தீபாவளியின் தீபஒளி போல, நம் திருநாடு திகழ ஒன்று படுவோம், நன்று செய்வோம்.
இனிக்கும் வாழ்க்கை தீபாவளி ஸ்வீட்ஸ் மாத்திரம் இனித்தால் போதுமா? வாழ்க்கை இனிக்க வேண்டாமா? வேகமான உலகில் பொறுமை, சகிப்புத் தன்மை இல்லவே இல்லை. சின்ன விஷயத்திற்கு எல்லாம் பொசுக்கென்று கோபம் வந்து விடுகிறது. தோழியிடம், உடன் பிறந்தவர்களிடம், பெற்றோர்களிடம், சொந்தங்களிடம் பகைத்துக் கொண்டு வாழ்வது என்று சர்வ சாதாரணமாகி விட்டது. இதையாவது சரி சொத்துத் தகறாறு, பொறாமையினால் வருவது சகஜம் தானப்பா? என்று விட்டு விடுகிறோம். அதைவிட பயங்கரமான ஒன்று விவாகரத்து, கணவன், மனைவியிடம் உள்ள தகறாறு.கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் எனக்குப் பிடிக்கவில்லை, உடனே டைவர்ஸ் கேட்பது, சொத்து பிரிப்பதில் எனக்கு உப்புக்குப் பெறாத சொத்தை கொடுத்து விட்டார். எனக்கு கொடுத்ததை விட 4 கிராம் கூட உள்ள நகையை தங்கச்சிக்கு கொடுத்து விட்டாங்க. தாய், தந்தையரை என்னால் வைத்துப் பார்க்க முடியாது. இப்படி எத்தனையோ விஷயங்களைப் பிடிக்காமல் எடுத்தெரிந்து பேசுவது.
வாழ்க்கை என்றாலே வேப்பம் பூ மாதிரி கசக்கிறது. அதே வேப்பம் பூவை நன்றாக ஆற வைத்துமோரில் உப்பு கலந்து உள்ளே நனைத்துபின் வெயிலில் காய் வைத்து பொல பொல என்று வந்தவுடன் டப்பாவில் அடைத்து வைத்து வேண்டியபொழுது கொஞ்சம் எடுத்து மிதமான தீயில் வேப்பம் பூவை வதக்கி புளித் தண்ணீரில் சிறிது வெல்லம் போட்டு கொதிக்க வைத்து வறுத்த வேப்பம்பூவைப் போட்டால் கசக்கும் வேப்பம் பூ தேனாக ருசியாக இருக்கம்.அதைப் போலத்தான் வாழ்க்கை கசக்கும், கசக்கும் வாழ்க்கையை மோர், உப்பு போன்று பொறுமை சகிப்புத் தன்மையில் ஊறி வெளிவர வேண்டும். கஷ்டங்கள் உங்களை வறுத்து எடுத்தாலும் வாழ்க்கை என்றால் அப்படித்தான் இருக்கம். இதுக்குப் போயி ஏன் வருத்தப்பட வேண்டும் என்று விட்டு விடும் மனப்பக்குவம் வேண்டும். பின்பு அன்பு, பாசம் என்ற இனிப்பை கசக்கும் வாழ்க்கையில் கலந்தால் வாழ்க்கை தேன்துளி போன்ற இனிக்கத்தான் செய்யும்.
நீங்க என்ன வேப்பம் பூவில் தேன்துளி சொல்கிறீர்களா? வாழ்க்கையில் தேன்துளியா? எப்படி? ரெண்டிலுமே தேன் துளி கண்டிப்பாக இருக்கிறது. அதைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பக்குவப் படுத்தும் விதத்தில் வேப்பம் பூ தேனாக இனிக்கிறதல்லவா? அதே மாதிரி தான் நம் வாழ்க்கையை எடுக்க வேண்டியவற்றை அதன்தன் இடத்தில் வைத்துப் பக்குவப்படுத்திப் பார்த்தால் இனிப்பான, இனிமையான வாழ்க்கை இருக்கத்தான் செய்யும். தீபாவளி ஸ்வீட் ஆவது ஒரு லெவலில் திகட்டும். இனிப்பான வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்.'தீபாவளிச் செலவு இருக்கே?' என்று ஒரு பக்கம் கவலைப்பட மறுபக்கம் டெங்குக் காய்ச்சல் போன்ற வியாதிகளுக்கு பலியாகி விடக்கூடாது என்ற பய உணர்வு மக்களிடையே பரவலாக உள்ளது. இதைத் தவிர்க்க மக்களாகிய நாம் அரசாங்கம் செய்யவில்லையே என்று ஆதங்கப்படுவதை விட நாமே செயலில் இறங்குவதுதான் நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
அரசாங்கம் தன் வேலையைத் தாமதப் படுத்தினாலும்'வருமுன் காப்போம்' என்பதைக் கருத்தில் கொண்டு மக்களாகிய நாம் ஒவ்வொரு வார்டிலும் உள்ள கவுன்சிலரை அழைத்துக் கொண்டு நீர் தேங்கி இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தும் வேலையைச் சுயமாகச் செய்யலாம். மரம் நடலாம், என்ன தேவை என்பதை நகராட்சிக்கு தெரிவிக்கலாம். அவர்கள் வேலையைக் கிடப்பில் போடாமல் அந்த வார்டில் உள்ளவர்கள் சுழற்சி முறையில் நகராட்சிக்குச் சென்று ஞாபகப் படுத்தலாம்.ஒன்றுபட்டு நன்றாகப் பணியினை செய்யும் பொழுது'நான் சொல்வது தான் சரி' என்ற போக்கிற்கு இடமளிக்காமல் எல்லோருடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு, அவற்றில் எவை சுமூகமாக வேலை நடைபெறுகிறதோ அவற்றைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பாகச் செயல்படுத்துங்கள். பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். இப்பணியினைச் செய்யும் பொழுது, இன்முகத்துடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.யாரும், யாருக்கும். எதிரி அல்ல. அனைவரும் மனிதர்களே! இவற்றில் ஏற்றத் தாழ்வுகள் பலவிதத்தில் இருக்கலாம். ஆனாலும் அனைவரும் சமம்தான். ஆக ஒன்று படுவோம். நன்று செய்வோம்.
0
Leave a Reply