சுமை தாங்கும் முதுமை
மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே 40 வயதைத் தாண்டியவுடன் கதிகலங்க ஆரம்பித்து விடுகிறது. லேசாக மூட்டுவலி, தலைநரை, இளம் வயதில் உள்ள உற்சாகம், வேகம், எல்லாமே கொஞ்சம், கொஞ்சமாகக் குறைகிறது. ஆனாலும் உழைக்கிறார்கள். தன் குழந்தைகளின் படிப்பு, திருமணம், சொத்து சேர்ப்பது, இவை மட்டும் தான் முன்பெல்லாம் இருந்தது. 'ஒரு வீடு இருந்தால் போதும் நிம்மதி' என்ற வார்த்தைக்கு 'குட்பை' சொல்லும் காலம் வந்து விட்டது.
பையனோ, பொண்ணோ, யாருக்குமே தன்னுடைய பெற்றோர்களை வயதான காலத்தில், பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு, கனவில் கூட இல்லை என்றே சொல்லலாம். ஏழைகளுக்கு பணக்கஷ்டம், செலவு செய்ய முடியாது. முதியவர்களை Extra பாரமாக தங்களுடைய வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், பணக்காரர்கள் வேலைக்கு ஆட்களை அமர்த்தி கவனித்துக் கொள்வார்கள். மாதம் ஒரு முறையோ, 2 முறையோ, 'ஹலோ' சொல்வார்கள். அதுவும் வெளிநாட்டில் இருந்தால் வருடக் கணக்குதான். நடுத்தர வர்க்கத்தினரோ 2 நாள் பார்ப்பார்கள். அப்புறம் விட்டு விட்டு பார்ப்பார்கள். அவர்களால் பார்க்கவும் முடியாது. பார்க்காமல் இருக்கவும் முடியாது. பெற்றோர்களுக்கு கஷ்டம் இருந்தால் பார்ப்பார்கள் என்றே சொல்லலாம்.
வயதான காலத்தில் மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய், யாரும் எதிர்பார்க்காத ஒரு செயலை செய்வார்கள். ஒன்று சொல்வதையே திருப்பி, திருப்பி சொல்வார்கள். சின்ன விஷயத்திற்குக் கூட டென்ஷன் ஆகி விடுவார்கள்.அவர்களுடைய கேள்விகளுக்கு இந்த தலைமுறையினரால் பதிலே சொல்ல முடியாது. அடுத்த தலைமுறையினரைப் பற்றி சொல்லவே வேண்டாம்.இப்படி இருக்க முதியவர்கள்நாம் ஏன் பிறந்தோம் ? எப்படி எல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறோம். குழந்தைகளை வளர்த்து ஆளாக்க, படிக்க வைக்க வைத்தியம் செய்ய என்று பல வேலைகளுக்கு நாயாக உழைத்திருக்கிறோம். அவரவர்களுடைய தகுதிக்கேற்ப பல இன்னல்களால் கஷ்டப்பட்டு, அவமானப்பட்டு, தங்களுடைய குழந்தைகளை வளர்த்திருக்கிறோம். இவர்களுக்கு ஏன் நம்முடைய கேள்விகளுக்கு பதில் தர கூட பொறுமையில்லை?
ஏதோ வேண்டா வெறுப்பாக நம்மைப் பார்க்கின்றனர். 'என்னப்பா முகம் வாடியிருக்கே' 'ஆபிசிலே கஷ்டமா' 'வியாபாரத்தில் ஏதாவது சிக்கலா என்று கேட்டால் கூட ஆரம்பிச்சுட்டீங்களா ! 'நீங்க பாட்டுக்கு நிம்மதியா இருங்கப்பா' நான் பார்த்துக்கிறேன்' என்னை டென்ஷன் ஆக்காதீர்கள் என்று எரிந்து விழுகின்றனர். குடும்பத்தில் என்ன நடக்கிறது ? என்பது கூட தெரியாமல் தத்தளிக்கின்றனர்.எங்களுக்கு தேவையில்லாத விஷயம்தான் எங்களால் சரி பண்ண முடியாதது தான். ஆனால் எங்கள் அனுபவம் சில யோசனைகளைக் கூறுமே ? அதை ஏற்றுக் கொண்டால் என்ன ? என்று வருந்துகின்றோம்.
காலையில் எழுந்தவுடன் பொழுது போகாமல் எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். ஏதாவது ஏடா கூடமாகச் செய்து இளையவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கின்றனர். பேசாமல் வாய்மூடி, கைகட்டி, வேளாவேளைக்கு சாப்பாடு மட்டும் சாப்பிட்டுக் கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டு இருக்க எங்களால் முடியவில்லையே? என்று ஆதங்கப்படுகின்றனர். இந்த நிலைமையில் யார்தான் உயர்வாழ விரும்புவார்கள். பேப்பரில் தன்னைவிட வயதில் சிறியவர்கள் இறந்த செய்தியைப் பார்த்தால் சின்னப் பிள்ளைக்கு சாவு வந்திருக்கே, எனக்கு வரல்லையே, என்று தன் உயிரின் மீதுள்ள வெறுப்பை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.
அதுவும் சொத்துப் பிரிக்கிறதுக்கு அவர்கள் படும்பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. தன் குழந்தைகள் வெளியூருக்குச் சென்றால் கூட அவர்கள் வெளியூரில் இருக்கும்போது நாம் இறந்து விட்டால் அநாதைப் பிணமாகப் போய் விடுவோமா ? என்ற சந்தேகம். அந்த பயத்தின் விளைவால் எப்ப வருவே ? என்று இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். மரணத்திற்கு தயாராக இருந்தாலும் என்ன ஆகுமோ? என்ற மரண பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த முதியவர்களுக்கு, தான் பெற்ற குழந்தைகள் தங்களை உதாசீனப்படுத்தும்போது நாம் ஏன் இவர்களை இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தோம். அவமானங்களைப் படவா? என்று ஏங்கி ஏங்கி வாழ்கின்றனர்.
ஆமா நமக்கு வயசாயிடுச்சு, குழந்தைகளை கஷ்டப்பட்டு ஆளாக்கினோம். அது நம் கடமை, அதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. முதுமை என்றால் பல சுமைகளைத் தாங்கி, தாண்டி வரத்தான் வேண்டும். இப்படி எண்ணினால் முதுமை எப்படி இருக்கும். கண்டிப்பாக ஒவ்வொரு முதுமையும் வாழ்நாளெல்லாம் நாம் ஏன் இவ்வளவு பாடுபட்டோம். இந்த சுமையுள்ள முதுமையைத் தாங்கவா? என்று எண்ணாமல் இருப்பதில்லை. பல்வேறு பட்ட சுமைகளைத் தாங்கும் முதுமை இனிக்குமா? கசக்குமா? இல்லை இரண்டுமில்லா சுமை தாங்கும் முதுமையா ? அவர்களுடைய மனநிலையை பொறுத்தும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் பொறுத்துதான். ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் சுமையைத் தாங்கித்தான் ஆக வேண்டும் முதுமை.
0
Leave a Reply