செய்யாமல் மரம் நடுதல் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து காடு, மலை என்று எல்லா இடங்களிலும் மரம் வளர்க்கப் பாடுபட வேண்டும், கென்ய நாட்டுப் பெண் 3 கோடி மரங்களை நட்டு அமைதி நோபல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார்.மழையை தரும் மரங்களை தெய்வமாக மதித்து திருமணநாள், பிறந்தநாள், இறந்த நாள் என்று எல்லா நாட்களுக்கும் மரம் நடுவதற்கென்று ஒரு தொகையை ஒதுக்கி வறண்ட பூமித்தாயை பசுமை நிறைந்த பூமியாக்க வேண்டும்.ஏன் கடவுளுக்கு நேர்த்தி கடனாக ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் 10 மரங்கள் நடுவது கட்டாயமாக்கப்பட்டால் காடு செழிக்கும். மழை பெருகும் நாடு முன்னேறும்இந்த தர்மம் நிகழ் காலத்தை மட்டுமல்லாது, எதிர்காலத்தையும், காக்கும் உன்னத தர்மமாகும், தர்மங்களின் உயர்ந்த தர்மம் மரங்களை பாதுகாப்பது, மரம் நடுவது, இயற்கை வளங்களை தன் வீட்டு சொத்து போல காப்பது. தர்மங்களில் உயர்ந்த தர்மம் விருட்ஷ தர்மம்.
பாராட்டுங்கள் எந்த வயதினை உடையவராக இருப்பினும் திறமையாகச் செய்தால் ஆச்சரியமாக இருக்கும். இந்தச் சின்னக் குழந்தையா இப்படிப் பேசுகிறது என்று ' வெரிகுட் பாய்' 'கெட்டிக்காரப் பொண்ணு' என்று மனம் திறந்து பாராட்டுகிறோம். அதே மாதிரி போட்டியில் வெற்றி பெற்றாலோ, படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினாலோ, எத்தனை பேர் பாராட்டுகின்றனர்.ஒரு பெரிய சபையில் மிக நன்றாக பேச்சுத் திறமை மிக்க ஒருவர் பேசினாலோ அனைவரும் ரசிக்கிறோம். 'பிரமாதம்' என்கிறோம். ஆனால் அதைப் போய் திறம்பட பேசியவரிடம் எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்றால் 100 ல் ஒருவர் தான். சரி வீதி வீதியாகச் சென்று நல்ல விஷயங்களை மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் எடுத்துச் சொல்பவர்களை ஆயிரத்தில் ஒருவர்தான் பாராட்டுகின்றனர்.சரி, நடந்து விட்டதையும், இப்பொழுது நடப்பதையும், இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றியும் பேசுபவர்களை லட்சத்தில் ஒருவர்தான் புகழ்கின்றனர். மற்றவர்கள் திறனைக் கண்டு புகழ்வதுடன், பரிசினையும் கொடுப்பவர்கள் கோடியில் ஒருவர்தான். பலருக்கு பொறாமைப்படத்தான் தெரிகிறது. ஆமா, என்னமோ செஞ்சுட்டான், பேசுறான்,பரவாயில்லை இவன் பேசி என்னத்தை 'ஜனங்க கேக்கப் போறாங்க' ஏதோ நடக்குது என்று வந்தோமா, கேட்டோமா என்று அலட்சியமாக போய்க்கிட்டே இருப்பவர்கள் அதிகம் பேர்.ஏன் பாராட்ட மனம் வரவில்லை, அது ஒரு பெரிய வேலையா ? 45 வயதிற்குப் பிறகு ஒரு துறையில் பிரகாசிப்பவர்களைப் பார்த்து 'உன்னுடைய திறமை இத்தனை நாளா, எங்கய்யா பதுக்கி வச்சுட்டே 'பிரமாதம்' ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மேலும், மேலும் 'வளரணும்' ஐயா, 'வளரணும்' என்று மனம் திறந்து பாராட்டும் பொழுது கேட்பவர்கள் தங்களுடைய திறமைகளை இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொண்டு ஜொலிப்பார்கள்.