விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (21.04.2025) தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில், கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், அவர்களது தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு தலைப்புகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி, கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்பட்டது.இதனை விரிவுபடுத்தும் விதமாகவும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாநில அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாம் 16.04.2025 முதல் 25.04.2025 வரை மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி மற்றும் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.இந்த சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமில் தலா 50 மாணவர்கள் வீதம் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 100 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (21.04.2025) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதான் இண்டஸ்இண்ட் வங்கி சார்பில், 200 அங்கன்வாடி மையங்களுக்கு எடை மற்றும் உயரம் அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் வழங்கினார்.பின்னர், விவசாயப் பொருட்களின் விற்பனைக்காக 150 கிலோ வரை எடை பார்க்கும் 60 மின் தராசுகளை கண்மாய் விவசாய சங்கங்களுக்கு வழங்கினார்.பிரதான் நிறுவனமானது இன்டஸ்இண்ட் வங்கி மாவட்ட வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, சிவகாசி உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் நீர் நிலைகளை புணரமைத்தல், நில மேம்பாடு, இயற்கை விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு ஆகிய திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு துறையினருடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றது.அதில் குறிப்பாக வளரிளம் பெண்கள் மத்தியில் அனீமியா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்குத் தேவையான நடத்தை மற்றும் கல்வியினை மாவட்டத்தில் 3000 வளரிளம் பெண்களை குழுவாக ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை அங்கன்வாடி மையங்களில் குழுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.அதன் ஒரு பகுதியாக, இன்று வளரிளம் பெண்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் எடை மற்றும் உயர அளவினை கணக்கிட 200 அங்கன்வாடி மையங்களுக்கு உயரம் மற்றும் எடை அளவிடும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) திருமதி பத்மாவதி, பிரதான் நிறுவன சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கணேசன், திருமதி கனகவள்ளி மற்றும் திரு.ஆதிநாராயணன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், அவர்களது தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஓவியம், நாட்டுப்புற கலைகள், போஸ்டர் தயாரித்தல், கதை சொல்லி, புத்தகம் பேசுதல், கலைப் பொருட்கள் தயாரித்தல், மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு 25.04.2025 முதல் 01.05.2025 வரை காலை 10:30 மணி மற்றும் பிற்பகல் 2:30 மணி என இரண்டு வேளைகளில் நடைபெற உள்ளது.இந்த திரைப்படக் காட்சியில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையிலும், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.இந்தத் திரைப்படக் காட்சிகள் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி, இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி, சிவகாசி ICAI, அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளி, காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் திரையிடப்பட உள்ளது.இந்த திரைப்படக் காட்சிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாராணாபுரம் ஜெய்ஶ்ரீமன் நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 176 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6.17 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.26.40 இலட்சம் மதிப்பில் வேலை உத்தரவுகளையும் என மொத்தம் 187 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6.42 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் (20.04.2025) வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள் வாயிலாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் வெற்றிகரமாக இன்று செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டமும் ஒன்று. மனிதனாக பிறக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக தேவைகளாக இருப்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம். இந்த இருக்க இருப்பிடம் என்பது இன்றைக்கு பலருக்கும் அது எட்டாக்கனியாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையாக இருக்கிறது.தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குடிசைகள் இருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அந்த வகையில் 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.அது போல தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆதிதிராவிட மக்களுக்கு வீடுகள் கட்டப்படக்கூடிய திட்டம் மூலம் காங்கிரீட் வீடுகளை உருவாக்கித் தந்தார்.அதனுடைய வெற்றியின் தொடர்ச்சியாக தான், டாக்டர் கலைஞர் அவர்கள், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிசை பகுதிகளை கண்டறிந்து அவற்றை எல்லாம் காங்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டினுடைய தமிழ்க்குடிகள் அனைவரும் அவர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான கான்கிரீட் வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை ஏழை மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டில் 1 இலட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வீடு என்பது ஏழை எளிய மக்களின் வாழ்நாள் கனவு. அந்த கனவை நிறைவேறுவதற்கு அரசு இரண்டு மிக முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒன்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்குதல், அதன் தொடர்ச்சியாக அவர்கள் வீடுகள் கட்டுவதற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அந்த திட்ட பயன்களை வழங்குவது. இந்த இரண்டிலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அதிகப்படியான பட்டாக்களை வழங்கிய மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம் தான்.