1. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் பயிற்சி மையங்கள் என அனைத்து இடங்களிலும் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் -2013ன் கீழ் உள்ளக குழு (Internal Committee) அமைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.2. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்து நிறுவனங்களும் www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதள முகப்பில் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.உள்ளக குழு அமைக்கப்பட வேண்டிய விபரம் :1. உள்ளக குழுவில் ஒரு பெண் மூத்த அலுவலர் அல்லது பெண் ஊழியரே தலைவராக இருத்தல் வேண்டும்2. குறைந்தது இரண்டு உறுப்பினர்கள் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஆர்வமிக்க நபர்களாக பணியாளர்களில் இருந்து நியமிக்க வேண்டும்3. ஒரு உறுப்பினர் பெண்களுக்கான குற்றங்களை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.4. உள்ளக குழுவில் ஐம்பது சதவீதம் பெண்கள் இருத்தல் வேண்டும்தண்டனைகள்• உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50,000/- அபராதமாக விதிக்கப்படும், மேலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் மீது எடுக்கப்படும் பரிந்துரைகளில் நடவடிக்கை எடுக்காமலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு ஆண்டறிக்கை சமர்பிக்காமலும் இருப்பினும் அபராதம் விதிக்கப்படும்.• நிறுவனம், சட்டத்திற்கு உட்படாமல் மீண்டும் மீண்டும் தவறிழைப்பின் அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படுவதுடன், கடுமையாக தண்டனைக்கும் உட்படுத்தப்படுவர்.• விற்பனை கூடம்/பணியிட பதிவு அனுமதி இரத்து செய்யப்படுவதுடன், மீள பெறுதல்/புதுப்பித்தல் செய்யப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, நடைபெற்ற 2025-2026 -ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் நான்கு வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.அதன் படி, நடைபெற்ற 2025-2026 -ஆண்டிற்கான தொல்லியல் துறை மானியக் கோரிக்கையில், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மறையூர் சத்திரம், இராஜபாளையம் வட்டம், மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம் மற்றும் புடைப்புச் சிற்பங்கள், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் கிராமத்திலுள்ள நாயக்கர் கால மண்டபம், மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம் பிள்ளையார் நத்தம் மண்டபம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.
18 வயது நிறைவடையாத பெண்கள் குழந்தைகளாகவே கருதப்படுவர். அவ்வாறு 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறுவதை தடை செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும். குழந்தை திருமணம் தொடர்பாக புகார்கள் 1098 அல்லது 181 மூலம் பெறப்பட்ட உடன் நடவடிக்கையாக குழந்தையின் விபரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் சமூக நல களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, களப்பணியாளர்கள், சைல்டு லைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் வழக்கு பணியாளர்கள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர்களால் நேரடியாக குழந்தையின் இல்லத்திற்கு சென்று விசாரணை செய்யப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களோ, திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டிருப்பின் உடனடியாக குழந்தையினை மீட்டு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைக்கப்படும். குழந்தை திருமணம் நடைபெற்றிருப்பின் குழந்தையினை திருமணம் செய்து கொண்ட மணமகன், மணமகனின் பெற்றோர், குழந்தையின் பெற்றோர் மற்றும் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.இளவயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பாக புகார் பெறப்படின் காரணமான நபர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும்வழங்கப்படும் தண்டனைகள் 18 வயது நிரம்பாத பெண் குழந்தையைத் திருமணம் செய்யும் ஆணுக்கு அதிக பட்சமாக 2 வருட கடும் சிறைத்தண்டனை அல்லது ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தை திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 வருடம் கடும் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இக்குற்றம் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். 18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டறியப்பட்டின் காரணமான நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் கடந்த 01.03.2025 முதல் 31.03.2025 வரை பதினான்கு குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் 18 வயது பூர்த்தியடையாமல் கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பதினாறு நபர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளுது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்து வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்ட முகாமானது 16.04.2025 காலை 9 மணி முதல் மறுநாள் 17.04.2025 அன்று காலை 9 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முதல் நாளான இன்று, மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுக்கிலநத்தம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 இலட்சம் மதிப்பில், கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சுக்கிலநத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், சுக்கிலநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.டி.மீனாட்சிபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.8 இலட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், டி.மீனாட்சிபுரம் ஊராட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மீனாட்சிபுரம் ஊராட்சியில், தூய்மைப் பணியாளர்களிடம் அவர்களின் பணிகள், ஊராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக கலந்துரையாடினார்.வேலாயுதபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைத்தாரர்கள், தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.வேலாயுதபுரம் ஊராட்சியில், பல் கிராம நீரியல் திட்டத்தின் கீழ், ரூ.20.48 இலட்சம்மதிப்பீட்டில்,குடிநீர்இணைப்புகள்வழங்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனை தொடர்ந்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாமானது மூன்றாவது கட்டமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 19.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உச்சிமாகாளி உற்சவ மண்டபம், மேட்டுத்தெரு, ஸ்ரீவில்லிபுத்தூரிலும், அய்யம்பட்டி, மறவர் சமுதாயக்கூடம், PRC டிப்போ பின்புறத்திலும், TELC தொடக்கப்பள்ளி, ஆயர் தர்மம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.