சாதாரண சமையலை எடுத்துக் கொள்ளுங்கள் உப்பு, காரம், கூடுதலாகி விட்டால் தடால், புடால், என்று குதிக்கின்றனர். அப்படி சுத்தாமல் உப்பு, காரம், கொஞ்சம் குறைச்சா இன்னும் சூப்பரா இருக்கும். புளிப்பு கொஞ்சம் கூட்டினா ரெம்ப நல்லா இருக்கும் என்று கூறுங்கள். அப்புறம் என்ன ? சமையல் நளபாகம் தான். சமையல் சூப்பர் தான், எல்லோரும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். ஏன் கடவுளையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரைப் பற்றிமனம் உருகிப் பாடி அவர்களுக்கு மரியாதை செய்து அவர்களுடைய பெயரை ஆயிரம் விதமாக பாராயணம் செய்து கடவுளின் சிறப்பை எடுத்துக் கூறி பாராட்டினால் கடவுளின் மனம் குளிர்ந்து அருள்பாலிப்பாள் என்ற நம்பிக்கை உண்டா ? இல்லையா ? இருக்கே !எத்தனையோ பெயர்களின் வடிவில் பாராட்டிக் கொண்டே தான் இருக்கிறோம். அந்தந்த கடவுளுக்குப் பிடித்த வில்வமோ, துளசியோ, அருகம்புல்லோ, புஷ்பமோ தூவி இறைவனின் திருநாமங்களைக் கூறி அர்ச்சிக்கிறோம். இப்படிப் படித்தால் 'யஹ்படேத் சிவ சன்னி தௌ சிவனெ' என்று சிவன் பாராட்டைக் கேட்டு மனம் குளிர்ந்து அருள் தருவார் என்று புஸ்தகத்திலேயே இருக்கிறதல்லவா ? ஆக பாராட்டுங்கள்.நல்ல விஷயங்களைப் பாராட்டுவதற்கு தயங்கவே கூடாது. இப்படிப் பாராட்டுவதால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது. பாராட்டைப் பெறுபவர்களுக்கும் ஆனந்தம் பொங்குகின்றது. பணத்திற்காக பதவிக்காக பாராட்டுபவர்கள் தனி இனம், இதை அலட்சியம் செய்வதில் தவறே இல்லை.குழந்தைகளை பாராட்டுக்கள் அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் சிறந்தவராவார்கள் .மனைவியை பாராட்டுக்கள் அவர் இன்னும் அன்பாக நடந்து கொள்வார். கணவனை பாராட்டுக்கள் குடும்பத்திற்காக இன்னும் அக்கறையுடன் உழைப்பார். உறவினர்களை பாராட்டுக்கள் சுற்றம் பெருகும் உதவிகள் உயரும் .நண்பர்களை பாராட்டுக்கள் உண்மையான நட்பு பெருகும். உங்களுக்காக எதையும் செய்ய முன்வருவார்கள். மாணவர்களைப்பாராட்டுங்கள்அவர்கள்இன்னும் திறமையானவர்களாக ஜொலிப்பார்கள். பாராட்டு என்பது சாதாரணமானவரையும் சாதனையாளராக்கும். பாராட்டுவதற்கு நல்லமனம் மட்டுமே வேண்டும், தாராளமாகப் பாராட்டுங்கள். இந்த பழக்கத்தை நம் வருங்காலக் குழந்தைகளிடமும், ஏற்படுத்த வேண்டும். இப்படிப் பாராட்டுவதால் பொறாமை என்ற கெட்ட குணம் அறவே அழிந்து விடும். எல்லோரும் பாராட்டக் கத்துக்கிடனும், எதற்கு? நல்ல விஷயத்திற்குதான் ஆக மனசாரப் பாராட்டுங்கள்.
தேசப்பற்று யாருக்குமே இல்லை, தேசப்பற்று இருந்தால் இப்படிச் செய்வானா ? இந்தியனுக்கு அந்த சிந்தனையே இருக்காதே ? என்று அங்கலாய்ப்பதை பல இடங்களில் சர்வ சாதாரணமாகக் கேட்கிறோம், பார்க்கிறோம். எங்காவது சண்டையா ? வீட்டிற்குள் ஒளிந்து கொள்கிறோம். கலவரமா ? வீட்டை விட்டே வெளியே வராமல் 'சே என்ன தேசம்' என்று நமக்கு நாமே மண்டையிலடித்துக் கொள்கிறோம். ஏன் ? . அந்தக் கலவரம் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் ? என்ற எண்ணம் லட்சத்தில் ஒருவருக்குத்தான் உண்டு. எல்லோருக்குமே வருவதில்லை.