அதற்காக அரசினுடைய சிறப்பு அனுமதிகளை பெற்று, மாவட்ட நிர்வாகம் அனுப்பிய முன்மொழிவுகளுக்கு எல்லாம் உரிய அரசாணைகளை பெற்று சுமார் 40,000 பட்டாக்களை சாத்தியப்படுத்திய மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதை கடமையாக கருதுகிறேன். அதேபோல இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயன் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில், நமது மாவட்டத்தில் சுமார் 3000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைவிட மிக முக்கியம் இனிமேல் எத்தனை தகுதியுள்ள பயனாளிகள் இருந்தாலும், வீட்டுமனை இருக்கும் என்றால் அவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்குரிய அனுமதியும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் பெற்றுத் தந்திருக்கிறார்கள். எனவே தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் அடுத்த கட்டங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் உடைய பயன்களை பொதுமக்கள் பெற, ஏழை எளிய மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய காங்கிரீட் வீடுகளை கட்டுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்கள் குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்மாவட்டஊரகவளர்ச்சிமுகமைதிட்டஇயக்குநர்மரு.தண்டபாணி,முன்னாள்சிவகாசிஊராட்சிஒன்றியக்குழுத்துணைத்தலைவர் திரு. விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், (18.04.2025) ஏப்ரல் 18 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய நாளாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து ஏற்பாடு செய்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை காண்பதற்கு பத்திரிக்கையாளர்களுக்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உலக பாரம்பரிய தளங்களின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் உலக பாரம்பரிய நாள் கடைபிடிக்கப்படுகிறது.உலக பாரம்பரியத் தளங்கள் நமது கலாச்சார மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் மதிப்புமிக்க பகுதியாகும்.மேலும் அவற்றைப் பாதுகாத்து வரலாற்றின் பெருமையை வெளிப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாகும்.மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என மாண்புமிகு நிதி, சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.அதன்படி, நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம் மற்றும் புடைப்புச் சிற்பங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மம்சாபுரம் கிராமத்திலுள்ள நாயக்கர் கால மண்டபம் மற்றும் பிள்ளையார் நத்தம் மண்டபம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளன.அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை காண்பதற்காக பத்திரிக்கையாளர்களுக்கான ஒரு நாள் உலக பாரம்பரிய மரபுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.இந்த ஒரு நாள் பாரம்பரியமரபுபயணத்தில்பாவாலிகிராமத்தில்உள்ளசெப்புப்பட்டயத்தினைபார்வையிட்டனர்.இச்செப்புப்பட்டயத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கில் ஏற்றப்பட்ட பின்னர் அவருக்கு ஆதரவாயிருந்த நாகலாபுரம், கோல்வார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, கடலக்குடி, குளத்தூர் ஆகிய பாளையப்பட்டுக்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. மேஜர் பானர்மேன் கி.பி. 1799-இல் அக்டோபர் 21-ஆம்தேதி வெளியிட்ட செப்பேட்டு ஆணையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்ப்போருக்கு கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட கதிதான் நேரும் என எச்சரித்துள்ள செய்தி செப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பாளையக்காரர்கள் கோட்டைகள் கட்டிக் கொள்வதற்கும், பீரங்கிகள், துப்பாக்கிகள் ஈட்டிகள், வலையங்கள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொள்ள அவ்வாணை மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அதிகாரிகளும், வேலைக் காரர்களும், மக்களும் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவ்வாணையில் கூறப்பட்டுள்ளது.பின்னர், பாவாலியில் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த குமாரசாமி கோவில் கல்வெட்டுகள், சிற்பங்களையும் பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து, செங்குன்றாபுரத்தில் உள்ள ‘கைலாசநாதர் கோயில்’ பிற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட சிவன் கோயிலை பார்வையிட்டனர்.தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படவுள்ள திருவில்லிபுத்தூர்- மதுரை சாலை பிள்ளையார் நத்தத்தில் உள்ள திருமலை நாயக்கர் காலத்தில் பயணமாக செல்லும் பொதுமக்கள் தங்குவதற்காக 30 தூண்களுடன், ஒவ்வொரு தூண்களிலும் தலா 12 வெவ்வேறு சிற்பங்களுடன், மொத்தம் 360 சிற்பங்கள், நுழைவு வாயிலின் இருபுறமும் யானை வடிவ கலைசிற்பங்களுடன் கட்டப்பட்ட கல்மண்டபத்தினை பார்வையிட்டனர்.பின்னர், மம்சாபுரம் அருகே உள்ள கல்தூண் மண்டபத்தில், 30க்கும் மேற்பட்ட தூண்களில் சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளதையும், யாழி சிற்பங்கள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள நாயக்கர் காலத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.மேலும், ராஜபாளையம் மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள ஆமை மலையில் உள்ள குகைத் தளங்களில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெள்ளை நிறத்தில் தீட்டப்பட்டப் பாறை ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் பழங்கால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. 3 குகைகளில் ஒரு குகையில் மட்டும் பழங்கால மனிதர்களின் கூட்டு வாழ்க்கையை ஒட்டு மொத்தமாகப் பிரதிபலிக்கிறது.