கல்வியில், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவதற்கான முயற்சியில் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சீர்மரபினர் சமுதாய மக்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (15.04.2025) தொடங்கி வைத்தார்.பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.வாழ்க்கையில் சிறப்பாக வெற்றியை அடைந்தவர்கள் அல்லது தாங்கள் விரும்பக்கூடிய ஒன்றை சரியாக பெற்று பொருளாதாரத்தில், சமூகத்தில் நல்ல வலிமையோடு இருக்கக்கூடிய எல்லோருக்கும் முக்கியமான ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. அது விழிப்புணர்வும், அந்த விழிப்புணர்வை பெற்ற பிறகு அவர்கள் தேடிய தேடல்கள் தான். எனவே, கல்வி, உழைப்பு, திறமை இந்த மூன்றும் முக்கியமானது தான். ஆனால் இது எல்லாவற்றையும் விட வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு தான் மிகவும் முக்கியம். நல்ல வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வுகள் பெற்றவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.மேலும், உயர்வு, தாழ்வு, வெற்றி என்பது இரண்டு நபர்களுக்கு இடையே கிடையாது. உங்களை நீங்களே ஒப்பிட்டு கொள்வதும், உயர்த்தி கொள்வதும் தான். அந்த சிறந்த வாய்ப்புகளை பெறக்கூடிய மாணவிகளாக நீங்கள் உருவாக வேண்டும்.எனவே, சமுதாயத்தில் யார் வலிமையானவர்கள் என்றால், யாரிடம் பணம் இருக்கிறதோ, யாரிடம் பொருளாதாரம் இருக்கிறதோ அவர்கள் தான் வலிமையானவர்கள். இந்த காலகட்டத்தில் நிறைய வாய்ப்புகளை பெற்று பொருளாதாரத்தில் வலிமை பெற்றவர்களாக நீங்கள் உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று 14.4.2025 மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் மீது மின்சார வயர் பட்டதில் ரேடியோ அமைக்கும் பணியை மேற்கொண்ட காரிசேரி கிராமத்தைச் சேர்ந்த திரு.திருப்பதி (வயத 27) த/பெ.ராமர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், மேற்படி சம்பவம் இறந்த திரு.திருப்பதி அவர்களின் வீட்டிற்கு அருகில் நிகழ்ந்ததால் அவருடைய மனைவி திருமதி.லலிதா (வயது 25) மற்றும் பாட்டி திருமதி.பாக்கியம் (வயது 75) ஆகியோர் திரு.திருப்பதி என்பவரை காப்பாற்ற முயன்றபோது மேற்படி இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர்களும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் (15.04.2025) CEOA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12-வது வகுப்பில் பயிலும் 200-ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான Coffee With Collector” என்ற 163- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பள்ளித் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 163-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையாக நீதிமன்றத்தில் எதிரிகளுக்கு தண்டனைகள் கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூர் நகர் காவல் நிலைய சரகம் வெங்கடாசலபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாதியான சீனிவாசன் மகன் குமரன்(56/2020) என்பவரின் வீட்டின் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த அயில்சாமி மகன் மாரிமுத்து(27/2025) எனிபவர் மாலை நேரங்களில் அவரது நண்பருடன் மது அருந்தி வந்தவரை வாதியும் அவரது தம்பி இறந்த நபரான சிவக்குமார்(50/2020) என்பவரும் கண்டித்ததற்கு 17.09.2020 அன்று இரவு 11.00 மணியாளவில் எதிரி மாரிமுத்து அருவாளுடன் வந்து சிவக்குமாரை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 18.09.2020ம் தேதி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.இவ்வழக்கில் (15.04.2025) விருதுநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மேற்படி எதிரியை குற்றவாளி என அறிவித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5000/- அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்(14.04.2025) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கத்தில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் (14.04.2025) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சமத்துவ நாள் விழா நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர் 1155 பயனாளிகளுக்கு ரூ.5.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.அதன்படி,ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறையின் மூலம் தையல் இயந்திரங்கள் 30 பயனாளிகளுக்கு ரூ.2.01 இலட்சம் மதிப்பிலும், தேய்ப்புப் பெட்டி 30 பயனாளிகளுக்கு ரூ.1.95 இலட்சம் மதிப்பிலும், பழங்குடியினர் நல வாரிய அட்டை 76 பயனாளிகளுக்கும், புதிரை வண்ணார் நல வாரிய அட்டை 10 பயனாளிகளுக்கும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் வாரிசுதாரருக்கு ஓய்வூதிய பட்டா ரூ.30,000/- மதிப்பிலும், தீண்டாமை கடைபிடிக்காத 2 கிராமங்களுக்கான பரிசுத்தொகை ரூ.20 இலட்சம் மதிப்பிலும்,தாட்கோ மூலம் நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டத்தின் கீழ் (NWLPS) 6 பயனாளிகளுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பிலும், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவுத் திட்டம் (CM - ARISE) மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சம் மதிப்பிலும், பிரதம மந்திரி அனுஷித்ஜாதி அபியுதய் திட்டம் (CM - ARISE) மூலம் 50 பயனாளிகளுக்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை 22 பயனாளிகளுக்கும்,சமூக நலத்துறையின் மூலம் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 204 பயனாளிகளுக்கு ரூ.51 இலட்சம் மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.40,760/-மதிப்பிலும், மாவட்ட முன்னோடி வங்கியின் கடன் திட்டங்கள் மூலம் 30 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலும்,ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு ரூ.70 இலட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளையும்,வருவாய்த்துறையின் மூலம் இணையவழிப்பட்டா 500 பயனாளிகளுக்கு ரூ.52.80 இலட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் குடும்ப அட்டை 100 பயனாளிகளுக்கும்,கூட்டுறவுத்துறையின் கீழ், 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.23.50 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும்,மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.26 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், அண்ணல் அம்பேத்கர் வணிக முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு ரூ.26.14 இலட்சம்மதிப்பிலான கடனுதவிகளும்,வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.34.95 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.09 இலட்சம் மதிப்பில்இணைப்புச் சக்கரம் இருசக்கர மோட்டார் வாகனங்களையும் என மொத்தம் 1155 பயனாளிகளுக்கு ரூ.5.07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார் உட்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.