சரி, அரசியல் தலைவரை தேர்ந்தெடுக்கிறோம் நம்பிக்கையுடன், ஆனால் ஆட்சியோ சகிக்க முடியவில்லை .அநியாயமான அராஜக ஆட்சி. என்ன செய்வது? அடுத்த ஆட்சி வரை காத்திருப்போம் என்று பொறுமையுடன் ,சபித்துக் கொண்டே காத்திருக்கிறோம். ஏன் ? சரியில்லை என்றால் எல்லாரும் சேர்ந்து பொங்கி எழக்கூடாதா ? எல்லோரும் ஒன்று பட்டால், ஒரு அராஜக ஆட்சியை, ஒரே நாளில் கலைத்து விடலாம் அல்லவா ? ஏன் ? இந்த அவல நிலை..தேசம் உருப்படுமா ? என்ன அநியாயம்? என்று சொல்லாமல் தட்டிக் கேட்க ,நாம் வீரு கொண்டு எழலாம் அல்லவா?ஒன்றுமே இல்லை. கிரிக்கெட் வேர்ல்ட் கப் மேட்ச் இந்தியாவுக்கும்,. இலங்கைக்கும் இடையே நடைபெற்றது. இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோடிக்கணக்கான மக்கள் பூஜைகள், யாகங்கள், பிரார்த்தனைகள் என்று மெனக்கெட்டு செய்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கு பலவித அபிப்ராயங்களைச் சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் இல்லாமல் வேறுபாடின்றி எல்லோரும் ஒரே மனதுடன், இந்தியா ஜெயிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.. ஏன்? இந்தியா ஜெயித்தால் இவர்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது. ஒன்றுமே இல்லையே ! பின் ஏன் இந்த பூஜை புனஸ்காரங்கள். சிந்திக்க வைத்தது. எல்லோரையும் மும்பையில் நடந்த மேட்சில், இந்திய மக்கள் ஆயிரக்கணக்கில் வீட்டில் டி.வி.முன்னே ,கோடிக்கணக்கில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு ஓவருக்கும் திகிலுடன் காத்திருந்து ,பெருமூக்சு விட்டுக் கொண்டு, கிரிக்கெட் வீரர் அவுட் ஆனவுடன் பட, பட வென்று பதறினார்கள்.. ஐயோ, ஜெயிக்க மாட்டோமா ? என்று பெரிய பெரிய தலைவரிலிருந்து குட்டி பாப்பா வரைக்கும் வருத்தம். வருத்தம்னா லேசுப்பட்ட வருத்தம் கிடையாது. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை. இந்திய வீரர்கள் ஆடும்பொழுது அவர்கள் அடிக்கும் 4-க்கும் சிக்ஸருக்கும் ஒரே ஆட்டம் பாட்டம் தான். ஏதோ தங்களுக்கு கிடைத்து விட்ட மாதிரி ஒன்று போல பாடி, ஒன்று போல கையசைத்து ,நம் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் கொடுத்தார்களே எதற்காக ? ஏன் ?என் நாடு இந்திய நாடு, என் நாட்டு மக்கள் ஜெயிக்க வேண்டும் என்ற தேசப்பற்று மாத்திரம் அல்ல. வெறியையும் காண முடிந்தது. நம் மக்களுக்கு தேசப்பற்றே இல்லை என்று சொன்னால் சத்தியமாக நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். மேட்சில் பார்த்தோமே என்ன ஒரு சந்தோஷம் நம் தேசம் ஜெயித்து விட்டது என்ற உற்சாகம். சந்தோஷம். அந்த அரசாங்கமே ஏன் இந்திய தேசமே சந்தோஷத்தில் முழ்கியது. அதைப் பார்த்த 90 வயது தாத்தாவிலிருந்து 9 மாதக் குழந்தை வரை கை தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. சில தாத்தா, பாட்டிகள் டான்ஸே ஆடினார்கள்.