இதில் வேட்டைக் காட்சிகள், மனிதர்கள் ஒரு புலியை சுற்றிவளைத்து தாக்குதல், ஆரவாரக் காட்சிகள், சூரியன் மற்றும் சந்திரன், யானை கருவுடன் இருக்கும் விலங்குகள் ஆகியவை கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. குழு தலைவன் தலையில் கிரீடம் அணிந்துள்ளது போன்று வரையப்பட்டுள்ளது.இம்மலைக்கு அருகிலேயே வெண்ணை உருண்டை பாறை ஒன்று மகாபலிபுரத்தில் உள்ளது போன்று அமைந்துள்ளது. இக்கல் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று முக்கியத்துவமாகவும் பார்க்கப்படுகிறது.இப்பாறைக்கல் வான் இறைக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. கருங்கலால் ஆன பெரிய உருண்டை வடிவத்தில் தோற்றமளிக்கிறது. இதனை பார்வையிட்டனர்.இப்பயணத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பெ.ரா.வெற்றிவேந்தன்,அருங்காட்சிய காப்பாட்சியர் திரு. பால்துரை, இராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் திரு.கந்தசாமி, தொல்லியல் துறை அலுவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதால் மண்ணின் ஊட்டச்சத்து மேம்படுத்தப் படுகிறது. வண்டல் மண் விவசாய நிலங்களிலுள்ள நுண்ணுயிர்களான மண் புழுக்கள் இனப்பெருக்கத்தினை அதிகரித்து பயிர்களுக்கு தேவையான சத்துகளை வழங்குகிறது. வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதால் நீர் தேங்கும் திறனை அதிகரித்து காற்று ஊடுருவல் திறனை மேம்படுத்தி பயிரின் மகசூல் அதிகரிக்கப்படுகிறது. வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகள் அரசாணை எண் 14 ல் வெளியிடப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களின் விபரங்களை கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்த விபரங்கள் மற்றும் தேவையான கண்மாய் பட்டியல் விபரங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இ-சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பதற்கு உரிய ஆவணங்களான பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் பதிவு செய்து, அதற்கான இரசீதினை பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (17.04.2025) சிவகாசி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-வது வகுப்பில் பயிலும் 35 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 164- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 164-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் திரு.பா.பொன்னையா,I A S., அவர்கள் (17.04.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், எரிச்சநத்தம் முதல் மூளிப்பட்டி வரை ரூ.2.39 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சி சிலோன் காலனியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கில் சுமார் 7.26 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றாங்கால் தொல்காப்பியர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்புலவர் கபிலர் நாற்றாங்கால் தொகுதி, அய்யன் திருவள்ளுவர் நாற்றாங்கால் தொகுதி, மருத்துவ பேராசான் அகத்தியர் நாற்றாங்கால் தொகுதி, தமிழ் மூதாட்டி ஓளவையார் நாற்றாங்கால் என மொத்தம் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு 5.20 இலட்சத்துக்கு மேல் நாற்றாங்கால் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தொல்காப்பியர் பூங்காவினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சி, சந்திரகிரிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரம் ஊராட்சி, லட்சுமி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.16.55 இலட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார்கள்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) மரு.இரா.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும் , இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருத்தல் வேண்டும். தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை துவக்கியிருத்தல் வேண்டும். கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு தோல்வியுற்றோர் : ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சி : ரூ.300/- மாதம் ஒன்றுக்கு பன்னிரெண்டாம் வகுப்புஃபட்டயப்படிப்பு : ரூ.400/- பட்டப்படிப்பு : ரூ.600/-உதவித் தொகை விண்ணப்பத்தினை நேரில் இவ்வலுவலகத்தில் பெற்றோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை: கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். SSLC மற்றும் அதற்கு கீழ் பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600/- HSC தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750/- பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000/- வருமான உச்ச வரம்பு கிடையாது. வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பத்தினை அலுவலக வேலைநாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்மேற்கண்ட உதவித் தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும், உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.சுய உறுதிமொழி ஆவணம்ஏற்கனவே இவ்வலுவலகத்தில் உதவித் தொகை விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ள பதிவுதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு திட்டம் என்பதால், ஏற்கனவே முழுமையாக உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் அளித்திருப்பின் அலுவலகம் வர தேவையில்லை.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை) - 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை 01.04.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்புகள் 23.04.2025 அன்று ஆரம்பிக்கவுள்ளது.இவ்வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/x33dGAsvQ4xbwUHZ7 என்ற கூகுள் பார்ம் மூலமாகவோ அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாவோ அல்லது அலுவலகத்திற்கு வந்து நேரடியாகவோ தொடர்புகொள்ளலாம். எனவே TNUSRB - SI தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.