தர்மங்களின் உயர்ந்த தர்மம் விருட்ஷ தர்மம்
எண்ணிலடங்கா தர்மங்கள் நாம் செய்யக் கடமைப்பட்டுள்ளோம். நம்மால் முடிந்த உதவிகளை, தேவைப்படுவோர்க்கு தக்க சமயத்தில் செய்வது தர்மம் கடவுளின் எண்ணிலடங்காத படைப்புகளில் இயற்கையுடன் கூடிய உயிரினங்களை படைத்திருக்கிறான். வெறும் மனிதர்கள் உள்ள பூமியை மாத்திரம் படைத்திருக்கலாமே ? ஏன் புலி,சிங்கம், யானை, ஆமை, மீன், முதலை, திமிங்கலம், பல்லி, பூச்சி, மரம், செடி கொடி, என்று படைத்திருக்கிறார். சிலிக்கான் சிப்ஸ் இல்லாமல் கம்ப்யூட்டரை செயல்படுத்த முடியுமா ? முடியாதே, ஏதோ காரண காரியத்திற்காகத்தான் விலங்குகளுடன் மனிதனையும் படைத்திருக்கிறான்.
ஆறு அறிவுகள் நிறைந்த மனிதன் விலங்கின.ங்களையும், மரம், செடி, கொடிகளையும், பாதுகாக்கும் அறிவுள்ளவன் என்று தான். அவனே அதை அழிக்கத் தொடங்கிவிட்டால் யாருக்கு நஷ்டம் ?மனிதனுக்குத்தானே !
கடவுளின் படைப்புத்தொழில்யாராலும்அறியமுடியாதஅளவுவிஸ்வரூபமுடையது.படைத்தவற்றை தகுந்த முறையில் போற்றிப் பாதுகாப்பது நமது கடமை ஆனால், இங்கு என்ன நடக்கிறது புலி, யானை, காண்டா மிருகம் போன்றவற்றை தோலுக்காவும், கொம்புகளுக்காகவும் கொன்று குவித்து, தன்னையும், தன் வீட்டையும் அலங்கரித்துக் கொள்கிறான். மரங்களை வெட்டி சாய்த்து தன் வீட்டை நிமிர்த்திக் கட்டி பெருமை கொள்கிறான்.
நம்மைக் காத்துக் கொள்ள கோவிலுக்குச் சென்று பெயருக்கு அர்ச்சனை செய்து, பாலாபிஷேகம், அன்னதானம், அங்கபிரதட்சணம், யாகம் என்று செய்கிறோமோ, கடவுளே, என் குடும்பத்தைக் காப்பாற்று என்று கூறுகிறோம். கடவுள் என்ன செய்வார்? முழித்துக் கொண்டு இருக்கிறார். எதற்கு காப்பாற்றுவதற்கா ! இல்லை என்ன செய்வது ? என்று தான்.மனிதர்கள் சுகமாக வாழ எல்லா வசதிகளையும், ஒருதூசி அளவு கூட குறைவில்லாமல் செய்திருக்கின்றேனே ? இன்னும் என்ன காப்பாற்றுவது என்றுதான்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கின்றோம், இந்த கோவிலுக்கு இத்தனை லட்சம், கோடி என்று கொடுக்கும் தனவான்களே ,நீங்கள் செய்யும் இந்த தர்மம் உங்களுடைய வாரிசுகளால் செய்ய முடியுமா ? சிந்தியுங்கள்.அன்னத்தை கொடுக்கும், விளை நிலங்கள் எல்லாம் பாலைவனமாகிக் கொண்டிருக்கிறதே,? பூமித்தாயைக் காப்பாற்ற வேண்டாமா? *உதாரணத்திற்கு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பட்டினி கிடந்து, சாகும் தருவாயில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு விருந்து கொடுத்தால் அவர்களால் சாப்பிட முடியுமா ? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா ! முதலில் அவர்களை எழுப்ப என்ன சிகிச்சை அளிக்க வேண்டுமோ ,அதைச் செய்து விட்டு பின்பு தான் விருந்துணவு கொடுக்க முடியும்.
இதுவரை செய்த தவறை (மரம் வெட்டுவது) இனிமேல் செய்யாமல் மரம் நடுதல் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுத்து காடு, மலை என்று எல்லா இடங்களிலும் மரம் வளர்க்கப் பாடுபட வேண்டும், கென்ய நாட்டுப் பெண் 3 கோடி மரங்களை நட்டு அமைதி நோபல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறார்.
மழையை தரும் மரங்களை தெய்வமாக மதித்து திருமணநாள், பிறந்தநாள், இறந்த நாள் என்று எல்லா நாட்களுக்கும் மரம் நடுவதற்கென்று ஒரு தொகையை ஒதுக்கி வறண்ட பூமித்தாயை பசுமை நிறைந்த பூமியாக்க வேண்டும்.
ஏன் கடவுளுக்கு நேர்த்தி கடனாக ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் 10 மரங்கள் நடுவது கட்டாயமாக்கப்பட்டால் காடு செழிக்கும். மழை பெருகும் நாடு முன்னேறும்
இந்த தர்மம் நிகழ் காலத்தை மட்டுமல்லாது, எதிர்காலத்தையும், காக்கும் உன்னத தர்மமாகும், தர்மங்களின் உயர்ந்த தர்மம் மரங்களை பாதுகாப்பது, மரம் நடுவது, இயற்கை வளங்களை தன் வீட்டு சொத்து போல காப்பது. தர்மங்களில் உயர்ந்த தர்மம் விருட்ஷ தர்மம்.
0
Leave a Reply