அந்த ஒன்பது மாதக் குழந்தை எல்லோரும் ஏதோ சந்தோஷமாக இருக்கிறார்கள். என்று அதுவும் கைகொட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. அட இப்படி இருக்கும் மக்கள் கிரிக்கெட்டில் மட்டும் நம் தேசம் ஜெயித்தால் போதுமா ? எல்லா விஷயங்களிலும் இதே மாதிரி ஒன்று பட்டு நற்செயல்களை உற்சாகப்படுத்தி, தீய செயல்களை அடியோடு அழிக்க வேண்டும் என்பதே. நம் தேசத்திற்காக கிரிக்கெட் மேட்சிற்கு அநியாயமாய் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம், நம் தேசத்திற்காக பாடுபடும் பொழுது தேவையே இல்லை. மனம் மட்டும் இருந்தால் போதும், வைராக்கியமாக 'ஒன் மேன் பவர்' என்று இருந்த மஹாத்மா காந்தியடிகள் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்திருக்கிறார்.பிரார்த்தளை, பூஜை செய்து கை கொட்டி கத்தி, ஆரவாரம் செய்த நமக்கு ஒரு பைசா கூட கிடைப்பதில்லை. ஏன் விளையாடும் கிரிக்கெட் ஆட்டக்காரருக்கு நம்மை யாரென்று கூட தெரியாது. ஆனாலும் அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு பேட்டிங்கிற்கும், 'கடவுளே' என்று பிரார்த்திருக்கிறோம். ஆட்டக்காரர்களுக்கு இந்திய அரசாங்கமும் மேல்தட்டு பெரிய ஜாம்பவான்களும் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவது போல கோடி, கோடியாக வாரிக்கொடுக்கின்றனர். ஏன் ? இந்தியா வேர்ல்டு கப் வாங்கக் காரணமான ஆட்டக்காரர்கள் ,இந்தியாவை ஜெயிக்க வைத்தது அவ்வளவு ஆனந்தம். அனைவருக்குமே ஒவ்வொரு இந்திய மக்களும் தன் வீட்டுக் குழந்தைகள் ஆடிஜெயித்து, பரிசை அள்ளி விட்டதாக ஓர் உணர்வு. இதெல்லாம் தேசப்பற்று இல்லாமல் வராது. நம் தேசப் பற்றை தட்டி எழுப்புவது கிரிக்கெட் விளையாட்டு மட்டும் தானா ? மற்ற விஷயங்களிலும் இருக்க வேண்டாமா ?இதே மாதிரி நம் தேச மக்கள் அனைவரும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் நம் நாடு, 'ரோஜா' படத்தில் பாட்டு நம் வீடு இந்திய தேசம் என்றே சொல்லடா என்ற வரிகள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறதல்லா ? அந்த மாதிரி நம் நாட்டிற்காக அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ ? நாமும் நம் தேசத்தை பாதுகாக்க நம்பர் ஒன் ஆக வர நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும். அரசாங்கம் வெட்கப்பட்டுக் கொண்டு நமக்காக செய்ய முன் வர வேண்டும். அட என்ன நீங்க ! அரசியல் வாதிக்கு வெட்கமாவது ! ரோசமாவது ! கட்சிக்குள் நுழைந்தாலே இவ்விரண்டையும் விட்டுவிட்டு தானே வருவான் என்கிறீர்களா ! ஆனால் அடுத்த தலைமுறையினர் நிச்சயமாக ரோசங் கெட்ட தலைவனா தேர்ந்தெடுக்க மாட்டார்கள்.ஏனெனில் வரும் தலைமுறையினர் எல்லாம் விவரமாக தட்டி கேட்பார்கள். வெத்துப்பேச்சை நம்பவே மாட்டார்கள். அது வரை புண்ணாகியுள்ள நம் தேசம் புறையேறிவிடாமல் பாதுகாத்துக் கொடுக்க வேண்டும், என்பது நம் எல்லோருடைய கடமை. ஆக இன்றும் என்றும் “ நம் வீடு இந்திய நாடு" என்பதை மறக்காமல் இருக்க வேண்டும். அதுபோதும் நம் தேசத்தைக் காப்பாற்றி விடலாம். நம் வீடு இந்திய நாடு என்றே சொல்லடா!